.
மறைந்தவர்களினால் தோன்றும் வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது ?
சங்க இலக்கிய பாடல் - சித்தர் பாடல் - நாட்டார் பாடல் -துல்லிசையிலும் திரையிசையிலும் எவ்வாறு மாற்றமடைகிறது ?
" எனது கருத்துக்களும் எனது கதைகளும் பிறரால் கையாடப்படும்போது இவரைப்போன்ற மனோநிலை பெறும் பக்குவம் எனக்கு வரவில்லையே என்று இப்போதும் நான் ஏங்குகிறேன்."
என்று சொன்னவர் சமகால இடிமுழக்கம் எனச்சொல்லப்பட்ட ஜெயகாந்தன்.
யாரைப்பற்றி அவ்வாறு சொன்னார் ?
ஜெயகாந்தனின் நல்ல நண்பரும் தமிழ்முழக்கம், சாட்டை முதலான இதழ்களின் ஆசிரியரும் திரைப்படப் பாடலாசிரியரும், பன்னூல் ஆசிரியருமான கவிஞர் கா.மு.ஷெரீப் ( காதர்ஷா முகம்மது ஷெரீப்) அவர்களைப்பற்றி ஜெயகாந்தன் எழுதியிருக்கும் குறிப்புகளில் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லிவிட்டே, இவரின் மேன்மையான இயல்பையும் பதிவுசெய்துள்ளார்.
(நூல்: ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்)
இதுவரையில் ஐந்து பதிப்புகளைக்கண்டுவிட்ட இந்த நூலில், ஏ.பி. நாகராஜனின் திருவிளையாடல் படத்தில் (1965) வரும் " பாட்டும் நானே பாவமும் நானே " என்ற புகழ்பெற்ற பாடலை ( பாடியவர்: ரி.எம்.சவுந்தரராஜன் - இசை கே.வி. மகாதேவன்) இயற்றியவர் தமது நண்பர் கா.மு.ஷெரீப் என்று எழுதியிருக்கிறார்.
ஜெயகாந்தன், " பாட்டும் நானே என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மூ. ஷெரீப். ஏ.பி. நாகராஜன், அவரது நண்பர் என்ற காரணத்தினால் பெருந்தன்மையோடு பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப்பாடல் வெளிவந்தபோதும் "
கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது " என்று மனமுவந்து பாராட்டும் உயர் பண்பை நான் இவரிடம்தான் பார்த்தேன்."
என்று மேலும் தெரிவித்துள்ளார்.