அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் அனைவருக்கும் எனது இனிய ( 2023 ) ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எழுத்தும்
வாழ்க்கையும் என்ற இந்தத்
தொடரை கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்தேன். இரண்டு ஆண்டுகள்
கடந்து, மூன்றாவது ஆண்டிலும் இந்தத் தொடர் முற்றுப்பெறாமல் தொடருவதற்கு, பல காரணங்கள் இருக்கின்றன.
இந்தத் தொடரின் முதல் பாகம் நிறைவடைந்து, இரண்டாவது
பாகத்திற்கு வந்தவேளையில், கொவிட் பெருந்தொற்றும் தனது ஆட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்தது.
2020 – 2021 – 2022 ஆகிய
வருடங்களில் கொவிட் பெருந்தொற்றால் மறைந்துவிட்ட
எனது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் பற்றியும்,
இம்மூன்றாண்டு காலத்துள் நோய் உபாதைகள் மற்றும் முதுமையின் காரணத்தினால் விடைபெற்றுவிட்டவர்கள்
பற்றியும் பல பதிவுகளை ஏற்கனவே எழுதிவிட்டேன்.
அவ்வாறு எழுதியதன் மூலம்
அந்தத் துயரங்களிலிருந்து ஓரளவு விடுபட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. நான்
எழுத்துலக பிரவேசம் செய்து அரைநூற்றாண்டு காலம் நெருங்கிய வேளையில் ( 2022 இறுதிப்பகுதியில்
) எனது எழுத்தூழியத்துடன் தொடர்புபட்ட சில
நற்செய்திகள் என்னை வந்தடைந்தன. அச்செய்திகள் அடுத்தடுத்து வந்தமைதான் வியப்பானது.
எதிர்பாராதது.
எதிர்பாராத நிகழ்வுகளின்
சங்கமம்தான் வாழ்க்கை என்று அடிக்கடி நான் சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றேன்.
கடந்த டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி காலையில் நான் மெல்பன் விமான நிலையத்திற்கு புறப்படத் தயராகிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
எனக்கு வணக்கமும் வாழ்த்தும்
கூறியவாறு மறுமுனையில் கனடாவிலிருந்து எனக்கு மிகவும் பிரியமான படைப்பிலக்கியவாதி அ.
முத்துலிங்கம் அவர்கள் தொடர்புகொண்டார்.
அவரை நான் இதுவரையில் நேருக்கு
நேர் சந்தித்து பேசியதும் இல்லை. ஆனால், அவுஸ்திரேலியாவுக்கு
நான் புலம்பெயர்ந்த பின்னரே அவரது எழுத்துக்களை படித்தேன். கனடாவுக்கு 2007 ஆம் ஆண்டு இறுதியில் நான்
சென்றபோது, 2008 ஆம் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி அவர், அமெரிக்காவிலிருந்து என்னை தொலைபேசியில்
அழைத்து புத்தாண்டு வாழ்த்துக்கூறியதுடன்,
தன்னால் சந்திக்கமுடியாமல் போனதையிட்டு வருத்தமும் தெரிவித்தார். அன்று என்னுடன் நீண்ட
நேரம் பேசினார்.
அதன்பின்னரும் என்னுடன்
மின்னஞ்சல் தொடர்பிலிருந்தார். கடந்த டிசம்பர்
மாதம் 05 ஆம் திகதி அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
முருகபூபதி இம்முறை உங்களுக்கு எமது கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதினை வழங்கவிருக்கின்றோம். விரைவில் இயல்விருது தொடர்பான கடிதம் வரும் என்றார்.