ஒரு சொல்லாடல்! நான் உள்ளதை சொன்னால் கோபமா?


 - சங்கர சுப்பிரமணியன்.


தமிழில் உள்ள சொல்லாடல் கண்டு நான் வியப்பதுண்டு. பசுமரத்தாணி போல் பதிவது என்ற பழமொழியின் சொல்லாடலின் நீட்சியாக என் சிறுவயதில் செவியில் விழுந்ததை இங்கு செப்புகிறேன். இலங்கை வானொலியும் திக்கெட்டும் புகழ்மணக்கும் திருநெல்வேலிச் சீமையில் நான் பிறந்ததும்தான் இதற்கு காரணம். மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஒருவேளை அப்படி இருந்தால் மறுபடியும் பிறந்து இளமையில் வறுமை என்று ஓவையார் மூதுரையில் கூறியபடி எனக்கு மீண்டும் வறுமை வந்தாலும் வறுமையிலும் செழுமையாக இலங்கை வானொலியில் ஒலித்த பாடல்கள் என் செவிகளில் செல்லுமிடங்கள் எல்லாம் விழுந்தபடி இருக்கவேண்டும்.

சிறுவயதில் நான் இரவு நேரங்களில் வானில் நிலவை அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பேன். அடிக்கடி பார்க்கக் காரணம் நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அதுவும் என் கூடவரும். அதுபோல் இலங்கை வானொலியில் ஒலிக்கும் பாடல்கள் குளிக்க குளத்திற்கு போனாலும் கூடவரும். கோவிலுக்குப் போனாலும் கூடவரும். பள்ளிக்கு சென்றாலும் கூடவரும். அப்படிக் கேட்ட பாடல்களில் ஒன்றுதான் ஓவியக்கலை தெரிந்தால் போதுமா - நான் உள்ளதை சொன்னால் என்ன கோபமா? என்ற பாடல்.

இப்போது திருநெல்வேலி சென்றால் இலங்கை வானொலியில் அந்த வசந்தகாலம் போல் பாடல்கள் என் காதில் விழுவதில்லை. ஏனென்றால் இலங்கை வானொலியில் முன்போல் தமிழ் ஒலிபரப்பு இல்லை. அந்த இனிமையான நாட்களும் இப்போதில்லை.
அப்போதுதான் நான் எப்போதோ வாசித்தது நினைவில் மோதியது. வாசிப்பு அனுபவம் இதுபோல் செயல்பட வேண்டும். அது கடமைக்கு காய் நகர்த்துவது போல் இருக்கக்கூடாது.

அப்படி என்ன நினைவில் மோதியது? வாசித்ததில் எனக்கு சுரீர் என்று பொறியில் தட்டியது அதில் வந்த வாசகம்தான். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் மொழியை அழிக்க வேண்டும். மொழியை சிறிது சிறிதாக அப்புறப் படுத்தினால் இனத்தையும் காலப்போக்கில் துடைத்து எறிந்து விடலாம் என்பதே அவ்வாசகம். எல்லா இடங்களிலும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பல சகாப்தங்பளுக்கு முன் நம் ஊணிலும் உயிரிலும் கலந்திருந்த இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பை ஒரு நொடி நினைத்துப் பாருங்கள் அதன் வலி புரியும். வேறுநாட்டில் பிறந்து வளர்ந்த போதிலும் இனத்தால் ஒன்றுபட்ட எனக்கே இப்படி வலிக்கும்போதே அந்நாட்டிலே பிறந்து வளர்ந்தவர்களுக்கு எப்படி வலிக்கும்?

மொழியை அழித்தால் இனத்தை எளிதாக அளித்து விடலாம் என்பதற்கு சான்றைப் பார்க்கலாம். பண்டைய காலத்தில் அரசர்கள் அடிக்கடி போரிடுவார்கள். வெற்றி தோல்வி இயற்கை. ஒருமுறை வெல்பவன் மறுமுறை தோற்பான். தோற்றவன் மறுமுறை வெல்வான். இது சுழற்சியாக நடப்பது. எவரும் தோற்றுக் கொண்டே இருப்பதில்லை. வென்றவன் வென்றுகொண்டே இருப்பதில்லை. வீரத்தில் சிறந்த தமிழரும் தோல்வியைத் தழுவாமலில்லை.

அப்படித் தோல்வியை சந்தித்த தமிழருக்கு திரும்ப எழ சந்தர்ப்பம் கிடைக்காமல் நிலைமை மாறியது. விஜய நகரப் பேரரசின் வருகைக்குப்பின் தமிழ் படிப்படியாக தன் நிலையை தமிழ் மண்ணிலேயே இழந்தது. நடந்த அரசியல் மாற்றத்தால் தமிழினம் எழுச்சி பெறாமல் ஆங்கிலேய ஆட்சி வந்து மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

தமிழிருந்த இடத்தை பிறமொழிகள் ஆக்ரமித்தன. அதன்மூலமாக வழிபடு தளங்களிலும் வாழ்க்கைக்கு தேவையான கல்வியிலும் தமிழ் தன் செல்வாக்கை இழந்து தமிழர் தாழ்ந்தனர். இவ்வாறு தாழ்ந்த தமிழரின் நிலங்களையும் அரசுடமை என்ற பெயரில் பறிக்கப்பட்டு பொருளாதார நிலையிலும் பின்னடைவைச் சந்தித்தனர்.

இவ்வாறு பின்னடைந்த தமிழருக்கு ஆங்கிலேயரது ஆட்சியின் போது இந்தியா அடிமையாக இருந்தபோதிலும் கல்வி வேலை வாய்ப்பு போன்றவை கிடைக்க ஆரம்பித்தது. அதனை பிறமொழியரால் தடுக்க இயலவில்லை. ஏனென்றால் நடப்பது அவர்கள் ஆட்சியல்லவே. கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்தாலும் பறிபோன நிலங்கள் பறிபோனதுதான்.

இதற்கு சான்றாக நான் வளர்ந்த என் தாய்வழித் தாத்தாவின் ஊரான குக்கிராமத்தில் மண்ணின் மைந்தர்கள் குடியிருக்க குடிசைகூட இல்லாத நிலையில் நாலைந்து பிறமொழி பேசும் குடும்பங்கள் வீடு வாசல் வயல்கள் என்று பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இன்று நேற்று பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் அல்ல இவர்கள். மேலும் சொல்வதானால் இவர்களை வேற்று மொழியினர் என்று நூற்றுக்கு நூறு கண்டு பிடிக்க இயலாது.

இப்படித்தான் மொழி அழிந்தால் ஒவ்வொன்றாக நிலம், கல்வி, பண்பாடு என்று அழிந்து பொருளாதாரத்திலும் அழிந்து துடைத்தெறியப் படுவோம். இதற்கு சான்றாக மொழிகளை இழந்த பல இனங்கள் வரலாற்றில் இருந்து மறைந்து போயுள்ளன.
இப்போது நம் மொழியும் இனமும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறது என்று பலர் கேட்கலாம்.

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாமே நம் மொழியை நம்மையும் அறியாமல் அழித்துக் கொண்டு இருக்கிறோம். இதைத் தான் யாரோ ஒருவர் மெல்லத் தமிழ் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்று சொன்னதை தாங்கமுடியாமல் அந்த பேதை உரைத்தான் என்று தம் பாடலில் சேர்த்துப் எழுதியிருந்தார் பாரதியார். ஆனால் நடந்தது என்ன? நடந்ததைத் திரித்துச் சொன்னார்கள்.

பாரதி வாழ்ந்த கணனி இல்லாத அந்நாளிலேய
இப்போதுள்ள வெட்டி ஒட்டும் திறன் இருந்திருக்கிறது. அதனால் பாரதி சொன்ன அந்த பேதை உரைத்தான் என்பதை வசதியாக வெட்டிவிட்டு பாரதியே சொல்லிவிட்டான் மெல்லத் தமிழ் இனி சாகும் என்றனர், என்கின்றனர் இன்றும் பல மேதாவிகள்.

இத்தனை எதிர்ப்புக்குள்ளும் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் தமிழை தெரிந்தோ தெரியாமலோ அழிப்பவர்களை விடாமல் எதிர்த்துக் கொண்டே பலர் இருப்பதால்தான். இதில் தமிழரே தமிழை அழித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விடயம். இப்படி தமிழை தமிழரே அழிப்பதில் இருவகை.

ஒருவகையினர் அறியாமையால் செய்கின்றனர். இன்னொரு வகையினர் அறிந்தே செய்கின்றனர். அறிந்தே செய்வதற்கு காரணம் வறட்டு பிடிவாதம்தான். அவர்கள் சொல்வதை நாம் ஏற்றுக் கொண்டால் நம் மதிப்பு என்னாவது? என்ற மன நிலைதான். அப்படிப்பட்ட சிலரை சந்தித்தேன். அவர்களுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதைப்பற்றி இப்போது சொல்கிறேன்.

நாற்றம் என்றால் வாசனை அல்லது மணம் என்ற என் சிற்றறிவுக்கு எட்டியதை வைத்துச் சொன்னேன். அதை அவர்கள் தீவிரமாக எதிர்த்தார்கள். நாற்றமென்றால் கெட்ட வாசனை கெட்டமணம் என்றனர் அந்த அறிஞர்கள். நான் அவர்களிடம் நாற்றம் என்றால் வாசனைதான். நீங்கள் சொல்வது நாற்றத்துக்கு எதிர்மறைச் சொல் என்றேன்.

அவர்கள் என்னை மடக்கினார்கள். நாற்றத்துக்கு எதிர்மறைச் சொல் துர்நாற்றம் என்றார்கள். சான்றாக துர்மரணம் என்றார்கள். அவர்களது தமிழ் ஆளுமை கண்டு வியந்தே போனேன். அவர்களிடம் நாற்றம் என்றால் கெட்ட வாசனை என்கிறீர்கள் அதற்கு எதிர்மறைச்சொல் துர்நாற்றம் என்கிறீர்கள் அப்படியானால் துர்நாற்றம் என்றால் நல்ல வாசனையா என்றேன்.

துர்மரணம் என்பதும் முழுக்க முழுக்க வடமொழிச்சொல் ஆனால் துர்நாற்றம் வடமொழியான துர் என்ற சொல் தமிழ் மொழியான நாற்றத்துடன் சேர்ந்த கலப்புச் சொல் என்றேன். மரணம் என்பதற்கு தமிழில் இறப்பு, சாவு, மறைவு என்பதே பொருளென்றேன். அவர்களால் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனம் வரவில்லை.

இவர்களைப் போல் தமிழை அழிக்க
முற்படுவோர்களிடம் இருந்து நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரன் போல் இருந்து செயல்பட வேண்டும் என்று எண்ணினேன். அப்போதுதான் என்றோ கேட்ட “ஓவியக்கலை தெரிந்தால் போதுமா - நான் உள்ளதை சொன்னால் என்ன கோபமா?” என்ற பாடல் என் நினைவில் மோதியது. ஆம், தமிழ் தெரிந்தால் மட்டும் போதாது உள்ளதைச் சொன்னால் கேட்கும் நிலைக்கு அவர்களை கோபப்பட விடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் உறுதிபூண்டேன்.


-சங்கர சுப்பிரமணியன்.

No comments: