உலகச் செய்திகள்

கிராமி விருதை வென்றார் தலாய் லாமா

வெனிசுவேலாவுக்குச் சென்றார் அமெரிக்க தூதுவர் லாரா டோகு

இலங்கை, வியட்நாம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் : தென்கொரிய ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு!

சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் “இலங்கை” என 188 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது !  


கிராமி விருதை வென்றார் தலாய் லாமா  

Published By: Digital Desk 3

02 Feb, 2026 | 02:05 PM

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது 90 ஆவது வயதில் உலகின் உயரிய இசை விருதாகக் கருதப்படும் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 68 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், "சிறந்த ஓடியோ புத்தகம், கதை சொல்லல் மற்றும் பதிவு" (Best Audio Book, Narration, and Storytelling Recording) என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Meditations: The Reflections of His Holiness the Dalai Lama என்ற அல்பத்திற்காக தலாய் லாமாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதில் தலாய் லாமாவின் அமைதியான குரலில் ஒலிக்கும் தியானக் குறிப்புகளும், இந்துஸ்தானி இசைக்கலைஞர் அம்ஜத் அலி கான் மற்றும் அவரது மகன்களின் சாரோட் (Sarod) இசையும் இணைந்து ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன.

கருணை, மன அமைதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகளாவிய கருத்துக்களை மையமாகக் கொண்டு இந்த அல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ட்ரெவர் நோவா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கடந்து தலாய் லாமா இந்த விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.

இந்த அங்கீகாரம் குறித்து தலாய் லாமா,

"இந்த விருதை நான் ஒரு தனிப்பட்ட வெற்றியாகப் பார்க்கவில்லை. மாறாக, மனிதநேயம் மற்றும் உலகளாவிய பொறுப்புணர்வுக்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன். அமைதி, கருணை மற்றும் உலக மக்கள் அனைவரும் ஒன்றே என்ற எண்ணம் எட்டு பில்லியன் மக்களுக்கும் சென்றடைய இந்த விருது உதவும் என்று நம்புகிறேன்." எனக் கருத்து தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 






வெனிசுவேலாவுக்குச் சென்றார் அமெரிக்க தூதுவர் லாரா டோகு  

Published By: Digital Desk 3

02 Feb, 2026 | 08:46 AM

வெனிசுவேலாவில் 07  ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதாக் அறிவிக்கப்பட்டுள்து. இதனை அடுத்து அமெரிக்க தூதுவர் லாரா டோகு வெனிசுவேலாவுக்கு சென்றார். அவர் வெனிசுவேலாவில் அமெரிக்க தூதரகத்தை திறப்பதற்காக அங்கு சென்றடைந்தார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில், 

நானும் எனது குழுவும் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் வெனிசுலாவும் தூதரக உறவுகளைத் துண்டித்து, தங்கள் தூதரகங்களை மூடின என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






இலங்கை, வியட்நாம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் : தென்கொரிய ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு!  

Published By: Digital Desk 3

05 Feb, 2026 | 03:34 PM

தென்கொரியாவில் நிலவி வரும் சனத்தொகை வீழ்ச்சியை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் என ஜின்டோ கவுண்டி ஆளுநர் கிம் ஹீ-சூ தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஜொல்லா மாகாணத்தில் உள்ள ஹேனம் கலை மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் கிம் ஹீ-சூ, கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைந்து வருவதைக் குறித்து உரையாற்றியுள்ளார். 

அப்போது அவர்,

"சனத்தொகை நெருக்கடிக்கு நாம் முறையான தீர்வை காண வேண்டும். நிலைமை மோசமானால், கிராமப்புறங்களில் உள்ள பிரம்மச்சாரிகள் திருமணம் செய்துகொள்வதற்காக இலங்கை அல்லது வியட்நாம் போன்ற இடங்களிலிருந்து இளம் பெண்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டும். மக்கள் இல்லாதபோது தொழில்துறையை மீட்டெடுப்பதில் என்ன பயன் இருக்கப்போகிறது? எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் இந்த உரை யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

வெளிநாட்டுப் பெண்களை ஒரு பொருளாகக் கருதி "இறக்குமதி" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது மனித கண்ணியத்திற்கு எதிரானது எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பிட்ட நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசியது அந்த நாட்டு மக்களையும், கொரியாவில் வசிக்கும் பல்லின சமூகத்தினரையும் அவமதிக்கும் செயல் எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்ட குவாங்ஜு மேயர் காங் கி-ஜங், "வெளிநாட்டுத் திருமணங்கள் மற்றும் மனிதர்களை இறக்குமதி செய்வது குறித்த கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை" என மேடையிலேயே அதிருப்தி வெளியிட்டார்.

தென்கொரியாவின் பல கிராமப்புற பகுதிகள் சனத்தொகை குறைவால் அழிவடையும் நிலையில் (Extinction risk) உள்ளன. இந்த வேதனையின் வெளிப்பாடாகவே ஆளுநர் அவ்வாறு பேசினார் என ஒரு தரப்பினர் வாதிட்டாலும், ஒரு பொது மேடையில் பெண்களை வெறும் உழைப்பாளர்களாகவும், திருமணக் கூட்டாளிகளாகவும் மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மற்றும் இனவெறிப் பார்வை இதில் வெளிப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.   நன்றி வீரகேசரி 







சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் “இலங்கை” என 188 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது !  

Published By: Digital Desk 3

05 Feb, 2026 | 03:50 PM

அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தின் (U.S. Department of Justice) இணையதளத்தில் பொது மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில், ‘Sri Lanka’ (இலங்கை) என்ற சொல் 188 தடவைகள் இடம்பெற்றுள்ளதாக ஆவணங்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.

இந்த ஆவணக் காப்பகத் தரவுத்தளத்தில் ‘Sri Lanka’ என்ற சொல்லைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது, பல்வேறு தரவுத் தொகுதிகளில் இந்தக் குறிப்புகள் காணப்பட்டுள்ளன. குறிப்பாக மின்னஞ்சல்கள், பயணம் தொடர்பான தகவல்கள், தொடர்புப் பதிவுகள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் துணைத் தொடர்புகள் போன்றவற்றில் இவை இடம்பெற்றுள்ளன.

ஆவணங்களில் காணப்படும் பெரும்பாலான இலங்கை தொடர்பான குறிப்புகள், குற்றச்செயல்கள் அல்லது இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்புடையவை அல்ல என ஆய்வு தெரிவிக்கிறது. 

மாறாக, இலங்கைக்கு அல்லது இலங்கையிலிருந்து பயணம் செய்த தகவல்கள், வசிப்பிடம் குறித்த குறிப்புகள், கல்வி அல்லது தொழில்சார் பின்னணித் தகவல்கள், நேர மண்டலம் (Time Zone) தொடர்பான விவரங்கள், தனிப்பட்ட அல்லது தொழில்முறை உரையாடல்களில் இடம்பெற்ற சாமான்ய குறிப்புகள் போன்ற தற்செயலான சூழல்களிலேயே  ‘இலங்கை’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில ஆவணங்களில், “இலங்கையில் இருந்தேன்”, “இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்” போன்ற சாதாரண தகவல் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், சில நபர்களின் பிறப்பிடம், வசிப்பிடம் அல்லது தற்காலிக தங்குமிடமாகவும் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

இந்த தேடல் முடிவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, ஜெஃப்ரி எப்ஸ்டீனின் செயல்பாடுகளின் மையமாக இலங்கை இருந்ததாக எந்த சான்றுகளும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மின்னஞ்சல்கள் மற்றும் இணைப்புகளில் பல நபர்கள் தொடர்பான உரையாடல்களில், இலங்கை என்பது வெறும் கடந்து செல்லும் குறிப்பாகவே (passing reference) இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள இந்த எப்ஸ்டீன் ஆவணங்களில், சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் தொடர்பாடல்கள் பெருமளவில் உள்ளன.

இதனால், ஆவணங்களில் இடம்பெறும் பெயர்கள் அல்லது இடங்கள் தவறான செயற்பாடுகளை குறிக்காது என்றும், அவற்றை முழுமையான சூழ்நிலையுடன் (context) புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சட்ட நிபுணர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வலையமைப்பு மற்றும் அவரது கடந்தகால செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை ஆராயும் பணியில், உலகளாவிய ஊடக நிறுவனங்கள் இந்த ஆவணக் காப்பகத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வுகள் மேலதிக தகவல்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 






No comments: