இலங்கைச் செய்திகள்

இலங்கையை வந்தடைந்தது இந்திய கடற்படை போர்க்கப்பல்!

இந்தியாவிலிருந்து கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தன 10 பெய்லி பாலத்தொகுதிகள்

ஜனவரியில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் மக்கள் மாநாடு

 வட மாகாண சபை கட்டடத் தொகுதியில் சுதந்திர தின நிகழ்வு

கிளிநொச்சியில் கரிநாள் அனுஷ்டிப்பு ; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி! 


இலங்கையை வந்தடைந்தது இந்திய கடற்படை போர்க்கப்பல்!

Published By: Digital Desk 1

06 Feb, 2026 | 09:47 AM

இந்திய கடற்படையின் போர்கப்பலான 'INS GHARIAL'  2026 பெப்ரவரி 04ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கையை வந்தடைந்துள்ளது.

கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

நாட்டை வந்தடைந்துள்ள 'INS GHARIAL' என்ற போர்கப்பல்  124.8 மீட்டர் நீளம் கொண்டதுடன், இந்த போர் கப்பலின் கட்டளை அதிகாரியாக COMMANDER GAURAV TEWARI  கடமையாற்றுகின்றார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட பத்து (10) தற்காலிக பாலங்கள், நிலவும் சீரற்ற காலனிலையின் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் சேதமடைந்த பாலங்கள் சரிசெய்யப்படும் வரை தற்காலிக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக அனர்த்த முனாமைத்துவ மத்திய நிலையத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

'INS GHARIAL' என்ற போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர் பங்கேற்க உள்ளனர். மேலும, நாட்டின்; பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 





இந்தியாவிலிருந்து கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தன 10 பெய்லி பாலத்தொகுதிகள் 

Published By: Digital Desk 3

05 Feb, 2026 | 06:36 PM

'தித்வா' சூறாவளியினால் வீதிப்போக்குவரத்து சேவைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை அடுத்து, அதனை சீரமைக்கும் நோக்கில் இந்தியா வழங்கிவரும் உதவிகளின் நீட்சியாக, அடுத்தகட்டமாக அனுப்பிவைக்கப்பட்ட 10 பெய்லி பாலத்தொகுதிகள் இன்று வியாழக்கிழமை (5) கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தன.

அவை இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டேவினால் துறைமுக மற்றும் விமானசேவைகள் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்குவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)



















































நன்றி வீரகேசரி 





ஜனவரியில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை! 

05 Feb, 2026 | 11:22 AM

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 52,061 ஆகும்.

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 29,540 சுற்றுலாப் பயணிகளும்,  ரஷ்யாவிலிருந்து 27,134 சுற்றுலாப் பயணிகளும்,   ஜெர்மனியிலிருந்து 17,776 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 14,003 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸலிருந்து 13,569 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 11,172 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 






“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் மக்கள் மாநாடு 

04 Feb, 2026 | 05:55 PM

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும் மாநாட்டு பிரகடனம் வெளியீடும் இன்று புதன்கிழமை  (04) ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது.

சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, சம உரிமை இயக்கம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைக்கான பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் பெண்கள்  இயக்கத்தின் நிரோஷா குருகே,


தொழிலாளர் போராட்ட மையத்தின்  சுகதா நந்த, மலையகத் தமிழ்ப் பெண்களின் சார்பில் ஞானதேவி, மலைநாட்டு மக்களின் நில உரிமைக்கான இயக்கத்தின் சார்பில் கணேஷ் கணேசமூர்த்தி, சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளர் இந்திரானந்த, மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் மகேந்திரன், பெண்கள் விடுதலைக்கான இயக்கத்தின் சார்பில் பிரசாதினி,  மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோருடன் சமுக செயற்பாட்டளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.   நன்றி வீரகேசரி 





























நன்றி வீரகேசரி 





வட மாகாண சபை கட்டடத் தொகுதியில் சுதந்திர தின நிகழ்வு 

04 Feb, 2026 | 05:42 PM

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத் தொகுதியில் இன்று புதன்கிழமை (4) நடைபெற்றது. 

வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக மாகாண மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலந்துகொண்டு தேசியக் கொடியை  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஏற்றி வைத்தார்.

இதன்போது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் தமிழ் மொழியிலும் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களால் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 

அத்துடன், தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின்  மேலைத்தேய வாத்திய


இசை முழக்கம், தேசிய மாணவர் படையணியின் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன. 

ஹாட்லி கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்து கல்லூரி மற்றும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளின் மேலைத்தேய வாத்தியக் குழுவினர் இசையை வழங்கினர். 

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் உடுவில் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படையணியினரின் சீருடை அணிவகுப்பு மரியாதை இதன்போது நடைபெற்றது. 


ஹாட்லி கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, தும்பளை சிவப்பிரகாசம் வித்தியாலயம் மற்றும் கல்லடி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களின் சாரணிய அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. 

அத்துடன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களால் இன்னியம் இசை அணிவகுப்பு நடத்தப்பட்டதுடன், நாட்டின் அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையிலான டெனியா மற்றும் சிறிமுருகன் முன்பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு கண்காட்சியும் நடைபெற்றது.

மேலும், புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களின் செம்பு நடனம், கோலாட்டம், சிரட்டை கும்மி மற்றும் மயில் நடனம் ஆகியனவும் லயா நாட்டியப் பள்ளி மாணவர்களின் கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டம்,


வெலிஓயாவைச் சேர்ந்த ரன்சிலு கலைமன்றம் மற்றும் பரக்கும்பர மகா வித்தியாலய மாணவர்களின் கண்டிய நடன ஆற்றுகை, ஒஸ்மானிய கல்லூரி மாணவர்களின் கோலாட்டம் மற்றும் ரபான் ஆற்றுகை, சிவலீமன் சிலம்பம் கல்லூரி மாணவர்களின் சிலம்பாட்ட ஆற்றுகை, வெலிஓயா மதுரங்க கலாமன்றத்தின் நடன நிறுவன மாணவர்களின் சிங்கள நடனம் ஆகிய பல வண்ணக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

இவ்விழாவில் சர்வமதத் தலைவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, கடற்படையின் வடபிராந்திய கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர், விமானப் படையின் குறூப் கப்டன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர், வடக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் நிறைவாக ஆளுநரால் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.


























































நன்றி வீரகேசரி 






கிளிநொச்சியில் கரிநாள் அனுஷ்டிப்பு ; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி! 

04 Feb, 2026 | 03:28 PM

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (4) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி, பசுமைப் பூங்கா வரை ஊர்வலமாக சென்றது. 

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால்


இனப்படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோஷங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப் பிரச்சினைக்கான தீர்வினை வலியுறுத்தியும், தமிழர் தாயகப் பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி, பதாதைகளைத் தாங்கியவாறு சென்றனர். 

அதேவேளை தமிழர்கள் இந்நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத் தாங்கியவாறு "சிங்கக்கொடி அவமானச் சின்னம், இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள்" எனக் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 


மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர். 

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றபோது A9 பிரதான வீதியின் ஒருபக்க வழித்தடத்தில் வீதிப் போக்குவரத்து சிறிதுநேரம் தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.












































































































நன்றி வீரகேசரி 

No comments: