நயினாதீவு, யாழ். விகாரதிபதிகளின் உண்மையின் வெளிப்பாட்டுக்கு பாராட்டு; அவர்களின் ஆலோசனையை பெறுமா? - நல்லையா குமரகுருபரன்
கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு
சகலரும் சகல உரிமைகளோடும் வாழ வழி பிறக்க வேண்டும் - புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஆறு திருமுருகன்
வடக்கு, தெற்கில் 3 வீட்டுத்திட்டங்களுக்கான இந்திய நிதி உதவி இருமடங்காக அதிகரிப்பு
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
நயினாதீவு, யாழ். விகாரதிபதிகளின் உண்மையின் வெளிப்பாட்டுக்கு பாராட்டு; அவர்களின் ஆலோசனையை பெறுமா? - நல்லையா குமரகுருபரன்
Published By: Vishnu
02 Jan, 2026 | 12:38 AM
வடபகுதியின் இருபெரும் மூத்த விகாரதிபதிகள் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள உண்மையை ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட அனைவரும் கவனத்தில் கொண்டு தீர்க்கமான முடிவெடுக்க அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்பதோடு அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்ண வேண்டுமென தமிழ் தேசியப் பணிச் சபையின் தலைவர் கலாநிதி குமாரகுருபரன் வலியுறுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தையிட்டி தொடர்பான செம்மையான வரலாற்று உண்மையை நயினாதீவு நாகவிகாரை மற்றும் யாழ்ப்பாணம் நாகவிகாரை ஆகியவற்றின் இருபெரும் மூத்த விகாரதிபதிகள் தெட்ட தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
ஏற்கனவே விகாரை அமைந்திருந்த நிலம் நிலமாகவே இருக்கிறது. தமது பெயரில் உறுதியுடன் உரிமை கூறுபவர்களின் நிலத்தை கையளித்துவிட்டு ஏற்கனவே விகாரை அமைந்திருந்த நிலத்தில் விகாரையை அமைக்கலாம். அந்நிலம் இப்பொழுதும் வெறுமையாக இருக்கிறது.
குறித்த விகாரை அத்துமீறி தமிழர் காணியில் கட்டப்பட்டதென வரலாற்று பழமை வாய்ந்த வடபகுதியின் இரு விகாரைகளின் விகாராதிபதிகள் தெட்டத்தெளிவாக சாட்சியாக நிற்கையில், அவர்கள்கூறும் வழிவகை என்ன என்று அதனை முன்வைப்பதும் பொருத்தமானதாகும்.
கட்டிய விகாரையை இடிக்கலாமா? எனும் தர்மசங்கட கேள்விக்குறி தொக்கி நிற்கின்றது. மக்கள் வேதனையில் கட்டப்பட்டதை பௌத்த தர்மம் ஏற்றுக்கொள்ளுமா? வட பகுதியிலேயே விகாராதிபதிகளாக பௌத்த மனங்களை வென்ற அதே சிரேஷ்ட இரு நாக விகாரை களினதும் பீடாதிபதிகளினதும் கருத்தினடிப்படையில் செயற்படலாம் . அவர்களின் கருத்தே தென் இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கும் பௌத்தமக்களுக்கும் விளக்கமளிப்பதாகவும் வழிகாட்டுவதாகவும் அமையும் என்றார். நன்றி வீரகேசரி
கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு
01 Jan, 2026 | 02:21 PM
(துரைநாயகம் சஞ்சீவன்)
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்காக குறித்த பகுதியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக அதற்கான முன்னாயத்த வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொண்டு ஆய்வுகளை செய்வதற்காக தொல்லியல் திணைக்களத்திற்கு தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன் குறித்த பகுதியில் பாரிய புத்தர் சிலை ஒன்று அவசர அவசரமான திறந்து வைக்கப்பட்டிருந்தமையும் பாரிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் தமிழ் மக்களின் பார்வையில் தொல்லியல்
திணைக்களம் பௌத்தத்திற்குரிய திணைக்களமாகவே இயங்கி வருவதால் நியாயமான முறையில் ஆய்வு மேற்கொள்ளப்படுமா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் இதனால் குறித்த பணியின்போது பார்வையாளர்களாக தமிழ் தரப்பினரையும், அவர்களது அபிப்பிராயங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கன்னியா வெந்நீரூற்றை அண்மித்த பகுதியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டிருந்த மாரியம்மன் அறக்கட்டளைக்குச் சொந்தமான 200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயமானது 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் புனருத்தாரன பணிக்காக உடைக்கப்பட்டபோது தொல்லியல் திணைக்களத்தினால் அப்பகுதி தொல்லியலுக்கு உரியது என அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
பின்னர் குறித்த பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக கூறி குறித்த காணியின் உரிமையாளரும், பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலருமான கோகிலரமணி என்பவரால் திருகோணமலை மேல் நீதிமன்றில் 29.07.2019 அன்று வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பௌத்த விகாரை கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதுடன் பிள்ளையார் கோவில் கட்டுவதற்காக கன்னியா வெந்நீரூற்றின் நுழைவுப்பகுதியின் இடது பக்க மூலையில் 10 பேர்ச் காணி வழங்கப்பட்டிருந்தது.
1623 – 1638 ஆண்டு வரை பறங்கிய படைத் தளபதியாக இருந்த
நபரால் மடத்தடி மாரியம்மன் ஆலயத்திற்கு நன்கொடையாக கொடுக்கப்பட்ட ஒரு பிரதேசமே கன்னியா வெந்நீரூற்றும் பிள்ளையார் ஆலயமும் என்பதும் பல ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
சகலரும் சகல உரிமைகளோடும் வாழ வழி பிறக்க வேண்டும் - புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஆறு திருமுருகன்
Published By: Digital Desk 3
31 Dec, 2025 | 07:49 PM
(எம்.நியூட்டன்)
சகலரும் சகல உரிமைகளோடும் வாழ வழி பிறக்க வேண்டும் இனப்பிரச்சினையை தீர்ப்போம் என்கிறார்கள் முயற்சிகளை காணவில்லை நல்ல எண்ணங்கள் பிறக்க புதிய ஆண்டில் உறுதியுடன் பயணிப்போம் என செஞ்சொற்செல்வர். கலாநிதி ஆறு திருமுருகனின் புத்தாண்டுச் செய்தி தெரிவித்தார்.புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
உலகெங்கும் வாழும் அன்புக்குரிய அன்பர்களே உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக. விடைபெறும் ஆண்டாகிய 2025 எமக்குத் தந்த நல்ல அனுபவங்கள் பல உண்டு அவற்றை மனத்தில் இருத்தி விடை கொடுப்போம். புதிய ஆண்டில் புதிய எண்ணங்களோடு எமது வாழ்வைத் தொடர திடசங்கற்பம் புகுவோம். எல்லாத் தெய்வங்களும் இயற்கைத் தெய்வங்களே. இயற்கையை நன்றியோடு போற்றி வணங்குவோம். உலகம் முழுவதும் இன்று இயற்கை பற்றிய அச்சுறுத்தல் உண்டு. இயற்கையை யார் வெல்ல முடியும். எனவே பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு அனைத்தும் எமக்குச் சாதகமாக அமைய வேண்டும் என அனைவரும் வேண்டுதல் செய்வோம். எவ்வளவு தூரம் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இயற்கையை கட்டுப்படுத்த முடியாது. இவ் உண்மையை அனைவரும் உணர்வோம்.
மனித வாழ்வு எமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பம் இவ் அரிய வாழ்வை நாம் நல்ல வண்ணம் அனுபவிக்க வேண்டும். போட்டியும், பொறாமையும், வஞ்சகமும், அறியாமையும் எம் சமூகத்திடையே பல பிளவுகளை உண்டாக்கிக் கொண்டே உள்ளது. அதனால் பகை உணர்வு பெருகிக் கொண்டே உள்ளது. குறிப்பாக பல இன்னுயிர்களை இழந்த எம்மண்ணில் இன்றும் அச்ச உணர்வு வளர்கிறது. ஒத்த வயதுடையவர்கள் ஒருவரை ஒருவர் ஓங்கி வாளால் வெட்டுகிறார்கள். சிலர் துடிக்கின்ற காட்சியை ரசிக்கிறார்கள். கைப்பேசி மூலம் இக்காட்சிகளை உலகுக்கு காண்பிக்கிறார்கள். இவை எல்லாம் தர்மத்திற்கு ஆகாது யாரும் பகையை வளர்க்காதீர்கள் அன்பைப் பெருக்குங்கள். பிறரின் உயிரை எடுக்கும் அளவிற்குத் துணியாதீர்கள். பகுத்தறிவுள்ள மனிதர்களாகிய நாம் பண்பட்டு வாழ வேண்டும் மன்னிக்கப் பழக வேண்டும். நாமும் நன்றே வாழ்ந்து பிறரையும் நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும். கல்வி வளர்ந்த வேகத்திற்கு கருணை வளரவில்லை அது கவலைக்குரிய விடயம்.
ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் உலகில் அகதிகளாக அலையும் மக்களுக்கு விடிவு கிடைக்குமா? என எண்ணுகின்றோம். போரினால் வந்த அகதிகள் ஒரு பக்கம் இயற்கை இடரினால் வந்த அகதிகள் இன்னொரு பக்கம் எங்கள் மண் இரண்டு வகைத் துன்பத்தையும் சந்தித்துக் கொண்டேயிருக்கிறது. எமது நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதய சுத்தியோடு செயற்படுபவர்கள் எம்மிடையே இல்லை. ஆட்சிக்கு வருபவர்கள் எல்லாம் 'திர்ப்போம் தீர்ப்போம்' என்பார்கள் தீர்ப்பதாக இல்லை. அநியாயமாக காலம் கடக்கிறது. போன நாட்கள் திரும்பி வராது. சகலரும் சகல உரிமைகளோடும் வாழ் வழி பிறக்க வேண்டும். அந்நாள் எந்நாளோ? யாம் அறியோம். இனிய புத்தாண்டு நாளில் நல்லவற்றை எண்ணிப் பிரார்த்தனை செய்வோம். அழகான உலகத்தை அன்போடு ரசித்து மகிழ்வோடு வாழ அனைவரும் முயல்வோம் என்றுள்ளது. நன்றி வீரகேசரி
வடக்கு, தெற்கில் 3 வீட்டுத்திட்டங்களுக்கான இந்திய நிதி உதவி இருமடங்காக அதிகரிப்பு
31 Dec, 2025 | 04:23 PM
(எம்.மனோசித்ரா)
இலங்கையில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உயர்தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கிராம சக்தி வடக்கு, கிராம சக்தி தெற்கு-ஐ மற்றும் கிராம சக்தி தெற்கு-ஐஐ ஆகிய மூன்று வீட்டுத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2017 ஒக்டோபர் மற்றும் 2018 ஒக்டோபர் மாதங்களில் கையெழுத்திடப்பட்டன.
இந்த ஒப்பந்தங்களின்படி, இலங்கை அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், சுயமாக வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு 500,000 இலங்கை ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கி வந்தது. கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் பின்னரான விலை உயர்வு, அத்துடன் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் காரணமாக, ஒதுக்கப்பட்ட நிதியுதவியுடன் வீடுகளைக் கட்டி முடிப்பதில் பயனாளிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்கமைய, இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு வீட்டுக்கான நிதியுதவியை 1,000,000 இலங்கை ரூபாவாக இருமடங்காக அதிகரிக்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றியமைக்கப்பட்ட நிதியுதவியை அமுல்படுத்துவதற்கான இராஜதந்திர கடிதங்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எல்.பி. குமுது லால் ஆகியோரால் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்த மூன்று திட்டங்களின் கீழ் 1550-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அதிகரித்த நிதியுதவியால் பயனடையவுள்ளன.
இலங்கையில் மக்களின் அன்றாட வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் மக்கள் நலன்சார் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களில் 'வீடமைப்பு' முக்கிய இடம் வகிக்கின்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்தியாவின் பிரதான வீட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 50,000 வீடுகள் கட்டப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நிதியுதவி அதிகரிக்கப்பட்ட 3 கிராம சக்தி திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கையில் இந்தத் துறையில் ஏனைய உயர்தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்து வருகின்றது.
நாட்டின் 25 மாவட்டங்களிலும் தலா 24 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்கும் நாடளாவிய மாதிரி கிராமத் திட்டம்; மன்னார் மடுத் திருத்தலத்திற்கு வரும் யாத்திரிகர்களுக்கான இடைத்தங்கல் விடுதிகள்; மற்றும் அனுராதபுரத்தில் அண்மையில் நிறைவடைந்த சோபித நஹிமிகம திட்டம் ஆகியவை இதில் அடங்கும். அத்துடன், தித்வா புயலைத் தொடர்ந்து இந்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 450 மில்லியன் டொலர் புனரமைப்பு மற்றும் மீட்புப் பொதியின் கீழ், முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளைக் கட்டுவதற்கான உதவிகளும் முன்மொழியப்பட்டுள்ளன. நன்றி வீரகேசரி
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
03 Jan, 2026 | 12:59 PM
சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக சனிக்கிழமை (03) காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.
தையிட்டி விகாரையில் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி











No comments:
Post a Comment