உலகச் செய்திகள்

 சுவிஸில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பாரிய வெடிப்பு! - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஐ தாண்டியது ; 115 பேர் காயம்!

டெல்லியில் கடும் பனிமூட்டம் : 128 விமானங்கள் இரத்து

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்

புதிய குடியேற்ற விதிமுறைகளை அறிவித்தது பிரித்தானியா

இது மிகவும் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பு - வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ 


சுவிஸில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பாரிய வெடிப்பு! - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஐ தாண்டியது ; 115 பேர் காயம்! 

02 Jan, 2026 | 11:50 AM

சுவிற்ஸர்லாந்து நாட்டில் கிரான்ஸ் - மொன்டானா (Crans-Montana) என்ற ரிசோர்ட் நகரில் உள்ள பாரில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்தில் மேலும் சுமார் 115 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

உள்நாட்டு நேரப்படி, நேற்று (ஜன. 1) அதிகாலை 1.30 மணியளவில் பாரில் விருந்தினர்கள் அனைவரும் புத்தாண்டு நிகழ்வுகளில் மூழ்கியிருந்தபோதே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம்


இதுவரை கண்டறியப்படாத போதிலும், இது, பயங்கரவாதத் தாக்குதலாக இருக்க முடியாது என புலனாய்வுத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

பல காரணங்களை ஊகிப்பதாக இருப்பினும், பாரில் உள்ள அறையொன்றில் முழுவதுமாக தீப் பிடித்ததே வெடிப்புக்கு காரணமாக இருந்திருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றியதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் தங்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக அங்கு சென்று தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் என்றும் கூறப்படுகிறது. 

விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகவும் மீட்புப் படையினர் ஹெலிகொப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக அப்பகுதியில் அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுவிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


விபத்து ஏற்பட்டபோது பாரில் இருந்து ஒரெஞ்ச் நிற தீப்பிழம்புகள் வெளிக்கிளம்பியதை நியூயோர்க்கைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி படம் பிடித்து வெளியிட்டிருந்தார். 

இரவுப் பொழுதில் தீ பரவிய காட்சியும் மக்கள் அலறியடித்து பாதுகாப்பான இடம் தேடி ஓடுகின்ற காட்சிகளும் அந்நாட்டு ஊடகங்களால் படம் பிடிக்கப்பட்டு, அப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

இத்தீ விபத்தினை நேரடியாக கண்ட 21 வயதுடைய சாமுவேல் ரெப் என்பவர் “மக்கள் அலறிக்கொண்டிருந்தனர். பிறகு பலர் தரையில் விழுந்து கிடந்தனர். அவர்கள் அனேகமாக இறந்து கிடந்தனர்” என்றார். 

விபத்து ஏற்பட்டபோது பாரில் இருந்த இரண்டு இளம் பிரெஞ்ச்


பெண்கள், “பிறந்தநாள் மெழுகுவர்த்திகள்” உள்ள போத்தலொன்று மரத்தாலான கூரைக்கு மிக அருகில் வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர், பாரின் அடித்தளப் பகுதியில் தீப்பிடித்ததைத் தாம் கண்டதாகவும் அந்தத் தீ மிக வேகமாக கூரை முழுவதும் பரவியது என்றும் ஊடகமொன்றுக்கு தெரிவித்தனர்.    














நன்றி வீரகேசரி 




டெல்லியில் கடும் பனிமூட்டம் : 128 விமானங்கள் இரத்து 

Published By: Digital Desk 3

29 Dec, 2025 | 02:45 PM

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று திங்கட்கிழமை (29) கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம்  விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் 128 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், 8 விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திசைமாற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, வருகை தர இருந்த 64 விமானங்களும், புறப்பட இருந்த 64 விமானங்களும் இரத்து செய்யப்பட்டன. தலைநகர் டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் காட்சித்திறன் கடுமையாக குறைந்ததே இதற்குக் காரணமாகும்.

டெல்லியிலிருந்து சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இரத்தானதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

மேலும், டெல்லியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கான ரயில் சேவை கடும் பனிமூட்டம் காரணமாக தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக அதிகாலை நேரங்களில் நிலவும் குறைந்த காட்சி தூரம் காரணமாக விமானங்கள் தாமதம், திசைமாற்றம் மற்றும் ரத்தாகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 







பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார் 

30 Dec, 2025 | 09:13 AM

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) தலைவருமான கலீதா ஜியா, நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டு 80 வயதில் காலமானார். அவர் இன்று செவ்வாய்க்கிழமை (காலை 6.00 மணியளவில்) உயிரிழந்ததாக பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற நாட்டின் முதல் ஜனநாயகத் தேர்தலில் தனது கட்சியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜியா, 1991 ஆம் ஆண்டு பங்களாதேஷின் முதல் பெண் பெண் பிரதமராகப் பதவியேற்றார்.

கடந்த ஒரு மாதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜியா, சிறுநீரக பாதிப்பு, இதய நோய் மற்றும் நிமோனியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை “மிகவும் மோசமான நிலையில்” இருப்பதாக வைத்தியர்கள் முன்னதாக தெரிவித்திருந்தனர். வயதும் ஒட்டுமொத்த உடல்நலக் குறைவும் காரணமாக ஒரே நேரத்தில் பல சிகிச்சைகள் வழங்க முடியாது என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், பிப்ரவரியில் எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தலில் ஜியா போட்டியிடுவார் என அவரது கட்சி முன்னதாக அறிவித்திருந்தது. இது, அவரது அரசியல் போட்டியாளரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஆட்சியிலிருந்து அகற்றிய புரட்சிக்குப் பின்னர் நடைபெறவிருந்த முதல் தேர்தலாகக் கருதப்பட்டது.

பல தசாப்தங்களாக, அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் மாறி மாறி ஆட்சி செய்த கலீதா ஜியா மற்றும் ஷேக் ஹசீனா ஆகிய இரு பெண்களுக்கிடையிலான கடுமையான அரசியல் போட்டியே பங்களாதேஷ் அரசியலை வரையறுத்ததாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

“எங்களுக்குப் பிடித்த தலைவர் இனி எங்களுடன் இல்லை. அவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு எங்களை விட்டு பிரிந்துவிட்டார்,” என BNP திங்கட்கிழமை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷின் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவியான கலீதா ஜியா, 1981 ஆம் ஆண்டு இராணுவ சதியில் அவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசியலில் நுழைந்தார். பின்னர் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, தேசிய அரசியலில் முக்கிய இடத்தைப் பெற்றார்.

1996 ஆம் ஆண்டு குறுகிய காலம் இரண்டாவது முறையாக பிரதமராக இருந்த ஜியா, 2001 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமர் பதவியை ஏற்றார். அவர் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகினார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஷேக் ஹசீனாவுடன் நீண்டகாலமாக நீடித்த அரசியல் போட்டி ஆகியவை அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 2018 ஆம் ஆண்டு, ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் ஜியா ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், அந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்ததுடன், அவை அரசியல் உள்நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டவை என கூறினார்.

பின்னர், வெகுஜன அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து ஹசீனா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதன் பின்னர், கடந்த ஆண்டு ஜியா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில் ஜியா பிரச்சாரம் செய்வார் என BNP நவம்பரில் அறிவித்திருந்தது.

BNP மீண்டும் ஆட்சிக்கு வருமெனில், ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் நாட்டின் புதிய தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 60 வயதான ரஹ்மான், 17 ஆண்டுகள் லண்டனில் சுய நாடுகடத்தலில் இருந்த பின்னர் கடந்த வாரம் பங்களாதேஷுக்குத் திரும்பியிருந்தார்.

ஜியாவின் இறுதி தருணங்களில், அவரது மகன் தாரிக் ரஹ்மான், அவரது மனைவி மற்றும் மகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்ததாக BNP தெரிவித்துள்ளது.

இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், ஜியாவை “தேசத்திற்கு மிகுந்த உத்வேகத்தின் ஆதாரம்” என வர்ணித்ததுடன், அவரது நலனுக்காக நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யுமாறு முன்பு அழைப்பு விடுத்திருந்தார்.

“அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என BNP தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 






புதிய குடியேற்ற விதிமுறைகளை அறிவித்தது பிரித்தானியா

Published By: Digital Desk 3

01 Jan, 2026 | 03:37 PM

பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டின் குடியேற்றக் கொள்கை விளக்க அறிக்கையின்படி  (Immigration White Paper), 2026-ஆம் ஆண்டில் முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

Skilled Worker, Scale-up மற்றும் High Potential Individual விசாக்களுக்கு முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள், தற்போது உள்ள B1 நிலைக்கு பதிலாக, Common European Framework of Reference for Languages (CEFR) அடிப்படையில் B2 நிலை ஆங்கிலத் திறனை நிரூபிக்க வேண்டும். 

வேலை செய்யும் இடங்களில் தொடர்பாடல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே இந்த மாற்றத்தின் நோக்கம் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இந்த வீசாக்களில் பிரித்தானியாவில் இருப்பவர்கள், தங்கள் விசாவை நீடிக்கும் போது, இந்த புதிய நிபந்தனை அவர்களுக்கு பொருந்தாது.

மேலும், 2026 ஆம் ஆண்டு  பெப்ரவரி மாதம்  25 ஆம் திகதி  முதல் மின் பயண அங்கீகார (ETA) திட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட உள்ளது. “அனுமதி இல்லையெனில் பயணம் இல்லை” என்ற விதியின் கீழ், வீசா தேவையில்லாத சுமார் 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன் டிஜிட்டல் முன் அனுமதி பெற வேண்டும். ETA-வின் கட்டணம் £16 ஆகும். இது இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் மற்றும் பலமுறை நுழைவிற்கு அனுமதிக்கும்.

விமான நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள், பயணம் தொடங்குவதற்கு முன் ETA அனுமதி இருப்பதைச் சரிபார்ப்பார்கள். பிரித்தானிய மற்றும் ஐரிஷ் குடிமக்கள் இந்த விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், நிரந்தர குடியிருப்பு (Indefinite Leave to Remain – ILR) மற்றும் குடியேற்றம் தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. முன்மொழியப்பட்ட மாற்றங்களில், பெரும்பாலான குடியேற்றர்களுக்கான நிரந்தர குடியிருப்பு பெறும் காலக்கெடுவை 05 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டித்தல், மேலும் உயர்ந்த ஆங்கிலத் திறன் நிபந்தனைகள் மற்றும் நீண்டகால வருமானம், பொருளாதார பங்களிப்பு ஆகியவற்றை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவை அடங்கும். இவை அங்கீகரிக்கப்பட்டால், 2026 ஏப்ரல் மாதம்  முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது; ஏற்கெனவே நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு இது பின்நோக்கி பொருந்தாது.

2026 க்கான புதிய சம்பள வரம்பு உயர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உயர்ந்த வரம்புகள் தொடரும். குறிப்பாக, Skilled Worker விசாவிற்கான குறைந்தபட்ச சம்பள வரம்பான £41,700 விதி தொடர்ந்தும் அமுலில் இருக்கும். தற்காலிகமாக வழங்கப்பட்ட shortage occupation சலுகைகள் 2026 முடிவு வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள், நிகர குடியேற்ற எண்ணிக்கையை குறைப்பது, உயர்தர திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் எல்லை கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவது என்பதே நோக்கம் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், நாட்டில் நிரந்தரமாக தங்கும் குடியேற்றர்கள் நீண்டகால பங்களிப்பும் சமூக ஒருங்கிணைப்பும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அரசு வலியுறுத்தியுள்ளது.

இதனால், வேலை வழங்குநர்கள், குடியேற்றர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் பிரித்தானிய உள்நாட்டு அலுவலகம் வெளியிடும் புதிய வழிகாட்டுதல்களை கவனமாகப் பின்பற்றவும், ஆங்கிலப் பரீட்சைகள், ETA விண்ணப்பங்கள் மற்றும் எதிர்கால குடியேற்றத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.   நன்றி வீரகேசரி 






இது மிகவும் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பு - வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ 

03 Jan, 2026 | 03:45 PM

வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று சனிக்கிழமை (3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து வெனிசுலா ஜனாதிபதி  நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

“ இது மிகவும் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பு” என வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, கடுமையாக கண்டித்துள்ளார்.

இதனிடையே, சனிக்கிழமை (03) அ அமெரிக்கா வெனிசுலாவின் உள்ளகப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியதாகவும், இது கடந்த சில வாரங்களாக அந்நாட்டு மக்கள் அச்சத்துடன் எதிர்பார்த்த ஒரு பெரும் பதற்ற நிலையாகும்  என்றும் சர்வதேச  ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“வெனிசுலாவின் நிலப்பரப்பும் மக்களும் மீது அமெரிக்காவின் தற்போதைய அரசு மேற்கொண்ட இந்த மிகக் கடுமையான இராணுவத் தாக்குதலை, சர்வதேச சமூகத்தின் முன் வெனிசுலா மறுத்து, கண்டித்து, நிராகரிக்கிறது,” என மதுரோவின் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பிறகு, உலகின் பல நாடுகளும் தங்களது எதிர்வினைகளை வெளியிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   நன்றி வீரகேசரி 








No comments: