படிப்பதோ கீதை அடிப்பதோ கொள்ளை
பிடிப்பதோ விரதம் தொடுப்பதோ சண்டை
கொடுப்பதைத் தடுப்பார் கோடியைப் பார்ப்பார்
அடுத்தவர் கேட்க அறிவுரை பகர்வார்
மதுவை விரும்பி மயக்கத்தில் மிதப்பார்
மங்கையர் சுகமே மாண்புடை என்பார்
புத்தியை தீட்டார் கத்தியைத் தீட்டுவார்
புகழினைப் பெற்றிட பொய்மையை அணைப்பார்
கனவான் போன்று உடையுடன் திரிவார்
கண்ணியம் என்பதைக் கனவிலும் எண்ணார்
புண்ணியம் என்றால் எதுவெனக் கேட்பார்
உண்மை நேர்மை உழைப்பை மதியார்
உருட்டு பிரட்டு ஊழலை விரும்புவார்
அரசியல் என்றால் ஆலாய்ப் பறப்பார்
அதிகாரம் கிடைத்திட அனைத்துமே ஆற்றுவார்
பிறப்பின் நோக்கம் அறியாப் பேதையர்
பிறப்பு என்பது பெரு வரமாகும்
வையகம் போற்ற வாழ்க்கை வாழ்ந்தால்
வானுறை தெய்வம் பக்கம் இருக்கலாம்
மனிதத் தன்மை மாண்புடன் இருந்தால்
மண்ணும் போற்றும் விண்ணும் போற்றும்
மனிதம் என்பது வசந்தமாம் மாளிகை
வசந்தம் வீசிட வாழ்வதே வாழ்க்கையே
.jpeg)
.jpg)
No comments:
Post a Comment