தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 9…..சங்கர சுப்பிரமணியன்.


ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றால் கடைகளில் கூடும் கூட்டம் வேறு, இதுவேறு. ஆண்டவனைக் கண்டும் களிக்கலாம் உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்ற பழமொழிக்கும் உயிர் கொடுக்கலாம். ஒரு நாள் அன்னதான வரிசையில் நின்றபோது என்னைப்பற்றி நன்கறிந்த ஒருவரிடம் வசமாக மாட்டிக் கொண்டேன். அடுத்து அவர் என்னிடம் கேட்ட கேள்விதான் ஹைலைட்.


அப்படி என்ன கேட்டடார்? யாரோ கடவுள் இல்லை என்றெல்லாம் சொன்னார்களே? அவர்கள் எல்லாம் இப்போது கோவிலுக்கு வந்திருக்கிறார்களே என்றார். அப்போது மெதுவாக என் காதில் மனைவி கிசகிசுத்தாள். இதுக்குத்தான் வாயை வச்சுக்குட்டு சும்மா இருக்கணும். கருத்து கந்தசாமிபோல் கருத்து சொல்லக் கூடாது என்றாள். அவள் சொல்வதும் சரிதான்.

அப்பனுக்கே பாடம் சொன்ன கடவுள் இருக்கும்போது கணவனுக்கும்

மனைவி பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாதா? இப்போது வேண்டுமானால் அன்னதானம் கிடைக்கும் ஆனால் எப்போதும் கிடைக்குமா? சரி அதன்பின் நடந்தவற்றைக் கூறவேண்டாமா? சொல்கிறேன். கேட்டவரிடம் என் பதிலைச் சொன்னேன். உங்களுக்கு பெரியோரை மதிக்கும் பண்பாடு உள்ளதா? என்றேன்.

ஏன் இல்லாமல்? பெரியோரைப் போற்றுதல் என்ற கருத்துக்களை கூறும் அதிகாரங்களே உள்ளனவே. என்னவோ ஒன்றிரண்டு குறட்பாக்களை தெரிந்து வைத்துக்கொண்டு திருக்குறளையே குத்தகைக்கு எடுத்தவர்போல் கதைக்கிறீர்களே என்றார். அதனால்தான் கேட்டேன். உங்களைப்போல் போல் எனக்கும் பெரியோரை மதிக்கும் பண்பு இருப்பதால்தான் கோவிலுக்கு வந்திருக்கிறேன் என்றேன்.

கேள்விகேட்டவர் திருதிருவென(வட்டார வழக்கு) விழித்தார். அவருக்கு விளக்கினேன். பெற்றோர் ஆசிரியர் மூத்தோர் தாத்தா பாட்டி என இருப்போர் இறந்தோர் என வயதில் மூத்த அனவரையும் நம் பண்பாட்டால் வணங்குகிறோம் அல்லவா? இவர்களில் குறிப்பாக நம் உறவுகளின் படங்கள் இருந்தால் மாலையிட்டு வணங்குகிறோம் அல்லவா என்றேன். ஆம் என்றார்.

இவர்களெல்லாம் குறைந்த பட்சம் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்தவர்கள். ஆனால் இங்கு கோவிலில் சிலையாக இருக்கும் பெரியவர்கள் பல யுகங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்தவர்கள் என்று நம்பப்படுபவர்கள். அத்தகைய பெரியவர்களுக்கு ஒரு ஹலோ சொல்வதால் என் கருத்துக்கு என்ன குறை வந்துவிடப் போகிறது என்றேன்.


மேலும் என்மனைவிக்கு உங்களைப் போன்ற நம்பிக்கை உண்டு அதனால் வந்திருக்கிறேன். மற்றபடி சொர்க்கம் கிடைக்கும் என்றோ என் பாவத்தை நீக்குவார் என்றோ வரவில்லை. நான் செய்த வினைப்பயனை நான் தான் அனுபவிக்க வேண்டும். நான் கடவுளை சரிக்கட்டினாலும் சித்திரகுப்தன் எழுதி பராமரித்து வரும் கணக்கு காந்தி கணக்குபோல் ஆகிவிடாதா? என்றேன்.

உங்களிடம் பேசி ஜெயிக்க முடியுமா? என்று என் மனைவியின் முன் பாராட்டி பட்டம் வழங்கினார். நான் ஒருமுறை என்னைக் கிள்ளிப் பார்த்தேன். கனவல்ல உண்மைதான்.
எனக்கும் பிறந்தநாள் வருகிறது.வெள்ளிவிழா, பொன்விழா மற்றும் எல்லாம் வந்தது. உறவுகள் நண்பர்களைத் தவிர எவரும் கண்டு கொண்டதில்லை. இப்போது இவர் பாராட்டி பட்டம் கிடைத்துள்ளது.

யாராவது எனக்கு விழா எடுக்கிறார்களா என்று பார்க்கவேண்டும்.

ஏனென்றால் நானும் அரசாங்க விருது தனியார் விருது என விருதுகள் வாங்கியிருக்கிறேன். ஒருவேளை இப்படியான பாராட்டு விழா எடுக்கவேண்டும் என்றால் சிறப்புத் தகுதி இருக்க வேண்டுமோ? நானும் தலைகீழாக நின்று பார்க்கிறேன் அந்த சிறப்புத் தகுதி என்னவென்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். நாய் வாலை நிமிர்த்த முடியுமா? வர வர மாமியார் கழுதைபோல் ஆன கதையாக திரும்பத் திரும்ப கட்டுரையை விட்டு வெகுதூரம் வந்து விட்டேன்.

பாதை திரும்பிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை என்ற இந்த பச்சைக்கிளிக்கொரு பாடல் வரிகளும் நினைவூட்டியது. இப்போது திரும்ப வழிகாட்டிக்கு வருகிறேன். வழிகாட்டி உதவியோடு சென்றால் நான் விரும்பிய நேரத்தை செலவிட முடியாது. ஆனால் சீன நெடுஞ்சவரைப் பொருத்தவரை வழிகாட்டிக்கு முக்கிய பங்கில்லை. ஆதலால் வழிகாட்டியை தேர்ந்தெடுத்தோம்.

சீனப் பெருஞ்சுவரை நான்கு இடங்களில் பார்வையிடலாம். அவற்றில் படாலிங் பெருஞ்சுவர் மற்றும் முட்டியான்யு பெருஞ்சுவர் சிறப்பு மிக்கவை. நாங்கள் முட்டியான்யு பெருஞ்சுவருக்கு சென்றோம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பதிவு செய்தவர்களை பேருந்தில் அழைத்துச் செல்வார்கள். சுமார் ஒன்றே முக்கால் மணி நேர பயணத்துக்கு பிறகு முட்டியான்யு சீனப் பெருஞ்சுவருக்கு சில கிலோமீட்டர் தொலைவில் விடுவார்கள்.


பின் ஐந்து மணி நேரத்துக்குப்பின் அதே இடத்துக்கு வரவேண்டும். அங்கிருந்து புறப்பட்ட இடத்தில் பேருந்தில் கொண்டுவந்து விடுவார்கள். சீனப் பெருஞ்சுவருக்கு அருகே இலவசமாக வேறு பேருந்து அழைத்துச் செல்லும். வரிசையில் நிற்க வேண்டும். வரிசையில் நின்ற ஓரிரு நிமிடங்களிலேயே ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும் பேருந்தில் ஏறி பெருஞ்சுவரின் அடிவாரத்துக்கு வரவேண்டும்.

அங்கிருந்து சற்று தூரம் நடந்து அங்கிருந்து ரோப் காரில் (தொங்கூர்தி) சென்றால் சீனப் பெருஞ்சுவரில் ஏறி நடக்கலாம். ரோப் காரில் இருந்து இறங்கியும் சற்று தூரம் நடந்து சென்றே சீனப் பெருஞ்சுவரில் ஏறவேண்டும். சீனப் பெருஞ்சவரில் ஏறுவது அவ்வளவு எளிதல்ல. அறுபது வயதைக் கடந்தவர்களை மாற்றுப் பாதையில் செல்லுமாறு அங்கிருந்த காவலர்கள் சொன்னார்கள். மாற்றுப்பாதை வழியாக செல்ல வேண்டுமானால் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும்.

ஆதலால் படிக்கட்டில் ஏறலாம் என்று முடிவு செய்தேன் ஏதோ இப்போதுதான் இருபது வயது என்ற நினைப்பு. நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்குது என்றெல்லாம் தெரிந்து வைத்திருந்து என்ன பயன்? தான் கெட்ட குரங்கு வனத்தையும் சேர்த்து அழிக்குமாம். அந்த கதையாக என் மனைவியையும் உற்சாகப் படுத்தினேன். ஏழுமலையானை தரிசிக்க படியேறி வருவதாக வேண்டிக் கொண்டு வேண்டுதலை நிறைவேற்றாவிட்டால் சும்மா விடுவாரா?

அது என்னவோ தெரியாது. ஆனால் இங்கு விரும்பி ஏறியதால் அதற்குண்டான பலன் கிடைத்தது. ஒவ்வொரு படியும் அவ்வளவு உயரம். வீம்பு பண்ணி ஏறியவர்கள் எல்லோரும் வேதனைப்பட்டார்கள். ஒரு வழியாக ஏறி முடித்தோம். உழைப்பின் பயன் அப்போது தெரிந்தது. கண்முன் சீனப் பெருஞ்சுவர் முடிவின்றி நீண்டு சென்றது. சுவரின்இருபுறமும் காடுகள் போல் மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன.

அங்கும் காவலர்கள் நின்று எச்சரித்தபடியே இருந்தனர். சீனப் பெருஞ்சுவர் முழுவதையும் நடந்து சென்று பார்க்கமுடியாது. அதன் நீளம் இருபத்தோராயிரம் கிலோமீட்டருக்கும் மேல். அதை இரண்டாயிரம் ஆண்டுகளாக பல பேரரசர்கள் கட்டியுள்ளார்கள். மாரத்தானில் பங்குபெற்றவர்களால் கூட இதில் வெகுதூரம் செல்லமுடியாது. ஆதலால் எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் சென்று திரும்பி விடுங்கள் என்று காவலர்கள் எச்சரித்த வண்ணம் இருந்தார்கள்.

காவலர்கள் சொன்னது உண்மைதான். சமதளம் இல்லை. ஏற்ற இறக்கங்களை கொண்ட பாதையாக இருந்தது. வாலிபவயதினர் நடந்து செல்வதை
கண்ணுக்கெட்டிய தூரம் வரை காண முடிந்தது. அறுபது வயதைக் கடந்தவர்கள் காவலரின் எச்சரிக்கைப்படி சிறிதுதாரம் நடந்து சென்று திரும்பினார்கள். நாங்கள் ஏறிய இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள டவர்(கோபுரம்) வரை சென்று திரும்பினோம்.

சங்கர சுப்பிரமணியன்.

No comments: