கோதையின் தமிழைக் கொண்டாடி மகிழ்வோம் !















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா    

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்   

மெல்பேண் ..... அவுஸ்திரேலியா



மாதங்களிலே மார்கழி மகத்தான மாதம். சைவமும் ,வைணமும் சங்கமிக்கும் மாதம். திருவெம்பாவை யும் திருப்பாவையும் ஆலயங்களில் பக்தி பூர்வமாய் பாடப்படுகின்ற மாதம். ஆண்டாளின் அமுதத் தமி ழும் , மணிவாசகரின் உருக வைக்கும் தமிழும் பக்தியுடன் சேர்ந்து இசையாய் எழுந்து நிற்கும் மாதம். இந்த மாதம் இறையினை ஏற்றிப் போற்றி நிற்க அமைந்திட்ட மாதம். தெய்வீக மாதமாய் விளங்குவதால் -  குடும்ப விழா க்களுக்கோ வீட்டு நிகழ்வுகளுக்கோ இடம் கொடுப்பதில்லை. தெய்வீக மாதத்தில் தெய்வ த்தை நினை என்று எங்கள் முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டார்கள். தெய்வீகம் முன்னிற்பதால் மார் கழி பீடை உடைய து அல்ல -   பீடுடைய மாதம் என்பதே மிகப் பொருத்தமானதாகும். கண்ணனும் கீதை யில் " மாதங்களில் நான் மார்கழி " என்று மொழிந்ததாய் அறிகின்றோம். சிவனும் , திருமாலும் ஏற்றிப் போற்றப்பட்டு - சிவன் அடியாரும் , திருமால் அடியாரும் தீந்தமிழால் பாமாலை சூட்டினார்கள். அப்படி அவர்கள் பாமாலை சூட்டி யதும் மார்கழியிலேதான். அந்த வழியில் ஒரு அடியார் பெண்ணாய் அமைந்து திருமாலுக்குப் பாமாலை யோடு , பூமாலையையும் சூட்டி மகிழ்கின்றார். அவர்தான் - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான கோதை நாச் சியார். சைவசமய குரவர்போல் - வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் வருகிறார்கள். அவர்கள் பன்னிருவர். அவர்களில் ஒரே ஒரு பெண்ணாய் வாய்த்தவர்தான் கோதை நாச்சியார்.  பெரியாழ்வாரின் மகளாய் திரு மாலின் அருளினால் வாய்த்தவர்.   

திருமாலினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்.திருமாலின் பக்தியில் ஆழ்ந்தவர்கள்.ஆதலால் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் உன்னத நிலைக்கு ஆழானவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்படியான ஆழ் வார்களில் ஒரு பெண்ணாய் இருக்கும் நிலையில் ஆண்டாள் நாச்சியார் விளங்குகிறார். ஆண்டாளைத் தவிர மற்றைய ஆழ்வார்கள் அனைவரும் ஆண்களாய் இருப்பதால் - அவர்கள் திருமாலை நோக்கும் வித மும் திருமாலை ஏற்றிப்போற்றிப் பாடும் விதமும் ஆண்டாள் போல் இருக்கவில்லை. அவர்கள் யாவரும் ஆண்கள் என்பதால் அவர்கள் நோக்கும் ,போக்கும் அவர்களுக்கே உரித்தானதாய் ஆகியே இருந்தது எனலாம். அவர் களும் திருமாலைக் காதலித்தார்கள். அந்தக் காதலும் பல நிலையிலே அமைந்திருந்தது. அவர்கள் அனை வரும் தம்மைப் பெண்ணாக உருவகித்தே தம்முணர்வுகளை வெளிப்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் பெண்ணாகவே இருந்த காரணத்தால் ஆண்டாள் நாச்சியாரின் வெளிப்பாடும் , உணர்வுகளும் , பெண் மைக்குரிய பாங்கிலேயே அமைந்திருந்தது. இதனால் ஏனைய ஆழ்வார்களின் தமிழைவிட ஆண்டாள் நாச் சியாரின் தமிழ் - அமுதத் தமிழாய் , சங்கத் தமிழாய் , காதல்த்தமிழாய் , கற்கண்டுத் தமிழாய் , அணைக்கும் தமிழாய் , ஈர்க்குந்தமிழாய் , படிக்கப் படிக்க சுவைக்கும் தமிழாய் - பல்பரிணாம் கொண்டதாய் விளங்கியது - விளங்குகிறது என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது.   


  " திருப்பாவை " என்பது மார்கழியின் மகத்துவம், அந்தத் திருப்பாவையினை தமிழுக்கு , பக்தி உலகுக்கு வழங்கியவர் கோதை நாச்சியாரான ஆண்டாளே. மார்கழியில் மாலவனைப் போற்றிப் பாடும் பாங்கில் - பக்தியை,காதலை , அறிவியலை , வாழ்க்கை முறையை , தமிழ்ச் சுவையை , சமூகவியலை , இயற்கையை ,  என்று பலவற்றை ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை வாயிலாக வழங்கி வரமாக்கி இருக்கிறார். திருப் பாவையினை சைவர்களும் படிக்கலாம். பக்தியினை ஊட்டும் மருந்து திருப்பாவையில் இருக்கிறது. பக்தி என்பது பரந்தது விரிந்தது. ஆண்டாளின் பக்தியும் அப்படியானதே. சைவத் தமிழ் உலகில் , சைவப் பக்திப் பெருவெளியில் காரைக்கால் ஈந்திட்ட அம்மை போலவேதான் -- வைணவப் பக்திப் பெருவெளியில் ஆண்டா ள்நாச்சியாரும் வந்து அமைகிறார் என்பதை மனமிருத்துதல் வேண்டும்.நால்வருக்கே வழிகாட்டி காரைக்கா லம்மைமையார். ஆழ்வார்களும் அவர்கள் பின்வந்த வைணவப் பெரியவர்களும் ஏற்றிப் போற்றப்படும் வகையில் வந்தமைந்தவர்தான் ஆண்டாள் நாச்சியார்.காரைக்கால் அம்மையாரை சிவபெருமான் அம் மையே என்று அழைத்தார் திருமாலோ ஆண்டாள் நாச்சியாரை தன் அருகிலேயே அணைத்துக் கொண் டார். காரைக்கால் அம்மையார் பெண்ணழகை பேயுருவாக்கிட சிவனிடம் வேண்டினார். கோதைநாச்சியார் தன்னழகை மானிடர்க்கு ஈயாது மாலவனுக்கே ஈந்தார். அத்தனைக்கும் வித்து பக்தி ஒன்றேதான்.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேர் இழையீர்!
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே, நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோர் எம் பாவாய்.        

என்று திருப்பாவையை ஆண்டாள் நாச்சியார் ஆரம்பிக்கின்றார். முப்பது பாடல்கள் முத்தாக , கோதை தந்த சொத்தாக பக்தியுலகுக்கு வாய்த்திருக்கிறது. முதலாம் பாடலிலிருந்து பதினைந்தாம் பாடல்வரை துயில் கொண்டிருக்கும் தோழியரை எழுப்பும் விதமாய் திருப்பாவை அமைந்திருக்கிறது. மார்கழியில் பாவை நோன்பினை நோற்பதை மங்கையர் மனமிருத்த வேண்டும் என்பதை ஆண்டாள் நாச்சியார் பல வகைகளில் காட்டும் பாங்கும் , அதற்காக தன்னுடன் வருமாறு தோழியரான மங்கையரை , அதிகாலை துயில் எழுப்புவதாகவும் அமையும் திருப்பாவைப் பாடல்கள் படித்து இன்புறத்தக்கன. அது மட்டுமல்ல திரு மாலின் தன்மைகளையும் எடுத்துக் காட்டியும் நிற்கின்றன. 


வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிகைகள் கேளீரோ பாற்கடலுள்
பையயத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய் 

பாவை நோன்பினை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் பக்குவத்தை ஆண்டாள் நாச்சியார் மிகவும் நுட்பமாய் மனத்தில் பதியும் வண்ணம் இங்கே விபரித்து நிற்கிறார்.


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் 


ஓங்கி உலகளந்த உத்தமன் என்று திருமாலைக் காட்டும் பாங்கு ஆண்டாளின் பக்தியின் உச்சம். அத்துடன்  பாவை நோன்பினைக் கடைப்பிடித்தால் விளையும் நற்பலன்களையெல்லாம் பட்டியல் படுத்திக் காட்டு   கிறார். " வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் " ஆண்டாள் நாச்சியாரின் முத்திரையாய் ஒளிர்கிறதல்லவா !


ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழுயுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மிம்மி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சாரங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்தேலோர் எம்பாவாய் 

மழை எப்படி உருவாகிறது என்னும் அறிவியலை ஆண்டாள் நாச்சியார் இங்கே காட்டும் நுட்பம் வியப்பாய் இருக்கிறதல்லவா ! பக்தியுடன் அறிவியலை இணைக்கும் கோதைத் தமிழைக் கோண்டாடி மகிழ்வது எம் தலையாய கடனல்லவா ! 

" கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
   நினைத்து முலைவழியே நின்றுபால் சோர 
   நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் நங்காய் "

  "  ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
      மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் "


  "  உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
     செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் "

ஆண்டாள் நாச்சியாரின் அகம் எப்படிப் பார்க்கிறது ! பார்க்கும் பார்வையும் , அதனூடாய் வெளிப்படுத்தும் காட்சியும் சுவையோ சுவையாய் சொக்க வைக்கிறதல்லவா ! 


மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் 
கோலே விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் !

ஆண்டாள் நாச்சியார் மணிவண்ணனைப் போற்றி மனமிருத்தி மகிழுகிறார். 

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணியோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார்
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் 

கூடாரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தா உன்னை நோக்கிய நோன்பினால் எமக்குக் கிடைப்பதுதான் பேரின்பம். புகழோ ஆபரணங்களோ எமக்குப் பெரிதல்ல கோவிந்தா ! உன்னை எண்ணி நின்று பிரசாதத் தை கூடியிருந்து உண்ணுவதே பேரின்பமாகும்.

 

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்ணோம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தன்னை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னோடு
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

 நாங்கள் யாவருமே அறிவில்லாதவர்கள். பசுக்கூட்டம் வழிசென்று வாழ்பவர்கள். ஆயர்குலக் கொழுந்தே உன்னால் வைகுண்டத்தையே காணுகின்றோம். அந்தப் பாக்கியம் எமக்குக் கிடைத்திருக்கிறது. கோவிந்தா நீயோ குறை ஒன்றுமே இல்லாதவன்.உனது உயர்வு தெரியாது சிறு பிள்ளைகளாய் உன்னை ஒருமையில் அழைத்தும் இருக்கிறோம். எங்கள் சிறுமைகளை மன்னித்து எங்களுடன் உறவாய் இருப்பதை மட்டும் விட்டுவிடாதே ! 


சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழே பிறவிக்கும் உன்தன்னோடு 
உற்றோமே யாவோம் உனகேநாம் ஆசெய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்  

ஏழேழ் பிறவிக்கும் எங்களுடனே இருந்துவிடு. உந்தன் உறவை துண்டித்து மட்டும் விட்டுவிடாதே.உந்தன்  பொற்றமரை அடியினைப் போற்றியே நிற்கின்றோம். எங்களின் விரத்தத்தை ஏற்றிவிடு கோவிந்தா . எந்த ஒரு பொருளும் எங்களுக்குப் பொருட்டல்ல. எங்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த சின்ன நோன்பை கோவி ந்தா ஏற்றுக் கொண்டு எங்களை உன்னயல் வைத்திடுவாய் என்று ஆண்டாள் நாச்சியார் மனமுருகி வேண்டி நிற்கிறார்.


வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் 

தான் மனமுருகிப் பக்தியுடன் எம்பெருமான் நாராயணன் அருளைப், புகழை , பாடிய " சங்கத்தமிழ் மாலை "முப்பதையும் தப்பாமல் பாடினால் செல்வத்திருமாலின் திருவருளால் இன்புற்ரு வாழ்வார்கள் என்று உறுதி மொழியாய் உரைத்து நிறைவு செய்கிறார் திருப்பாவையினை ஆண்டாள் நாச்சியார். 

திருவாடிப் பூரத்து ஜகத்து உதித்தாள் வாழியே:
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே,
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே:
*பெரும்பூதூர் மாமுனிக்கு பின் ஆனாள் வாழியே,
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே:
உயர் அரங்கற்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே:

மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே:
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே*

வைணவத்துக்கு வாய்த்த பெருஞ் சொத்து ஆண்டாள் நாச்சியார். மானிட இன்பங்களை, பக்தியில் திளைத்த ஆண்டாள் நாச்சியார் - இறையுடன் கலக்கும் மாறாப் பேரின்பமாய் ஆக்கி விடுகிறார். ஆண்டாள் நாச்சியாரின் நோக்கும் போக்கும் பேரின்பக் காதலாகவே பேருருக் கொள்ளுகிறது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி கோவிந்தனை கொழுநன் ஆக்கிய பெருமையினை கோதை நாச்சியார் பெற்றுக் கொள்ளுகின்றார். கோவிந்தன் மேல் கொள்ளும் காதலை எடுத்துரைக்க ஆண்டாள் நாச்சியார் எடுத்தாளும் தமிழ்தான் அவரை அனைவரின் அகத்திலும் அமர்த்தி விடுகிறது. பக்தியின் பரவசத்தைப் பக்குவத்தை  பாங்குடன் வெளிப்படுத்த அமுதத் தமிழை ஆண்டாள் நாச்சியார் கையாண்ட பாங்கு அனைவரையும்  அவர் பக்கம் திருப்பியே விட்டது. எனவே " கோதைத் தமிழ் கொண்டாடும் தமிழாய் " ஆகியே விட்டது.
























No comments: