தென்னிந்திய சினிமாவில் முதல் நூற்றாண்டு நட்சத்திர நாயகி பி. பானுமதி - ச . சுந்தரதாஸ்

 தென் இந்திய திரையுலகம் என்றாலே அது ஆணாதிக்கம் நிறைந்தது


என்ற அபிப்பிராயம் இன்றும் நிலவி வருகிறது. ஆனால் அந்த அபிப்பிராயத்தை தகர்க்கும் விதமாக சில பெண்களின் அதிக்கமும் அங்கு நிலை நாட்டப்பட்டு வந்துள்ளது. அப்படி நிலை நாட்டியவர்களில் முதன்மையானவர் நூற்றாண்டு நாயகியான பி. பானுமதி. 


  அன்றைய மதராஸ் ராஜஸ்தானியில் , இன்றைய ஆந்திர பிரதேசத்தில் ஓங்கோல் நகரில் பிறந்தவர் இந்த சகலகலாவல்லி. 1925 ம் வருடம் செப்டம்பர் 7ம் தேதி பிறந்த பானுமதிக்கு இசை மீது ஆர்வம் ஏற்றப்பட காரணமானவர் அவரின் தந்தை பொம்மராஜூ வேங்கட சுப்பையா . காரணம் அவரே ஓர் இசை வாணராக திகழ்ந்தார். அது அவரின் மகளையும் பற்றிக் கொண்டது. 


தனது 13வது வயதில் இரண்டாவது கதாநாயகியாக படத்தில் நடித்து , தியாகராஜ கீர்த்தனை ஒன்றையும் பாடினார் பானுமதி. திரையுலகில் பிரபலமாகிக் கொண்டிருந்த அவருக்கு 18வது வயதில் துணை இயக்குனர் ராமகிருஷ்ணாவுடன் காதல் ஏற்பட்டு ஒரு நிபந்தனையுடன் கல்யாணமும் நடந்தேறியது. கல்யாணத்துக்கு பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என்பதே துணை இயக்குனர் தன் துணைவிக்கு போட்ட கண்டிஷன். பானுமதியும் அதற்கு இணங்கியே கழுத்தை நீட்டினார். ஆனால் விதி வேறு விதத்தில் வந்து ஊடுருவியது.

பிரபல தெலுங்கு டைரக்டர் பி .என் .ரெட்டி தான் எடுக்கும் ஸ்வர்க்க சீமாவில் பானுமதிதான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார். இறுதியில் கட்டியக் கணவன் விட்டுக் கொடுக்க பானுமதியின் திரைப் பயணம் சிறகடித்து பறக்கலானது. 

 இந்த படத்தில் அவர் பாடிய ஓ பவுராமா என்ற புறா பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி பானுமதியின் குரலுக்கும், நடிப்புக்கும் மவுசை உண்டாக்கி கொடுத்து அவரின் திரைப் பயணம் தொடர காரணமானது. 


1948ல் எம் கே தியாகராஜ பாகவதர் நடித்து தயாரித்த ராஜமுக்தியில் பானுமதி நடித்து தமிழ் சினிமாவில் தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டார். அதே ஆண்டு வெளிவந்த எஸ் .எஸ் .வாசனின் அபூர்வ சகோதரர்கள், அதன் ஹிந்தி பதிப்பான நிஷான் இரண்டும் பானுமதிக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்று கொடுத்தது. நட்சத்திர அந்தஸ்து உயரவே ஸ்டூடியோ அதிபராகவும் , படத் தயாரிப்பாளராகவும் உயர்ந்தார் பானுமதி. அவர் கணவருக்கும் டைரக்டராக ப்ரோமோஷன் கிட்ட லைலா மஜ்னு படம் உருவாகி ஹிட்டடித்தது. தனது மகன் பரணி பேரில் படக் கம்பெனியையும் , ஸ்டுடியோவையும் அமைத்துக் கொண்டார் பானுமதி. 


1950 ல் அறிஞர் அண்ணா எழுதி , கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் நடித்த நல்லத்தம்பி படத்தில் நடித்ததன் மூலம் திராவிட முனேற்றக் கழக ஆதரவாளர்களின் மனம் கவர் நாயகியானார் பானுமதி. இதன் காரணமாக அண்ணா , கருணாநிதி சம்பந்தப்பட்ட படங்களான மலைக்கள்ளன், ரங்கூன் ராதா, காஞ்சித் தலைவன் போன்ற படங்களில் பானுமதி நடிக்கும் சூழல் உருவானது. 

 பாகவதருடன் ராஜமுக்தி, பி யு சின்னப்பாவுடன் ரத்னகுமார், எம் கே ராதாவுடன் அபூர்வ சகோதரர்கள் படங்களில் பானுமதி நடித்த போதும் தமிழில் அவருக்கு கிடைத்த ஜோடிப் பொருத்தம் எம் ஜி ஆர் தான். இதனை பானுமதி உணர்ந்தாரோ என்னவோ எம் ஜி ஆர் மிகச் சரியாக புரிந்து வைத்திருந்தார். பக்ஷிராஜாவின் மலைக்கள்ளன் படத்தில் இணைந்து நடித்து அப் படம் பெற்ற பெரு வெற்றி எம் ஜி ஆருக்கு இந்த உண்மையை உணர்த்தியது. தொடர்ந்து வந்த மதுரை வீரன், தாய்க்குப் பின் தாரம், முதல் கலர் படமான அலிபாபாவும் நாற்பது திருடர்களும், நாடோடி மன்னன் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றி கண்டன. ஒரே ஜோடி தொடர்ந்து ஐந்து படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து அந்த ஐந்தும் வெற்றியடைந்தது இன்று வரை வேறு எந்த திரை ஜோடியாலும் சாதிக்க முடியாத வரலாற்று சாதனையாக திகழ்கிறது. 


அதே சமயம் சிவாஜியுடன் பானுமதி சேர்ந்து நடித்த கள்வனின்

காதலி, மக்களை பெற்ற மகராசி, அம்பிகாபதி, ரங்கூன் ராதா , மணமகன் தேவை படங்கள் சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது போல் அமைந்தன. இந்தப் படங்களில் சிவாஜி, பானுமதி நடிப்பு அற்புதமாக இருந்த போதும் மக்களை பெற்ற மகராசி மட்டுமே வெற்றி இலக்கை தொட்டது. 

  ஜெமினியுடன் அவர் இணைந்த சாதாரம் படம் தோல்வி கண்டது. ராஜா தேசிங்கு படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரனுடன் அவர் இணைந்து நடிக்கவிருந்த போதும் இறுதி நேரத்தில் அப் படத்தில் எம் ஜி ஆருக்கு ஜோடியானார் பானுமதி. 


அம்பிகாபதியில் நடிக்கும் போது சிவாஜியும், பானுமதியும் பேசிக்கொள்ள்ளாதபடி உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் காதல் காட்சிகளில் குறை சொல்லா வண்ணம் நடித்திருந்தனர். எம் ஜி ஆரின் சொந்தப் படமான நாடோடி மன்னன் பட ஷுட்டிங்கில் , எம் ஜி ஆரின் டைரக்ட் செய்யும் முறையை அவர் விமர்சனம் செய்ய பாதிப் படத்தில் அவர் பாத்திரம் சாகடிக்கப் பட்டது. மிஸ்ஸியம்மா படத்தில் நடிக்கும் போது கதாசிரியர் சக்கரபாணியோடு ஏற்பட்ட மோதலால் படத்தில் இருந்து அவர் நீக்கப் பட்டு , அவருக்கு பதில் சாவித்திரி நடித்து அப் படம் அவருக்கு புகழை வாங்கித் தந்தது. ஆனாலும் இவை எதுவும் பானுமதியின் இயல்பை மாற்றவில்லை , அவர் தன் பாணியிலேயே தொடர்ந்தார். 

 அன்றிருந்த எல்லா பெரிய பட நிறுவனங்களும் தயாரித்த படங்களில் எல்லாம் பானுமதி நடித்துள்ளார். தமிழில் முதல் ஜனாதிபதி விருது பெற்ற மலைக்கள்ளன் , முதல் கலர் படமான அலிபாபாவும் 40 திருடர்களும், தேவர் பிலிம்ஸின் முதல் படமான தாய்க்குப் பின் தாரம் ஆகிய படங்களில் நடித்த பெருமையும் பானுமதிக்கு உண்டு. இயல்பாக தன் பாணியில் வசனம் பேசி , ஓரளவு அலட்சியமாக நடிக்கும் அவரின் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. 



எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, போன்றோருக்கு சீனியர் பானுமதி. கண்டிப்பு, அதிகாரம், ஆணவம் , தன்னை முன்னிலைப் படுத்தும் நிலைப்பாடு என்று பலவித கலவைகளின் கூட்டாகவே அவர் விளங்கினார். இதனால் எல்லோரும் அவரிடம் எட்டியே நின்றனர். இல்லாவிட்டால் வெட்டி விடுவார் என்று நன்கு தெரியும். திரை உலகிற்கு புதிதாய் அடியெடுத்து வைத்த கண்ணதாசன், ஆரூர்தாஸ், காரைக்குடி நாராயணன், கூட ஆரம்பத்தில் அவரின் ஏளனப் பார்வைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

 ஆனாலும் புதிதாய் வந்த ஒருவரை மட்டும் பானுமதி மதித்து பாராட்டினார். அவர்தான் இளம் இசையமைப்பாளரான சி ஆர் சுப்பாராமன். சம வயதான சுபராமனின் வல்லமை மீது அவருக்கிருந்த நம்பிக்கை இருவரிடையே ஓர் அந்நியோன்யத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அன்றிருந்த ஜி . ராமநாதன், எஸ் .எம் . சுப்பையா நாயுடு, எஸ் .வி . வெங்கட்ராமன் ஆகியோரை தவிர்த்து தன் சொந்தப் படங்களான லைலா மஜ்னு, காதல் ஆகிய படங்களுக்கு சுப்பராமனை இசையமைக்க வைத்தார் பானுமதி. 

அன்றைய சினிமா கிசுகிசுக்களில் அறிஞர் அண்ணாவுடன் பானுமதி இணைத்து பேசப்பட்டார். ஆனால் நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல , அவர் படிதாண்டாப் பத்தினியும் அல்ல என்று கூறி அண்ணா அந்த விவகாரத்தை கடந்து சென்று விட்டார்! 

 தெலுங்கில் ஏ. நாகேஸ்வர ராவ், பானுமதி இணை நல்ல வரவேற்பை பெற்றது. என். டி . ராமராவுடன் நடித்த படங்களும் ரசிகர்களை கவர்ந்தன. பானுமதி வங்காள இலக்கியவாதியான சரத்சந்திர சட்டர்ஜீயின் நாவலான கானல் நீர் படத்தை தயாரிக்க முனைந்த போது வேண்டாமே இந்த விஷப் பரீட்சை என்று நாகேஸ்வர ராவ் அபாய மணியடித்தார். டிரை சப்ஜெக்ட் , சுவாரஸ்யமாக ஏதும் இல்லை படம் எடுபடாது என்று சொல்லியும் பானுமதி கேட்கவில்லை. நான் நடிக்கிறேன், நீங்கள் நடிக்கிறீர்கள், இன்னும் சிலரும் நடிகட்டும் லோ பஜட்டில் எடுப்போம் , ஒரு நல்ல படத்தை எடுத்த , நடித்த திருப்தி மிஞ்சட்டுமே என்று பானுமதி சொன்னதை நாகேஸ்வர ராவால் தட்ட முடியவில்லை. 


அறுபதுகளின் ஆரம்பத்தில் அன்னை வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. படம் பூராவும் தன்னுடைய பாத்திரம் மேலோங்கி இருக்க வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டினார். ரங்கூன் ராதாவின் கணவனுக்கு அடங்கிய அப்பாவிப் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பின்னர் பூவும் பொட்டும் படத்தில் நாகரீக மோகம் கொண்ட இளம் பெண்ணாக அல்ல, தாயாக நடித்து தன் திறனை வெளிப்படுத்தியிருந்தார் பானுமதி. 

 1962, வெளிவந்த அன்னை படம் பானுமதியின் அற்புத்தமான நடிப்புக்காக பலரின் பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டது. இந்தப் படத்தில் தன்னுடைய பாத்திரத்தின் மேன்மை, நடிப்பின் பரிமாணங்கள் , ரசிகர்களின் கவனத்தை தன் பால் வைத்துக் கொள்ளல் என்பவற்றுக்காக சில சில்மிஷங்களைக் கூட செய்ய அவர் தவறவில்லை. எம் ஜி ஆரின் படங்களில் அவரின் மேலாதிக்கம் எவ்வாறு இருக்குமோ , அதே போல் பானுமதியின் மேலாதிக்கமும் அவர் நடிக்கும் படங்களில் காணப்படும் என்பது அன்றைய வாடிக்கை. இதன் காரணமாகவோ என்னவோ 60களில் அவர் நடிக்கும் தமிழ் படங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆனாலும் அவர் நடித்த படங்களில் அவர் செய்த ரோலை அவரை விட வேறு எவராலும் சிறப்பாக செய்ய முடியாது என்பதை நிரூபிக்கும் விதமாக அவை அமைந்தன.

 
1975ல் எடுப்பார் கை பிள்ளை படத்தில் வக்கீலாக, ஜெய்சங்கரின் தாயக நடித்திருந்தார் பானுமதி. அதே போல் பத்து மாத பந்தம் படத்திலும் அவர் நடிப்பு சிலாகிக்கப்பட்டது. இந்த படங்களில் அவர் சொந்தக் குரலில் படியும் இருந்தார். 90 களில் பிரசாந்தின் பாட்டியாக செம்பருத்தி படத்தில் நடித்து அசத்தியிருந்தார் அவர். 13 வதில் இளம் சிட்டாக திரையுலகில் நுழைந்து ,இளம் கதாநாயகியாக , தாயாக, பாட்டியாக நடித்து முழு சுற்றாக தனது திரைப் பயணத்தை பூர்த்தி செய்தார் பானுமதி. 

 அன்றைய நடிகைகள் நடிப்பு, பாடல் என்பனவற்றோடு திருப்தியடையும் காலகட்டத்தில் நடிகை , பாடகி, இசையமைப்பாளர், கதாசிரியை, நாவலாசிரியை, இயக்குனர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ அதிபர் , என்று ஆல் ரவுண்டராக வலம் வந்து அனைவரையும் வியக்க வைத்தவர் பானுமதி. 

 தென்னகத்து சினிமாவின் முதலாவது லேடி சூப்பர் ஸ்டார் என்று பேரெடுத்த பானுமதி 24ம் தேதி, டிசம்பர் மாதம் 2005ம் ஆண்டு தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். ஆனாலும் தென்னிந்திய திரையுலகில் முத்திரை பதித்த முதல் பத்து நடிகைகளுக்குள் அவரும் ஒருவர் என்பதை திரை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும்!

No comments: