தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 7…..சங்கர சுப்பிரமணியன்.


பீஜிங்கிற்கும் ஷியானுக்கும் இடைப்பட்ட தூரத்தில் பல நகரங்களை தொடர்வண்டி ஓடும்போது கடந்து செல்வதை பார்க்கலாம். எங்கு பார்த்தாலும் அடுக்குமாடி குடியிருப்புக்கள் வானுயர்ந்து நின்கின்றன. தனியாக மாடியில்லா கட்டிடங்களைக் காண்பது அரிது. அப்படியே இருந்தாலும் அவை விவசாய நிலங்களுக்கு அருகில் ஓரிரு கட்டிடங்களாக இருக்கும். வழி நெடுக பச்சைப் பசேலன பசுமையாக இருக்கும்.

பார்க்கும் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு சிங்கப்பூர் போலவே தோன்றும்.

அந்த அளவுக்கு கட்டுமாணங்களில் நம்பமுடியாத அளவு வளர்ச்சியை காணமுடிகிறது. நான் பயணித்த வழித்தடத்திலேயே சிங்கப்பூர் போன்ற அத்தனை நகரங்களைப் பார்க்கும் போது மற்ற இடங்களில் எத்தனை வகையான எண்ணற்ற நகரங்கள் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கையில் வியப்புக்குமேல் வியப்பாக இருக்கிறது.

நான்கு மணி நாற்பது நிமிடங்களில் பீஜிங்ஸீயிலிருந்து கிளம்பிய

புல்லட் ட்ரெயின் 1216 கி.மீட்டர் தூரத்தைக் கடந்து ஸியான்பீ வந்தடைந்நது. நாங்கள் சென்ற புல்லட் ட்ரெயின் தண்டவாளத்ததை தொட்டபடி அதிவேகத்தில் ஒடக்கூடியது. இதைவிட வேகமாக ஒடக்கூடிய புல்லட் ட்ரெயின்கள் மற்ற வழித்தடங்களில் செல்கின்றன.

அவை தண்டவாளத்தை தொடாமல் நான்கு அங்குலத்துக்கு மேல் மேக்னடிக் லெவிடேஷன்(மேக்லெவ்) என்ற தொழில்நுட்ப உதவியுடன் உற்பத்தியாகும் காந்தப் புலத்தால் ஓடக்கூடியவை. ஸியான்பீ வந்ததும் கால்மணிநேர பயணித்தில் இருந்த பேர்பீல்ட் மரியட் என்ற ஓட்டலில் தங்கினோம். பாலைவனத்தின் நடுவே பசுஞ்சோலை போல ஆங்கிலம் தெரிந்த பெண் வரவேற்பில் இருந்தாள்.

மக்கள் அதிகம் வரக்கூடிய சுற்றுலாத்தளமாக டெரகோட்டா வாரியர்ஸ் இருப்பதால் ஓட்டல்களில் ஆங்கிலம் தெரிந்தவர் வரவேற்பில் அமர்த்தப் பட்டிருக்கிறார்களோ என்னவோ? காலையில் சிற்றுண்டி ஓரளவு சாப்பிடக் கூடியதாக ஓட்டலில் கிடைத்தது. பின் வரவேற்பிலிருந்தவரின் உதவியோடு வாடகை வாகனத்தை வரவழைத்து டெரகோட்டா வாரியர்ஸ் சென்றோம். அங்கு செல்ல ஐம்பது நிமிடங்கள் வரை ஆனது.


வாடகை வாகனங்களை நிறுத்துமிடத்தில் இருந்து சற்றுதூரம் நடந்து நுழைவு வாயிலுக்கு செல்ல வேண்டும். திருவிழா போன்ற கூட்டம். கண்ணைக் கட்டி காட்டில் விட்டமாதிரி இருந்தது. நுழைவு வாயிலில் இருந்து சற்று தூரம் நடந்தால் வேறுவாகனங்களில் புதைகுழிகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதோடு வரிசையில் வேறு காத்திருக்கவேண்டும்.

ஆதலால் பெரும்பாலானோர் நடந்தே சென்றனர். ஆதலால் நாங்களும் நடக்க ஆரம்பித்தோம். நடக்கிறோம் நடந்துகொண்டே இருக்கிறோம் போய்ச் சேர்ந்தபாடில்லை. ஒருவழியாக கால்கடுக்க நடந்து திருப்பதி ஏழுமலையானைச் சந்திப்பது போல் தோண்டப்பட்ட இடத்தை வந்து சேர்ந்தோம். தோண்டப்பட்ட புதைகுழியைப் பார்வையிடும் இடத்திலும் அதிகமான கூட்டம்.

புதைகுழியைச் சுற்றி பாரவையிடவே சில கிலோமீட்டர் தூரம்

இருக்கும். சுற்றி தடுப்பு ஏற்படுத்தப்பட்டு ஒரு உயர்ந்த கூரையின் கீழ் தோண்டி எடுக்கப்பட்ட இராணுவவீரர்களின் சுட்டமண் சிற்பங்களை வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்க வைத்துள்ளார்கள். சில பகுதிகளில் தலையில்லாமலும் கைகால்கள இல்லாமலும் உடைந்த சிற்பங்களையும் காணமுடிகிறது. ஒரு நீண்ட நிலப்பரப்பையே அகழ்வாராய்வு செய்து சிற்பங்களை எடுத்திருக்கிறார்கள்.

அதற்காக அவர்கள் செலவிட்ட நேரத்தையும் உழைத்த உழைப்பையும் அந்த பிரம்மாண்டமான இடம் நமக்கு சொல்கிறது. சுற்றிப் பார்க்க வசதியாக பாதையை அமைத்திருப்பதோடு நன்றாக காணும்படியாக ஒளிவிளக்குகளையும் அமைத்துள்ளார்கள். அங்கு ஒருமணி நேரத்துக்கும் மேல் செலவிட்டோம். அதையடுத்து அடுத்த புதைகுழி. அதுவும் சற்று தொலைவில் உள்ளது.


இரண்டாவது புதைகுழியும் அதேயளவு பிரம்மாண்டத்துடன் உள்ளது. இங்கு சுட்டமண் குதிரைகள் மற்றும் தேர்களை தோண்டி கண்டு பிடித்து வைத்துள்ளார்கள். பலபகுதிகளை தோண்டி அப்படி அப்படியே
விட்டிருக்கிறார்கள். அப்படித் தோண்டி விடப்பட்ட இடங்களில் சிதையுண்ட தேர்கள் குதிரைகள் போன்றவை கிடக்கின்றன.

மேற்கொண்டு தோண்ட கடினமாக இருந்ததா அல்லது சிதையாமல் சிற்பங்களை சேகரிக்க முடியவில்லையா என்பது தெரியவில்லை. சிலபகுதிகளில் இதுபோன்று தோண்டப்பட்டு பணி நிறுத்தப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது.சில இடங்களில் தோண்டுவதற்கு உண்டான முயற்சிகளையும் காணமுடிகிறது. ஆனால் பல பகுதிகளில் தோண்டப்பட்டு சிதையாமல் எடுக்கப்பட்ட சிற்பங்களையும் சிதைவடைந்த சிற்பங்களையும் ஒழுங்குபடுத்தி பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.

இங்கேயும் ஒருமணி நேரம் வரை செலவழித்தோம். அதன்பின் சற்று

தொலைவில் மியூசியம் உள்ளது. அங்கு நல்ல நிலையிலுள்ள தேர், குதிரை, குதிரை வீர்ரகள் மற்றும் படைத்தளபதிகள் போன்று சிற்பங்கள் பாதுகாப்பாக காட்சி படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்துய வாள், ஈட்டி,வில் மற்றும்  அம்பு பல ஆயுதங்களையும் பொருட்களையும் காணலாம்.

மற்றும் அவர்களது பண்பாட்டைச் சித்தரிக்கும் வகையிலான பொருட்களையும் காட்சிப் படுத்தியுள்ளார்கள். இவற்றையெல்லாம் நன்றாக சுற்றிப்பார்க்க கிட்டத்தட்ட மூன்று நான்கு மணிநேரம் தேவைப்பட்டது. அங்கிருந்து கிளம்பி ஸியான்பீ ரயில் நிலையம் வந்து பீஜிங்ஸி செல்லவேண்டும். ஒரு வாடகைவாகன ஓட்டுநர் எங்களைப் பார்ததும் எங்களை நோக்கி வந்தார்.

செயலியின் உதவியுடன் அவரிடம் போகவேண்டிய இடத்தையும் கொடுக்கவேண்டிய பணத்தையும் உறுதி செய்து கொண்டு பயணத்தை தொடங்கினோம். எல்லாம் நல்லாத்தான் போய்க் கொண்டிருந்தது. குறைந்தது தொடர்வண்டி புறப்படும் நேரத்துக்கு
இரண்டுமணி நேரத்துக்கு முன்பாக ரயில்நிலையத்துக்கு சென்றுவிட வேண்டும்.

என்னவோ என் உள்ளுணர்வு எச்சரிக்க பயணத்தை தொடங்கி அரைமணி நேரத்துக்கு நேரத்துக்கு மேலாகியதால் எங்கு வந்திருக்கிறோம் என்று பார்த்ததால் ஸியான் விமானநிலையத்தை நோக்கி வாகனம் செல்ல எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஏம்பா எங்கப்பா போகிற என்று தமிழில் கத்தத் தொடங்கினேன். அவனோ வாட் வாட் என்றான். நான் அவனிடம் என்ன வாட்டாவது பூட்டாவது என்றேன். என் மனைவி இந்த இக்கட்டிலும் சிரித்தாள்.


அவனுக்கு தமிழ் புரியுமா என்ன? என்றாள். அப்போதுதான் கோபத்தில் தமிழில் பேசியதை உணர்ந்தேன். ஆங்கிலத்தில் மட்டும் பேசினால் புரியுமா என்றேன். ஏதோ தப்பாகி விட்டது என்பதை உணர்ந்தான். அதன்பின் அவன் வேகத்தைக் குறைக்க நான் புல்லட் ட்ரெயின் படத்தை வரைந்து காட்ட தவறை உணர்ந்த பின் மாற்றுப்பாதையில் நுழைந்தான். சிட்டாகப் பறந்தான். எனக்கு குறித்த நேரத்தில் போய்விடுவோமா என்ற சந்தேகம் ஒருபக்கம்.

ரயிலைத் தவறவிட்டால் அடுத்த ரயிலில் இடம் கிடைக்குமா என்றும் தெரியாது. அன்று இரவுக்குள் பீஜிங் போகாவிட்டால் மறுநாள் பயணம் எல்லாம் தடைபட்டு விடும். ஏற்கனவே ஹுட்டாங்க் பயணம் தடைபட்டு விட்டது. அவன் எடுத்தவேகம் பயத்தைக் கொடுத்தது. மெதுவாகப் போ என்று சொன்னால் ரயிலை கோட்டை விட்டிடுவோம் என்ற பதட்டமும் இருந்தது. விபத்து நடக்காமல் இருந்தால் சரி என்று அமைதியானேன்.

-சங்கர சுப்பிரமணியன்.

No comments: