மேற்குசிட்னி தமிழ் கல்வி நிலையம் அவுத்திரேலிய நாட்டின் நியூ சவுத் வேல்சு பெருநிலப்பரப்பில் பிள்ளைகளுக்கு தமிழ்கல்வி வழிகாட்ட செயற்படுகின்றது. இக்கல்வி நிலையம், இவ்வாண்டு 18/10/2025 சனிக்கிழமை அன்று புதிதாக தொடங்கப்பட்ட ஒன்று. தற்போது ‘பங்காரிபீ’ சமூக வள நடுவத்தில் (Bungarribee Community Resource Hub) இயங்கி வரும் கல்வி நிலையத்தில் நடப்பாண்டில் தமிழ் கற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும், ஒன்று கூடலும் கடந்த (14/12/2025 ஞாயிற்றுக்கிழமை) “Blacktown Boys High School Hall” அரங்க மண்டபத்தில், மாணவர்களின் அரங்க ஆற்றுகைகள், ஆசிரியர் மதிப்பளிப்பு, சிறப்புரைகள் போன்ற நிகழ்வுகளுடன் சிறப்புற நடந்தேறியுள்ளது.
பரிசளிப்பு விழாவினை தொடக்கி வைக்க பள்ளி முதல்வர் செல்வராஜி இரங்கநாதன், பள்ளியின் உதவி முதல்வர் தயாழினி முரளீதரன் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் அவுத்திரேலிய தேசிய கீதம், தமிழ்மொழி வாழ்த்து, பாடசாலைக் கீதம் என்பவற்றினை இசைத்தனர். அதனைத்தொடர்ந்து அவுத்திரேலிய நிலத்தின் உரிமையாளரான பழங்குடி மக்களுக்கு நன்றி சமர்ப்பித்தல், தாயக விடுதலைக்கு உயிர் ஈய்ந்த மக்களுக்கு அகவணக்கம் செலுத்தல் என்பன இடம்பெற்றன. இதனத் தொடர்ந்து நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பள்ளி ஆசிரியர் சரஸ்வதி நாராயணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அடுத்து அதிபர் உரை இடம்பெற்றது
அதிபர் தனது உரையில்
அவுத்ரேலியாவில் நாம் புலம் பெயர்ந்தவர்கள் என்று அடையாளப் படுத்தப்படுகின்றோம்.
ஆனாலும் நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்று ஒன்றிணைகின்றோம். எனவே தமிழ்மொழியே
எம்மை ஒன்றிணைக்கின்றது. ஆகவே தமிழ் என்ற அடையாளமே எங்கள் எல்லோரையும்
இணைக்கின்றது. இந்த நோக்கின் அடிப்படையிலேயே எங்கள் பிள்ளைகளை தமிழ் கற்க
வைக்கின்றோம். தமிழ் கற்பதனால் பிள்ளைகள் தமிழ் மட்டும் அறிவதில்லை. தமிழர்கள்
தொடர்பாகவும் அறிவர். தமிழர் மரபுகள், பாரம்பாரியம்,
பண்பாடுகள் போன்றவற்றையும் அறிந்து கொள்வர். இவ்வாறு கற்றுக்கொண்ட தமிழர் மரபுகள்,
பாரம்பாரியம், பண்பாடுகள் என்பவற்றில் பயிற்சி பெறுவர். இதன் மூலம் பிள்ளைகள்
தங்கள் சமூகமான தமிழ் சமூகத்துடன் இணையும் வாய்ப்பு உருவாகும். அவர்கள் தங்களை
தமிழர்கள் என்று உணர்ந்து கொள்வர். இதற்கு ஒரு ஊக்குவிப்பு உத்தியாகவே
கல்விகற்கும் பிள்ளைகளுக்குப் பரிசில்கள்
வழங்குகின்றோம்.
புலம் பெயர் மக்கள்
எனப்படும் எங்கள் வாழ்க்கை முற்றுமுழுதாகப் புதிதாகி விட்டது. நாம் எல்லோரும்
தொழில் உலகுக்கு மட்டும் முதன்மை கொடுக்கின்றோம். வேலை செய்வது மட்டுமே எங்கள்
வாழ்க்கை என்று நினைக்கின்றோம். எங்கள் பிள்ளைகளையும் வேலை உலகுக்கு தயார் செய்யவே
முனைகின்றோம். அதற்கு ஏற்ற கல்வியினை வழங்க நினைக்கின்றோம். உண்மையில் எங்கள்
பிள்ளைகளிடம் நிறைந்த திறமைகள் உண்டு. ஆற்றல்கள் உண்டு. அவர்களின் திறமைகள் வெளிக்கொண்டு
வரப்படவேண்டும். பிறர்முன் அவர்களின் திறமைகள் வெளிக்காட்டப்பட வேண்டும்.
அவர்களின் ஆளுமை வளர்க்கப்பட வேண்டும். இதற்காகவே நாம் கலை நிகழ்வுகளை
ஒழுங்கமைக்கின்றோம். கலைநிகழ்வுகள் செய்வதன் மூலம் பிள்ளைகள் தங்கள் கலைத்
திறமைகளை வெளிக்காட்டுவது மட்டுமன்றி ஏனைய பிள்ளைகளின் கலைச்செயற்பாடுகளையும்
மதிக்கப்பழகுவர். தங்கள் ஆளுமையையும் வளர்த்துக் கொள்வர். எனவேதான் நாம் பிள்ளைகளுக்கு கலைநிகழ்வுகளைப்
பயிற்றுவித்து அரங்கேற்றுகின்றோம்.
எமது கல்வி நிலையம் புதிதாக
தொடங்கிய ஒன்று என்பது நீங்கள் யாபேரும்
அறிந்த ஒன்று. இளைய தலைமுறை தமிழைக் கற்றிட இப்பள்ளியை உருவாக்க உழைத்து,
தொடர்ந்தும் ஒத்துழைப்பும் வழங்கும் உங்களுக்கு சொற்களால் நான் நன்றி சொல்லிவிட முடியாது.
தமிழ் மீது பற்றுக்கொண்டு உங்கள் நேரம், பணம், இன்னும் பலவழிகளில் உதவும் உங்களை
என்றும் எங்கள் தமிழ்த்தாய் வாழ்த்துவாள்.
என்று கூறி பள்ளிக்கு உதவும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையினை நிறைவு
செய்தார். தொடர்ந்து கலைநிகழ்வுகள் தொடங்கின.
கலை நிகழ்வுகள் வரிசையில் மழலையர்களின் ஆடல் பாடல்களுடன் வளர்ந்த மாணவர்களின் நாடகம், வில்லிசை என்பனவும் அரங்கேறியது. முதலில் ஆண்டு ஒன்று, இரண்டு மூன்று மாணவர்கள் சேர்ந்து வழங்கிய பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம் நிகழ்வு இடம்பெற்றது. மக்களிடையே நடைபெறும் திருமணம் போன்று பூனைக்கும் பூனைக்கும் திருமணம் நடைபெறுவதாக பிள்ளைகள் செய்து காட்டி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அதனைத் தொடர்ந்து தொடக்கப்பள்ளி, முன்பள்ளி மழலையர் சேர்ந்து பட்டம்பூச்சி பாடலுக்கு நடனமாடி சபையோரைக் கவர்ந்தனர். இதனை அடுத்து ஆண்டு ஐந்து, ஆறு மாணவர்கள் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் எலியும் சேவலும் என்ற இசை நாடகத்தினை இசைத்து, நடித்து மக்களுக்கு வழங்கினர். தொடர்ந்து ஆண்டு நான்கு மாணவர்களின் ஒயிலாட்டம், ஆண்டு ஏழு எட்டு, ஒன்பது மாணவர்கள் சேர்ந்து வழங்கிய தெனாலிராமன நாடகம், ஆண்டு பத்து, பன்னிரண்டு மாணவர்களின் மரபுகளும் புதுமைகளும் எனும் வில்லிசை என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வுகள் யாவும் அந்தந்த வகுப்பாசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தன. இதேவேளை நிகழ்வுகளுக்கான இசை வயலின் கபிலாசன் விதுசன், மிருதங்கம் விதுசன் முரளீதரன், ஆகியோரால் வழங்கப்பட்டது. அடுத்து மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு தொடங்கியது.
பரிசளிப்பு நிகழ்வில் மாணவர்கள் வகுப்பு அடிப்படையில் அழைக்கப்பட்டு வகுப்பு ஆசிரியர்களால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றது. பள்ளியின் செயலாண்மைக் குழுத்தலைவர் ஜயப்பிரகாஷ் நாராயணன் மதிப்பளிப்பு நிகழ்வினை நெறிப்படுத்தினார். பள்ளியில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பு செய்தனர். அறுபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் கற்கும் அதேவேளை, பன்னிரண்டு ஆசிரியர்களும், நான்கு உதவி ஆசிரியர்களும் மாணவர்களுக்கு கற்றல் வழிகாட்டல் செய்கின்றனர். அதிபர், ஆசிரியர்களின் மேலாண்மை மூலம் இயங்கும் இப்பள்ளிக்கு மண்டப ஒழுங்கமைப்பு, ஆசிரியர் உதவு கொடுப்பனவு, போன்றவற்றிற்கு தேவையான நிதி உட்பட சகல உதவிகளும் பெற்றோர்களால் மட்டுமே வழங்கப்படுகின்றன. பள்ளி ஆசிரியர்களின் சேவைகளுக்கு உதவுமுகமாக பெற்றோர்கள் செயலாண்மைக் குழுவும் இங்கு இயங்குகின்றது. தொடர்ந்து குறுகிய காலத்தில் பள்ளியை இயக்கி, நிகழ்வுகளையும் ஒழுங்கமைத்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார். அதனையடுத்து திரு. கனகசபாபதி குமணன் அவர்கள் சிறப்புரை வழங்கி, பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோரின் செயற்பாடுகள் மகிழ்ச்சியளிப்பதாகவும், பிள்ளைகள் மகிழ்வுடன் இருப்பது கண்டு தானும் மகிழ்வதாகவும் குறிப்பிட்டார். இப்பள்ளி மென்மேலும் வளர எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
நிகழ்வின் நெறிப்படுத்தல், அறிவிப்பு என்பன யாவும் ஆண்டு பன்னிரண்டு மாணவர்களால் செயற்படுத்தப்பட்டன. நிகழ்வின் நிறைவாக செயலாளர் பெருமாள் தங்கராசு அவர்களின் நன்றியுரை இடம்பெற்றது. நன்றியுரையில் விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் செய்து சிறப்புற நடாத்த ஒத்துழைத்த பெற்றோர்கள், நலன்விரும்பிகள், தமிழ் அன்பர்கள், ஆசிரியர்கள், மேலதிக உதவிகள் புரிந்தவர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
விருந்தினர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், கலைஞர்கள், தமிழ் அன்பர்கள், என பல்வேறுமக்கள் மக்கள் கலந்துகொண்ட இவ்விழாவானது பிற்பகல் நான்கு மணியளவில் தொடங்கி இரவு ஏழுமணி வரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து சிறப்பித்த அனைவரும் ஒன்றுகூடி, உணவுண்டு, பேசி மகிழ்ந்து நிகழ்வினை முழுமையாக்கினார். நிழற்படங்களை சகிலன் எடுத்து வழங்கினார்.









No comments:
Post a Comment