உலகச் செய்திகள்

6 நாடுகளுக்கு உள் நுழைய தடையும், 15 நாடுகளுக்கு பகுதியளவில் கட்டுப்பாடுகளையும் விதித்தது அமெரிக்கா

அமெரிக்க க்றீன் கார்ட் விசா லொட்டரி திட்டம் இடைநிறுத்தம் - ட்ரம்ப் அதிரடி உத்தரவு

பிபிசிக்கு எதிராக ட்ரம்ப் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கோரி வழக்கு

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மீது முதன் முறையாக நீருக்கடியிலான  ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன்!

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி 



6 நாடுகளுக்கு உள் நுழைய தடையும், 15 நாடுகளுக்கு பகுதியளவில் கட்டுப்பாடுகளையும் விதித்தது அமெரிக்கா

Published By: Digital Desk 3

17 Dec, 2025 | 10:16 AM

ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் பயணத் தடையை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, சிரியா மற்றும் பாலஸ்தீன உத்தியோகபூர்வ ஆவணங்களைக் கொண்ட பயண ஆவணங்களை  வைத்திருப்பவர்கள் உட்பட, நாட்டிற்குள் உள் நுழைய பயண தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் ஆறு நாடுகளைச் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

புதிய அறிவிப்பின்படி, ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், கொங்கோ குடியரசு, ஈக்குவடோரில் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளின் குடிமக்களுக்கு ஏற்கனவே இருந்த முழுமையான பயணத் தடைகள் தொடர்கின்றன.

அண்மைய ஆய்வுகளின் அடிப்படையில் நைஜர், தென் சூடான், புர்கினா பாசோ, மாலி, மற்றும் சிரியா ஆகிய ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கும் முழுமையான பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், பாலஸ்தீன உத்தியோகபூர்வ ஆவணங்களைக் கொண்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்.

முன்னதாக பகுதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்த லாவோஸ் மற்றும் சியரா லியோன் ஆகிய இரண்டு நாடுகளுக்கு இப்போது முழுமையான பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏழு நாடுகளில் இருந்து நான்கு நாடுகளுக்கு ஏற்கனவே இருந்த பகுதி கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

துர்க்மெனிஸ்தான் நாடு அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பதால், அந்நாட்டின் குடிமக்களுக்கான இ-விசா தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும், 15 நாடுகளுக்கு பகுதி கட்டுப்பாடுகள் மற்றும் நுழைவு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பில், சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் இராஜதந்திரிகள் போன்ற சில வகை விசா வைத்திருப்பவர்கள், மற்றும் அமெரிக்க தேசிய நலன்களுக்கு உகந்ததாகக் கருதப்படும் நபர்களுக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

முழு பயணத் தடை பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடுகள் பின்வருமாறு:

• சிரியா

• ஆப்கானிஸ்தான்

• மியன்மார்

• சாட்

• கொங்கோ குடியரசு

• பாலஸ்தீன ஆணையத்தால் வழங்கப்பட்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்கள்

மேலதிகமாக பகுதியளவில்  பயண கட்டுப்பாடுகள் மற்றும் விசா கட்டுப்பாடுகள் 15 பிற நாடுகளின் குடிமக்களுக்குப் பொருந்தும் 

• நைஜீரியா

• அங்கோலா

• சாம்பியா

• கெமரூன்

• எத்தியோப்பியா

• கானா

• ஐவரி கோஸ்ட்

• செனகல்

• தான்சானியா

• உகாண்டா

• சிம்பாப்வே

• எரித்திரியா

• சூடான்

• சியரா லியோன்

• காம்பியா

நன்றி வீரகேசரி 






அமெரிக்க க்றீன் கார்ட் விசா லொட்டரி திட்டம் இடைநிறுத்தம் - ட்ரம்ப் அதிரடி உத்தரவு 

19 Dec, 2025 | 05:38 PM

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்க க்ரீன் கார்ட் விசா லொட்டரி திட்டத்தை நிறுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

இத்துப்பாக்கிச் சூட்டின்போது போர்த்துக்கீசரான நெவ்ஸ் வாலண்டே என்ற நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அந்த நபர் 2017ஆம் ஆண்டில் பன்முகத்தன்மை லொட்டரி விசா திட்டத்தின் (DV1) மூலம் அமெரிக்காவிற்குச் சென்று, அங்கு க்ரீன் கார்ட் பெற்றுக்கொண்ட ஒருவரென தெரிவிக்கப்படுகிறது. 

இதனைக் கருத்திற்கொண்டே ட்ரம்ப், இவ்விசா லொட்டரி திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய திட்டத்தால் இனி அமெரிக்கர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ட்ரம்பின் வழிகாட்டுதலின் கீழ் க்றீன் கார்ட் விசா திட்டத்தை இடைநிறுத்த அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம்  (Kristi Noem) உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன் “நெவ்ஸ் வாலண்டே போன்ற கொடூரமான நபர் நம் நாட்டுக்குள் வர ஒருபோதும் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது” என்றும் நோயம் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

சமீப காலமாக பன்முகத்தன்மை விசா லொட்டரி திட்டத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த ட்ரம்ப். அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை சுட்டிக்காட்டி, இத்திட்டத்தை நிறுத்துவதாக உறுதிபட அறிவித்திருக்கிறார்.  நன்றி வீரகேசரி 





பிபிசிக்கு எதிராக ட்ரம்ப் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கோரி வழக்கு 

Published By: Digital Desk 3

16 Dec, 2025 | 01:12 PM

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 06 ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கு முன்பாக வொஷிங்டனில் ஆதரவாளர்களிடம் ஆற்றிய உரையை தவறாகத் தொகுத்து ஒளிபரப்பியதாகக் கூறி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டனிலுள்ள பிபிசி நிறுவனத்திற்கு எதிராக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை  இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிபிசியின் பனோரமா (Panorama) நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த உரைத் தொகுப்பு, “திட்டமிட்டு, தீய நோக்குடன் மற்றும் ஏமாற்றும் வகையில்” திருத்தப்பட்டதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு திங்கட்கிழமை இரவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கில், அவதூறு செய்ததாகவும், புளோரிடா மாநிலத்தின் ஏமாற்றும் மற்றும் அநியாய வர்த்தக நடைமுறைகள் சட்டத்தை (Deceptive and Unfair Trade Practices Act) மீறியதாகவும் தலா 05 பில்லியன் டொலர் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

பனோரமா (நிகழ்ச்சியில், ட்ரம்ப் உரையின் ஒரு மணி நேர இடைவெளியில் கூறப்பட்ட பகுதிகளை இணைத்து,“நாம் கெப்பிட்டல் நோக்கி நடந்து செல்வோம். நானும் உங்களுடன் இருப்பேன். நாம் போராடுவோம். கடுமையாகப் போராடுவோம்”என அவர் கூறியதாகத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் பிபிசி உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. எனினும், அந்த உரைத் தொகுப்பை ஒளிபரப்பியது “தீர்மானத்தில் ஏற்பட்ட தவறு” என ஒப்புக்கொண்டு ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்டிருந்தது. ஆனால், இது அவதூறு வழக்காகத் தொடரும் சட்ட அடிப்படை இல்லை என பிபிசி வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் மூலம் ஊடகங்களுக்கு எதிரான ட்ரம்பின் சட்டப் போராட்டம் சர்வதேச அளவுக்கு விரிந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.   நன்றி வீரகேசரி 





ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மீது முதன் முறையாக நீருக்கடியிலான  ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன்! 

16 Dec, 2025 | 11:45 AM

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறிய நிலையில், உக்ரைன் தனது முதல் நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதல் மூலம் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் நேட்டோவில்(NATO) இணைய முயன்றதைத் தொடர்ந்து, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது.

அந்த போர் ஆண்டுக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் மூலம் போர் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த இறுதிகட்ட தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவருகிறது. 

உக்ரைனும் அவ்வப்போது அதற்கு பதிலடி கொடுத்து வருவதுடன், முதன் முறையாக, நீருக்கடியில் சென்று தாக்கும் ட்ரோன் மூலம், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை சிதைத்து, ரஷ்யாவை கதற விட்டுள்ளது உக்ரைன்.

இந்த சூழலில், உக்ரைன் பாதுகாப்பு சேவையான SBU அதன் நீருக்கடியில் சென்று தாக்கும் "சப் சீ பேபி" ட்ரோன்கள் மூலம் நோவோரோசிஸ்க் துறைமுகத்தில் உள்ள ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கியது. 

தாக்குதல் தொடர்பாக SBU வெளியிட்ட காட்சிகள், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பைக் காட்டியது. 

துறைமுகத்தின் தளவமைப்பு மற்றும் கப்பல் தளவமைப்புகளைப் பயன்படுத்தி வீடியோவின் இருப்பிடம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 






நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி 

15 Dec, 2025 | 05:34 PM

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக  உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை குறிப்பிட்டுள்ளார். 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனால் இரு நாடுகளுக்கும்  இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகலை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.

இதன்போது, போர் குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவோம் எனக்கூறியுள்ளார்.

இதேவேளை, உக்ரைன் நாட்டின் எந்த ஒரு நிலப் பகுதியையும்  ரஷ்யாவிற்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என  உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுனார்.   நன்றி வீரகேசரி 







No comments: