அன்றும் இன்றும் -- ( தொடர்ச்சி)

 


கலாநிதி  பாரதி இளமுருகனார்

   (வாழ்நாள் சாதனையாளர்)






வையகத்தில் உயர்ந்ததொரு நாகரிகந் தன்னை

      வளர்த்ததுடன் வரையறையும் செய்தான் தமிழன்!

ஐயமின்றி நம்பிவாழ்ந்தான்! பயனும் பெற்றான்!

      அவசியமென் றேநல்ல விழுமி யங்கள்        

மெய்யாக வழிவழியாய்த் தெடர வைத்தான்!        

      விரும்பாத சிலரின்று அவற்றை மறந்து

பொய்வாழ்க்கை வாழ்கின்றார்! மனதை மாற்றிப்

     புரியவைத்துப்  புடஞ்செய்ய  எவரால் முடியும்?

 

 

;புலம்பெயர் நாட்டிலே  கூட்டுக் குடும்ப வாழ்க்கையைக் கைவிட்டோர் பலர்! 

 

பண்பாட்டுச் சிறப்புடனே அன்று வாழ்ந்த

   பரந்தமனம் கொண்டுயர்ந்த தமிழன் வாழ்க்கை

கண்பட்டு விட்டதுவோ? காலப் போக்கில்

   கலைந்திட்ட கூடுவிட்ட  தேனீக் கள்போல்

மண்விட்டுப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்

   மாறிவிட்ட கலாசாரக் கலப்பிற் குள்ளே

எண்பட்ட தாற்றானோ கூட்டுக் குடும்பம்

   எப்படியோ அருகிடுதே! அதுவே உண்மை!

 

 

பெற்றோரின் உதவியொடு பிள்ளைகளும் வளர்ந்தபின்

பெற்றோரை முதியோர் காப்பகத்திலே சேர்த்துவிடும் செயல்   இன்றைக்கு ஒரு தொற்று நோய்!     

 

 

'வீட்டுக்கடன் அடைப்பதற்கு இருவருங் கூடி

     வேலைசெய்ய வேண்டுமடி இதற்கு நாங்கள்

கூட்டிவந்த பெற்றோரைக் கூடிய சீக்கிரம்

    கொண்டுசென்று முதியோரின் காப்ப கத்தில்

சாட்டொன்றும்  சொல்லாது சேர்த்து விடுவோம்

    சரியான முடிவிதுதான் யோசனை வேண்டாம்!

கேட்கின்ற பணத்தைமட்டும் கொடுத்தாற் போதும்

    கிழடுகளை நன்றாகப் பராம ரிப்பர்!

                           - - - இப்படிச் ----

சிந்திப்பதற்கும் சிலருக்கு மனது வருகிறதே!

காப்பகத்திலே தனிமையிலே வாடும் பெற்றோர் மனதுக்குள் புலம்புவது வெளியிலே கேட்பதில்லை.--- -- -- --

 

'பாலூட்டிச் சீராட்டிப் பாசமெலாம் கொட்டியுன்னைப்

   பஞ்சணையிற் படுக்கவைத்துப் பகலிரவாய்க் கண்விழித்துத்

தாலாட்டி வளர்த்துவந்தோம்! தக்ககல்வி கொடுத்துன்னைத்

   தரணிதனிற் பலர்மதிக்க உயரத்;திவிடப் பசியிருந்தோம்!

வாலாட்டும் நாய்க்குட்டி’ போலுன்னை மாற்றிடவே

   வந்தாளோ நீ;விரும்பி வரித்திட்ட சிங்காரி?

ஏலாத பெற்றோரை வீட்டைவிட்டு வெளியேற்றி

   ஏனோமுதி யோரில்லம் ஏற்றுமதி செய்திட்டாய்! -  - .

                              -- -- -- இப்படி

நாலு சுவர்களுக்கு நடுவிலே மனங்குமுறும் பெற்றோர் ஒருபுறம்!

 

'தள்ளாத காலமதில் தனித்திருக்க விட்டிடாது

   தாங்கள்கண் மூடுமட்டும் ‘தங்கமகன்’ பார்த்திடுவான்

கொள்ளையாசை யுடன்பேரப் பிள்ளைகளைக் கொஞ்சியவர்

  குழைந்துகொட்;டும் பேச்செல்லாம் மகிழ்ந்துகேட்டு விளையாடி

அள்ளியணைத் தேமகிழ ஆசையொடு காத்திருந்தோம்!

  அத்தனையும் பகற்கனவாய் ஆனதையா! என்செய்வோம்!

உள்ளமெலாம் வேகு”தென்று உளஞ்சோரும் ‘கிழடு’களின்

  ஓலங்கள் காதோரம் ஒருநாளும் கேட்கலையோ?. - - - - -

                                    -- -- -- இப்படி

 

முதியோர் காப்பகத்திலே இப்படி ஏக்கப் பெருமூச்சுடன் எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தையும் கழித்துவருபவர்கள் ஒருபுறம்! 

ஆனால் அன்றைய தமிழன் தனது பெற்றோரை அல்லும் பகலும் ஆதரவளித்துப் பராமரித்ததைப்போலப் பிள்ளைகள் புலம்பெயர் நாடுகளிலும் இருப்பது அதிசமே! ஆம்-- -- --

 'இஞ்சைபாரும் இனிநீரோ வெளியில் வேலை

       எதுவுஞ்செயச் செல்லவேண்டாம்! பிள்ளைகள் வளரக்;

  கொஞ்சக்காலம் பராமரித்த பெற்றேர் இப்போ

       கூடுதலாய்ப் பிணிமூப்பால்  வாடு கின்றார்!

   தஞ்சமென எம்மைநம்பி வாழும் அவர்கள்

       தவிக்காது எங்களளோடு கூட இருந்து 

   எஞ்சியவாழ் நாளையவர் கழிக்கட் டுமென்ற

       எண்ணமுள்ள  பிள்ளைகளும் ஒருசிலர் உண்டே!

                                  --------  -------- தொடரும்.                                           


No comments: