ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா?


சங்கர சுப்பிரமணியன்.




மருதநில மன்னன் என்பவனும் நீ
தமிழ்க்குடி காத்த கோமானும் நீ

தேவர்களின் படைத்தளபதியும் நீயென
எல்லோரும் சொல்கின்றாரே ஐயா

நீ எங்களைக் காப்பாற்றி வந்த தலைவன்
மருதமண்ணின் மைந்தனன்றோ ஐயா

தேவர்களைக் காத்திடவும் வந்த நீ
தேவர்களைக் காக்கும் தேவனா?

இடைப்பட்ட கோள் ஏதிலும் தங்கி
இங்குமங்கும் பயணிக்கிறாயோ?

தூணிலும் துரும்பிலும் இருப்பதுபோல்
நீயும் மாறிவிட்டாயா மாவீரா

அங்குமிங்கும் இருப்பேன் என்று நீயும்
அவ்வாறு இருக்கின்றாயோ ஐயா

எவருக்கு உதவி தேவையென்றாலும்
நீயும் காத்தருள்வாய் கந்தையா

எங்கள் இன்னல்களை அகற்றிடாமலே
எங்கு சென்றாய் வேலைய்யா

முப்பத்துமுக்கோடி தேவர்களில் அவர்களை
காக்க ஒருவரும் அங்கில்லையா

தேவர்களைக் காக்க தேவர்களுண்டு
எமக்கு நீ ஒருவனே உண்டன்றோ

பத்துகோடி மக்களை காப்பதை துறந்து
முப்பத்து முக்கோடி காக்க சென்றதேன்

தேவர்களை காக்க முடியா கடவுளர்
எங்ஙனம் எம்மைக் காப்பரோ

விசுவாமித்திரர் கடுந்தவம் கலைத்திட
மேனகையை அனுப்பிய கடவுளர்

எம் துயர் கலைந்திடவே பூமிக்கு எதனால்
உன்னை அனுப்பவில்லை முருகைய்யா

தந்தைக்கு உபதேசமும் செய்கின்றாய்
வள்ளியின் பின்னும் செல்கிறாய்

சூரபத்மனை வதைத்து கொல்கின்றாய்
ஏனெம்மை காக்காது செல்கிறாய்

காக்க காக்க கனகவேல் காக்க என்பதும்
கந்தா உன் கவசத்தில் மட்டும்தானா

படையெல்லாம் உன்னிடம் இப்போது
இல்லையோ படையப்பா

எங்கு அசுரர்கள் உள்ளாரென தேடித்தேடி
ஆண்டாண்டாய் செல்கிறாய் வேலா

இங்கேயே அசுரர் எண்ணற்றோர் இருக்க
எங்கோசென்று போரிடுவதும் சரியா

செந்தூர்க் கடற்கரையில் பொம்மையான
அசுரனை கொன்றது போதும்

என்றோ கொன்ற அசுரனை திரும்பத்திரும்ப
கொல்வதை விடுவாயப்பா

செத்த பாம்பையே விடாது அடிப்பதுவும் உன்
வீரத்தைக்கு இழுக்கன்றோ வேலைய்யா

உண்மையில் அசுரர்கள் உயிரோடிங்கிருக்க
உடனே வந்து எம்மை காப்பாய் வேலா

ஆடுமயிலேறி முருகா நீ ஓடி வருவாயப்பா
முருகா உள்ளம் உருகுதய்யா!

-சங்கர சுப்பிரமணியன்.

No comments: