இலங்கைச் செய்திகள்

பா.உ அர்ச்சுனாவின் பிடியாணையை மீளப்பெற உத்தரவு

ஃபெஞ்சல்: இலங்கை வானிலை தாக்கம் படிப்படியாக குறைகிறது

ரூ. 170 பில்லியன் மதிப்புடைய 500 கி.கி. ஐஸ்; கைதான இலங்கையர்


பா.உ அர்ச்சுனாவின் பிடியாணையை மீளப்பெற உத்தரவு 

- சட்டத்தரணி ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை

November 28, 2024 3:46 pm 

வாகன விபத்தை ஏற்படுத்தி சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

இன்று ஸ்ரீ சட்டத்தரணி ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவரை கைது செய்வதற்கு யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க அண்மையில் (26) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2021 மார்ச் 22ஆம் திகதி கொழும்பு பேஸ்லைன் வீதியில் வாகன விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ச்சியாக நீதிமன்றங்களைத் தவிர்த்து வருவதனால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 




ஃபெஞ்சல்: இலங்கை வானிலை தாக்கம் படிப்படியாக குறைகிறது

- இன்று மாலை தமிழ் நாட்டின் புதுச்சேரியை அடைகிறது

November 30, 2024 7:54 am 

– இலங்கையின் பல இடங்களில் அவ்வப்போது மழை

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் (‘FENGAL’ [pronounced as FEINJAL]) ஃபெஞ்சல் சூறாவளி நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துறைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்ததாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது மேற்கு திசை சார்ந்து, வடமேல் திசை நோக்கி நகர்ந்து இன்று (30) மாலை வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தொகுதியினால் இலங்கையின் வானிலையில் ஏற்படும் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

வடமாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் வானம் மேக மூட்டத்துடன் தொடர்ந்தும் காணப்படும் என்பதோடு, அவ்வப்போது மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

வட மாகாணத்தில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்பதோடு, மேல், வடமேல், வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, மத்திய, தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கி.மீ. வரையான பலத்த காற்று வீசக்கூடும் .

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.   நன்றி தினகரன் 





ரூ. 170 பில்லியன் மதிப்புடைய 500 கி.கி. ஐஸ்; கைதான இலங்கையர்

- இந்திய இலங்கை கடற்படை இணைந்து கடத்தல் முறியடிப்பு

November 30, 2024 11:37 am 

சுமார் 500 கி.கி. ஐஸ் போதைப்பொருளைக் கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப்படகுடன் 9 இலங்கையர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதன் தெருமதிப்பு ரூ. 170 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மீன்பிடி படகுகள் மூலமான போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இலங்கை கடற்படையினரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய கடற்படையினர் முன்னெடுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நவம்பர் 24 மற்றும் 25 நவம்பர் 24 ஆகிய திகதிகளில் இந்திய கடற்படை நீண்ட தூர கடல் ரோந்து விமானம் மற்றும் தொலைதூர பைலட் விமானங்கள் மூலம் விரிவான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, இந்திய கடற்படைக் கப்பலின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன்போது இரண்டு படகுகள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்து 500 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அதிலிருந்த 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த இரண்டு படகுகள், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை கப்பலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இரு நாடுகளுக்கும் கடற்படைகளுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பின் நன்மைகளுக்கு ஒரு சான்றாக உள்ளதாக, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.   நன்றி தினகரன் 



No comments: