திருமாங்கல்யம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 வெண்ணிற ஆடை மூலம் 1965ல் தமிழ் திரைக்கு அறிமுகமான


ஜெயலலிதாவுக்கு 1974ல் திருமாங்கல்யம் கிட்டியது. ஆம் ஒன்பது ஆண்டு கால அவகாசத்தில் தனது நூறாவது படமாக திருமாங்கல்யம் படத்தில் அவர் நடித்தார். தனது நூறாவது படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் , தன்னுடைய பாத்திரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் , வண்ணப் படமாகவும் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த ஜெயலலிதா இவற்றுக்கு ஏதுவாக தெரிவு செய்த படம்தான் திருமாங்கல்யம்.

 
வசந்த மாளிகை என்ற பிரம்மாண்டமான வெற்றி படத்தை தயாரித்த

விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் சார்பில் அதன் தயாரிப்பாளரான டி . ராமநாயுடு இந்தப் படத்தை தயாரித்தார். படத் தயாரிப்பு வகையில் பணத்தை பற்றி கவலைப் படாமல் தாராளமாகவே செலவு செய்து படத்தை அவர் தயாரித்தார். பிரம்மாண்டமான செட், நவீன ஆடைகள், காட்சியமைப்பு என்று எதிலும் அவர் பின்வாங்கவில்லை. ஆனால் படத்தின் கதை விஷயத்தில் தான் அவர் கோட்டை விட்டார் என்று சொல்ல வேண்டும்.
 
தன்னுடன் கல்லுரியில் ஒன்றாக கல்வி பயின்ற சீதாவை முரளி ஒருதலை பட்சமாக காதலிக்கிறான். அவளை கல்யாணம் செய்யவும் தீர்மானிக்கிறான். ஆனால் சீதாவோ முரளியை தன்னுடைய சகோதரனாக எண்ணுகிறாள். முரளியின் அண்ணன் தியாகுவோ சீதா பணத்துக்கு ஆசைப்பட்டு முரளியை மணக்க ஆசைப்படுகிறாள் என்று தப்புக் கணக்கு போடுகிறான். இதனால் சீதாவுக்கு மயக்க மருந்து கொடுத்து அசந்த நேரத்தில் அவளில் கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டி விடுகிறான்! மயக்கம் தெளிந்ததும் தியாகு தனக்கு திருட்டுத் தாலி கட்டி விட்டதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள் சீதா. விஷயம் வெளி வந்தால் குடும்பத்துக்கு தியாக்குவால் ஆபத்து வரும் என்று அஞ்சி தாலியை மறைத்து வாழ்கிறாள்.
 

இப்படி அமைத்த படத்தின் கதையில் ஓடிப் போன தந்தை, கண் பார்வையற்ற தாய், திருடனாக உலாவும் தம்பி, வேலை பார்க்க செல்லும் இடத்தில் ஆணவத்துடன் நடமாடும் முதளாளியின் மகள் லாவண்யாவின் சுடு சொல், அவளின் வாய் பேச முடியாத தங்கை என்று பலருடனும் காலம் தள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையும் சீதாவுக்கு ஏற்படுகிறது.

படத்தில் சீதாவாக வரும் ஜெயலலிதா தன்னுடைய நடிப்புத் திறனை குறையின்றி வெளிப்படுத்தியிருந்தார். பல காட்சிகளில் அவரின் நடிப்பு ஜொலித்தது. எந்தக் காட்சியிலும் கவர்ச்சிக்கு இடமின்றி நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார் ஜெயலலிதா. அவருக்கு ஜோடி முத்துராமன். இந்த படம் வெளியான கால கட்டத்தில் ஜெயலலிதாவின் நிரந்தர பட ஜோடியாக மாறிப்

போயிருந்த முத்துராமன் மாறாத தன் நடிப்பை இதிலும் வழங்கியிருந்தார். அவரின் தம்பியாக வரும் சிவகுமார் கொடுத்த வேடத்தை பூர்த்தி செய்கிறார். படத்தில் லாவண்யாவாக வரும் லஷ்மியின் ஆக்ட்டிங் அருமை. பணத் திமிர், அலட்சியம், ஆணவம், எரிச்சல் என்று கலவையான வேடத்தில் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அவர்.

இவர்களுடன் ஸ்ரீகாந்த், நாகேஷ், சுந்தர்ராஜன், பண்டரிபாய், சச்சு, பாலாஜி, காந்திமதி, சுகுமாரி, பேபி ஸ்ரீதேவி என்று பலரும் நடித்திருந்தனர். ஜெயலலிதாவின் முதல் படத்தில் அவரின் அப்பாவாக நடித்த சுந்தரராஜன் நூறாவது படத்திலும் அவரின் அப்பாவாக நடித்து அசத்தியிருந்தார். முதல் படத்தில் ஜோடியாக வந்த ஸ்ரீகாந்த் இதில் அவரின் தம்பியாக நடித்திருந்தார்.

படத்துக்கு வசனம் எழுதியவர் ஏ . எல் . நாராயணன். பல காட்சிகளில் அவர் வசனம் பளிச்சிட்டது. ஆணுக்கு களங்கம் அழுக்கு போல துடைத்தால் போய் விடும் ,பெண்ணுக்கு களங்கம் மச்சம் போல தேகம் எரியும் போதுதான் மறையும், நெருப்புக்கு முன்னாலே சத்தியம் செய்துதான் ஒருத்தியை கை பிடிக்கிறோம் ஆனால் அதற்கு பின்னால் நமக்குள் ஏற்படுகிற காம நெருப்பை நம்மாலே ஜெயிக்க முடியுதில்லையே, போன்ற ஏ எல் நாராயணனின் வசனங்கள் கவரும் வண்ணம் அமைந்தன.
 

படத்துக்கான பாடல்களை கண்ணதாசன் எழுத எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்தார். பொன்னான மனம் எங்கு போகின்றது, திருமாங்கல்யம் செய்யும் முறை இல்லையோ , யோகம் நல்ல யோகம், ஜனனம் ஒரு வழி மரணம் ஒரு வழி பாடல்கள் கருத்தோடு ஒலித்தன. பிரபல ஒளிப்பதிவாளராக ஏ. வின்சென்ட் படத்தை ஒளிப்பதிவு செய்து டைரக்ட்டும் செய்திருந்தார். ஆனாலும் படத்தின் கதை ரசிகர்களை கவராததால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லலை . 

ஆனாலும் ஜெயலலிதாவின் நூறாவது படம் என்பதால் அதற்கு ஒரு வெற்றி விழாவும் எடுத்தார்கள். இந்த கால கட்டத்தில் எம் ஜி ஆருக்கும் , ஜெயலலிதாவுக்கும் இடையி்லான உறவு சேதப்பட்டிருந்தது. எம் ஜி ஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் இல்லாதிருந்தது. இதன் காரணமாக நூறாவது நாள் விழாவில் எம் ஜி ஆர் மிஸ்ஸிங். அவருக்கு பதில் பிற் காலத்தில் ஜெயலலிதாவின் ஜென்ம விரோதியாக மாறியிருந்த கலைஞர் கருணாநிதி
நூறாவது நாள் விழாவுக்கு தலைமை ஏற்று நடத்திக் கொடுத்தார். 1974ல் தமிழக முதல்வராக ஆட்சியில் இருந்த கருணாநிதி விழாவில் ஜெயலலிதாவை வாழ்த்தி பேசி விருதும் வழங்கி கௌரவித்தார்!

திரையுலகிலும், பின்னர் அரசியலிலும் கோலோச்சிய ஜெயலலிதாவின் நினைவு தினம் டிசம்பர் 5ம் திகதியாகும்.

No comments: