.
நவீன யுகத்திற்கு அமைவாக இந்திய சட்டங்களில் சீர்திருத்தம்
இந்தியாவின் விண்வெளி துறை முதலீடு அதிகரிப்பு
பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் முன்னிலை
காசா எல்லை நகரான ரபா மீது இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிப்பு
நவீன யுகத்திற்கு ஏற்ப தற்போதைய யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவின் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் சட்ட மாஅதிபர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மாநாட்டை புதுடில்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள்’ என்ற தொனிப்பொருளிலான இம்மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் மோடி, காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு காலாவதியாகியுள்ள ஆயிரக்கணக்கான சட்டங்களை நாம் நீக்கியுள்ளோம். காலனித்துவ காலம் முதல் இந்தியா ஒரு சட்ட அமைப்பைப் பெற்றுள்ள போதிலும் அதில் பல சீர்திருத்தங்களை நாம் மேற்கொண்டுள்ளோம்.
ஒரு நாட்டில் நீதியை உறுதிப்படுத்த சில சமயங்களில் ஏனைய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு நாங்கள் ஒத்துழைப்புடன் செயற்படும் போது, அமைப்புக்களை ஒருவருக்கொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி தினகரன்
இந்தியாவின் விண்வெளி துறை முதலீடு அதிகரிப்பு
இந்தியாவின் விண்வெளித் துறை முதலீடுகளில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த எட்டு மாதங்களில் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
2040 ஆம் ஆண்டாகும் போது 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை விண்வெளித் துறைக்கான முதலீடுகளாக ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும் தற்போதைய நிலவரங்களின் படி, அது 100 பில்லியன் டொலர்களைத் தாண்டக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் சி.எஸ்.ஐ.ஆர் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இந்திய விண்வெளித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களின் பயனாக கிடைக்கப்பெறும் முதலீடுகளில் பாரிய அதிகரிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் பத்து பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி மிக்கதாகக் காணப்பட்ட இந்தியாவின் உயிரியல் பொருளாதாரம் தற்போது 140 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்டதாக உள்ளது.
கொவிட் 19 பெருந்தொற்று காலப்பகுதியில் உலகின் பல நாடுகளிலும் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்ற எமது தடுப்பூசிகள் பெரும் பங்களிப்பை நல்கியுள்ளன. இன்று நோய் தவிர்ப்பு சுகாதாரப் பராமரிப்பில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் எமது நாடு விளங்குகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி தினகரன்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் முன்னிலைமுடிவுகள் வெளியாவதில் அசாதாரணமான தாமதம்
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் சிறை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அதிகமான ஆசனங்களை வென்று முன்னிலை பெற்றுள்ளனர்.
எனினும் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலை அடுத்து கைபேசி சேவைகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் அசாதாரணமான வகையில் தாமதம் நீடித்து வந்தது.
நேற்று பின்னேரம் வரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி இம்ரான் கானுடன் தொடர்புபட்ட சுயேச்சை வேட்பாளர்கள் 146 ஆசனங்களில் 60 இடங்களை வென்றிருந்தனர். மொத்தம் 265 ஆசனங்களுக்காகவே தேர்தல் இடம்பெற்றது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சி 43 இடங்களை வென்றிருப்பதோடு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலவால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 37 இடங்களை வென்றிருந்தது.
இம்ரான் கான் சிறை வைக்கப்பட்டதோடு அவரது பாகிஸ்தான் தஹ்ரீக்கே இன்சாப் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களாகவே இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்திற்கு மத்தியிலேயே இந்தத் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தேர்தல் முடிவு வெளியாக தாமதிப்பது வழக்கத்திற்கு மாறானதாகும்.
இந்த நிச்சமற்ற நிலையில் கராச்சியின் பங்குச் சந்தை மற்றும் இறைமை பிணைமுறிகள் வீழ்ச்சி கண்டுள்ளன.
“இணையதள பிரச்சினை” ஒன்றே முடிவுகள் தாமதிப்பதற்குக் காரணம் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட செயலாளர் சபர் இக்பால் தெரிவித்துள்ளார்.
தேர்தலையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக கைபேசி சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக அரசு வியாழக்கிழமை கூறியிருந்தது. அது பகுதி அளவு மீண்டுள்ளது.
இதில் கடந்த முறை தேர்தலில் வெற்றியீட்டி தற்போது சிறை அனுபவிக்கும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் மற்றும் நவாஸ் ஷரீப் கட்சிக்கு இடையிலேயே போட்டி நிலவியது.
தனது கட்சியை ஒடுக்கியதில் நாட்டின் சக்திவாய்ந்த இராணுவம் பின்னணியில் இருப்பதாக இம்ரான் கான் நம்புகிறார்.
மறுபுறம் நவாஸ் ஷரீபுக்கு இராணுவம் ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சியினர் மற்றும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
காசா எல்லை நகரான ரபா மீது இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிப்பு
தெற்கு காசாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் நிரம்பியுள்ள எல்லை நகரான ரபா மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நருக்கு படைகளை அனுப்ப இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவும் இந்தத் திட்டம் பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ரபாவில் இஸ்ரேலிய படை நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்காது என்று அந்நாட்டு இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போர், “மிகக் கடுமையாகியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
ரபா நகரில் இஸ்ரேல் கடந்த வியாழக்கிழமை தாக்குதல்களை நடத்திய நிலையில் நேற்று அது தீவிரம் அடைந்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment