பணக்கார குடும்பம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 .

எம் ஜி ஆரின் நடிப்பில் பெரிய இடத்து பெண் வெற்றி படத்தை தயாரித்து இயக்கிய டி. ஆர் . ராமண்ணா 1964ம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் உருவாக்கிய படம் பணக்கார குடும்பம். அநேகமாக பெரிய இடத்துப் பெண்ணில் நடித்த எல்லோரும் ( எம் ஆர் ராதா தவிர்த்து ) இந்தப் படத்திலும் இடம் பெற்றார்கள். வழக்கமான எம் ஜி ஆர் படங்களில் இருந்து சற்று மாறுபட்டு காதலுக்கு மரியாதையை கொடுக்கும் கதையாக படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.

கிராமத்தில் வேலையில்லாமல் , வேலாயியை காதலித்துக் கொண்டிருந்த முத்தையா சந்தர்ப்பவசத்தால் சொத்துக்கு ஆசைப்பட்டு பணக்கார பெண் ஒருத்தியை திருமணம் செய்கிறான். அவர்களுக்கு ராணி என்ற குழந்தை பிறக்கிறது. வேலாயியுடன் சேர்ந்து சதி செய்யும் முத்தையா குடும்பமாக கிராமத்துக்கு படகில் செல்லும் போது படகு கவிழ்கிறது. ராணி உயிர் தப்ப அவளின் தாய் இறந்து விட்டதாக கருதப்படுகிறது. ராணியை வளர்க்கும் பொறுப்பை ஒரு குடியானவனிடம் ஒப்படைத்து விட்டு வேலாயியுடன் சென்னையில் புது வாழ்வு தொடங்குகிறான் முத்தையா. அவன் குடும்பம் பணக்காராக் குடும்பமாகிறது. அதே சமயம் தன் மகள் ராணியை வேலாயிக்கு தெரியாமல் பராமரித்தும் வருகிறான். கல்லூரி பெண்ணான ராணிக்கும், வேலை தேடும் நல்லதம்பிக்கும் காதல் மலர்கிறது. அந்த காதலை வரவேற்க முடியாமல் தடுமாறும் முத்தையா , ராணியை மறந்து விடும் படி நல்லதம்பியை கெஞ்சுகிறார். வேறுவழியின்றி அவனும் அதற்கு இணங்க ராணியோ காதல் தோல்வியால் துவண்டு போகிறாள். பணக்கார குடும்பத்தை சேர்ந்த அவள் காதல் நிறைவேறியதா என்பதே படத்தின் மீதி கதை.

காதல், ரொமான்ஸ், நகைச்சுவை, உணர்ச்சிகரமான காட்சிகள் இவற்றை முன்னிலைப் படுத்தி அமைந்த படத்தில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்து கொண்டவர் எஸ் ஏ அசோகன்தான்! முத்தையாவாக வரும் அவர் பெரிய மனிதனான பிறகு மகள் ராணியிடம் உண்மைகளை சொல்ல முடியாமல் தவிப்பதும், வேலாயியிடம் பயந்து நடுங்குவதும், நல்லதம்பியிடம் கெஞ்சுவதுமாக படம் முழுதும் தன் குணச்சித்திர நடிப்பை வழங்கியிருந்தார். வழக்கமான வில்லன் அசோகனை இதில் காணோம் !
படம் முழுதும் டூயட் பாடி காதலிக்கிறார்கள் எம் ஜி ஆரும் , சரோஜாதேவியும். பிரிவின் போது சோக கீதமும் இசைகிறார்கள்.இருவர் நடிப்பும் மிகையின்றி ரசிக்கும்படி இருந்தது. நாகேசுக்கு தாத்தா, அப்பா, மகன் என்று மூன்று வேடங்கள். அது போதாதென்று மணிமாலா, மாதவி என்று இரண்டு ஜோடிகள். இவர்கள் வரும் காட்சிகள் எல்லாம் ஒரே கலகலப்புதான்.

இந்தப் படத்தில் தான் ஆர் எஸ் மனோகர் , எம் ஜி ஆர் படங்களில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். எம் ஜி ஆருக்கு ஏற்ற வில்லன் என்பதையும் நிரூபித்தார். வேலாயியாக வரும் ஜி . சகுந்தலா பாத்திரத்துடன் பொருந்துகிறார். இவர்களுடன் சேதுபதி, என் எஸ் கே கோலப்பன், திருப்பதிசாமி ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்தின் கதை வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதியிருந்தார். வசனங்களில் அவர் கைவண்ணம் தெரிந்தது. நிச்சயதார்த்த பரிசாக வெள்ளி விளக்கு , மெழுகுவர்த்தி, தீப்பெட்டி மூன்றுடன் வரும் எம் ஜி ஆர் , அசோகனிடம் அவற்றுக்கான விளக்கங்களை சொல்வார். கன்னையா என்ற தீப்பெட்டி , ராணி என்ற மெழுகுவர்த்தியை பற்றவைக்கும் , அந்த மெழுகு முத்தையா என்ற வெள்ளி விளக்கை ஒளியேற்றும், இறுதியில் வெள்ளி விளக்கு நின்று ஒளிவீச ராணி என்ற மெழுகு தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் என்ற வசனம் ரசிகர்களின் கைதட்டுதல்களை அள்ளிக் கொண்டது.இந்தப் படத்திலும் கண்ணதாசன், விஸ்வநாதன், ராமமூர்த்தி வெற்றிக்கூட்டணி தொடர்ந்தது. மொத்தம் எட்டுப் பாடல்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சடுகுடு விளையாடும் பாட்டான வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ,
வண்டிலுக்கு கீழிருந்து பாடும் விரகதாப பாடலான இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா , கிண்டல் செய்யும் பாட்டான அத்தை மகள் ரத்தினத்தை , பாட்மிண்டன் அடித்து


பாடும் பறக்கும் பந்து பறக்கும், சமத்துவத்தை வலியுறுத்தும் ஒன்று எங்கள் ஜாதியே, சோகத்தை பிழியும் உன்னை நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே, பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக என்று எல்லாப் பாடல்களும் டீ எம் எஸ் , சுசிலா, ஈஸ்வரி குரலில் அறுபது ஆண்டுகள் ஆகியும் இனிக்கின்றன.

படத்தை அனுபவஸ்தரான எம் ஏ ரஹ்மான் ஒளிப்பதிவு செய்தார். ராமண்ணா நவீன யுக்திகளுடன் படத்தை விறுவிறுப்பாக இயக்கியிருந்தார். பணக்கார குடும்பம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி பணத்தை கொட்டியது!

No comments: