உலகச் செய்திகள்

நான்கு பொதுமக்கள் பலி - உக்ரைனில் தொடர்மாடி மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

 அமெரிக்க ஆளில்லா விமானங்களுடன் மோத வந்த ரஷ்ய போர் விமானங்கள் 

ஜெனினில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் காசா மீது தாக்குதல்

ஜெனின் அகதி முகாமில் இஸ்ரேல் படை நடவடிக்கை தொடர்ந்து நீடிப்பு

ஜெனின் அகதி முகாமில் இஸ்ரேல் வான் தாக்குதல்: 8 பலஸ்தீனர் பலி நகரில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்


நான்கு பொதுமக்கள் பலி -  உக்ரைனில் தொடர்மாடி மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் 

July 7, 2023 11:12 am 

மேற்கு உக்ரைனிய நகரான லெவிவில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மீது ரஷ்ய ரொக்கெட் குண்டு விழுந்து குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் உள்துறை அமைச்சர் இஹோர் கிலிமென்கோ தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் 32 பேர் காயமடைந்திருப்பதோடு நகரின் சிவில் உட்கட்டமைப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவென்று அந்த நகர மேயர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த தாக்குதல் பற்றி ரஷ்ய தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்த தொடர்மாடியின் இடிபாடுகளில் இருந்து ஏழு பேர் மீட்கப்பட்டதாகவும் மேலும் பலர் சிக்கி இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கிலிமென்கோ டெலிகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 60 வீடுகள் சேதம் அடைந்திருப்பதோடு பல கட்டடங்களின் கூரைகள் உடைந்துள்ளன.

கறுங்கடலில் இருந்து ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருவதோடு பெரும்பாலான தாக்குதல்களில் பொதுமக்கள் நிலைகளே இலக்கு வைக்கப்பட்டுள்ளன.   நன்றி தினகரன் 
அமெரிக்க ஆளில்லா விமானங்களுடன் மோத வந்த ரஷ்ய போர் விமானங்கள் 


July 7, 2023 9:08 am 

சிரியாவில் தனது ஆளில்லா விமானங்களுக்கு நெருக்கமாக ஆபத்தான வகையில் ரஷ்யப் போர் விமானங்கள் பறந்துசென்றதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

வொஷிங்டனின் ஆளில்லா விமானத்திற்கு நெருக்கமாக மொஸ்கோவின் எஸ்.யு 35 ரகப் போர் விமானம் பறக்கும் வீடியோவை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் அத்தகைய செயலால் வான்குடையை திறக்க நேர்ந்தது என்றும் ஆளில்லா விமானம் மோதாமல் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான பணியில் ஈடுபட்டிருந்தபோது ரஷ்யப் போர் விமானங்கள் ஆளில்லா விமானத்தை அச்சுறுத்தியதாக அது கூறியது. ரஷ்யப் போர் விமானத்தின் செயல்பாடுகள் இரு நாட்டுப் படையினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என்று அமெரிக்க விமானப் படை தெரிவித்தது. சிரியாவில் இருக்கும் ரஷ்யப் படையினர் பொறுப்பற்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அது வலியுறுத்தியது.   நன்றி தினகரன் 


ஜெனினில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் காசா மீது தாக்குதல்

July 6, 2023 6:00 am 0 comment

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் அகதி முகாமில் இருந்து இரண்டு நாட்களின் பின் இஸ்ரேல் தனது படைகளை வாபஸ் பெற்ற நிலையில் காசா மற்றும் இஸ்ரேல் இடையே பரஸ்பரம் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி நேற்று (05) ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், இஸ்ரேல் போர் விமானங்கள் காசா மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
ஜெனின் அகதி முகாமில் இஸ்ரேல் கடந்த இரண்டு தசாப்தங்களில் நடத்திய மிகப்பெரிய இராணுவ நடவடிக்கை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டு 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையிலேயே இஸ்ரேல் அங்கிருந்து வாபஸ் பெற்றது.
இஸ்ரேலியப் படை நேற்று அங்கிருந்து வாபஸ் பெறும் முன்னர் தேவைப்பட்டால் இதனைப் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.
“தற்போது எமது திட்டம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதோடு ஜெனினில் எமது விரிவான செயல்பாடு ஒரு முறை மாத்திரமானதல்ல என்று என்னால் கூற முடியும்” என ஜெனின் புறநகர் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றுக்கு சென்ற நெதன்யாகு தெரிவித்தார். “நாம் பயங்கரவாதத்தை எங்கு பார்த்தாலும் அதனை அழித்துவிடுவோம். அதன் மீது தாக்குதல் நடத்துவோம்” என்றார்.
இந்நிலையில் நேற்று காலை இஸ்ரேலை நோக்கி வந்த ஐந்து ரொக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டதை அடுத்தே காசாவை நோக்கி இஸ்ரேல் வான் தாக்குதலை நடத்தியது.
வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் இராணுவத் தளம் ஒன்று தாக்கப்பட்டதாக பலஸ்தீன பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை (04) இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் காரை மோதவிட்டு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர். இதன்போது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதில் மேற்குக் கரையைச் சேர்ந்த பலஸ்தீன ஆடவர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
இது ஜெனின் நடவடிக்கைக்கு எதிரான இயற்கையான பதில் நடவடிக்கை என்று டெல் அவிவ் தாக்குதல் தொடர்பில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனின் சுற்றிவளைப்பின்போது போராளிகளின் மறைவிடங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் வெடிபொருட்களை சேமிக்கு நிலத்தடி கிடங்குகள் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை ஜெனின் மக்களுக்கு எதிரான போர் என்று பலஸ்தீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சுற்றிவளைப்புக் காரணமாக ஜெனின் அகதி முகாமில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.
இந்த பதற்றத்தை அடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அழைப்பின் பேரில் ஐ.நா பாதுகாப்பு சபை மூடிய அறையில் கூடுவதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையிலான பதற்றம் அண்மைக் காலத்தில் அதிகரித்திருப்பதோடு இந்த ஆண்டில் இதுவரை 190 பலஸ்தீனர்கள் மற்றும் 26 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

ஜெனின் அகதி முகாமில் இஸ்ரேல் படை நடவடிக்கை தொடர்ந்து நீடிப்பு


July 5, 2023 6:00 am 0 comment

ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அகதி முகாமில் இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை (03) நடத்திய பாரிய இராணுவ நடவடிக்கையை அடுத்து அந்த அகதி முகாமில் இருந்து ஆயிரக் கணக்கானோர் வெளியேறியுள்ளனர்.

பலஸ்தீன நகரான ஜெனினில் இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தியும், நூற்றுக்கணக்கான துருப்பினர்களை அனுப்பியும் நடத்திய இந்த சுற்றிவளைப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதோடு 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை எதிர்த்து மேற்குக் கரையின் பல நகரங்களிலும் நேற்று (04) பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. சுமார் 14,000 மக்கள் வசிக்கும் ஜெனின் அகதி முகாமில் உள்ளவர்களுக்கு ஆதரவை வெளியிடும் வகையிலேயே இந்த வேலை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.

இது இஸ்ரேல் இராணுவம் கடந்த 20 ஆண்டுகளில் மேற்குக் கரையில் நடத்திய தீவிர படை நடவடிக்கையாக இருந்ததோடு 2000களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற இரண்டாவது பலஸ்தீன எழுச்சிப் போராட்டத்தின்போது இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை நினைவூட்டுவதாக இருந்தது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையிலான பதற்றம் அண்மைக் காலத்தில் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த இராணுவ நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 1.14 மணிக்கு ஐ.நா நிதியில் இயங்கும் பாடசாலைகளுக்கு நெருக்கமாக உள்ள ஜெனின் அகதி முகாமின் மையப்பகுதியை இலக்கு வைத்து வான் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது 1,000க்கும் அதிகமான இஸ்ரேலியப் படையினர் அந்த முகாமில் சுற்றிவளைப்பை நடத்தியது.

இந்நிலையில் ஜெனின் இராணுவ நடவடிக்கை நிறைவடையும் தறுவாயில் உள்ளது என்று இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் மூத்த உதவியாளர் ஒருவர் நேற்று (04) தெரிவித்தார். எனினும் அங்கு தொடர்ந்தும் இஸ்ரேலிய இராணுவம் சுற்றிவளைப்புகளை நடத்துவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் தமது போராளிகள் நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன போராட்ட அமைப்பான இஸ்லாமிய ஜிஹாத் தெரிவித்துள்ளது. மற்றொரு போராட்டக் குழுவான ஹமாஸ் அமைப்பின் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தவிர 17 தொடக்கம் 23 வயது கொண்ட கொல்லப்பட்டிருப்பும் மற்ற ஐவரும் போராளிகளா அல்லது பொதுமக்களா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் இந்த அகதி முகாமில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறியுள்ளனர். “இந்த முகாமில் சுமார் 3,000 பேரே எஞ்சியுள்ளனர்” என்று ஜெனின் பிரதி ஆளுநர் கமால் அபூ அல் ரூப் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். வெளியேறியவர்கள் பாடசாலைகள் மற்றும் ஏனைய தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை பல நாட்கள் நீடிக்கும் என்ற அச்சத்துக்கு மத்தியில் அந்த அகதி முகாமில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவதாக பலஸ்தீன செம்பிறை அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்குக் கரை நகரான ஜெனினின் வடக்கு புறநகர் பகுதியில் 1950களில் அமைக்கப்பட்ட இந்த அகதி முகாம் பலஸ்தீன போராட்ட அமைப்புகளின் மையமாக செயற்பட்டு வருகிறது.

ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாம், பத்தா உட்பட போராட்டக் குழுக்களின் நூற்றுக் கணக்கான போராளிகள் இந்த முகாமை தளமாகக் கொண்டே இயங்குகின்றனர். இஸ்ரேல் உருவாக்கப்படதை அடுத்து அகதியாக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் சந்ததிகளே இங்கு வாழ்கின்றனர்.

இந்த தாக்குதலுடன் மேற்குக் கரையில் இந்த ஆண்டில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்கு பலஸ்தீனர்களுடன் 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் இஸ்ரேலுடன் உறவை பேணும் ஜோர்தான், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அரபு நாடுகளும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை தாம் பாதுகாப்பதாகவும் மேற்குக் கரையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் அமைதி காக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவசரக் கூட்டத்தை நடத்திய பலஸ்தீன தலைமை, ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேலுடனான தொடர்பை நிறுத்துவதாக அறித்துள்ளது. அமெரிக்காவுடனான உறவை மட்டுப்படுத்துவதற்கும் திட்டமிட்டிருப்பதாக பலஸ்தீன தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசிய இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, “அண்மைய மாதங்களில் ஜெனின் பயங்கரவாதிகளுக்கான சொர்க்கபுரியாக மாறியுள்ளது. இதனை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்றார்.

இஸ்ரேலிய படை ஜெனினில் வான் மற்றும் தரை வழியாக தாக்குதல்களை நடத்தியது 2002 ஆம் ஆண்டுக்குப் பின் இது முதல்முறையாகும். அப்போது இந்த அகதி முகாமில் ஒரு வாரத்துக்கு மேல் இடம்பெற்ற மோதலில் 50க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் மற்றும் 23 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டனர்.   நன்றி தினகரன் 
ஜெனின் அகதி முகாமில் இஸ்ரேல் வான் தாக்குதல்: 8 பலஸ்தீனர் பலி நகரில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்

July 4, 2023 12:10 pm 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரான ஜெனினில் இஸ்ரேல் இராணுவம் நேற்று (03) அதிகாலை நடத்திய பாரிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில் எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் இஸ்ரேலிய போர் விமானங்கள் வீடு ஒன்றை இலக்கு வைத்து மூன்று ஏவுகணைகளை வீசி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது குறைந்தது 10 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வான் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் ஜெனின் அகதி முகாமை முடக்கி, ஆயுதம் ஏந்திய இராணுவ புல்டோசர்களின் உதவியோடு சுற்றிவளைப்புத் தேடுதலை நடத்தியுள்ளது.

இதன்போது இஸ்ரேலிய போர் விமானங்கள் கணிசமான நேரம் அந்த முகாமில் வான் தாக்குதல்களை நடத்தியதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

பிறிதொரு சம்பவத்தில் மேற்குக் கரை நகரான ரமல்லாவுக்கு அருகில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 21 வயது பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்திருக்கும் சூழலிலேயே நேற்றைய தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஜெனின் அகதி முகாமில் அண்மையில் 2006 ஆம் ஆண்டுக்கு பின் இஸ்ரேல் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியதோடு இந்த முகாமில் இஸ்ரேலின் சுற்றுவளைப்பு தேடுதல்கள் அதிரித்து, பலஸ்தீன கிராமங்கள் மீதான இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் No comments: