இலங்கைச் செய்திகள்

 யாழ். – சென்னை: கப்பல் சேவை ஆரம்பிக்காவிடினும் 7 நாட்களும் விமான சேவை

 பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைக்கும் பணி ஆரம்பம்

ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் தரப்பினர் 11 முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக பேச்சு

மத ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தால் இனி ஆபத்து

நயினாதீவு நாகதீப விகாரையில் விஹாராதிபதியாக 50 வருடங்கள்


யாழ். – சென்னை: கப்பல் சேவை ஆரம்பிக்காவிடினும் 7 நாட்களும் விமான சேவை


July 7, 2023 12:36 pm 

யாழ்ப்பாணத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை முன்னர் திட்டமிட்டபடி ஜூலை 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படாவிட்டாலும், அன்றைய தினம் முதல் வாரத்தில் ஏழு நாட்களும் இந்தியாவிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமானசேவைகள் இடம்பெறும் என யாழ் சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.

இந்தியா விடுத்துள்ள அறிவித்தல் காரணமாக இந்தியாவிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பயணிகள் சேவையை ஆரம்பிப்பது, மேலும் குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், வாரத்தில் ஏழு நாட்களும் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, குறித்த விமானமானது சென்னையில் இருந்து 9.35 க்கு புறப்படும் எனவும், யாழ்ப்பாணத்தில் இருந்து 12 மணிக்கு சென்னைக்கு திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவைகள் ஜூலை 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.    நன்றி தினகரன் 


பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைக்கும் பணி ஆரம்பம்

கட்டம் கட்டமாக திருத்தி சமர்ப்பிக்கப்படும்

July 7, 2023 6:00 am

நீதிமன்ற செயற்பாடுகளையும் ஆணைக்குழுக்களையும் அரசியலாக்காவிட்டால் சகல சட்டங்களையும் சிறந்த முறையில் செயற்படுத்த முடியுமென, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியல் நோக்கத்துக்காக பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும் அரசியல் அழுத்தங்களால்,

சட்டத்திலிருந்து குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதும் தவறானதே என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், இவ்விரு முறைமையும் மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் மாத்திரம் ஊழல் மோசடிகளை ஒழிக்க முடியாதென குறிப்பிட்ட அவர், இதற்கு நாட்டு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டம் மூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், இலஞ்சம் கொடுப்பதும் இலஞ்சம் வாங்குவதும் குற்றம் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சட்டம் இயற்றிய பின்னர் ஓரிரு இரவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.சிறந்த மாற்றத்துக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கடந்த காலங்களில் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.

குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களின் உளவியல் நிலை பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த புதிய சட்டமூலத்துக்கு அமைய சாட்சியாளர்கள் மற்றும் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

விசேட சட்ட நிபுணர்களின் வழிநடத்தலுக்கு அமையவே இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தலைமையிலான குழுவினால், 2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் ஒழிப்பு சாசனத்துக்கு அமைவாகவே இது, தயாரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமையவே ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதென விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட, சட்டமூலத்தை இயற்றுவது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை கட்டம் கட்டமாக மாற்றியமைக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு தற்போது நிலைமை கட்டம் கட்டமாக மாற்றமடைந்துள்ளமை சிறந்ததாகும்.

நல்லாட்சி அரசாங்கம் அரசியல் காரணங்களை முன்னிலைப்படுத்தி பலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி விசேட நீதிமன்றங்கள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், இறுதியில் எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை.ஆளும் தரப்பினர் எதிர்த்தரப்பினரை திருடன் என்பதும் எதிர் தரப்பினர் ஆளும் தரப்பினரை திருடன் என்று விமர்சிப்பதும் வழமையாகியுள்ளது.

இலங்கையின் ஊழல் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகிறது. எனவே,விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்காமல் சட்டத்தை இயற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தகவல் வழங்குநர் என குறிப்பிட்டுக் கொண்டு வியாபாரம் செய்பவர்கள் உள்ளார்கள். ஆகவே தகவல் வழங்குநர் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.உறுதியான தகவல்களுடன் ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களை தகவல் வழங்குநர்கள் முன்வைக்க வேண்டும்.

சகலரும் திருடன் என்று குறிப்பிடுவது உண்மையான திருடனின் பாதுகாப்பு கவசமாக காணப்படுகிறது.ஆகவே திருடர்களை பாதுகாக்கும் சூழலை மக்கள் ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 

ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் தரப்பினர் 11 முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக பேச்சு

July 7, 2023 6:00 am 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முஸ்லிம் தரப்பினருக்கும் இடையிலாண முக்கிய சந்திப்பொன்று புதன்கிழமை (05) நடைபெற்றது. ஆசாத் சாலியின் ஏற்பாட்டில், பாயிஸ் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பு, சுமார் 45 நிமிடங்கள் நீடித்தன.

இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் முஸ்லிம்களுக்கான தீர்வுகள் குறித்தே, இப்பேச்சில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி ரணில் இந்தியாவுக்கு சென்றுவந்த பின்னர் இவ்விவகாரம் தொடர்பில், உடனடி கவனம் எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் சமய விவகார சட்டத்தை பௌத்த அமைச்சு கபளீகரம் செய்தமை, இஸ்லாமிய பாடப்புத்தக விவகாரம், முஸ்லிம் அரச அதிகாரிகளின் உள்ளீர்ப்பு, காணி விவகாரம் உள்ளிட்ட மற்றும் பல விடயங்கள் இதில்,உரையாடப்பட்டன.

இதில் பலவற்றுக்கு சாதகமான பதில் வழங்கிய ஜனாதிபதி, மேலும் சில விடயங்களை கையாள்வதற்காக தனது செயலாளருக்கு உத்தரவுகளையும் பிறப்பித்தார். எதிர்வரும் வாரங்களில் மற்றுமொரு பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும் ஜனாதிபதி இதன்போது இணக்கம் தெரிவித்ததாக தெரியவருகிறது.   நன்றி தினகரன் 

மத ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தால் இனி ஆபத்து

தடுப்பதற்கு விரைவில் புதிதாக சட்டம் வருகிறது என்கிறார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

July 6, 2023 6:00 am 

பேச்சுச் சுதந்திரம், மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க எவருக்கும்உரிமை இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படுமென, புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் ஒடுக்கவும், மத நல்லிணக்கத்தை அச்சுறுத்தவும் யாருக்கும் உரிமை இல்லை. இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்க்கிறோம். எந்த மதத்தையும் இழிவுபடுத்தாத வகையில் புதிய சட்ட வரைபை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லையென்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க,

நமக்கே உரிய கலாசாரம் மற்றும் உணவு முறைகளில் இருந்து விலகியதன் காரணமாக நாம் நோய்வாய்ப்பட்ட தேசமாக மாறிக்கொண்டிருக்கிறோம். பணத்துக்கு முன்னுரிமையளிக்கும் சூழலில், இன, மத அடிப்படையில் மோதல்கள் ஏற்படும். போதைப்பொருள் பிரச்சினையும் தலைதூக்குகிறது. சிலர் மதச் சுதந்திரம் என்ற போர்வையில் ஏனைய மதங்களை விமர்சிக்கின்றனர். மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் ஒடுக்கவும், மத நல்லிணக்கத்தை அச்சுறுத்தவும் யாருக்கும் உரிமை

இல்லை. இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்க்கிறோம். எந்த மதத்தையும் இழிவுபடுத்தாத வகையில் அதற்கான சட்ட வரைபை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

கேள்வி: தேசிய மரபுரிமைகள் உள்ள இடங்கள் மற்றும் அதற்கு அண்மையில் வாழும் மக்களின் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் புத்தசாசன அமைச்சினால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

பதில்: தொல்பொருட்கள் விவகாரத்தில் தொல்பொருட்கள் ஆணையை மீறி யாரும் செயல்பட முடியாது. எனவே, தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்க்கிறோம். தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, தற்பொழுதுள்ள தொல்பொருட்கள் கட்டளைச் சட்டம் அமுலில் இருக்கும்.

கேள்வி: சில பிக்குமாரின் செயற்பாடுகள் தொடர்பில் அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை நோக்கினால், புத்தசாசனத்தை அவமதிப்பதாக தெரிகிறது. சாசனத்தை அவமதிக்கும் பிக்குகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்: ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடும் அல்லது சாசனத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் பிக்குமார்கள் தொடர்பில் மகாசங்கத்தினர் செயற்பட வேண்டும்.

கேள்வி: விகாரைகளில் வளர்க்கும் யானைகள் பற்றி தற்போது அதிகம் பேசப்படுகிறது. அந்த யானைகள் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் அமைச்சினால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

பதில்: வீட்டில் வளர்க்கும் பிராணிகளிடம் கருணை காட்ட வேண்டும். ஆனால் இவ்வாறான பிரச்சினை முதல் முறையாகவே எழுந்துள்ளது. முத்துராஜா யானை தொடர்பான பிரச்சினையைத் தொடர்ந்து விகாரைகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளோம். அதன்பின், யானைகளின் உடல்நிலை குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

கேள்வி: கடலுக்கடியில் உள்ள தொல்பொருள் மதிப்புள்ள இடங்களை பாதுகாக்க அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பதில்: கடற்படைத் தளபதியுடன் நடத்திய ஆலோசனையில், கடலுக்கு அடியிலுள்ள தொல்பொருள் இடங்களை அப்படியே பேணவும் அந்த இடங்களை சுற்றுலா தளமாக மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், எமது நாட்டிலிருந்து நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள பெறுமதிமிக்க தொல்லியல் பொருட்களை மீளப் பெறுவதற்கு அமைச்சு கலந்துரைடல்களை நடத்தி வருகிறது. இலங்கையில் மரபுரிமையான பொருட்களை மீள வழங்க நெதர்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மேலும், இங்கிலாந்தும் தங்களிடமுள்ள ஓலைச்சுவடிகளை வழங்க உடன்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் சில காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் இந்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்து அந்த நாடுகளில் இருந்த அதே நிலையில் பாதுகாக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால்தான் இங்கிலாந்திலிருந்து ஓலைச்சுவடிகளின் டிஜிட்டல் பிரதிகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.

நயினாதீவு நாகதீப விகாரையில் விஹாராதிபதியாக 50 வருடங்கள்

மதத் தலைவர்கள், மக்கள் புடைசூழ கௌரவிப்பு விழா

July 6, 2023 6:00 am 

யாழ். நயினாதீவு விகாரையின் விஹாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், மக்களால் கௌரவிக்கப்பட்டார்.அவர், நயினாதீவுக்கு வந்து 50 வருடங்கள் நிறைவடைந்ததையிட்டு, பிரதேச மக்கள் அவருக்கு இக் கௌரவத்தை வழங்கினர்.இந்நிகழ்வு யாழ். நயினாதீவு மணிமேகலை அரங்கில் புதன்கிழமை காலை 09 மணியளவில் நடைபெற்றது.
விகாரையில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வுகளுடன் விழா நாயகனான விஹாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரருக்கு, நாதஸ்வர, மேள தாளங்களுடனும், கண்டிய நடனத்துடனும் மண்டபத்துக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
இதன்போது வீதியில் இரு மருங்கிலும் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கூடி, விஹாரதிபதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் இந்து மற்றும் முஸ்லிம் மதகுருமார் மற்றும் பொது மக்களும் பங்கேற்றனர்.

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன் 
No comments: