எனது சிறிய பராயத்தில், எனது பாட்டியாரிடம் ( அம்மாவின் அம்மா
தையலம்மா ) கதை கேட்டு வளர்ந்திருக்கின்றேன். எனது வாழ்க்கையில் முதல் ஆதர்சமே இந்தப் பாட்டிதான்.
இவர்பற்றி ஏற்கனவே நிறைய
எழுதியிருக்கின்றேன். மீண்டும் இந்தத் தொடரில்,
கனடா பயணம் பற்றியும் அதனைத் தொடர்ந்து கத்தார்
– இலங்கை பயணங்கள் பற்றியும் எழுத நேர்ந்திருக்கின்றபோதும் எமது குடும்பத்தின் குலவிளக்கான பாட்டியை நினைத்துக்கொள்கின்றேன்.
பாட்டிதான் மகாபாரதக் கதைகளை, இராமாயணக் கதைகளை, பஞ்சதந்திரக் கதைகளை, தென்னாலிராமன்
கதைகளை முதல் முதலில் எனக்குச் சொல்லித்தந்தவர்.
ஒருநாள் இரவு நான் உறங்கும் வேளையில் பாட்டி சொன்ன கதையை இந்த அங்கத்தில் சொல்கின்றேன். இது மகா பாரதக் கதை.
திருதராஷ்டிரனுக்கு கண்
பார்வை இல்லை. தனது மூத்த மகன் துரியோதனனையும் தனது தம்பி பாண்டுவினது மூத்த மகன் தருமனையும் அழைத்து, அஸ்தினாபுரம் நகரத்தை சுற்றிவந்து பார்த்து நிலைமை
எவ்வாறிருக்கிறது..? என்று சொல்லுமாறு கேட்டாராம்.
இருவரும் ஆளுக்கொரு திசையில்
சென்று பார்த்துவிட்டு திரும்பிவந்து தகவல் சொன்னார்களாம்.
துரியோதனன், தனது அவதானத்தின்
பிரகாரம் மக்களின் மோசமான ( பொய் – சூது – திருட்டு – மோசடி – அயோக்கியத்தனம்
) பக்கங்களையே சொல்லிக்கொண்டிருந்தானாம்.
அவனது பேச்சை நிறுத்திவிட்டு, தருமன் பக்கம் திரும்பிய திருதராஷ்டிரன், “ தருமா இனி நீ சொல். நீ எதனை அவதானித்தாய்..?
“
எனக்கேட்டாராம்.
“ பெரிய தந்தையாரே… நான் பார்த்த மக்கள் அனைவருமே
எனது பார்வையில் நல்லவர்கள்தான். அவர்களிடம் சில குறைபாடுகள் இருந்தபோதிலும் மேன்மையான
இயல்புகளும் இருந்தன. அவைதான் எனது கண்களுக்குத் தென்பட்டன. எங்கள் அஸ்தினாபுரத்து
மக்கள் உங்கள் ஆட்சியில் நன்றாக இருக்கிறார்கள்.
“ என்று தருமன் சொன்னார்.
இந்தக்கதையை எனது பாட்டி எனக்குச்சொன்னபோது, எனக்கு நான்கு வயதிருக்கும். எதிர்காலத்தில் நான் என்னவாக உருவாகுவேன் என்று அப்போது எனது பாட்டிக்குத் தெரியாது.
பின்னாளில் அந்தக்கதை சொல்லும் செய்தி என்ன என்பதை நான் புரிந்துகொண்டேன்.
சமூகம் என்பது பலதரப்பட்ட
இயல்புகளையும் தம்மகத்தே கொண்டிருப்பவர்களினால்தான் உருவாகின்றது. அச்சமூகத்தில் வாழநேரும்
ஒருவன் அல்லது ஒருத்தியின் தனிப்பட்ட குண இயல்புகளுடன்தான் சமூகம் பற்றிய எமது அவதானமும்
இருக்கும்.
“ ஒரு மனிதனின் இயல்புகள்தான் அவனது
விதியைத்தீர்மானிக்கும் “ என்று வட இந்திய எழுத்தாளர் அருண்ஷோரி ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தின் மேன்மையான பக்கங்களை
மாத்திரம் பார்க்கும் இயல்பினை எனது சிறிய வயதில் எனது பாட்டி அந்த மகாபாரதக்கதையின்
மூலம் சொல்லித்தந்தமையால்தான், கடந்த அரைநூற்றாண்டுக்கும்
மேலாக எழுத்து – இலக்கியம் – ஊடகம் – சமூகப்பணிகளில் அனைவரையும் சமாளித்துக்கொண்டு என்னால் இயங்க முடிந்திருக்கிறது.
பூகோளத்தில் வட துருவம்
– தென் துருவம் இருப்பதுபோன்று கலை, இலக்கிய ஊடகத்துறையிலும் பல துருவங்கள் இருக்கின்றன.
சிவபெருமான் – நக்கீரன்
- கம்பர் – ஒட்டக்கூத்தர் பற்றியெல்லாம் தெரிந்தவர்கள் நாம். இவர்கள் எழுத்தினால் - கருத்தினால் முரண்பட்டவர்கள். வாதங்கள் புரிந்தவர்கள். சிவன் வன்முறையின் மூலம் நக்கீரனை எரித்தவர். பின்னர் தனது சக்தியால் உயிர்ப்பித்தவர்.
கனடா ஸ்காபரோவில் நான் தங்கியிருந்த
எனது உடன்பிறவாத தங்கை திருமதி செல்வமணி ராஜதுரையின் இல்லத்திற்கு முதலில் தேடி வந்து சந்தித்து உரையாடியவர்
அங்கு வதியும் இலக்கிய ஆர்வலர் மைதிலி தயாநிதி. இவர் எனது கதைத் தொகுப்பின் கதை நூல்பற்றி
மெய்நிகர் சந்திப்பொன்றிலும் முன்னர் பேசியிருக்கிறார்.
கனடாவில் தமிழ் சிறுகதை இலக்கியம் தொடர்பாகவும் விரிவாக
எழுதியிருப்பவர். எனக்கு இவரை அறிமுகப்படுத்தியவர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா. அத்துடன் கனடாவில் இரண்டு வானொலிகளிலும் எனது நேர்காணல் ஒலிபரப்பாவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தவர் ஶ்ரீரஞ்சனி. கனடா இயல் விருது விழாவுக்கு மறுநாள் ஜூன் மாதம் 05 ஆம் திகதி இவர் நோர்வேக்கு பயணமானார். தனது பயண ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் இந்த ஒழுங்குகளை ஶ்ரீரஞ்சனி செய்திருந்தார்.
சிந்தனைப்பூக்கள் பத்மநாதன்,
முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியலில் சிறப்புப்பட்டம் பெற்றவர். பின்னர்
அங்கே விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். இவரது சகோதரர் செல்வம், மல்லிகையில் எழுதியிருக்கும் இலக்கிய ஆர்வலர். இவரால்தான்
சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் அரைநூற்றாண்டுக்கு முன்னர் எனக்கு கொழும்பில் அறிமுகமானார்.
அன்று முதல் எனது நேசத்திற்குரிய இலக்கிய நண்பர்.
எனது கனடா வருகை அறிந்து, தனக்கிருந்த ஒரு சத்திர சிகிச்சைக்கான திகதியையும்
மாற்றியவர்.
தொடர்ந்தும் உளவியல் – மருத்துவம் முதலான துறைகளில் எழுதிவரும் பத்மநாதன் அவர்களை சந்திப்பதற்கு மற்றும் ஒரு தங்கை ரோகிணி பாலச்சந்திரன் என்னை அழைத்துச்சென்றார். பல விருதுகளை பெற்றவர்தான் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன்.
இவர் தனது நூல்கள் சிலவற்றை
எனக்கு வழங்கினார்.
எம்முடன் வீரகேசரியில் பணியாற்றிய
வர்ணகுலசிங்கத்தையும் அவரது மனைவி சரோவையும்
பார்ப்பதற்காக எம்முடன் பணியாற்றிய நண்பர் தவநேசனும் எங்கள் ஊர் நண்பர் ராஜாவும்
அழைத்து வந்தனர்.
வர்ணகுலசிங்கம், வீரகேசரியிலிருந்து விலகி சட்ட வரைஞர் திணைக்களம்
சென்றவர். அதன்பிறகு கனடாவுக்கு புலம்பெயர்ந்தார். இவரது மனைவி சரோ, கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்
வானொலியில் கலை, இலக்கிய விமர்சகராக அறிமுகமானவர். ஒலியலைகளின் சங்கமம் என்ற
நூலை 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டிருப்பவர்.
வீரகேசரி விநியோக – விளம்பர பிரிவு முகாமையாளராக முன்னர்
பணியாற்றிய து. சிவப்பிரகாசம் அவர்கள் சற்று உடல் நலக்குறைவோடு இருப்பதாக அறிந்து, அவரது வீடு தேடிச்சென்றேன். சில மாதங்களுக்கு முன்னர் இவர் தமது அன்புத் துணைவியாரையும் இழந்திருந்தார்.
வீரகேசரியில்
சுமார் 27 வருடங்கள் பணியாற்றிய காலத்தில்
வீரகேசரி ஊழியர் நலன்புரி சங்கத்தின்
முக்கிய பதவிகளை வகித்து சங்க
அங்கத்தவர்களின் மேம்பாட்டிற்காக உதவியவர்.
படுக்கையிலிருந்தவாறே
உரையாடினார். அவரை அந்த நிலையில் படம் எடுப்பதற்கு எழுந்து வாருங்கள்
எனக்கேட்பதற்கு என்னிடம் தைரியம் இருக்கவில்லை.
நூலகர் செல்வராஜா கடந்த ஆண்டு எழுதி வெளியிட்டிருந்த வீரகேசரியின்
பதிப்புலகம் நூலின் பிரதியை அவருக்கு வழங்கினேன்.
அவுஸ்திரேலியாவிலிருந்து
தனக்காகவே அதனை நான் எடுத்துவந்திருப்பதை அறிந்து நெகிழ்ந்துவிட்டார்.
என்னை வீரகேசரி பத்திரிகையின் ஆசிரிய பீடத்திற்கு இணைத்துக்கொண்ட ஆ. சிவநேசச் செல்வனை எம்முடன் முன்னர் பணியாற்றியவரும் தற்போது கனடாவில் சட்டத்தரணியாக இயங்குபவருமான மு. பாலச்சந்திரனுடன் சென்று அழைத்துக்கொண்டு ஒரு உணவு விடுதிக்கு வந்து நீண்ட நேரம் உரையாடினோம்.
“ வீரகேசரியில் தரப்பட்ட சம்பளம் போதியதாக இல்லை
“ என்று நான் ஆசிரியர் சிவநேசச் செல்வனிடம் மனக்குறைபட்டபோது, என்னை மித்திரன் நாளிதழில் துப்பறியும் மர்மக்கதைகள்
எழுததத் தூண்டி, ஒரு அத்தியாயத்திற்கு பதினைந்து
ரூபா கிடைக்க வழிசெய்தவர் இவர்.
அத்துடன் கொழும்பில் ஒரு
பிரபல நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்னையிலிருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்த
திரைப்பட நடிகர் சுரேஷை கலதாரி மெரிடின் விடுதிக்கு அனுப்பி, நேர்காணல் எழுதிவருமாறும் சொன்னவர்.
“ நாய் வேடம் தரித்தால் குரைக்கத்தான் வேண்டும் “ எனவும் 37
வருடங்களுக்கு முன்னர் எனக்குச்சொன்னவர். அந்தச்சம்பவங்களை நான் நினைவபடுத்தியபோது அவரும் பாலச்சந்திரனும் சிரித்தனர்.
வீரகேசரியில் சிறந்த ஆசிரிய
தலையங்கங்களை எழுதியிருக்கும் சிவநேசச்செல்வன்,
மாதொருபாகன் என்ற புனைபெயரிலும்
ஏராளமான பத்திகளை எழுதியிருக்கிறார்.
இவர் வீரகேசரியில் இணைந்த
காலத்தில்தான் யாழ்ப்பாணத்தில் ஒரு பதிப்பினை
நிருவாகம் அச்சிடுவதற்கு முயன்றது. ஒரு ஆயுத
இயக்கம் அச்சு இயந்திரத்தை பறிமுதல் செய்து கடத்திச்சென்றது.
அதனை மீட்டெடுப்பதற்காக குறிப்பிட்ட இயக்கத்தின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அன்றைய வீரகேசரி நிர்வாகத்தின் மேலிடத்தினால் சென்னைக்கு சிவநேசசச் செல்வன் அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் அந்த அச்சு இயந்திரம் மீளக்கிடைக்கவில்லை.
இந்தச் செய்திகளை நான் நினைவூட்டியபோது , “ இப்படி எத்தனையோ…? ! “ என்று சொல்லி கையை விரித்து, உதட்டைப் பிதுக்கினார்.
ஆன்மீகத்தில் நாட்டம் மிக்கவராக
மாறியிருக்கும் சிவநேசச் செல்வன், இரவில் விரைவில் உறக்கம் வருவதற்கான பயிற்சிகளையும்
எனக்குச் சொல்லித்தந்தார்.
தாய்வீடு பத்திரிகையை நீண்டகாலமாக கனடாவில் நடத்திவரும் நண்பர்
திலீப்குமார் என்னை தமது வீட்டுக்கு அழைத்துச்சென்று உபசரித்தார். இவரது வீட்டில் நான் பேசிக்கொண்டிருந்த சமயம், இங்கிலாந்திலிருந்து தொடர்புகொண்ட ஊடகவியலாளர் எஸ். கே. ராஜென் தமது you tube channel இற்காக என்னை பேட்டி கண்டார்.
நண்பர் பாலச்சந்திரன், வீரகேசரியிலும் The Island இலும் பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் டீ. பி. எஸ். ஜெயராஜிடம் அழைத்துச்சென்றார்.
சுவராசியமாக உரையாடும் இயல்பினைக்கொண்டிருந்த
ஜெயராஜும் பழைய நினைவுகளை எம்முடன் நனவிடை தோய்ந்தார். சினிமா: பார்த்ததும் கேட்டதும் புத்தகத்தை அவருக்கு வழங்கினேன். ஜெயராஜ்
பல சிங்கள திரைப்படங்களைப்பற்றியெல்லாம் முன்னர் இலங்கையிலிருந்தபோது எழுதியிருக்கிறார்.
தாயகம் இதழை முன்னர் நடத்தியவரும்
தற்போது அபத்தம் என்ற இணைய இதழை நடத்திவருபவருமான ஜோர்ஜ் குருஷ்சோவும் என்னை ஒரு உணவு
விடுதியில் சந்தித்தார்.
என்னை கனடாவுக்கு அழைத்திருந்த நண்பர் அ. முத்துலிங்கம், என்னுடன் நீண்ட நேரம்
பேசவேண்டும் என விரும்பியிருந்தார். அவரது
இல்லத்தில் ஜூன் 05 ஆம் திகதி நடந்த இராப்போசன விருந்தில் பலரும் கலந்துகொண்டமையால், பல விடயங்களை
கலந்துரையாடமுடியாது போய்விட்டதாக தெரிவித்திருந்தார்.
அவரது அழைப்பில் அவரது பிரதேசத்தில்
அமைந்திருந்த சரவணபவன் உணவு விடுதியில் சந்தித்தேன். பல விடயங்களை பேசிக்கொண்டோம்.
சாருநிவேதிதாவின் பழுப்பு
நிறப் பக்கங்கள் நூலை படிக்குமாறும் முத்துலிங்கம் பரிந்துரைத்தார். இனித்தான்
அதனை படிக்கவேண்டும்.
காரணமின்றி அவர் சொல்லியிருக்கமாட்டார்.
இரண்டு வார காலத்துள் கனடாவில்
என்னால் சந்திக்க முடிந்தவர்களை பார்க்கக்கிடைத்தது பாக்கியம்தான். அவர்கள் அனைவரிடத்திலும் ஆற்றல்கள் நிரம்பியிருக்கின்றன. அவர்கள் எமது சமூகத்திற்கு தம்மாலியன்றதை செய்து
வருகின்றனர்.
அவர்களுடன் விக்கினமற்ற நட்புறவு
எனக்கு நீடித்திருப்பதற்கு எனது சிறிய வயதில்
எனது பாட்டி சொல்லித் தந்த மகாபாரதக் கதையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நான் தருமனா..? துரியோதனனா
?
( தொடரும் )
No comments:
Post a Comment