கௌரவம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்


தமிழ் திரையுலகில் தன்னுடைய கௌரவம் எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பதை பறை சாற்றுவது போல் நடிகர் திலகம் நடித்து 1973ல் வெளிவந்த படம் கௌரவம்! படத்தின் நாயகன் தோல்வியையே விரும்பாத இறுமாப்பு கொண்ட ஒரு வக்கீல். தன்னுடைய கௌரவத்தை தக்க வைத்துக் கொள்ள எதனையும் செய்யலாம், தனது வாதத் திறமையால் கொலைகாரனுக்கும் வாதாடி விடுதலை வாங்கி தரலாம் , இரவு பகல் என்று இல்லாமல் எந்நேரமும் மது அருந்தலாம் , தன்னுடைய பணியாளர்களிடம் எகிறிப் பாயலாம் , என்பது போன்ற பல குணாம்சங்களை கொண்ட ஒரு கதா பாத்திரத்தை ஹீரோவாக படைத்தது கதாசிரியரின் மாறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்தியது.

பாரிஸ்டர் ரஜனிகாந்த் என்ற கம்பீரமான பாத்திரம் சிவாஜி கணேசனுக்கு அப்படியே பொருந்துகிறது. அவருடைய மேக் அப்பும் அதற்கு துணை நிற்கிறது. பிறகு என்ன, சிவாஜியா, ரஜனிகாந்தா என்று சொல்ல முடியாத வண்ணம் அப்படியே பத்திரத்துடன் ஒன்றி விடுகிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டும் முகபாவம் பல உணர்வினை வெளிப்படுத்துகிறது. ஆனால் படம் முழுவதும் , எல்லோரிடமும் காட்சிக்கு காட்சி இரைந்து பேசி , அதட்டுவது ஒரு படித்த பாரிஸ்டருக்கு மாண்பு தருவதாக இல்லை! அதிலும் அடக்கமான தன் அப்பாவி மனைவி மீதே அடிக்கடி சீறிப்பாய்வது வக்கிரமாக உள்ளது.

ரஜனிகாந்தின் தம்பி மகன் கண்ணனாக வருபவரும் சிவாஜிதான்.

ஆனால் அமைதியான நடிப்பை வழங்குகிறார். இரண்டு சிவாஜிகளும் வார்த்தைகளால் மோதும் போது காட்டும் முகபாவம் சூப்பர். இருவருடன் இணைந்து நடிக்கும் பண்டரிபாய் ஈடு கொடுத்து காட்சிகளை மெருகூட்டுகிறார் . இளம் வக்கீலாக வரும் சிவாஜிக்கு ஜோடி உஷாநந்தினி. வந்து போகிறார்!

படத்தில் நகைச்சுவைக்கு நாகேஷ், நீலு, வை ஜி மகேந்திரன், வி கே ராமசாமி, என்று நால்வர் அடங்கிய டிப்பார்ட்மெண்ட் ஒன்று தனியே இயங்குகிறது. சிரிக்க வைக்கும் இவர்கள் அவ்வப்போது செய்யும் வில்லத்தனமும் கவனத்துக்குரியது.

படத்தில் வில்லனாக வரும் சுந்தரராஜன் அலட்டலில்லாமல் நடிப்பை தருகிறார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த செந்தாமரைக்கு இதில் கௌரவமான போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோல் . இவர்களுடன் ராமாபிரபா , ஐ எஸ் ஆர், ஜெயக்குமாரி, வீரராகவன், பூர்ணம் விஸ்வந்தான் ஆகியோரும் நடித்தனர்.


காட்சிகளுக்கு கட்சிதமாக அமையும் வண்ணம் கண்ணதாசன் பாடல்களை தொடுத்திருந்தார். டீ எம் சௌந்தரராஜன் குரலில் ஒலித்த நீயும் நானுமா கண்ணா , பாலூட்டி வளர்த்த கிளி, மெழுகுவர்த்தி எரிகின்றது பாடல்கள் டச்சிங்காக அமைந்தன. இசை எம் எஸ் வி தான்.

படத்துக்கு சிறப்பாக அமைந்தது வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய செறிவான வசனங்கள். அதிலும் பாரிஸ்டர் பேசும் வசனங்கள் அருமை. பல காட்சிகளில் ஆங்கில வசனங்களும் இடம்பெறுகின்றன. அவற்றை சிவாஜி உச்சரித்து பேசும் அழகே அழகு!

சிவாஜியின் வியட்நாம் வீடு, ஞான ஒளி படங்களுக்கு கதை வசனம்

எழுதி அவர் குட் புக்ஸில் இடம் பிடித்த வியட்நாம் வீடு சுந்தரத்துக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார் சிவாஜி. சுந்தரம் தயங்கவே பிரபல ஒளிப்பதிவாளர் ஏ வின்சென்ட் உதவி செய்வார் என்று கூறி உற்சாகப் படுத்தினார் சிவாஜி. சிவாஜியின் ஏராளமான படங்களுக்கு கதை வசனம் எழுதிய ஆரூர்தாஸ், பாலமுருகன் ஆகியோருக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் சுந்தரத்தை தேடி வர டைரக்டராக மிளிர்ந்தார். வின்சென்டின்அருமையான ஒளிப்பதிவு படத்துக்கு மெருகூட்டியது . அத்தோடு கலை இயக்குனர் கங்காவின் அரங்க அமைப்பும் கண்ணைக் கவர்ந்தது. சிவாஜியின் வெற்றி படம் என்ற கௌரவத்தை கௌரவம் பெற்று கொண்டது.

 



No comments: