எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 40 எழுத்துலகில் அடையாளமும் அங்கீகாரமும் ! முருகபூபதி


எனது எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) தொடரில் கடந்த வாரம் வெளியான 39 ஆவது அங்கத்தை ஏராளமானவர்கள்  பார்த்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன்.

அந்த எண்ணிக்கை  அறுநூறையும் கடந்திருப்பது ஆச்சரிமானது என்று, இந்தத் தொடரை பதிவேற்றுபவர்களிடம் சொன்னபோது, தங்கள் முகநூலின் ஊடாகவும் இந்தத் தொடர் வெளியே பரவுகிறது எனச்சொன்னார்கள்.

என்னிடம் முகநூல் இல்லை !

கனடாவிலிருக்கும் மூத்த வானொலி - தொலைக்காட்சி


 ஊடகவியலாளர்,  எனது இனிய நண்பர் வி. என். மதியழகன், எனது அந்தப் பதிவை தனது முகநூலில் வெளியிட்டு  “ மூன்று  தலைமுறை ஒலிபரப்பாளர்களைக் கண்ட புகழ்பெற்ற எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்களின் நினைவலைகள்  “ என்ற குறிப்பினையும் பதிவேற்றியிருந்தாராம்.

இந்தத்  தகவலும்  சிட்னியில் வதியும் இலக்கியச்  சகோதரி வசுந்தரா பகீரதன் எனக்குச்சொல்லித்தான் தெரியும். இவர்  வீரகேசரியில் எம்மோடு பணியாற்றியவர்.

இறுதியாக சிட்னியில் நடந்த இலக்கிய சந்திப்பு நிகழ்விலும் தனது கணவருடன் வருகை தந்து சிறப்பித்தவர்.

முகநூலில் எத்தனை  “ லைக்  “ கிடைக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கும் முகநூல் எழுத்தாளர்கள் பலரை அறிவேன்.  பார்ப்பவர்கள், பார்ப்பதோடு மாத்திரம் நின்றுவிடுகிறார்களா..? அல்லது படிக்கவும் செய்கிறார்களா? என்பது தெரியவில்லை.

மதியழகனின் குறிப்பினை எனக்கு அனுப்பியிருந்த வசுந்தரா, எனக்கு மற்றும் ஒரு அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்திருந்தார்.

எம்மோடு வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய கீதா அந்தோனிப்பிள்ளை கடந்த மார்ச் மாதம் கொழும்பில் மறைந்துவிட்டார் என்பதுதான் அந்த அதிர்ச்சியான செய்தி.

கீதா 1960 ஆம் ஆண்டு பிறந்தவர். வவுனியா இறம்பைக்குளத்திலிருந்து வீரகேசரி பத்திரிகைக்கு பிரவேசித்தார்.  எனது மேசைக்கு அருகில் அமர்ந்து புன்னகை தவழ்ந்த முகத்தோடு பேசும் அவர்,  நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னரும் கடிதத் தொடர்பிலிருந்தார்.

அவருக்கு திருமணம் நடந்தது. அத்துடன் ஆசிரியர் பணியிலும் இணைந்தார்.  ஆற்றல் மிக்க கீதா. அற்பாயுளில் மறைந்துவிட்டார்.

கீதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கொண்டே இந்த 40 ஆவது அங்கத்திற்குள் பிரவேசிக்கின்றேன்.

நண்பர் வி. என். மதியழகன் குறிப்பிட்டிருக்கும்  “ புகழ் பெற்ற  “ என்ற சொற்பதம்தான் கொஞ்சம் நெருடுகிறது.

நாம் புகழுக்காக இந்தத் துறைக்குள் வந்தவர்கள் அல்ல.  எமக்குத் தெரிந்த தொழிலைச்செய்ய வந்தவர்கள்.  அண்மையில் ஒரு அரச  வானொலி  ஊடகத்தின் ஊடகவியலாளர் என்னை நேர்காணல் செய்தபோது,  கேட்ட  ஒரு கேள்வியும் நெருடலாகவே இருந்தது.

அவர்,  “ நான் அவுஸ்திரேலியாவில் அங்கம் வகித்திருக்கும் அமைப்புகளின் பெயர் பட்டியலை சொல்லிவிட்டு, இத்தனை அமைப்புகளில் இருந்திருக்கிறீர்கள், ஓடி ஓடி இலக்கியம் பேசியவாறு பொதுப்பணிகளில் ஈடுபடுகிறீர்கள்.  இருந்தும் உங்களுக்குரிய சமூக அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று என்றைக்காவது யோசித்துப் பார்த்ததுண்டா..? “  எனக்கேட்டார்.

 அதற்கு  “ எனக்கு அங்கீகாரம் இருந்தமையால்தானே  என்னை


உங்கள் வானொலி கலையகத்திற்கு அழைத்து நேர்காணல் செய்கிறீர்கள்  “ என்று நான் அவரிடம் திருப்பிக்கேட்டு அவரை சங்கடத்திற்குள்ளாக்காமல், எனது தொழில் எழுத்து. அதனை எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து செய்யவில்லை. சமூகத்தில் ஆசிரியர்கள் – மருத்துவர்கள் எவ்வளவோ சேவைகளை செய்கிறார்கள்.  அது அவர்களின் தொழில். அதுபோன்றதுதான் எமது எழுத்துப்பணியும்  “ என்றேன்.

எவரொருவர், வெறும் புகழுக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் எத்தனை  “ லைக்    கிடைக்கிறது என்பதற்காகவும் எழுத நினைக்கிறாரோ, அப்போதே அவர் தோற்றுவிட்டார் என்பதுதான் எனது கருத்து.

பாரதியாரை அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் குடும்பம் உட்பட எவரும் அங்கீகரித்து போற்றவில்லை. அவரை ஒரு   கிறுக்கன் என்று அவரது உறவினர்கள்  அடையாளப்படுத்தினர்.

அவருக்கு எவரும் விருதுகள் கொடுக்கவில்லை.  பொன்னாடை பூமாலைக்களுக்காக அவர் காத்திருக்கவில்லை. தனக்கு கிடைத்த ஒரு சால்வையைக்கூட ஒரு கைரிக்‌ஷாக்காரருக்கு கொடுத்துவிட்ட பெருந்தகை அவர்.

எழுத்தின் மூலம் வந்த சொற்ப பணத்தையும் ,  வருமானம் இல்லாமல் சிரமப்பட்ட  ஒரு மாம்பழக்காரியிடம் கொடுத்து  அனைத்து


மாம்பழங்களையும் வாங்கி நண்பர்களுக்கு பகிர்ந்தவர் அவர்.   வீட்டுக்கு வெறுங்கையுடன் சென்றார்.

பாரதியாரை இன்று முழு உலகமும் கொண்டாடுகிறது. அவர் தனக்கு எத்தனை  “ லைக்  “ கிடைக்கும் என எதிர்பார்த்து எழுதியவர் அல்ல.

பாரதி எமக்கெல்லாம் ஆதர்சம். கவிதை தனக்குத் தொழில் என்றவர். அவர் வழியை பின்பற்றி, எனக்கும்  எழுத்துத்தான் தெரிந்த தொழில் என்று சொல்லிக்கொண்டு இந்த 40 ஆவது அங்கத்திற்குள் வருகின்றேன்.

1997 ஆம் ஆண்டு இலங்கை சென்றவேளையில், மல்லிகை ஜீவா, கொழும்பு மட்டக்குளியில் அமைந்திருந்த அவரது புதல்வன் திலீபனின் ஸ்ரூடியோவுக்கு அழைத்துச்சென்றார். கவிஞர் மேமன் கவியும் உடன் வந்தார். ஜீவா, மகனிடம் சொல்லி படங்கள் எடுக்கவைத்தார்.  ஜீவாவின் சம்பந்தி  தம்பையா அண்ணரையும்  மேமன் கவியையும் என்னோடு  நிற்கவைத்து தானும் உடன் நின்று படங்கள் எடுத்துக்கொண்டார்.

தம்பையா அண்ணரின் மகளைத்தான் திலீபன் காதலித்து மணம் முடித்தார். அவர்களுக்குப்பிறந்த மகள்தான் பின்னாளில் திலீபனின் ஸ்ரூடியோக்களின் முகாமையாளராக பணியாற்றியவர்.  அந்த மகளின் அருமைக்கணவரும் கடந்த 2019 ஈஸ்டர் குண்டு தாக்குதலின்போது, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடர், இதுபோன்ற அற்பாயுள் மரணச்செய்திகளுடன்தான்  பயணிக்கிறது.  


ஜீவா, மகன் திலீபனிடம் சொல்லி என்னை சில போஸ்களில் நிற்கவைத்து படங்கள் எடுக்கச்சொன்னார். 

 “ என்ன ஜீவா… எனக்கு கலியாணம் பேசப் போகிறீர்களா..?  இத்தனை படம் எதற்கு ..?  “ என்றேன்.

 “ கட்டிட்டாப் போச்சு  “ என்று அவர் இரட்டை அர்த்தத்துடன் அந்த 1997 ஆம் ஆண்டு சொன்னார்.  அதுவும் பின்னர் 2002 இல் பலித்தது.

அந்த 1997 ஆம் ஆண்டு இலங்கை சென்று திரும்பிவந்தபின்னர், 1998 ஆம் ஆண்டு வெளிச்சம்                                      ( சிறுகதைகள் ) சந்திப்பு ( நேர்காணல்கள் ) ஆகிய நூல்களை வெளியிட்டேன்.

சென்னையில் நண்பர் செ. கணேசலிங்கனின் குமரன் பதிப்பகம் இவற்றை அச்சிட்டுத் தந்தது.

வெளிச்சம் தொகுதியை மல்லிகை ஜீவாவுக்கும் சந்திப்பு நூலை எனது அம்மாவுக்கும் சமர்ப்பணம் செய்திருந்தேன்.

மெல்பனில், நண்பர் கலாமணியின் தலைமையில் இந்த இரண்டு நூல்களும் Thornbury என்ற இடத்தில் அமைந்திருந்த ஒரு தேவாலய மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

அச்சமயம் மெல்பனிலிருந்து படித்துக்கொண்டிருந்த இலக்கியத்  தம்பி கானா. பிரபா வரவேற்புரை நிகழ்த்தினார்.

சந்திப்பு நூலில் இடம்பெற்றிருந்த  ஓவியக்கலைஞர் கே. ரி. செல்வத்துரை அய்யா, மற்றும் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் ஆகியோர் மறைந்த பின்னர்தான் அந்த நூல் வெளிவந்தது.  அதனால், அவர்கள் இருவரதும் பெரிய உருவப்படங்களை அந்த நிகழ்வில் திறந்து வைத்து,  அவர்கள் தொடர்பான நினைவேந்தல் உரையையும்  இடம்பெறச்செய்து அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தேன்.

கலாமணி , ( அமரர் ) செல்வத்துரை அய்யா பற்றியும் கொர்னேலியஸ் ( அமரர் ) அகஸ்தியர் பற்றியும் உரையாற்றினர்.

வெளிச்சம் கதைத் தொகுதி பற்றி அருண். விஜயராணியும்,  சந்திப்பு தொகுப்பு பற்றி  சண்முகம் சபேசனும் தத்தமது வாசிப்பு அனுபவங்களை சமர்ப்பித்துப்பேசினர்.

சண்முகம் சபேசன், தமிழ்த்தேசிய உணர்வாளர் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நெருக்கமானவர். அத்துடன் மெல்பன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,  ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் புனர் வாழ்வுக்கழகம்  ஆகியனவற்றில் அர்ப்பணிப்புடன் நீண்டகாலம் இயங்கியவர்.

அத்துடன், மெல்பன்  3 C R வானொலி தமிழ்க்குரல் நிகழ்ச்சியையும் நீண்டகாலமாக நடத்திக்கொண்டிருந்தார்.  சபேசனும் எனது புத்தகவெளியீட்டில் பேசுகிறார் என்பதை அறிந்துகொண்ட மெல்பன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் இணைந்திருந்த சிலரும் அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர்.

அவர்களில் திருமதி மனோ நவரத்தினம் அக்கா,  யாதவன், உதயன், சிவசம்பு மாஸ்டர், ரஜீவன் ஆகியோரின் பெயர்கள் நினைவில் தங்கியிருக்கின்றன.

எனது ஏற்புரையில் ஒரு விடயத்தை சொன்னபோது அவர்கள் முகம் சுழித்தனர்.

எனது உரை இவ்வாறு அமைந்திருந்தது:

 “ ஒரு இனத்தை அடிமைப்படுத்தி மற்றும் ஒரு இனம் சுதந்திரமாக இருக்கமுடியாது.  “ என்று நான் சொன்னவுடன், சபையில் கரகோஷம் எழுந்தது.  அதனையடுத்து,  “ இந்த வாக்கு மூலம் இயக்கங்களுக்கும் பொருந்தும்  “ எனச்சென்னேன். ஒருவர் மாத்திரம் கைதட்டினார்.

அவர் எனது நண்பர் வரதலிங்கத்தின் அண்ணன். எங்கள் ஊரில் முன்னர் ஆசிரியராக பணியாற்றியவர். தற்போது வெளிநாடொன்றில் வசிக்கின்றார்.

அன்று நான் அவ்வாறு பேசுவேன் என்று நண்பர் சண்முகம் சபேசனோ, ஜெயக்குமாரோ எதிர்ப்பார்க்கவில்லை. அதன்பின்னர் அவர்கள் நான் சம்பந்தப்பட்ட இலக்கிய நிகழ்ச்சிகளில் ஆர்வம் காண்பிக்கவில்லை.

உண்மை அவர்களைச் சுட்டிருக்கலாம். ஈழவிடுதலை இயக்கங்கள் ஒன்றையொன்று அடிமைப்படுத்த விரும்பின. அழித்தன. இறுதியில் எவற்றாலும் சுதந்திரமாக இயங்கமுடியாது போனதுதானே நிதர்சனம் !

நான் அவ்வாறு சொன்னது 1998 ஆம் ஆண்டு என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றேன்.

1999 ஆம் ஆண்டு மீண்டும் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியே புறப்பட்டேன்.  அந்தப்பயணம் ஜெர்மனி – சுவிட்சர்லாந்து – இலங்கை எனத் தொடர்ந்தது.

ஜெர்மனியில்  கார்ல்ஸ்ரூவில் வசிக்கும்  எமது தாய் மாமனாரின் மகள் தேவசேனாவின் குடும்பத்தினரை பார்த்துவிட்டு, அங்கிருந்து சுவிட்சர்லாந்து சென்றேன்.

தேவசேனா,   படைப்பாற்றல்  மிக்கவர். ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு – இலக்கிய சந்திப்பு ஒன்றுகூடல்களிலும்  இணைந்திருந்தவர்.  அத்துடன் சில ஐரோப்பிய இதழ்களிலும் எழுதியிருப்பவர். ஜெர்மனியில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றுகிறார்.

எனது தொடக்க காலச் சிறுகதைகளை செம்மைப்படுத்தி தந்தவரும் இவர்தான்.  எனது யாதுமாகி ( 28 பெண் ஆளுமைகள் பற்றிய நூல் )  நூலில் தேவாவும்  இடம்பெற்றுள்ளார்.

தேவா,  1997 ஆம் ஆண்டில் மெல்பனுக்கு வந்திருந்தபோது, பாரதி பள்ளியிலும் உரையாற்றினார். அவருக்காக எங்கள் வீட்டில் நடத்திய இலக்கிய சந்திப்பில் கலாநிதி  காசிநாதர்,                    மரபு   ‘ அரவிந்தன்,  மாவை நித்தியானந்தன், நடேசன் , அருண். விஜயராணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தேவா எனக்குச்சொன்ன ஆலோசனையின் பிரகாரம்தான் 2001 ஆம் ஆண்டு முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை மெல்பனில் ஏற்பாடு செய்தேன்.

1999 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து சென்றபோது அங்கேயிருந்த எழுத்தாளர் கல்லாறு சதீஸை மாத்திரமே என்னால் சந்திக்க முடிந்தது.

அந்த ஆண்டு  மீண்டும் இலங்கை வந்தபோது எங்கள் ஊரில் எழுத்தாளர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம் கடும் சுகவீனமுற்று அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வந்தோரை   வாழவைக்கும்   சிங்கார   நீர்கொழும்பு  என்று   நாம்  வாழ்த்தும்  எமது  ஊரை   இலக்கிய   உலகிற்கு அறிமுகப்படுத்திய    பெருமை   இவரையே    சாரும்.   

 

 இவரது முதலாவது   கவிதை   தமிழகத்தில்  கல்கி யில் வெளியானது.

 

நீர்கொழும்பு  விவேகானந்தா   வித்தியாலயத்தில்  ( இன்றைய விஜயரத்தினம்   இந்து    மத்திய   கல்லூரி)   இவர் கல்வி   கற்ற காலத்திலேயே    நாடகங்கள்    எழுதுவார்.  நடிப்பார்.   ஏனைய மாணவர்களுக்கும்   பயிற்றுவிப்பார்.

 

எமது    உறவினரான   ( அமரர் ) அ.மயில்வாகனன்,    1966   இல் அண்ணி    என்ற    சஞ்சிகையை    தொடங்கியபொழுது   கௌமாரன்  என்ற    பெயரில்    அதன்   துணை    ஆசிரியராக    இயங்கினார்.

 

அண்ணி    சில   இதழ்களுடன்    நின்றுவிட்டது.    அண்ணியில் முத்துலிங்கம்    எழுதுவதாக   இருந்த    சரித்திரநாவல்   ஒன்றும் அவரது   ஓவியத்துடனும்    அறிவிப்புடனும்   வந்தது.    அண்ணியுடன் அந்த    நாவலும்    நின்று விட்டது.

 

மல்லிகை ,வீரகேசரியில்    பல     சிறுகதைகளை    எழுதியவர். சில    கதைகள்    ஆசிரியர்களின்  தணிக்கைக்குட்பட்டது.                 

 

மல்லிகையில்  முத்துலிங்கம்  எழுதிய, அந்த  ஜன்னல்  ஏன் மூடியிருக்கிறது  என்ற  கதை   விமர்சகர்களினாலும் வாசகர்களினாலும்    சிலாகித்துப்    பேசப்பட்டது.

தமிழ்நாட்டில்    செ.யோகநாதன்   தொகுத்தளித்த    ஈழத்தவர் சிறுகதைத்    தொகுப்பிலும் நீர்கொழும்பூர்   முத்துலிங்கத்தின்   ஒரு சிறுகதை     இடம்பெற்றுள்ளது.

 

இவரதுகையில்  பேனை  மாத்திரம்   இருக்கவில்லை.   சிலம்படி  - வாள்சண்டை   முதலான   கலைகளிலும்   மிகுந்த   ஈடுபாடு கொண்டவர்.

 

நீர்கொழும்பில்    வருடாந்த     ரதோற்சவத்தின்   போது இவரதும், இவரது   குழுவினரதும்   சிலம்படி   -  வாள்சண்டை மக்களை   பெரிதும்   கவரும்.

 

இலங்கையில்   தயாரிக்கப்பட்ட   மஞ்சள்  குங்குமம்                        திரைப்படத்திலும்       நடித்திருக்கிறார்.     இந்தப் படத்திற்கும் இன்னும்    பல    சிங்களப் படங்களிற்கும்    இவர்   ஸ்டன்ட் மாஸ்டராகவும்    பணியாற்றியுள்ளார்.

பல   தமிழ் - சிங்கள   கலைஞர்கள்    சிலம்பம் - வாள்   பயிற்சிகளில்  முத்துலிங்கத்தையே    குருவாகக் கொண்டனர்.

சிறிது   காலம்   மத்திய   கிழக்கு   நாடொன்றில்   பணியாற்றச் சென்றமையால்   எழுத்துத்துறையிலிருந்து                                            ஒதுங்கியிருந்தார்.

 

மீண்டும்   தாயகம்   திரும்பிய    பின்பு   தீவிரமாக    எழுதினார்.

இவரது   கதைகள்   -   குறுநாவல்    இடம்பெற்ற   ஒரு   ஜனனத்தின் அஸ்தமனம்    என்ற  தொகுப்பு   1994    இல்  தேசிய  கலை  இலக்கிய பேரவையால்    வெளியிடப்பட்டது.    இந்நூலுக்கு    முன்னுரை வழங்கியவர்    இளங்கீரன்.

 

வீரகேசரியிலும் -  தினக்குரலிலும்  இவரது தொடர்கதைகள் வெளியாகியுள்ளன.   முத்துலிங்கத்தின்   மேலும்  பல  கதைகள் தொகுதிகளாக்கப்படவில்லை.

 

         இலங்கை    ரூபவாஹினிக்கென   ஒரு    தொலைக் காட்சி நாடகத்தையும்  இவர் எழுதி  இயக்கினார்.  காலம்  கடந்துதான் அது ஒளிபரப்பப்பட்டது.

     

1999   இறுதியில் ஜெர்மன் – சுவிஸ் பயணத்தை முடித்துக்கொண்டு,   இலங்கை   சென்றிருந்த   சமயம் - முத்துலிங்கம் சுகவீனமுற்றிருப்பதாக   அறிந்தேன்.

அவரைப்    பார்க்கும்   ஆவலில்    இருந்தபொழுது    நண்பர்கள் மல்லிகை   ஜீவாவும்    வன்னியகுலமும்   தாமும்    வருவதாகச் சொன்னார்கள்.

 

இந்த    இறுதிச் சந்திப்பும்    சுவாரஸ்யமானதுதான்.

ஜீவாவும்   வன்னியகுலமும்    நீர்கொழும்பு   வந்து என்னைச்சந்தித்தனர்.    அங்கிருந்து   ஒரு    ஓட்டோவில்   முத்துலிங்கம்   இல்லத்திற்கு   புறப்பட்டோம்.   நேரம்  பிற்பகல்  2.30           மணி.   வீட்டில்    முத்துலிங்கம்   இல்லை.     அவருடைய                மனைவி    சொன்னார்:  -                                                                                                 “ அவர்   மீண்டும்   ஆஸ்பத்திரியில்.    அங்கு போனால்    பார்க்கலாம். “

 

மீண்டும்    அதே   ஓட்டோவில்   நீர்கொழும்பு   ஆஸ்பத்திரிக்கு மூவரும்   விரைந்தோம்.

வாயில்   காப்போர்   எம்மை   உள்ளே    அனுமதிக்க                                 மறுத்தனர்.

 

நோயாளரை   பார்க்கும்   நேரம்  5  மணிக்கு  பின்புதான்.         சென்று பிறகு    வாருங்கள்.   என்றனர்.

 

 “ நாம்   தூரத்திலிருந்து   வருகிறோம். அனுமதிக்கப்பட்டிருப்பவர்    ஒரு   பிரபல   கலைஞர்.  எழுத்தாளர்.   நான்    ரூபவாஹினியில் பணியாற்றுகிறேன்.  இவர் ஒரு  சஞ்சிகை  ஆசிரியர். இவர்  ஒரு எழுத்தாளர்.  அவுஸ்திரேலியாவிலிருந்து  வந்திருக்கிறார்.  தயவு செய்து    நோயாளியை    பார்க்க    அனுமதியுங்கள்.  ஐந்து            நிமிடத்தில்   பார்த்துப் பேசிவிட்டு

  திரும்புவோம் “    என்று   வன்னியகுலம்  காவலர்களிடம் சொன்னார்.

 

எனது   கடவுச்சீட்டும்,  (  அக்காலப்பகுதி இலங்கையில் போர்க்காலம் ) அவர்களின் அடையாள அட்டைகளும் பார்வையிடப்பட்டன.

 

ரூபவாஹினி  என்றவுடன் நோயாளியும்  ஒரு   கலைஞர்                 என அறிந்தவுடன்   காவலர்கள் தணிந்த   குரலில்  பேசினார்கள்.

 

 “ உங்களை   இப்போது    உள்ளே    அனுமதிக்க    சட்டம்    இடம் தரவில்லை.    ஆனாலும்   அனுமதிக்கிறோம்.    முதலில்   இருவர் போய்    பார்த்துவிட்டு   திரும்புங்கள்.   அதன்   பின்பு                     மற்றவர்    செல்லலாம் “    என்றார்  வாயில்   காப்போர்.

 

 “ நீங்கள் இருவரும் முதலில்  போய் வாருங்கள். அதன்  பின்பு நான்    போகிறேன் “  என்று    சொல்லி   நண்பர்களை   முதலில் அனுப்பினேன்.

 

காவலர்கள் பின்பு நோயாளிக் கலைஞரைப்பற்றி    என்னிடம் விசாரித்தனர்.

முத்துலிங்கத்தின்    திறமைகளை -  சிங்களப் படங்களில்   அவர் ஸ்டன்ட்   மாஸ்டராக இயங்கியதை   சிங்களத்தில்  விபரித்தேன்.

 

எனது   பேச்சை   ஆவலுடன்   கேட்ட    அந்த    காவலர்கள், தமது தயக்கத்தையும்    வெளிப்படுத்தி,     என்னிடம்   ஒரு    உறுதிமொழி கேட்டார்கள்.

 

 “நோயாளி  ஒரு   கலைஞர்    என்கிறீர்கள்   எழுத்தாளர் -   சஞ்சிகை ஆசிரியர் -   தொலைக்காட்சி சேவையை    சேர்ந்தவர்கள்   என்று வந்திருக்கிறீர்கள்.    பின்பு   வெளியே  சென்று அந்த   நோயாளியை இந்த   மருத்துவமனை நன்றாக   பராமரிக்கவில்லை . உங்களை உள்ளே அனுமதிக்கவில்லை  என்று   ஏதும்  எழுதியும்  பேசியும்  எமது   தொழிலுக்கு  மாத்திரம்      உலை வைத்துவிடாதீர்கள். “

 

இதுவே    அவர்கள்   கேட்ட  உறுதிமொழி.

எனக்குள்    எழுந்த    சிரிப்பை   அடக்கிக் கொண்டு,                                               “ அப்படி   ஏதும் நடக்காது.    கவலைப்படாதீர்கள்     எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போது   உள்ளே   சென்ற   இரு   நண்பர்களும்   திரும்பினார்கள்.

பின்னர்   நான்   முத்துலிங்கத்தை   பார்க்கச் சென்றேன்.   எனது வரவை    அவர்    எதிர்பார்க்கவே   இல்லை.

கட்டிலிலிருந்து    சிரமப்பட்டு    எழுந்து   என்னை   அணைத்து சிரித்தார்.

விரைவில்    நீங்கள்    குணமடைவீர்கள்.     அவுஸ்திரேலியா             புறப்படுமுன்னர்   வந்து    பார்க்கிறேன் “  என்று    கூறி   விடைபெறும் போதுதான்   தனது    ஆயுள்   முடியப்போகிறது    என்றார்.

 

எனக்குக்கேட்க    மிகவும்    கஷ்டமாக    இருந்தது.    எனினும் துயரத்தை    வெளியில்   காட்டாமல், “ தைரியமாக  இருங்கள்  “ என்று   மட்டும்  சொன்னேன்.

 

நான் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பி சில நாட்களில்

   நீர்கொழும்பூர்   முத்துலிங்கம்   இறந்துவிட்டார்.    

 

முத்துலிங்கம்    ஈழத்து   பத்திரிகைளில் மாத்திரமல்லாது    ஐரோப்பாவிலிருந்து    வெளியாகும் சிற்றிதழ்களிலும்   எழுதிக் கொண்டிருந்தார்.

இறுதியாக, பிரான்ஸில்   வெளியாகிய    உயிர் நிழல்   இதழில் முக்கியமான     வினாவொன்றையும்    எழுப்பியிருந்தார்.             (உயிர்  நிழல் நவம்பர் - டிசம்பர்  1999)

 

புலம்  பெயர்  சிருஷ்டியாளர்களின் ஆளுமை   ஒரு   காலத்தின் பதிவாக   பிரதிபலிக்கின்றது.   எனினும்    ஏற்கனவே                        இங்கிருந்து சென்ற   இலக்கிய   கர்த்தாக்கள்    புலம்பெயர் இலக்கியப்பூங்காவினை    அலங்கரிக்கின்றனர்.

அவர்கட்குப்   பின்னர்?

 

இதுவே   பெரும்   கேள்விக்குறி?

 

முத்துலிங்கத்தின்   இந்த   வினாவுக்கு   பதில்                                       தரவேண்டியவர்கள் புலம்பெயர்   படைப்பாளிகள்தான்.

 

இதே   உயிர்நிழல்    இதழில்   நீங்கள்   யார்?  என்ற  கவிதையையும் அவர்   எழுதியிருக்கிறார்.    இந்தக்    கவிதையின்   மூலம் முத்துலிங்கத்தின்    இலக்கியக் கொள்கையையும்   எம்மால்    புரிந்து கொள்ள முடியும்.    இந்த   உயிர் நிழல்    இதழை    முத்துலிங்கம் பார்த்தாரா?

 

அல்லது   அதற்கு   முன்பே   அவரது    உயிர்   பிரிந்து விட்டதா?    என்பது   அவுஸ்திரேலியாவிலிருந்த     எனக்குத் தெரிய    நியாயமில்லை.

 

எனினும்    அவரது   உயிர், நிழலாக   நினைவுகளாக    எம்மைத் தொடரும். அவருக்கு இலக்கிய உலகில் அங்கீகாரம் இருந்தமையால்தான், இன்று இத்தனை வருடங்களின் பின்னரும் அவர் பற்றி எழுதுகின்றேன்.

 

ஆனால், அவர் அங்கீகாரத்தை எதிர்பார்த்து வாழவில்லை. அதனை நாம்தான் தருகின்றோம் .

 

 ( தொடரும் )

No comments: