பலாலி விமான நிலைய சேவை இவ்வருட இறுதிக்குள் உறுதி
'தாமரைக் கோபுரம்' பிரதேசம் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி
புலம்பெயர் இலங்கையருக்கான விசேட பணியகம் டிசம்பரில் திறப்பு
கொழும்பு - திருச்சி நகரங்களுக்கிடையே ஃபிட்ஸ் எயார் விமான சேவை
பிணையில் இருக்கும் தனுஷ்கவுக்கு ஆஸி. இலங்கை செல்வந்தர் உதவி
அனைவராலும் ஏற்கக்கூடிய தீர்வை வடக்கிற்கு பெற்றுத்தர நடவடிக்கை
வட மாகாண காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
பலாலி விமான நிலைய சேவை இவ்வருட இறுதிக்குள் உறுதி
- யாழ். சென்ற இராஜாங்க அமைச்சர் பிரேமலால் தெரிவிப்பு
யாழ்ப்பாணம், பலாலி விமான நிலைய சேவைகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேக்கர தெரிவித்தார்.
காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை பார்வையிட்டதோடு அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர்.
இவ்விஜயத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தியாவின் உதவியுடன் சில வேலைத் திட்டங்களை இங்கே முன்னெடுக்க உள்ளோம். மிக விரைவில் இந்த காங்கேசன் துறை துறைமுகத்தை செயற்படுத்த நடவடிக் கை எடுக்கப்படும்.
அதேபோல் பலாலி சர்வதேச விமான நிலையமும் வருமானத்தை ஈட்டக்கூடியதே. இந் நிலையமும் ஓரிரு மாதங்களில் விரைவில் செயற்படுத்தப்படும்.
அவ்வாறு இவற்றை ஆரம்பித்தால், நாட்டிலுள்ள மூவின மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியுமெனவும் அவர் தெரிவித்தார். நன்றி தினகரன்
'தாமரைக் கோபுரம்' பிரதேசம் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி
இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை கைச்சாத்து
கொழும்பு தாமரைக் கோபுரத்தை மையப்படுத்தியதாக நீர் சறுக்கு விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்கு வலயம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் kreate Design Pvt. Ltd மற்றும் Colombo lotus tower Management Pvt. Ltd ஆகிய நிறுவனங்களுக்கிடையில் நேற்று கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கையூடாக, அடுத்த 03 ஆண்டுகளுக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் இதற்காக முதலீடு செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
தாமரைக் கோபுரத்தை மையப்படுத்தி டி.ஆர். விஜேவர்தன வீதி முழுமையாக சுற்றுலாப் பயணிகளை கவரும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த பகுதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. (இன்றைய நாணயமாற்று நிலவரத்தின்படி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் 36,722 கோடி ரூபாவாக கருத முடியும்).
படம்: விமல் கருணாதிலக்க - நன்றி தினகரன்
புலம்பெயர் இலங்கையருக்கான விசேட பணியகம் டிசம்பரில் திறப்பு
வெளிநாட்டமைச்சின் கீழ் இயங்கவும் ஏற்பாடு
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் இலங்கைக்கு உதவுவதற்காக ‘வெளிநாடு வாழ் இலங்கையர் பணியகம்’ என்ற பெயரில் நிறுவனமொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பின் கீழியங்கும் இந்த பணியகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் நேரடியாக இந்த பணியகத்துடன் சம்பந்தப்பட்டு இலங்கையின் பணிகளுக்கு உதவ முடியும். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் பணிக்குழுவின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வர அரசாங்கம் புலம்பெயர் இலங்கை மக்களின் முதலீடுகளை எதிர்பார்த்துள்ளது. இதன்படி, இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களின் தடைகளை அரசாங்கம் அண்மையில் நீக்கியது. புலம்பெயர் அமைப்புகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வெளிநாடு வாழ் இலங்கையர் தொடர்பான இந்த பணியகம் திறக்கப்பட உள்ளது.
இலங்கை மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இந்த பணியகம் தொடர்பான இணைப்பு அலுவலகங்கள் திறக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. நன்றி தினகரன்
கொழும்பு - திருச்சி நகரங்களுக்கிடையே ஃபிட்ஸ் எயார் விமான சேவை
டுபாய்க்கு செல்லும் பயணிகள் நலன் கருதி
டிச. 08 ஆம் திகதி முதல் புதிதாக ஆரம்பம்
குளிர்கால அட்டவணைக்குப் பிறகு திருச்சி - இலங்கைக்கிடையே டிசம்பர் (08) முதல் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள்
தெரிவிக்கின்றன. திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமான போக்குவரத்துகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி - இலங்கைக்கிடையே தினமும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதும் திருச்சியிலிருந்து இலங்கை வழியாக டுபாய்க்குச் சென்று வரும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தினமும் ஏராளமான பயணிகள் இந்தியாவிலிருந்து டுபாய்க்குச் சென்று வருகின்றனர். ஆனால் இயக்கப்படும் இரு விமானங்களில் போதியளவு இருக்கைகள் இல்லாதுள்ளன. இதனால்,திருச்சியிலிருந்து, சென்னை வழியாகவோ அல்லது இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானங்கள் மூலமாகவோ டுபாய்க்கு சென்று வருகின்றனர். இதனை கருத்திற்கொண்டு திருச்சி - இலங்கைக்கிடையே ஃபிட்ஸ் எயார் என்ற இந்த கூடுதல் விமான சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. டுபாய் செல்லும் பயணிகள், திருச்சியிலிருந்து இலங்கை வந்து, அங்கிருந்து மாற்று விமானங்கள் மூலம் பயணிக்கலாம். அதேபோல டுபாயிலிருந்து திருச்சி செல்லும் பயணிகளும் இதே வழியில் திருச்சிக்கு செல்லலாம்.
டிசம்பர் எட்டாம் திகதி முதல் தொடங்கப்படவுள்ள இந்த புதிய விமான சேவை, வாரத்தில் வியாழன், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படவுள்ளன.
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது - நன்றி தினகரன்
பிணையில் இருக்கும் தனுஷ்கவுக்கு ஆஸி. இலங்கை செல்வந்தர் உதவி
கடுமையான நிபந்தனைகளுடன் சிட்னி நீதவான் நீதிமன்றம் ஒன்றினால் கடந்த வியாழக்கிழமை (17) பிணை வழங்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவில் உள்ள செல்வந்தரான இலங்கை பிரஜை ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பதோடு அவரது முகவரியாக அந்த வீட்டு முகவரியே அவுஸ்திரேலிய பொலிஸுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணையில் கண்டிப்பான நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டிருக்கும் குணதிலக்கவுக்கு மெல்போர்னில் இருக்கும் பெயர் வெளியிடப்படாத இலங்கை பெண் ஒருவர் இந்தப் பிணையில் முழுத் தொகையையும் செலுத்தியுள்ளார். இந்தப் பெண்ணுக்கும் குணதிலக்கவுக்கும் உள்ள தொடர்பு என்ன அல்லது அவர் வெறுமனே ரசிகரா என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.
பிணை வழங்கப்பட்ட தனுஷ்கவுக்கு சிட்னியில் வாழும் இலங்கையர்கள் பலர் தங்குமிடம் வழங்கவும் அவர் தங்கியிருக்கும் காலத்தில் ஏற்படும் செலவுகளை ஏற்கவும் முன்வந்ததாக நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. மெல்போர்னில் வசிக்கும் இலங்கையர்களும் தனுஷ்கவுக்கு வசதிகளை வழங்க முன்வந்திருந்தனர்.
இதனால் இலங்கை கிரிக்கெட் சபை தனுஷ்கவின் செலவுகளை ஏற்கவில்லை என்றபோதும் அவரது வழக்குக்கான செலவுகளை ஏற்றுள்ளது.
சிட்னி பெண் ஒருவர் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜனவரி 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக தனுஷ்க மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பிணையில் இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியேறத் தடை, தினசரி பொலிஸில் அறிவிக்க வேண்டும் என பல கண்டிப்பான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. நன்றி தினகரன்
அனைவராலும் ஏற்கக்கூடிய தீர்வை வடக்கிற்கு பெற்றுத்தர நடவடிக்கை
- நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ்வதைக் காண்பதே எதிர்பார்ப்பு
- ஜனாதிபதி செயலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகம் ஜனாதிபதியினால் திறப்பு
- சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், டக்ளஸ் உள்ளிட்டோரும் உரை
வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் 75வது சுதந்திர தின விழாவின்போதாவது இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வட மாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகத்தை இன்று (19) வவுனியாவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நீண்ட காலமாக வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்கள் பல்வேறு காரணங்களால் சிரமப்படுவதாகவும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க தாம் துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்டத்தின் அரச ஊழியர்களுக்கான வீட்டுத் திட்டத்தின் மூலம் 120 பேருக்கு வீட்டு உறுதிப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளமாக 30 பேருக்கு வீட்டு உறுதிப்பத்திரங்களும் வடக்கில் யுத்தத்தின் காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் 96 பேரில் அடையாளமாக 12 பேருக்கு நிதியுதவியும் இன்று ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளுக்கான உர விநியோகத்தை அடையாளப்படுத்தும் வகையிலும் இன்று சில விவசாயிகளுக்கு உரம் கையளிக்கப்பட்டன.
அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
இந்த அலுவலகத்தில் இருந்தபடி வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட முடியும். யாழ்பாணத்திற்கு மட்டுமே அனைத்தும் வழங்கப்படுவதாக அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். தற்போது வவுனியாவிலும் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவார். அமைச்சுக்களிலுள்ள அதிகாரிகளும் இந்த அலுவலகத்திற்கு நேரில் வந்து வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு முற்படுவார்கள் என நான் நம்புகின்றேன். அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் வடக்கு மக்களுக்குள்ள பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளை வழங்க வேண்டும். அதேபோன்றே, இலங்கை சமூகத்தில் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. மலையக மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்ற சமூக கருத்து நிலவுகிறது.
எனவே இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே சிறந்த சந்தர்ப்பம். இந்தப் பிரச்சினைகள் முறையாகத் தீர்க்கப்பட வேண்டும். இது தொடர்பில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடவும் நாட்டைப் பிளவுபடுத்தாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கவும் நான் எதிர்பார்க்கின்றேன்.
முதலில் மக்களின் சந்தேகங்கள் களையப்பட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயற்படும்போது அந்த சந்தேகம் நீங்கிவிடும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும். 83 இல் இருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அதுபோன்றே 2009 இல் இருந்தும் வெகுதூரம் வந்துவிட்டோம். எனக்கு தேசிய கீதத்தின் ஒரு வரி நினைவுக்கு வந்தது. அது, "ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ்வது" என்பதாகும். 75வது சுதந்திரதின விழாவின் போதாவது ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.
இங்கு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
2015ஆம் ஆண்டு வடக்கு மக்களுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். எனினும் ஏதோவொரு காரணத்தால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்போது, போனது போகட்டும். நாம் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த வகையில் நெகிழ்வாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வாறாயினும் நாம் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்து மிகவும் மகிழ்ச்சி. வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் இவ்வாறானதொரு அலுவலகத்தை ஸ்தாபித்தமைக்காக ஜனாதிபதிக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் நாம் நம்புகின்றோம்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,
ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயற்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு நீங்கள் பிரதமராக இருந்தபோது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக செயற்பட்டீர்கள். எனினும் அப்போது இடம்பெற்ற ஒரு சில குறைபாடுகள் காரணமாக எங்களால் அதனைப் பெற முடியவில்லை. இன்று நீங்கள் ஜனாதிபதியாகிவிட்டீர்கள். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும் அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
நகர அபிவிருத்தி வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ.சரத்சந்திர உள்ளிட்ட ஏனைய அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நன்றி தினகரன்
வட மாகாண காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
- செட்டிகுளம் காணிப்பிரச்சினைக்கு 3 மாதங்களுக்குள் தீர்வு
- காணி பிரச்சினைகளை தீர்க்க மாகாண மட்டத்தில் 8 குழுக்கள்
காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (19) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடமாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றதுடன், அந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
மாகாணத்தில் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக வடமாகாணத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
செட்டிக்குளம் பகுதியில் 1994 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் வழங்கப்படாமைக் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இங்கு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
செட்டிகுளம் பிரதேசத்தின் காணிப்பிரச்சினை தொடர்பில் மத்தியஸ்தம் செய்து 03 மாதங்களுக்குள் தீர்வுகாணுமாறு வவுனியா மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பில் நீதியமைச்சு மற்றும் காணி அமைச்சிடம் விசாரணை செய்வதாகவும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
வடமாகாண மக்களின் வீட்டுப் பிரச்சினை தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகவும், அதற்கு மேலும் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், நாடளாவிய ரீதியில் தற்போது பல வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
வவுனியா குளம் மற்றும் திருக்குளம் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்தல், உரப்பிரச்சினைக்கு தீர்வு காணல் மற்றும் விநியோக நடவடிக்கைகளை சீர்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வடமாகாணத்தில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தில் இடம்பெறும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதுர்தீன் விளக்கமளித்ததுடன், அது தொடர்பில் விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், றிசாத் பதுர்தீன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நன்றி தினகரன்
No comments:
Post a Comment