பத்திரிகை ஊடகத்தில் பணியாற்றியிருக்கும் எனக்கு வானொலி, மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வேலை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அவ்வாறு கிடைத்திருந்தாலும்,
அந்த வேலையை நான் சரியாகச் செய்திருக்கமாட்டேன்.
எனக்குத் தொழில் நுட்ப அறிவு பூஜ்யம். எனது
அப்பா லெட்சுமணன் எனக்கு அடிக்கடி சொல்லும் வசனம்: “ தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத
தொழிலை தொட்டவனும் கெட்டான் “ இது அவரது
பட்டறிவு.
எழுத்தூழியத்தில் ஈடுபடத் தொடங்கிய நான் பெற்ற பட்டறிவினால், எக்காலத்திலும் இலக்கிய இதழ்கள் நடத்தப்போவதில்லை. வானொலி – தொலைக்காட்சி ஊடகத்துறையில் வேலை செய்யப்போவதில்லை என்ற முடிவோடு இருந்தேன்.
எழுத்துத்தானே எனது தொழில்.
அத்துடன் நின்றுகொள்வோம் என்ற தீர்மானத்திற்கு எனது எழுத்துப்பணியின் தொடக்க காலத்திலேயே
வந்துவிட்டேன்.
எனினும், எனது குரல் வானொலிகளில் ஒலித்தது. எனது முகம் தொலைக்காட்சியில் தெரியவந்தது.
இலங்கை வானொலியில் எனது
குரலை முதல் முதலில் ஒலிக்கச்செய்தவர் நண்பர் – இலக்கியத் திறனாய்வாளர் ( அமரர் ) கே. எஸ். சிவகுமாரன்.
இவர் எனக்கு வி. என். மதியழகனை அறிமுகப்படுத்தியதனால்தான், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வானொலி கலையகத்தின்
படிக்கட்டில் நான் ஏறினேன்.
மதியழகன் என்னை அங்கே அழைத்து
தலையில் Head phone ஐ பொருத்தியபோது, அது எனக்கு புதிய
அனுபவமாக இருந்தது. அவர் இளைஞர்களுக்காக நடத்தி
வந்த சங்கநாதம் நிகழ்ச்சிக்காக என்னை அழைத்து பேசவைத்தார்.
எனது குரல் அன்று வானொலியில்
ஒலித்தபோது, வீட்டிலே வானொலிப்பெட்டியும் இல்லை.
பக்கத்து வீட்டுக்குச்சென்றுதான் கேட்டேன்.
எனக்கு 1976 ஆம் ஆண்டு தேசிய சாகித்திய விருது கிடைத்த செய்தியையும் அவ்வாறுதான், பக்கத்து
வீட்டு வானொலியில் கேட்டு ஊர்ஜிதப்படுத்திக்கொண்டேன்.
பின்னாளில், இலங்கை வானொலியில் நண்பர் சண்முகநாதன் வாசுதேவன், குறிப்பிட்ட சங்கநாதம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது, அவரது அழைப்பில் சென்று பேசியிருக்கின்றேன். வீரகேசரி அலுவலகத்தில் பணியாற்றத் தொடங்கிய பின்னர், வாரவெளியீட்டில் இலக்கியப்பலகணி எழுதிக்கொண்டிருந்தபோது, இலங்கை வானொலி தமிழ்ச் சேவைப்பணிப்பாளர் வி. ஏ. திருஞானசுந்தரத்தை , கே. எஸ். சிவகுமாரன் எனக்கு அறிமுகப்படுத்தினார்.
அவரது புண்ணியத்தினால், அங்கே சிறிது காலம் கலைக்கோலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். நான் தொழில் நுட்ப விடயங்களில் பூஜ்யம் என்பதனால், அங்கே இசைப்பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த அருந்ததி ஶ்ரீரங்கநாதன் அவர்களை கலைக்கோலம் நிகழ்ச்சியை பதிவுசெய்து ஒலிபரப்புவதற்கும் திருஞானசுந்தரம் ஆவனசெய்தார்.
இங்கே நான் குறிப்பிடும்
கே. எஸ். சிவகுமாரன், வி. என். மதியழகன், சண்முகநாதன் வாசுதேவன், வி, ஏ. திருஞானசுந்தரம்,
அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஆகியோரை என்னால் மறக்கவே முடியாது.
சிவகுமாரனும், திருஞானசுந்தரமும்
, சண்முகநாதன் வாசுதேவனும் அமரத்துவம் எய்திவிட்டனர்.
மதியழகன் கனடாவில் வசிக்கின்றார். அருந்ததி ஶ்ரீரங்கநாதன் அவுஸ்திரேலியா சிட்னியில்.
சண்முகநாதன் வாசுதேவனின் மரணம் எதிர்பாராத துன்பியல்
நிகழ்வு. வாழ்ந்திருக்கவேண்டியவர். தற்கொலை புரிந்துகொண்டார்.
அவர் மறைந்திருந்தாலும், அவர் சொன்ன ஒரு கருத்து இன்றளவும் எனது மனதில் நிலைத்திருக்கிறது.
“ வானொலி கலையகத்தின் ஒலிப்பதிவு கூடத்துள் ஒரு ஒலிபரப்பாளர் நுழைந்துவிட்டால்,
தனிப்பட்ட விருப்பு வெறுப்போ, காழ்ப்புணர்வோ காண்பிக்காது, நேர்மையாகவும் நடுநிலையோடும், அதே சமயம் உள்நோக்கம் எதுவுமின்றி நேர்காணல்களை நடத்தவேண்டும். அத்துடன் யாரை நேர்காணல்
செய்யப்போகின்றோமோ, அவர்பற்றி முடிந்த வரையில் தகவல் திரட்டி வைத்துக்கொண்டு கேள்விகளை
கேட்கவேண்டும். நேயர்களுக்கு பரபரப்பூட்டுவதற்காக
நேர்காணல்களை நடத்துவது ஊடக தர்மத்திற்கு இழைக்கும் துரோகம். “
வாசுதேவன், குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிறிஸ்பேர்ண் தமிழ் ஒலி வானொலி நிகழ்ச்சியை நடத்தியபோது, எனது சிறுகதைகள் சிலவற்றை தனது இனிய குரலினால் ஒலிபரப்பினார். அவர் மெல்பன் வந்த சமயம் என்னோடு தங்கியிருந்தார். 1989 ஆம் ஆண்டு மெல்பன் - பார்க்வில் பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரியில் நாம் நடத்திய கலைமகள் விழாவில் அவர் தலைமையில் கவியரங்கும் இடம்பெற்றது. அவரது ஓரங்க நாடகமும் அன்று மேடையேறியது.
பின்னாளில் அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளுக்கு நான் நேர்காணல்
வழங்கும்போதெல்லாம், நண்பர் வாசுதேவனின் சிரித்த முகம் மனக்கண்ணில் தோன்றும்.
1987 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து புறப்பட்டு வந்து பத்து ஆண்டுகளின் பின்னர் 1997 இல்அங்கே சென்றபோது, இலங்கை வானொலியிலிருந்து இரண்டு நண்பர்கள் என்னை நேர்காணலுக்கு அழைத்தனர். அவர்கள் : கந்தையா குமாரதாசன், தம்பி ஐயா தேவதாஸ்.
மீண்டும் பதினொரு ஆண்டுகளின் பின்னர் இலங்கை வானொலி
கலையகத்திற்குச் சென்றேன். யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த குமாரதாசன், அங்கிருந்த நெருக்கடியான சூழ்நிலைகளினால், கொழும்புக்கு இடம்பெயர்ந்து வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
புலம்பெயர் வாழ்க்கை – புகலிட இலக்கியம் சார்ந்த கேள்விகளையே
கேட்டு அந்த நேர்காணலை சிறப்பாக பதிவுசெய்து ஒலிபரப்பினார்.
தம்பிஐயா தேவதாஸ் கொழும்பில்
ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். எப்போதும்
என்னை “ மச்சான் “ என்று நெருக்கமாக அழைப்பவர் இவர். தாம் நடத்திய கல்வி சார்ந்த ஒரு நிகழ்ச்சிக்காக
என்னை அழைத்து நேர்கண்டு ஒலிபரப்பினார்.
அக்காலப்பகுதியில் ரூபவாகினி தொலைக்காட்சியில் தமிழ் சேவை பணிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த நண்பர் வன்னியகுலம் என்னை அழைத்து, எழுத்தாளர் திக்குவல்லை கமால் மூலம் ஒரு நேர்காணலை பதிவுசெய்து ஒளிபரப்பினார். அதுவே நான் தொலைக்காட்சியில் தோன்றிய முதல் நிகழ்ச்சி.
அதன்பின்னர் மற்றும் ஒருதடவை
இலங்கை சென்றபோது நண்பர் எழில்வேந்தன் சக்தி தொலைக்காட்சியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரும் என்னை அழைத்து நேர்கண்டார். அந்த நிகழ்ச்சி
நேரடி ஒளிபரப்பாகியது.
அது எனக்கு முதல் அனுபவம். நிகழ்ச்சியின்
இறுதியில் “ நேயர்கள்
கேள்வி கேட்பார்கள். அதற்கு நான் பதில் சொல்லவேண்டும். “ என்று எழில்வேந்தன் சொன்னார்.
அந்த கலைக்கூடத்துக்குள் என்னிடம் அவர் கேள்விகள் கேட்டு, நான்
பதில்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது, அங்கே பச்சை வெளிச்சம் ஒளிர்ந்தது. அதன் அர்த்தம், வெளியே இருந்து யாரோ கேள்வி கேட்கத் தயாராகின்றார்கள் என்பதுதான் என்றும் எழில்வேந்தன் சொன்னார்.
அந்தக் கேள்வி – பதில்
நிகழ்ச்சியும் ஆரோக்கியமாகவே தொடர்ந்தது. முக்கியமாக புகலிடத்தில் தமிழ் – தலைமுறை
இடைவெளி – கலாசார அதிர்வு சார்ந்து அவை அமைந்தன.
திடீரென ஒரு நேயர் மலையகத்திலிருந்து
தொடர்புகொண்டு கேட்ட கேள்வியினால், நண்பர் எழில்வேந்தனின் முகமும் சற்று கலவரமடைந்துவிட்டது.
அந்தக்கேள்வி இதுதான்.: “ ஐயா… நீங்கள் அவுஸ்திரேலியாவில் பஞ்சணை மெத்தையில் படுத்துறங்கி . உல்லாசமாக வாழ்ந்துகொண்டு, கிடைத்திருக்கும் விடுமுறை காலத்தில் உங்கள் தாய் நாட்டை பார்க்க வந்திருக்கிறீர்கள்…! அப்படித்தானே…? “
நான் பதட்டப்படாமல், அவருக்கு நிதானமாகவே பதில் சொன்னேன்.
“ வணக்கம் நேயரே… தற்பொழுது அவுஸ்திரேலியாவுக்கு
சுமார் 210 வருடமாகிறது. நான் அங்கே சென்ற காலத்தில் அவுஸ்திரேலியா தனது 200 ஆவது வருடத்தை கொண்டாடிக்கொண்டிருந்தது. குறிப்பிட்ட 210 வருட காலத்தில் அங்கே வாழ்ந்த மக்கள் பஞ்சணை மெத்தையில் படுத்துறங்கிக்கொண்டே
இருந்திருப்பார்களேயானால், அந்த நாடு இவ்வளவு தூரம் முன்னேறியிருக்க மாட்டாது. அங்கு
வாழும் மக்கள் கடுமையாக உழைத்துத்தான் அந்த நாட்டை வளர்த்து முன்னேற்றியிருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவில் வளரும் அப்பிள் மரங்களில் அப்பிள்கள்தான் காய்க்கின்றன.
டொலர் நோட்டுக்கள் அல்ல “ என்றேன்.
அத்தோடு அந்த நேயர் மௌனமாகிவிட்டார்.
மற்றும் ஒருதடவை இலங்கை சென்றபோது கவிஞர் அம்பியும் உடன்
வந்தார். அக்காலப்பகுதியில் ரூபவாகினியில் தமிழ்ச்சேவை பணிப்பாளராக இருந்தவர் விஸ்வநாதன். இவர் நடன நர்த்தகி வாசுகி ஜெகதீஸ்வரனின் சகோதரர். அத்துடன் கவிஞர் அம்பியின் மாணவர். கலைக்குடும்பத்தை சேர்ந்தவர். ஏற்கனவே வாசுகியை நேரில் சந்தித்து பேட்டி கண்டு வீரகேசரியில் எழுதியிருக்கின்றேன். அவரது பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவர்தான், பின்னாளில் மெல்பனுக்கு புலம் பெயர்ந்து நடன அரங்கேற்றமும் செய்த செல்வி வாசுகி இராஜரட்ணம். தற்போது இவர் திருமதி வாசுகி பிரபாகரன்.
அன்று அம்பியை அழைத்துக்கொண்டு
ரூபவாகினி கலைக்கூடத்துக்கு காலை வேளையில்
வருமாறு விஸ்வநாதன் அழைத்தார். அப்போதே அம்பி
நடப்பதற்கு சிரமப்பட்டார்.
நீர்கொழும்பிலிருந்து அதிகாலையே
புறப்பட்டு, ஒரு ஓட்டோவில் பஸ் நிலையம் வந்து,
அங்கிருந்து கொழும்புக்குச்சென்று, புறக்கோட்டையிலிருந்து
மற்றும் ஒரு ஓட்டோவில் ஏறி ரூபவாகினிக்கு உரிய நேரத்திற்குள் வந்துவிட்டோம்.
வாயிலில் எங்களை வரவேற்றவர் விஸ்வநாதன். அம்பியை நான் கைத்தாங்கலாக அழைத்து வருதைக் கண்டுவிட்ட விஸ்வநாதன் நெகிழ்ந்துவிட்டார்.
தனது ஆசிரியப் பெருந்தகையை
இவ்வாறு அழைத்து சிரமம் கொடுத்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு அவரது முகத்தில் தெரிந்தது.
எம்மிருவரையும் நேர்கண்டவர்
சற்சொரூபவதி நாதன். அந்த நிகழ்ச்சியும் நேரடி
ஒளிபரப்பு.
அங்கும் ஒரு சுவாரசியம்
நிகழ்ந்தது.
சற்சொரூபவதி வழக்கமான கேள்விகளை
கேட்டுவிட்டு, இறுதியாக, “ ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால்
ஒரு பெண்தானே இருக்கிறாள். இதுபற்றி என்ன சொல்ல
விரும்புகிறீர்கள் ? “ என்று முற்றிலும் புத்தம் புதிய ( ? ) கேள்வியை கேட்டார். நான் அம்பியின்
முகத்தையும், அவர் எனது முகத்தையும் பார்த்துக்கொண்டோம்.
அந்தக்கணத்தில் அந்தக்கேள்விக்கான பதிலுக்காக
நீர்கொழும்பிலிருந்து எனது மனைவி மாலதியும் உறவினர்களும் தொலைக்காட்சியை பார்த்தவாறு நாம் என்ன சொல்லப்போகின்றோம்..? எனக்காத்திருந்தனர்.
அம்பி சொன்னார்: “ உங்களுக்கு அன்னை திரேசாவைத் தெரியுமா..? அவரது
வெற்றிக்குப் பின்னால் எந்த ஆம்பிளை இருந்தான்..?
“
சற்சொரூபவதி அதற்குப்பின்னர்
கேள்விகளை தொடரவில்லை. நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது விஸ்வநாதன் எமக்கு தேநீர்
தருவித்து உபசரித்தார்.
நாம் பம்பலப்பிட்டி கிறீண்லண்ட்ஸ்
சைவ உணவகத்திற்கு ஒரு ஓட்டோவில் ஏறி புறப்பட்டோம்.
செல்லும் வழியில் தன்னையும்
இறக்கிவிடுமாறு சற்சொரூபவதி கேட்டுக்கொண்டார்.
அவரையும் ஏற்றிக்கொண்டு சென்றோம்.
“ அம்பியால்
இவ்வாறு பயணங்கள் மேற்கொள்வது சிரமம். எனினும் ஒரு காலத்தில் தன்னிடம் கணிதம் கற்ற
மாணவர் அழைக்கும்போது தவிர்க்க முடியவில்லை. “ என்று சொல்லிக்கொண்டு என்னுடன் புறப்பட்டு வந்தார். “ என்றேன்.
அதற்கு சற்சொரூபவதி “ மிக்க நன்றி ஐயா.. ? நீங்கள் வந்தமையால் இந்த நிகழ்ச்சியின் மூலம் இன்று எனக்கு கணிசமான சன்மானம் கிடைத்தது. “ என்றார்.
அன்று எமக்கு எந்த சன்மானமும்
இல்லை. அன்றைய எமது போக்குவரத்து செலவு ஆயிரத்தையும்
தாண்டியிருக்கும். அந்த அலைச்சல் எமக்கு கிடைத்த புத்திக்கொள்முதல் !
இலங்கைக்கு நான் செல்லும்
சந்தர்ப்பங்களில் வானொலிக்காக நண்பர் தம்பி
ஐயா தேவதாஸ் என்னை அழைக்கும்போதெல்லாம், அதன் மூலம் அவருக்கு ஏதோ சன்மானம் கிடைக்கிறதே
என்ற திருப்தி மாத்திரமே எனக்கு.
1987 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் 35 ஆண்டுகள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றேன். இலங்கை – தமிழக – புகலிட இதழ்கள், பத்திரிகைகளுக்கு
தொடர்ந்தும் எழுதிவருகின்றேன். இதுவரையில்
ஐந்து சதமேனும் சன்மானம் பெற்றதில்லை.
சன்மானம் என்று பார்த்தால்,
எனக்கு கிடைத்தது 35 ஆயிரம் இலங்கை ரூபா மாத்திரமே. 2003 ஆம் ஆண்டு எனது பறவைகள்
நாவலுக்கு தேசிய சாகித்திய விருது அன்று பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்காவிடமிருந்து
பெறும்போது, அதற்கான காசோலையும் ஒரு வெண்கலச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கிடைத்தது.
அந்த சன்மானத்தையும் அங்கே சில மாணவர்களின் கல்வித்தேவைக்கு செலவிட்டேன்.
மற்றும் ஒரு தடவை இலங்கை
சென்றபோது, ஒரு வெளிநாட்டு தொலைக்காட்சி சேவையில்
பணியாற்றிக்கொண்டிருந்த நண்பர் இளைய தம்பி தயானந்தா என்னை அழைத்து நேர்காணலை பதிவுசெய்து ஒளிபரப்பினார்.
மற்றும் ஒரு தடவை, இராஜகிரியவிலிருந்து
ஒளிபரப்பாகிய ஒரு தொலைக்காட்சி சேவை என்னை அழைத்திருந்தது.
கொழும்புக்கு நான் வரும்
நாளை கேட்டுத் தெரிந்துகொண்டு, கொட்டாஞ்சேனையில் நான் வந்திருந்த வீட்டுக்கு ஒரு வாகனத்தை
அனுப்பி அழைத்தது.
அதன் முன் ஆசனத்தில் சாரதியும்
மற்றும் ஒரு இளைஞரும் இருந்தனர். எனது பெயரைக்கேட்டு
ஏற்றிக்கொண்டனர். அது “ வெள்ளை வேன்
“ அல்ல என்ற தைரியத்தில் ஏறிச்சென்றேன்.
அந்த வாகனம் மாளிகாவத்தை
தொடர் மாடிக்குடியிருப்புக்கு அருகில் தரித்து
காத்து நின்றது. சில நிமிடங்களில் ஒரு அழகிய இளம் யுவதி காஞ்சிபுரம் சாரி அணிந்து வந்து
ஏறினார்.
நான் சம்பிரதாயத்திற்கு முகத்தில் புன்முறுவலை வரவழைத்தேன். அவரும் முகம் மலர்ந்து சிரித்தார். வாகனத்திலிருந்த
எவரும் பேசிக்கொள்ளவில்லை. நான் வாகனத்திற்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கும் காட்சிகளை
ரசித்துக்கொண்டு வந்தேன்.
அந்த யுவதி அடிக்கடி தனது சாரியின் மடிப்புகளை சரிசெய்துகொண்டிருந்தார்.
ஒரு சில மணிநேரத்தில் அந்த வாகனம் குறிப்பிட்ட
தொலைக்காட்சி நிலையத்தை வந்தடைந்தது.
என்னை ஒரு ஒப்பனை அறைக்கு அழைத்துச்சென்று முகத்தில் எதனையோ
வைத்து ஒத்தி எடுத்தார்கள். “ ஓகோ… எனது அழகிய முகத்திற்கு மேலும் மெருகூட்டுகிறார்களா..!? “ என்று
மனதிற்குள் சிரித்தேன்.
அந்த அறையை விட்டு நான்
வெளியே வந்தபோது, அதுவரையில் என்னுடன் பயணித்து வந்த அந்த அழகிய யுவதி அங்கே வந்தார். அவரது முகமும்
மெருகூட்டப்பட்டிருக்கவேண்டும்.
என்னை ஒளிப்பதிவு கூடத்திற்கு
அழைத்துச்சென்றார்கள்.
அங்கே கெமரா - லைட் கோணங்களை சரி செய்துகொண்டிருந்தார்கள். நான் ஒரு ஆசனத்தில் அமர்ந்தேன்.
அந்த அழகிய யுவதி அருகே
வந்து, ஒரு ஆசனத்தை இழுத்துவைத்துக்கொண்டு
அமர்ந்தார்.
“ சேர்… இன்று நான்தான் உங்களை பேட்டி காணப் போகின்றேன்.
அவர்கள் கெமரா – லைட் செட்டிங் செய்து முடிக்க இன்னும் கொஞ்சம் நேரம் செல்லலாம். அதுவரையில்
நீங்கள் உங்களைப் பற்றிச்சொல்லுங்கள். நான் குறிப்பெடுத்துக்கொண்டு . அதிலிருந்து கேள்விகளை
கேட்கின்றேன் “ என்றார்.
இந்த நேர்காணலுக்காக இவருக்கு
எவ்வளவு சன்மானம் கிடைக்கப்போகிறது …? என்று நான் மனதிற்குள் யோசித்தேன்.
“ வாகனத்தில் வரும்போது கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாமே..? “ எனக்கேட்டேன். அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. அவர் மீது எனக்கு அனுதாபம்தான் வந்தது.
ஒளிப்பதிவு செய்யப்பட்ட அந்த நேர்காணலை நான் பார்க்கவேயில்லை. எப்போது ஔிபரப்பானது
…? என்பதும் தெரியாது.
எனது தங்கை வீட்டில் ஒரு
காலைப்பொழுதில் குளித்துவிட்டு தலையை துவட்டிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த தொலைக்காட்சியில் ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சி
ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. ஒரு பெண் அதனை நடத்திக்கொண்டிருந்தார்.
ஒரு நேயர் தனது பெயர் டொமினிக்
என்றும். தனக்கு இன்று பிறந்த நாள் எனச்சொன்னவாறு, தன்னை வாழ்த்துபவர்களின் பெயர்களையும் சொன்னார்.
அதனைக்கேட்டுக்கொண்டிருந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளரான அந்தப்பெண் “ டொமினிக்… உங்களுக்குத் தெரியுமா…? உங்கள் பெயரில் எங்கள் நாட்டில் ஒரு பிரபல எழுத்தாளர் இருக்கிறார்…? “ என்றார்.
அந்த இளைஞரும், “ ஆமாம்
தெரியும் “ என்றார்.
உடனே அந்தப்பெண், “டொமினிக்ஜீவா என்ற எழுத்தாளர் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார்.
பல நாவல்கள் படைத்திருக்கிறார். “ என்றார்.
அந்த நிகழ்ச்சி பற்றி பின்னர்
நான் கொழும்பில் சந்தித்த மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவிடம் சொன்னேன்.
அவர் மல்லிகை காரியாலயத்தின்
முகட்டைப்பார்த்து கையை உயர்த்தி விரித்தார். ஜீவா… கவிதையும் எழுதவில்லை. நாவல்களும்
படைக்கவில்லை என்பது இலக்கிய உலகம் நன்கு அறிந்த செய்தி !
நண்பர் குகநாதனின் டான்
தொலைக்காட்சி கொழும்பிலிருந்து இயங்கிய 2010 காலத்திலும் யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கத் தொடங்கிய பின்னர்
அங்கும் எனது நேர்காணல்கள் பதிவுசெய்யப்பட்டு ஒளிபரப்பாகியிருக்கிறது.
கொழும்பில் நண்பர் சத்தார்,
டான் தொலைக்காட்சிக்காக இரண்டு அல்லது மூன்று
தடவைகளுக்கு மேல் என்னை நேர்கண்டார்.
இத்தகைய சுவாரசியமான தகவல்களுடன்தான்
புகலிடத்தில் வானொலி – தொலைக்காட்சிகளில் என்னை நேர்கண்டவர்கள் பற்றிச் சொல்ல வருகின்றேன்.
மெல்பனில் ( அமரர்கள்
) பேராசிரியர் எலியேஸர், சபேசன் சண்முகம், நித்தியகீர்த்தி, சோமா அண்ணர் சோமசுந்தரம், மற்றும் ஜோய் மகேஷ், ரவிகிருஷ்ணா, பாடும் மீன் ஶ்ரீகந்தராசா, ரமேஷ் பாலகிருஷ்ணன், , வில்லியம்
ராஜேந்திரன், நவரத்தினம் அல்லமதேவன், எட்வர்ட்
மரியதாசன், அருள்நேசதாசன், செந்தில், விக்கிரமசிங்கம், சுகிர்தகுமார் ஆகியோரும்
மெல்பன் S B S சிங்கள ஒலிபரப்பிலிருந்து தினேஷா வீரசூரியவும்
- கன்பரா சிங்கள சமூக வானொலியிலிருந்து பத்ரா சேனநாயக்காவும்,
சிட்னியிலிருந்து இன்பத்தமிழ் ஒலி பாலசிங்கம் பிரபாகரன், S B S றைசெல்,
A T B C மற்றும் தமிழ் முழக்கம் ஆகியனவற்றிலிருந்து கானா. பிரபா, செ. பாஸ்கரன், கார்த்திகா
கணேசர், ஆசி. கந்தராஜா ஆகியோரும் மற்றும் தாயகம்
வானொலியிலிருந்து எழில்வேந்தனும் . Focus Thamil வானொலிக்காக
சத்தியபாலனும்,
பிறிஸ்பேர்ண் தமிழ் ஒலிக்காக
கந்தையா குமாரதாசனும் என்னை பேட்டி கண்டுள்ளனர்.
இங்கிலாந்தில் அனஸ் இளைய
அப்துல்லா ( தீபம் – ஐ. பி. சி ) , நடா. மோகன், நவஜோதி யோகரட்ணம், எஸ்.கே. ராஜென், லண்டன் பி. பி. சி பூபாலரத்தினம் சீவகன், இளையதம்பி தயானந்தா ஆகியோரும்,
கனடாவில் கிருஷ்ணலிங்கம்,
லோகேந்திரலிங்கம் ஆகியோரும் , சிங்கப்பூரில் மீனாட்சி சபாபதியும் கடந்த காலங்களில்
என்னை பேட்டி கண்டிருக்கிறார்கள்.
கொவிட் பெருந்தொற்றுக்குப்பின்னர், சில ஊடகங்களுக்கு மெய்நிகர் ஊடாகவும் பேட்டி வழங்குவதற்கு
சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
சில வானாலி ஊடகங்கள் தன்னார்வத்தொண்டின்
அடிப்படையில் இயங்குகின்றன. அவற்றில் பணியாற்றுபவர்கள் ஆர்வத்தின் நிமித்தம் இயங்கிவருகின்றனர்.
அதே சமயம் அரச வானொலிகள்
தனது ஊடகவியலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குகின்றன.
அது மக்களின் வரிப்பணம்.
அதனை நினைவில் வைத்துக்கொண்டு,
“
வானொலி கலையகத்தின் ஒலிப்பதிவு கூடத்துள் ஒரு
ஒலிபரப்பாளர் நுழைந்துவிட்டால், தனிப்பட்ட விருப்பு வெறுப்போ, காழ்ப்புணர்வோ காண்பிக்காது, நேர்மையாகவும் நடுநிலையோடும், அதே சமயம் உள்நோக்கம் எதுவுமின்றி நேர்காணல்களை நடத்தவேண்டும். அத்துடன் யாரை நேர்காணல்
செய்யப்போகின்றோமோ, அவர்பற்றி முடிந்த வரையில் தகவல் திரட்டி வைத்துக்கொண்டு கேள்விகளை
கேட்கவேண்டும். நேயர்களுக்கு பரபரப்பூட்டுவதற்காக
நேர்காணல்களை நடத்துவது ஊடக தர்மத்திற்கு இழைக்கும் துரோகம். “ என்ற
எனது இனிய நண்பர் ( அமரர் ) சண்முகநாதன் வாசுதேவனுக்கு இந்தப் பதிவை சமர்ப்பணம் செய்தவாறு நிறைவு செய்கின்றேன்.
( தொடரும் )
No comments:
Post a Comment