உலகச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: ட்ரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு 

'சீனாவுடன் பனிப்போர் இல்லை' ஷியை சந்தித்த பைடன் உறுதி

குடியேற்றங்களை அதிகரிக்க இஸ்ரேலிய கூட்டணி திட்டம்

விமானம் வீழ்த்தப்பட்டதற்கு மூவருக்கு ஆயுள் தண்டனை

ரஷ்ய தாக்குதல்: உக்ரைனில் 10 மில்லியன் மக்கள் இருளில்

போலந்தில் விழுந்த ஏவுகணை குறித்து உக்ரைன் விசாரணை


ஜனாதிபதி தேர்தல்: ட்ரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு 

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

புளோரிடாவில் இருக்கும் ட்ரம்பின் மார்–அ–லாகோ எஸ்டேட்டில் உரையாற்றுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன், தான் போட்டியிடுவதை உறுதி செய்யும் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, “எமது நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் நடந்த இடைத்தவணை தேர்தலில் குடியரசு கட்சி பின்னடைவை சந்தித்தது தொடர்பில் அந்தக் கட்சியின் சில உறுப்பினர்கள் டிரம்ப் மீது குற்றம்சாட்டும் நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ட்ரம்பை தோற்கடித்த ஜனாதிபதி ஜோ பைடன், 2024 தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடப் போவதாக குறிப்பிட்டிருந்தார்.   நன்றி தினகரன் 





'சீனாவுடன் பனிப்போர் இல்லை' ஷியை சந்தித்த பைடன் உறுதி

சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்னை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனாவுடன் புதிய பனிப்போர் ஒன்று ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளார். சீனா தாய்வானை ஆக்கிரமிக்கும் என்று தான் நம்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் அவர் முதல் முறையாக ஜின்பின்னை நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் இடம்பெறும் ஜி20 மாநாட்டின்போதே கடந்த திங்கட்கிழமை இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜ20 மாநாட்டுக்கு ஒருநாள் முன்னதாக ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் மூன்று மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் தாய்வான் விவகாரம் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சுயாட்சி இடம்பெறும் தாய்வானுக்கு சீனா உரிமை கோரும் நிலையில் இந்த விவகாரம் சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது. இதன்போது வட கொரியா விவகாரம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பிலும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

உக்ரைனில் அணு ஆயுதம் பயன்படுத்துவதை எதிர்ப்பதாக இரு தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர். உலகளாவிய சவால்களுக்கு இரு தரப்பும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இணங்கியதோடு விரிசலுக்கு உள்ளாகி இருக்கும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 






குடியேற்றங்களை அதிகரிக்க இஸ்ரேலிய கூட்டணி திட்டம்

தேர்வு செய்யப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமருக்கும் அவரது தீவிர வலதுசாரி கூட்டணிக்கும் இடையே அடுத்து உருவாக உள்ள அரசில் மேற்கொள்வதற்கு எட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய திட்டங்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.

இதில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பல டஜன் சட்டவிரோத குடியேற்றங்களை சட்டபூர்வமாக்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளது.

இந்தத் திட்டம் கொள்கையாக ஏற்கப்பட்டால், அது பலஸ்தீனர்கள் மற்றும் வெளிநாட்டு கூட்டணிகள் உடன் மோதல் போக்கை ஏற்படுத்தக்கூடும். இந்த யூதக் குடியேற்றங்களை சர்வதேச சமூகம் சட்டவிரோதம் என கருதுவதோடு, வெளிப்புற யூதக் குடியேற்றங்கள் இஸ்ரேலிய சட்டத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது. பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பென்ஜமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கூட்டணி உடன்படிக்கை முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்னும் கைச்சாத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உடன்படிக்கையை செயற்படுத்துவதை தடுக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலஸ்தீன வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.    நன்றி தினகரன் 





விமானம் வீழ்த்தப்பட்டதற்கு மூவருக்கு ஆயுள் தண்டனை

மலேசியாவின் எம்.எச்17 விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நெதர்லாந்து நீதிபதிகள், மூன்று பேரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

2014ஆம் ஆண்டில் அந்த விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த விமானச் சிப்பந்திகள் உட்பட 298 பேரும் கொல்லப்பட்டனர். இவர்களில் 80 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இரண்டு ரஷ்யர்கள், ஓர் உக்ரைனியர் ஆகியோருக்கு நெதர்லாந்து நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதித்தனர். குற்றம்சாட்டப்பட்ட மூன்றாவது ரஷ்யர் விடுவிக்கப்பட்டார்.

அந்த மூவரும் சம்பவத்தில் நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவர்கள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணையை உக்ரைனுக்குள் கொண்டுசெல்ல உதவினர்.

அதன் காரணத்தால் அவர்களுக்குக் கடுமையான தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் தற்போது தலைமறைவாய் உள்ளனர்.

அவர்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை உக்ரைன் வரவேற்றுள்ளது. ரஷ்யா அந்தத் தீர்ப்பைக் கடுமையாகச் சாடியது. தனது குடிமக்களை ஒப்படைக்க முடியாது என்று ரஷ்யா கூறியது.   நன்றி தினகரன் 





ரஷ்ய தாக்குதல்: உக்ரைனில் 10 மில்லியன் மக்கள் இருளில்

குளிர்காலம் நெருங்கும் நிலையில் உக்ரைன் மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்திய சரமாரித் தாக்குதலில் அங்கு 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் எங்கும் தொடர்ச்சியாக மின் மற்றும் நீர் விநியோகம் தடைப்பட்டு வருகின்றபோதும், போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்புத் தெரிவிப்பது பற்றி ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

முதல் பனிப்பொழிவு ஆரம்பமாகும் நிலையிலேயே ரஷ்யாவின் அண்மைய சரமாரி ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. கடினமான காலத்தை எதிர்நோக்கி இருப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. “தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் மின்சாரம் இன்றி உள்ளனர்” என்று செலன்ஸ்கி வியாழக்கிழமை தெரிவித்தார். உக்ரைனில் வழக்கமான நீண்ட குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் மில்லியன் கணக்கானோர் தொடர்ச்சியான மின் துண்டிப்பை எதிர்கொண்டிருப்பது மோசமான மனிதாபிமான நெருக்கடியை அதிகரிக்கும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.    நன்றி தினகரன் 





போலந்தில் விழுந்த ஏவுகணை குறித்து உக்ரைன் விசாரணை

போலந்தைத் தாக்கிய ஏவுகணை குறித்து புலன்விசாரணை நடத்த உக்ரைனிய நிபுணர்கள் சென்றுள்ளனர்.

போலந்து, நேட்டோ கூட்டணி, மற்ற மேற்கத்திய நாடுகள் ஆகியவை அந்த ஏவுகணை தற்செயலாக உக்ரைனில் இருந்து பாய்ந்ததாக நம்புகின்றன.

ஆனால் உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி அதனை மறுக்கிறார். அது ரஷ்யாவில் இருந்து பாய்ச்சப்பட்டதாக அவர் கூறுகிறார். எனினும் நூறு வீதம் உறுதியாகச் சொல்ல முடியாது என்று அவர் தற்போது தமது நிலையைச் சற்று மாற்றிக்கொண்டார்.

போலந்து ஜனாதிபதி ஆன்றே டூடா தமது நாட்டின் புலனாய்வு முடிவை உக்ரைனிடம் காட்டலாம் ஆனால் சர்வதேச சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று கூறினார். ஏவுகணை யாரிடம் இருந்து பாய்ந்தது என்பதில் அமெரிக்கா, போலந்து, உக்ரைன் என்று தரப்புக்கொரு கருத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே உக்ரைனில் பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எரிசக்தி வசதி இல்லாமல் குளிர்காலத்தைச் சந்திக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.   நன்றி தினகரன் 









No comments: