பொங்கல் வாழ்த்து - சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

.

மாதவனை வணங்கிய 
மார்கழி முடிந்ததும் 
ஆதவனை வணங்கிட 
தைப் பொங்கல் வருகுது .

போகட்டும் துன்பமென 
போகியோடு துவங்குது 
பொங்கட்டும் இன்பமென 
பொங்கல் தொடருது .
உழவுக்கு உதவி செய்யும் 
மாட்டுக்கு நன்றி சொல்ல 
மாட்டுப்பொங்கல்
மறுநாள்  வருகுது .
உறவுகளைப் புதுப்பித்து 
உற்சாகம் கண்டிடவே 
காணும் பொங்கல் 
மூன்றாம்நாள்  வருகுது ..

உணவுத்தரும் தொழிலுக்கும் 
உணர்வில் கலந்த தமிழுக்கும்
ஒருசேர விழா எடுக்கும் 
உயரியவிழா பொங்கலன்றோ .

வியர்வை சிந்தி உழைக்கும் 
விவசாயி பிழைத்திடவும்  
விவசாயம் தழைத்திடவும்
விலை நன்கு கிடைத்திடவும் 
வேண்டிடுவோம் இந்நாளில் .

தமிழர் திருநாளாய்  -இந்தத் 
தரணி போற்றும் நன்னாளில் 
தமிழன்னை புகழ் பாடி 
தமிழினத்தை உயர்த்திடுவோம்.

திருவள்ளுவர் தினத்தில் 
திருக்குறளை முற்றோதி 
குறள் வழி வாழ்ந்து  இந்தக் 
குவலயத்தில் உயர்ந்திடுவோம் .    


உழவன் வாழ்க , உயிரினங்கள் வாழ்க ,வாழ்க 
தமிழ் வாழ்க , தமிழினம் வாழ்க .,வாழ்க 
வள்ளுவம் வாழ்க ,இவ்வையகம் வாழ்க, வாழ்க .
பொங்கலோ பொங்கலென பொங்குக இன்பமெங்கும் . 

அன்புடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்  

No comments: