Counting & Cracking - போர் தீண்டிய ஈழத்துச் சமூகத்தின் குரல் - கானா பிரபா

.


“நான் 1992 ஆம் ஆண்டில் பிறந்தவள், நான் பிறந்த நாள் தொட்டு தமிழர் என்றாலே புலிகள் அவர்கள் நமக்கு எதிரிகள் என்றே ஊட்டி வளர்க்கப்பட்டேன். ஆனால் இந்த நாடகத்தின் மேடைப் பிரதியைப் படித்ததும் என்னுள் இருந்த கருத்துருவாக்கம் மாறி விட்டது. வீணானதொரு அரசியல் கொள்கையால் இவ்வளவு அழிவுகளும், அனர்த்தங்களும் நிகழ்த்தப்பட்டுவிட்டனவே என்ற கவலை எழுகிறது, எனக்குப் பிறக்கப் போகும் மகனுக்கோ, மகளுக்கோ நாம் ஒரு சிங்களவர் என்பதை விட இலங்கையர் என்ற பொதுமை நோக்கிலேயே வளர்ப்பேன்”
Count & Cracking நாடகம் முடிந்து பார்வையாளர் கேள்வி நேரத்தில் மேற் கண்டதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உடைந்து அழுது விட்டார் இலங்கையில் இருந்து இந்த நாடகத்தில் பங்கேற்ற நடிகை நிபுணி ஷாரதா என்ற பெண்.
இந்தப் போர் நமக்கான எத்தனை வாய்ப்புகளை இழக்க வைத்து விட்டது என்று நடி கம்மல்லவீர என்ற மற்றோர் சிங்கள நாடகர் ஆதங்கப்பட்டார்.இன்று புலம் பெயர் வாழ்வியலில் சந்திக்கும் முக்கிய சவாலான தலைமுறை இடைவெளி என்ற இரண்டாம் தலைமுறைக்கும், அவர்களைப் பெற்றோருக்கும் இடையிலான முரண்பட்ட கலாசாரப் போக்கோடு தொடங்குகிறது இந்த நாடகம். ஒற்றைத் தாயாக 1983 இனக் கலவரத்தில் இருந்து தப்பி சிட்னிக்கு வரும் ராதாவுக்கும், அவள் மகனுக்குமான முரண்பாடுகள் வழியே காலம் பின்னோக்கிப் போகிறது. இலங்கையில் நிலவும் இனச் சிக்கலில் ஆதார வேர் 1956 ஆம் ஆண்டில் S.W.R.D பண்டாரநாயக்காவால் கொண்டு வரப்பட்ட “தனிச் சிங்களச் சட்டம்” என்ற ஒரு மொழிக் கொள்கையே என்று மையப்படுத்தி அதனைத் தொடர்ந்து சிங்கள, தமிழ் இனங்களுகிடையிலான விரிசல் எப்படியொரு கலாசார அதிர்வை ஒரு குடும்ப மட்டத்தில் இருந்து சமூகம் தழுவிய பிரச்சனையாகக் கொழுந்து விட்டெரிகிறது என்ற வரலாற்றுப் பார்வையாகவே இந்த அரங்காடல் பயணிக்கிறது.
பத்து வருடங்களுக்கு முன்னர் நான் என்னுடைய ஆதார வேரைத் தேட முனைந்தேன் அதன் விளைவு தான் இந்த “Counting & Cracking” என்ற நாடகம் என்கிறார் இந்த நாடகத்தை எழுதிய எஸ்.சக்திதரன்.
நாடகம் முடிந்த பின்னர் பார்வையாளர் கேள்வி நேரத்தில் தான் தான் அறிய முடிந்தது இவர் கணிதத்தில் துறை போன பெருங்கல்வியாளர், அரசியல்வாதி அடங்காத் தமிழன் சி.சுந்தரலிங்கத்தின் பேரன் என்று. இந்த நாடகத்தின் கதைப்புலமும் சி.சுந்தரலிங்கத்தின் அரசியல் வாழ்வோட்டத்தோடு பின்னப்பட்டே எழுதப்பட்டிருக்கின்றது.
1956, 1977, 1983 மற்றும் 2004 ஆகிய காலப்பகுதிகளை வைத்து மூன்று தலைமுறைத் தமிழரின் வாழ்வியலும் அவர்கள் சந்திக்கும் அரசியல் நெருக்கடிகளையும் காட்டியிருந்தாலும் இலங்கையில் வாழும் சக இனங்கள் இரண்டுமே இந்த இனப் பிரச்சனையால் எவ்விதம் அல்லற்படுகின்றன என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றது. இங்கே ஒரு சமாந்திரமான நிலைப்பாட்டில் போக வேண்டியிருப்பதால் தமிழர் தரப்பின் மீதான விமர்சனங்கள் “புலிகள்” என்ற ஒற்றை இயக்கம் மீதே எழுப்பப்படுவதும், காட்சிகளில் நடுநிலைத் தன்மையைப் பேண ஒரு மேம்பட்ட விமர்சனமாக, உரையாடல் வழியே கடந்து விடுவதும் இந்த நாடகத்தைப் பார்க்கும் போது ஒரு உறுத்தல் எழுந்தது. ஆனால் இது அதற்காக மட்டுமே புறந்தள்ள வேண்டிய படைப்பு அன்று.
இனப் பிரச்சனையின் நாற்பதாண்டுப் பரிமாணத்தை, அதன் சமூக விளைவை ஒரு மூன்று மணி நேர அரங்காற்றுகையில் அடக்குவது மிகவும் சவால் நிறைந்ததொரு காரியம். ஆனால் தொடக்கப் புள்ளியில் இருந்து முடிவு வரை சுவாரஸ்யம் கெடாது கொண்டு போன திறனுக்குக் கதாசிரியரியரும், இயக்குநரும் சரி பாதி அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள். அதுவும் புலம் பெயர் சூழலில் வாழும் இரண்டாம் தலைமுறையில் இருந்து சக்திதரனின் இந்தப் பரந்து பட்ட பார்வை நேர்த்தியான எழுத்தாக உருவடங்கியிருப்பதும் அதனை Eamon Flack உள்வாங்கிச் சிதையாமல் இயக்கியிருப்பதும் இவர்களின் உழைப்பையே காட்டுகின்றது.
ஷோபா சக்தி என்ற எழுத்தாளர் இன்று சினிமாவிலும் அரங்காற்றலிலும் ஒரு முக்கியமான நடிகராக உருவெடுத்திருக்கிறார். வெலிகடை சிறைச்சாலையில் அடிவாங்கிப் பயந்து சாகும் போதும், பதை பதைப்போடு தன் மனைவியைத் தேடும் கணங்களிலும் ஒரு மகா நடிகனாக மாறி விட்டார்.
இந்த நாடகத்தில் ஒரு புதுமை என்னவெனில் ஷோபா சக்தி மற்றும் காந்தி மக்கின்ரயர் ஆகியோரைத் தவிர ஈழப் பிரச்சனையை நேரடியாக அனுபவித்தவர்கள் யாருமிலர். ஒவ்வொருவரும் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு கலாசாரப் பின்னணியில் இருப்பவர்கள். ஆனால் ஒரு துளி தானும் வேறுபாடில்லாமல் குறித்த பாத்திரமாகவே இயங்கியதை ஆச்சரியத்தோடு அனுபவித்தேன். தமிழ், சிங்கள் உரையாடல்களுக்கு அசரீரியாக ஆங்கிலக் குரல் ஒலித்தாலும், குறித்த பாத்திரங்கள் தமிழில் பேசும் போது உச்சரிப்புத் தளை தட்டவில்லை அவ்வளவுக்கு நேர்த்தி.
ராதா என்ற முக்கிய பாத்திரத்தில் அம்மாவாக நடித்த Nadie Kammallaweera இலங்கையின் மேடை நாடகக் கலைஞர், தமிழ் அரசியல்வாதி (அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின் நகல்) பாத்திரத்தில் நடித்த Prakash Belawadi பெங்களூர நாடகர். தன்னுடைய மகளின் திருமண ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஒவ்வொரு நாட்டு நடிகர்கள்களையும் தேடித் தேடி நடிக்க ஒன்று கூட்டியதே பிரமிப்பைத் தருகிறது என்று பார்வையாளர் தரப்பில் இருந்து கேள்வி நேரத்தில் ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் சென்று நடிகர்களைத் திரட்டியதே ஒரு போராட்டம் என்று கதாசிரியரும், இயக்குநரும் குறிப்பிட்டார்கள். இந்த முற் தயாரிப்பு வேலைகளுக்காக ஐந்து வருடங்கள் வரை செலவாகியதாம்.

“அங்கு நிகழ்ந்த போரைக் காட்டுவதை விட இந்தப் போர் எவ்வளவு தூரம் அந்தச் சமூகத்தைச் சின்னாபின்னமாக்கியிருக்கிறது என்பதைக் காட்டுவதை முக்கியத்துவப்படுத்தியே இதை எழுதினேன்” என்று கதாசிரியர் நியாயப்படுத்தியதால்
சித்திரவதைகள், கைதுகள், காணாமல் போதல்கள், ஊடகர் மீதான அச்சுறுத்தல்கள் போன்றவற்றைத் தொட்டுக் கொண்டு வந்து கொண்டே அவுஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் தப்பி வரும் சம காலச் சிக்கலையும் காட்டுகிறார்.
பிரான்ஸில் இருந்து அண்ணன் ஷோபா சக்தியின் அழைப்பு வரும் வரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை சிட்னியின் புற நகர்ப்பகுதிகள் வரை Sydney Festival ஐ முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த Counting & Cracking என்ற அரங்காற்றுகை நிகழ்வில் அவரும் நடிக்கிறார் என்று.

ஈழத்து இனப்பிரச்சனையை மையப்படுத்திய இந்த அரங்காற்றுகை ஜனவரி 1 தொடங்கி பெப்ரவரி 2 வரை தொடர்ந்து 20 நாள் காட்சிகள். அதில் வியாழன் & சனி இரு காட்சிகள் எல்லாமே அரங்கு நிறைந்த காட்சிகளாக நுழைவுச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன என்று இதுவரை ஆஸி மண் இப்படியொரு எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் கொடுத்திராத ஆதரவு.
“எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு” என்று ஏதோ இலங்கை அரசாங்கத்தின் அரச விளம்பரம் போல ஒரு காய்ந்த தலைப்பாக இருக்கிறதே என்று உள்ளூரத் தயக்கம் (ஆனால் இந்தத் தலைப்பு அடிக்கடி தன் தாத்தா சுந்தரலிங்கம் சொல்லும் கணித சமன்பாட்டு முறைமை என்று கேள்வி நேரத்தில் விளக்கம் கொடுத்தார் கதாசிரியர்)
இருந்தாலும் இளையராஜாவுக்காகப் படம் பார்ப்பது போல அண்ணன் ஷோபா சக்தியின் நடிப்பைப் பார்த்து விட்டு வருவோமென்று கிளம்பினேன்.
ஞாயிற்றுக் கிழமை பகல் காட்சி ஒரு மணிக்கு. நானோ காலை பதினோரு மணிக்கே அரங்கம் திறக்க முன் கால் கடுக்க நின்று காத்திருப்போர் பட்டியலில் என் பெயரை இரண்டாவதாகப் போட்டு விட்டு அங்கேயே அலைந்தேன். இந்த நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொருவராக வரத் தொடங்க, ஷோபா சக்தியும் வந்தார். கை காட்டினேன். அவரோ யாரோ ஒருவர் என்று நினைத்து ஆங்கிலத்தில் கொட்டத் தொடங்க


“அண்ணை அண்ணை நான் கானா பிரபா” என்று அடக்கினேன்.
“அட நாடகம் கிடக்கட்டும் இங்கால வாரும் கதைப்பம்” என்றவரோடு கொஞ்ச நேரம் பேச்சுக் கச்சேரி.
கூட்டம் நிரம்பி விட்டது திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளைக்காரர்கள் தான். ஒருவாறு எனக்கு அரங்கத்தின் முதல் வட்டத்துக்குள் ஒரு இருக்கை கிட்டி விட்டது. இந்த அரங்காற்றுகையின் திரைக்கதைப் பிரதி ஒன்றையும் வாங்கிக் கொண்டு நுழைந்தேன். இடியப்பக் கொத்தும், ஆட்டிறச்சிக் கறியுமாக ஒரு சிறு உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தார்கள்.
அரங்கினுள் வந்து உட்கார்ந்தால் ஏதோ அந்தக் கதைச் சூழலுக்குள் ஒருவராக இருப்பது போல ஒரு நெருக்கமான உணர்வு எழுந்தது. Sydney Town Hall மண்டபமே முற்றிலும் மாற்றப்பட்டு சீமெந்து அடுக்கோடு கூடிய வீடும், படலையும், சூழலுமாக மாறியிருந்தது. சிட்னியின் Pendle Hill எனும் தமிழர் செறிவாக வாழும் ஒரு வீட்டுக்கும், கடற்கரையோடொட்டிய Coogee என்ற நகரப் பகுதிக்கும், இலங்கையில் வெலிகடை சிறைச்சாலை, கொழும்பு மிலாகிரிய அவெனியூ என்று ஒவ்வொரு காட்சிகளுக்குமாக அந்தச் சூழல் படபடவென்று மாறி எங்களை அந்தக் காட்சிச் சூழலுக்குள் உள்ளிளுத்தது புதுமையானதொரு அனுபவம்.


Belvoir தியேட்டர்காரர்களின் இந்த அரங்காற்றுகையின் நேர்த்தி இங்கே தான் தொடங்குகிறது.
ஒரே நடிகரே ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களில் வெவ்வேறு இடத்தில், காலச் சூழலில் நடித்தல்,
அரங்க அமைப்பின் மாற்றங்களை அவர்களே கவனித்தல், தமிழ், சிங்களம் என்று பாத்திரங்கள் பேசும் மூல மொழியை அசரீரியாக மொழி பெயர்த்துப் பார்வையாளனுக்கு ஆங்கிலப் பொது மொழியில் கொடுத்தல் என்ற மேலதிக பொறுப்பையும்
இந்த அரங்காடலில் பங்கேற்ற நடிகர்களே பொறுப்பேற்க வேண்டும். அரங்கம் தவிர்ந்த
பார்வையாளர் பகுதியின் மூன்று மூலைகளுக்குள்ளும் இந்த நடிகர்கள் கலந்தும் பிரிந்தும் நடித்துக் கொண்டிருந்தார்கள்.
அது தவிர, ஒவ்வொரு காட்சி நடக்கும் களத்தின் புறச் சூழல், சூழவுள்ள பொருட்கள் என்று அந்தந்தக் காலகட்டத்துக்கேயான நேர்த்தியையும் கொண்டு வந்திருந்தார்கள். உதாரணத்துக்கு 1956 ஆம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரும் காட்சியில் அங்கே தமிழ் அரசியல்வாதியின் கையில் 1956 ஆண்டு டெய்லி நியூஸ் பத்திரிகை, 2004 ஆண்டு களத்தில் அந்தப் பழைய பென்னம் பெரிய மொனிட்டருடன் கூட கொம்பியூட்டர், பழைய நோக்கியா போன், அது போலவே எண்பதுகளில் அந்த பழைய வயர் கொண்ட தொலைபேசி, சாய்வு நாற்காலி இப்படி ஒரு படத்தில் பல்வேறு விதமான காலகட்டத்தின் பாவனையில் இருந்த பொருள்கள் வரை ஒரு நேர்த்தி இருந்தது.
சினிமா என்ற ஊடகம் அரங்கக் கலையை அழித்து விட்டது என்பதை மறுதலித்து நிற்கும் உன்னதமான படைப்பாக Counting & Cracking ஐப் போற்றிப் பாராட்டலாம். உங்கள் ஊருக்கு வரும் போது முன் வரிசையில் இருந்து பாருங்கள் இந்த நாடக மாந்தர்களில் ஒருவராக நீங்களும் பிறப்பெடுப்பீர்கள்.
எங்களது நாடகப் படைப்புகளில் பொதுவாகவே ஒன்றில் மித மிஞ்சிய உணர்ச்சிப் பிழியல் இருக்கும் அல்லது அசட்டுத் தனமான நகைச்சுவை இருக்கும். ஆனால் இந்தப் படைப்பு “இயல்பாக இரு” என்று சொல்லுமாற் போலவே பாத்திரங்கள் இயங்குகின்றன.
என்னதான் போர்ச் சூழலை அனுபவித்திருந்தாலும் அந்த 83 கலவரச் சூழலை மேடையில் நிறுத்திப் பதைபதைப்போடு அவர்கள் தவிக்கும் காட்சியில் நெகிழ்ந்து கண்ணீர் விடவும் செய்தேன். அவ்வளவுக்கு வெகு தத்ரூபமாக அந்த இக்கட்டைக் காட்டியது.
என்னைச் சூழவும் அமர்ந்திருந்த வெள்ளைக்காரர்கள் உணர்வோட்டம் மிகுந்த காட்சிகளில் உருகியும், நகைச்சுவை தோன்றும் இடங்களில்

மனம் விட்டுச் சிரித்தும் மகிழ்ந்ததைக் கடைக்கண்ணால் பார்த்தேன். மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு இடைவேளைகள் விடப்பட்ட போதெல்லாம் எழுந்து நின்று ஒவ்வொரு காட்சி முடிவுக்கும் கைதட்டி அங்கீகரித்தார்கள். அரங்காற்றுகை முடிவில் அதுவே பரவசமான வார்த்தைகளாக வெளிப்பட்டது.
அரங்கில் அமர்ந்திருந்த 99.9 வீதமான வெள்ளையர்களில் ஒருவர் எழுந்து “இப்போது தமிழர் அங்கே எப்படியிருக்கிறார்கள்?” என்ற ஆதங்கத்தைக் கேள்வியாக முன் வைத்ததில் இருந்தே எவ்வளவு தூரம் அவர்கள் அனுபவித்துப் பார்த்திருக்கிறார்கள் என்று புரிந்தது.
எனக்குப் பக்கத்தில் இருந்த எண்பதைத் தொடும் ஒரு
ஐரிஷ் நாட்டு மூதாட்டி என்னிடம் பேச்சுக் கொடுத்தார். நான் ஈழத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்றதும் ஆர்வத்தோடு தன் மூதாதயர் இலங்கை மீது கொண்ட நேசத்தைப் பற்றிப் புழுகத்தோடு கண்கள் விரியப் பேசியவர் முடிவில் என்னிடம் ஆர்வமாக என் குழந்தையைப் பற்றி விசாரித்து விட்டு
“என் பிள்ளைகள் எல்லாம் தம் தாய் மொழியை
மறந்து விட்டார்கள், ஆனால் உன் பிள்ளையை அப்படி விட்டு விடாதே எங்கு போனாலும் நம்முடைய மொழியை விடக்கூடாதல்லவா?” என்றார்.
வீடு திரும்பி வரும் வரை அந்த ஐரிஷ் மூதாட்டியே மனதில் ஒடிக் கொண்டு வந்தார்.
கானா பிரபா
No comments: