பூக்களைத் தொலைத்த பூந்தொட்டி - தி.வினோதினி

.

ஏய்யா நீ சாவுறதுக்கு என்ர பஸ்தான் உனக்கு கிடைச்சுதா? கறுமம் கறுமம் பாத்துப்போக மாட்டியா? 
வயசான காலத்தில வீட்டில கிடந்து தொலைய வேண்டியதுதானே? யாரு கேட்டா நீங்கள் எல்லாம் சைக்கிள் ஓட்டேல்ல எண்டு.. வெளிக்கிட்டு வந்திற்றுதுகள் மற்றவன்ர உயிர வாங்குறதுக்கெண்டு. கறுமம் கறுமம்… 
மிருகங்கள் நடமாடுகின்ற பொழுது அவற்றினைக் கலைப்பதற்காக காட்டுப்புற வீதிகளில் அடிக்கப்படுகின்ற ஒலியெழுப்பியை செவிப்பறை கிழிந்து இரத்தம் கசியும் அளவிற்கு அடித்து தான் ஓட்டி வந்துகொண்டிருந்த பேருந்தினை பகீரதப்பிரயத்தனம் செய்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நிப்பாட்டிய பேருந்தின் சாரதி மேற்சொன்ன வார்த்தைகளை ஆத்திரத்தில் மடைதிறந்த வெள்ளம் போல பொரிந்து கொட்டியபடி 
யோவ் தள்ளிப்போய்யா… நீ பாட்டுக்கு எங்கட பஸ்ஸில மோதீற்று மேல போயிருவாய். நான் கம்பி எண்ணிக்கொண்டு காலத்த ஓட்டுறதா? 
பூக்களைத் தொலைத்த பூந்தொட்டி
சைக்கிள் ஓடுறாராம் சயிக்கிள் நடுறோட்டில. எனக்கு வாற கோபத்துக்கு மண்ணாங்கட்டி... 

தனது ஆத்திரத்தை எல்லாம் கொட்டித்தீர்த்தபடி வார்த்தைகளை படு விகாரமாய் கக்கிக்கொண்டிருந்தான் பேருந்தை ஓட்டிவந்திருந்த சாரதி. 

சூரியன் மகரக்கோட்டில் உச்சம் கொடுக்கும் காலம் என்பதால் கதிரவனின் ஆதிக்கத்திற்கு இலங்கைத்தீவு அடிபணிய பங்குனி மாத உச்சி வெய்யில் மண்டையை பிளக்கும் அளவிற்கு அனலாகத் தகித்துக்கொண்டிருந்தது போதாதென்று தார்ச்சாலையில் பட்டுத் தெறிக்கின்ற அனல் காற்றுவேறு தேகத்தில் பட்டு சருமத்தில் எரிச்சலை உண்டாக்கிக் கொண்டிருக்க யாழ்ப்பாணத்திற்கு உள் வருகின்ற ஏ32 பிரதான வீதியில் சின்னக்கடையில் அமைந்திருக்கின்ற பழைய சிறைச்சாலைக்கு அருகிலேயே இத்தனை கூத்துக்களும் அரங்கேறிக் கொண்டிருந்தன. 


நேரம் நண்பகலை முத்தமிட்டுக் கொண்டிருந்ததனால் கொடிகாமம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு என வெளி ஊர்களிற்குச் செல்லும் வாகனங்களைத் தவிர வெம்மைக்கு பயந்த மக்களின் வாகன நடமாட்டம் சற்று குறைவாகவே இருந்தது. இருப்பினும் புதினம் பார்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் கூடியிருந்தது. மோட்டார் வண்டிகளிலும் மிதிவண்டிகளிலும் சென்றுகொண்டிருந்தவர்கள் பஸ் சாரதியின் சத்தத்தைக்கேட்டு தத்தமது வாகனங்களை வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வந்து கூடிநின்று அங்கு நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தார்களே தவிர யாரும் எதிலும் தலையிடுவதற்கு ஆயத்தமாக இல்லை என்பதை அவர்களது முகமும் பார்வையும் காட்டிக்கொடுத்தது. இன்னும் சிலரோ நடப்பதை தங்கள் கவனத்தில்கூட எடுக்காது சிவனே என்று தங்கள் பாட்டுக்கு இவற்றைக்கடந்து போய்க்கொண்டு இருந்தார்கள். இவற்றைவிட இன்னும் ஒரு கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் ஒவ்வொரு யன்னல் ஊடாகவும் பல தலைகளை வெளியே நீட்டி நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. 

இவற்றை எல்லாம் பொறுக்க முடியாமல் கடைசியாக பஸ்ஸினுள் இருக்கையில் இருந்த பெரியவர் ஒருவர் மெல்ல எழுந்து வந்து பஸ்ஸின் சாரதியை நோக்கி 
சரி விடப்பா வயசானவர்தானே… ஏதோ கவனிக்காம வந்திற்றார். என்று சொல்லி வாய் மூடுவதற்குள் 
ஏய் பெரிசு கனக்க கதைச்சாய் எண்டா உன்ன இதிலயே இறக்கிவிட்டிற்று போயிருவன்… வந்திற்றார் வக்காலத்து வாங்க. போய்யா.. 
என்று பெரியவரை நோக்கிக் கத்தியபடி இடது கையால் பஸ்ஸின் கியரை புடுங்கி எடுப்பவன் போல ஒரு ஆட்டு ஆட்டி இழுத்து வலதுகாலை மெல்ல தூக்கி இடது காலால் ஒரே அமத்தில் அமத்தி வேகமாக பஸ் வண்டியை ஒட்டத் தொடங்கவும் பஸ்ஸின் உள் இருந்த பயணிகள் ஊஞ்சல் ஆடுவதுபோல முன்னும் பின்னுமாக உடலை ஆட்டி நிதானத்திற்கு வந்தவர்களாக இருக்கைகளில் இறுகப்பிடித்துக்கொண்டிருக்க பேருந்து உறுமிக்கொண்டு வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது. 

இனிப்புப்பலகாரத்தினை மொய்த்திருந்த ஈய்கள் கூட்டம் மெல்ல மெல்லக் கலைவதுபோல அதுவரை நேரமும் கூடிநின்று புதினம் பார்த்துக்கொண்டிருந்த கூட்டமும் சட்டென்று கலையத்தொடங்க மீண்டும் வீதி வழமைக்கு வரவே கொதிக்கும் தார்ச்சாலை வாகனங்களை மீண்டும் சுமக்கத் தொடங்கியது. 
சற்று துருப்பிடித்துப்போயிருந்த மிதிவண்டியின் கைப்பிடியில் இடதுகையையும் மறுகையை மிதிவண்டியின் இருக்கையிலும் இறுக்கிப்பிடித்தபடி பேருந்தின் சாரதி தேளாய்க்கொட்டிய வார்த்தைகளை எல்லாம் தனக்குள் விழுங்கியபடி தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு திருவிழாக்கூட்டத்தில் தாயைத்தொலைத்த குழந்தையைப் போன்ற மனனோநிலையில் நின்றிருந்த சிவஞானத்தாரிற்கு சற்று முன்பு நடந்த சம்பவங்களால் ஏற்பட்ட பதட்டமும் வியர்வையும் அடங்க மறுத்தது. தோளில் போட்டிருந்த சால்வைத்துண்டை நடுங்கும் கைகளால் எடுத்து நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வைத்துளிகளை துடைத்துவிட்டு சால்வையை மடித்து தலையில் தலைப்பாகையை கட்டிக்கொண்டு சிறைச்சாலையை நோக்கி மிதிவண்டியை உருட்டத்தொடங்கினார். 

கொஞ்ச நேரத்திற்கு முன்பு எதிர்பார்க்காத விதமாக நடந்து முடிந்த இந்த சம்பவமும் வாதப்பிரதிவாதங்களும் அவரின் மனத்தில் பயத்தினை உருவாக்கியிருந்தன. இலக்கை நோக்கி பயணிக்கும் ஒருவனிற்கு பிற காட்சிகள் எல்லாம் மறைந்து இலக்குமட்டுமே கண்களில் தெரிவதைப்போல சிவஞானத்தாரும் சிறைச்சாலையைக் கண்ட நொடியில் ஒருவகை உந்துதலில் பிரதான வீதியைப்பற்றி சற்றும் சிந்திக்காமல் குறுக்கே மிதிவண்டியை ஓட்டி சாலையைக்கடக்க முற்பட்டதால் வந்தவினை சாரதி வடிவில் பேயாட்டம் ஆடியது. எதிரே வந்துகொண்டிருந்த மன்னாரில் இருந்து புறப்பட்டு சங்குப்பிட்டி ஊடாக யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த பேருந்தில் மோதப்பார்த்து பேருந்துச்சாரதியின் சமயோசித சாதுரியத்தால் போகவிருந்த சிவஞானத்தாரின் உயிரும் காப்பாற்றப்பட்டது. இருப்பினும் கூடியிருந்த சனக்கூட்டத்தின் முன்னால் அந்த சாரதியிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட வசைகளை நினைக்க நினைக்க அவருக்கு கூச்சமாக இருந்தது. அவரின் தனிமனித தன்மானம் வயிற்றைப் பிசையத்தொடங்கியது. 

சின்னப்பொடியன் கொஞ்சம் வயசுக்கு எண்டாலும் மரியாத தந்திருக்கலாம்… சா.. இந்தக்காலத்துப் பிள்ளையள் எங்க பெரியவங்கள மதிக்குதுகள்… என்னப்போல அப்பன் வளத்த பிள்ள போல இருக்கு. ம்… 
என்று மனதிற்குள் புளுங்கியபடி நடந்தாலும் 
இப்ப தெரியுதா? அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும். இதுதான் அது. இதெல்லாம் உனக்கு வேணும். இப்பிடித்தான் உனக்கு நடக்கும்… 
என்று அவருடைய மனசாட்சி அவருக்கு குத்திக்காட்டியது. இடக்கையை மிதிவண்டியின் பிடியில் இருந்து எடுத்து நெஞ்சைத் தடவிக்கொண்டார். கொளுத்தும் பங்குனிமாத வெய்யிலின் வெம்மையும் தார்ச்சாலையின் சூடும் ஒருங்கே சேர்ந்து தாகத்தை கூட்ட நாவும் வறட்சியடையத் தொடங்க ஒருவாறு சிறைச்சாலையின் வாயில் அருகே வந்து சைக்கிளை உருட்டுவதை நிறுத்தி தானும் நின்று தலையை மெல்ல உயர்த்தி எட்டி நீட்டிப்பார்த்தார். எப்பொழுதும் பார்க்கும் அதே பார்வை கண்களில் பூஞ்சணம் விழுந்தது போல மறைக்க கண்களை உருட்டிக்கொண்டு பார்த்தார். அவரின் மங்கலான வலக் கண்ணின் வலப்பக்கத்தில் இருந்து வெளிப்பட்ட கண்ணீர்த்துளியொன்று கன்னத்தில் வடிந்து புறங்கையில் விழுந்து தெறித்தது. 
இவரின் வருகையால் பழக்கப்பட்டதுபோல் தெரிந்த சிறைக்காவலன் ஒருவன் 
என்னய்யா உள்ளவந்து பாக்கப்போறீங்களா? 
எனக் கேட்கவே இல்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு மிதிவண்டியைத்திருப்பி மீண்டும் உருட்டத் தொடங்கினார். 

நரைதிரண்ட தலை, தளர்ந்த தேகம், தசைகள் வலிமை குறைந்து எலும்போடு பட்டும் படாமலும் சற்று தழ தழத்து ஆடியபடி முதுமையை கோடிட்டுக் காட்டிக்கொண்டிருந்த சிவஞானத்தாரின் உடலில் வாலிப வலுவும் திமிரும் ஒடுங்கி வருடங்கள் பல கடந்திருந்தன. நா வரண்டு தலை சுற்றத்தொடங்கியது. கால்களும் சற்றுத்தள்ளாடின. இந்நிலையில் இனியும் நடப்பது சிரமம் என்பதை உணர்ந்து கொண்டவர் சிறைச்சாலைக்கு சற்று முன்பாக இருந்த யாகப்பர் கோயிலிற்குள் மிதிவண்டியை உருட்டிச்சென்று மதிலோடு மிதிவண்டியை சாத்திவிட்டு அருகிலிருந்த நீர்க்குழாயினை திருகி கொட்டிய தண்ணீரை கைகளில் ஏந்தி வயிறு நிறையக்குடித்து தாகம் தணித்தார். சோர்வும் தாகமும் ஒன்றுசேர அருந்திய தண்ணீரால் உடல் சளசளவென வியர்க்க கோயிலிற்குள் சென்று சௌகரியமாக அமர்ந்து கொண்டவர் இடது கையில் கட்டியிருந்த பிள்ளையார் கோயில் நூலை வலது கையால் தடவிக்கொண்டு ஞானியைப்போல கோயிலின் மூலத்தில் இருந்த சாமிச்சிலையினைப்பார்த்தார். அவருக்கு அங்கு இருப்பது இயேசுவா, மாதாவா இல்லை அந்தோனியாரா என்று தெரியுமளவிற்கு அவரிற்குப் புரிதல் இல்லை. ஆனாலும் 
எல்லாமே தெய்வம்தானே.. சிவனோ, இயேசுவோ, நபியோ இல்லை புத்தனோ எல்லா ஆறுகளும் கடைசில கடலிட்டதானே போய் சேருது…. என்று யோசித்தபடி 
டேய் மடயா நான் போயும் போயும் உந்த கோயிலுக்கு வாறதோடா? போய் வேற வேல இருந்தா பாரு…. 
என்று கொஞ்ச காலத்திற்கு முன்பு ஊரில் ஏற்பட்ட மத முரண்பாட்டு நேரம் தன்னுடைய ஊரில் கத்தியதை நினைத்து இப்போது வேதனைப்பட்டபடி கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிகின்ற சிறைச்சாலை மதிலையும் எலி கூட புகுந்துபோக முடியாதவாறு அடிக்கப்பட்டிருந்த முட் கம்பிகளையும் பார்த்தவருக்கு மீண்டும் மனதில் முள் தைத்து இரத்தம் வடிய ஆரம்பித்தது. 


அது சிவஞானத்தாரின் இளமைக்காலம். கட்டுடல் கருத்தமேனி கன்னத்தில் சரிந்து விழும் சுருட்டை முடி மற்றும் சென்ரி மீற்றரில் செதுக்கப்பட்டிருந்த மீசையுடன் யாழ்ப்பாணத்து முதற்தர கைத்தறி நெசவு வேட்டியும் சேட்டும் கையில் ஒரு அரைப்பவுண் மோதிரம் என்று தன் அப்பாவின் சொத்துக்களைக் கரைத்து இராஜபோக வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த காலம். 
அவருக்கு எப்பொழுதுமே தான் என்ற ஆணவமும் ஆண் என்ற அகங்காரமும் சற்று அதிகமாகவே இருக்கும். அதிகாரத்தொனியிலேயே தன் சகோதரிகளுடன் சத்தமிட்டுக்கொண்டிருப்பார். இது போதாதென்று அவருக்கு ஒத்து ஓடுகின்ற சில நண்பர்கள் எப்பொழுதும் கூடவே ஒட்டிக்கொண்டு திரிவார்கள். குடி கூத்து என்று பொறுபற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார். தந்தையின் புத்திமதிகள் எல்லாம் செல்லாக் காசாகியது. ஒருகாதால் வாங்கி மறுகாதால் வெளிவிட்டார். இன்னும் சில சமயங்களில் தன் காதுகளையே மூடிக்கொண்டார். 

மனம்போன போக்கில் கால்களை அலையவிட்டு திரிந்தவரிற்கு ஒரு கால்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் பெண் பார்ப்பதற்கென்று படியேறிய வீடுகளின் கதவுகள் எல்லாம் தாழிடப்பட்டன. தங்களது மகளை சிவஞானத்தாரிற்கு பலிக்கடா ஆக்குவதற்கு யாருமே முன்வரவில்லை. பெற்ற பாவத்திற்காக மகனை திருத்தி மனிதனாக்கும் ஆசையில் அவரின் தந்தை அயலூரெல்லாம் அலைந்து இறுதியில் ஏழைப்பெண் பார்வதியின் பெற்றோரை சம்மதிக்க வைத்து சிவஞானத்தாருக்கு திருமணம் என்னும் சடங்கினை நடாத்தி வைத்தார். 

இல்லற வாழ்க்கையில் உள்நுழையும் காலம் ஒவ்வொரு பெண்ணிற்கும் பல கற்பனைகளையும் பல கனவுகளையும் அள்ளித் தெளித்த பூந்தொட்டியினையே பரிசாக வழங்குகின்றது. கூடவே தமது பெற்றோரிடம் இருந்து பிரிந்து முற்றிலும் புதியதொரு குடும்பத்திற்குள் கணவன் என்ற புதிய உறவினைத்தாங்கி மன உணர்வுகளிற்கும் போராட்டங்களிற்கும் ஈடுகொடுத்து புதிய சூழலிற்கு மனதை தயார்படுத்தி வருவதென்பது உண்மையில் மிகப்பெரியதொரு உள ஒழுங்குபடுத்தலாகும். இங்கே பார்வதியும் அப்படித்தான் தனக்குள்ளே ஒரு பூந்தொட்டியை சுமந்தபடி சிவஞானத்தாரின் கைப்பற்றி புகுந்த வீட்டிற்கு வாழ வந்தாள். 

உண்மை, நேர்மை, தனிமனித ஒழுக்கம் என்ற நேர்கோட்டில் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்து பழகிய பார்வதிக்கு சிவஞானத்தாரின் பழக்கவழக்கங்கள் சகிக்கமுடியாமல் இருந்தாலும் பெண்மைக்குரிய சகிப்பு, விட்டுக்கொடுப்பு போன்ற நற்குணங்களாலும் மாமன் மாமியின் ஆறுதலாலும் சமாளித்துப்போகப் பழகிக்கொண்டாள். 

திருமணம் முடிந்து சுமார் ஆறு ஏழு மாதங்கள் கடந்திருந்த நிலையில் பார்வதியின் வயிற்றில் அவர்களின் குடும்ப வாரிசு உயிர்பெற்றிருந்தது. சற்றுமுன்தள்ளி உப்பியிருந்த தன்னுடைய வயிற்றை மெல்லக் கைகளால் வருடிப்பாரத்தாள். 
என்னுடைய சொந்தம்…அவள் மனம் பூரித்தது. கண்கள் விரிந்து முகம் மலர மீண்டும் வயிற்றைத் தொட்டு தடவிப்பார்த்தபடி 
நீ பத்திரமா இரு… என்ர செல்லம்… அம்மா உன்ன பாதுகாப்பா வச்சிருக்கிறன்… என்று அன்னைக்கேயுரிய பாசப் பொலிவுடன் இதமாய்த்தன் குழந்தைக்குச் சொல்;லிக்கொண்டிருக்கையில் வாசலில் சிவஞானத்தாரின் குரல் உச்சஸ்தாயில் ஒலிக்கவே திடுக்கிட்டு நிமிர்ந்தாள். 

அடியேய் பார்வதி….வெளிய வாடி. வெளிய வாடிண்டா வாடி கெதியா… 
என்று கத்தியபடி தள்ளாடிய கால்களுடன் வந்துகொண்டிருந்த சிவஞானத்தாரின் கால்களில் வீட்டு வராண்டாவின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்லுரல் தடக்குப்பட பொத்தடீர் என விழுந்து போதை மயக்கம் தெளியாமல் மல்லாக்காகக் கிடந்தார். 
பார்வதிக்கோ நெஞ்சு பட படத்தது. அழுகை தொண்டையைப் பிய்த்துக்கொண்டு வந்தது. அழுகையை அடக்கிக் கொண்டு அலங்கோலமாகக்கிடந்த சிவஞானத்தாரின் சாரத்தினை சரிசெய்து விட்டு கொல்லைப்புறத்தில் போய் நின்று விம்மி விம்மி அழத்தொடங்கினாள். அவளுக்கு எதற்கு அழுவது என்று தெரியவில்லை. இப்படி அக்கம் பக்கம் எல்லாம் பார்க்க ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வந்து கிடப்பதைப் பார்த்து அழுவதாஇ மயக்கம் தெளிந்து எழுந்ததும் சாப்பாட்டை குறை சொல்லி தூக்கி எறிந்து நடக்கப்போகும் சண்டையை நினைத்துப்பயந்து அழுவதாஇ தேகம் வலிக்க வாங்கப்போகும் அடி உதைகளை நினைத்து அழுவதா இல்லை வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி திட்டித் தீர்த்து அவளை அவமானப்படுத்தவதை நினைத்து அழுவதா அப்படியும் இல்லையெனின் பிறந்த வீட்டிற்குப் போய்வருவதற்குக் கூட தடை விதிக்கும் அவருடைய அதிகாரத் திமிரை எண்ணி அழுவதாஇ தன்னுடைய தலை விதியை நினைத்து அழுவதா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அழுதுகொண்டிருந்தாள். கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. விம்மி விம்மிக் குலுங்கி அழுதாள். 

இப்படித்தான் திருமணமான புதிதில் ஒருநாள் சிவஞானத்தார் மதிய உணவு அருந்திக்கொண்டு இருந்தபோது 
நாங்கள் ஒருக்கா வீட்ட போய் வருவமா? அம்மாவ பாத்து கனநாள் ஆகிற்று… என்று அவள் தொடங்க 
எதுக்கிப்ப அங்க? நீ சமச்ச சாப்பாட்டின்ர திறத்தில உனக்கு உலாத்துக் கேக்குதோ.. 
உப்பும் இல்ல புளியும் இல்ல. நீ போனா இங்க கிடக்கிற வேலையள யார் செய்யிறது ஆ? 
என்னத்தானே கழியாணம் கட்டிக்கொண்டு வந்தனி இப்ப எதுக்கு அங்க? அதெல்லாம் பிறகு பாக்கலாம்… முதல்ல இந்தா நான் சாப்பிட்ட கோப்பய கழுவு. 
என்று அவர் முடித்து வைக்கவும் பார்வதியின் வதனம் வாடிய செம்பருத்திப் பூவைப்போல மலர்ச்சியை இழந்தது. அவளுடைய உணர்வுகளை அவர் மதிக்கும் விதத்தினை அன்றோடு அவள் புரிந்துகொண்டாள். 

பூமியின் நுண்சுழற்சியில் காலம் உருள்வது தெரியாமல் ஆண்டுகள் பல கழிந்து அவளுடைய குழந்தையும் இப்பொழுது அரும்பு மீசையோடு பெரியவனாகி இருந்தான். பார்வதியின் இளமையும் செழுமையும் தேகத்தில் இருந்து கரைந்து அவளுடைய தலையில் வெண் கோடுகளும் கண்களில் கரு வளையங்களும் விழுந்திருந்தன. முகத்தில் இருந்த அமைதியும் ஆனந்தமும் மெல்ல மெல்ல விடைபெற்றுச்சென்றிருந்தன. உயிர்க்கூடு சிலசமயங்களில் அவளுக்குப் பாரமாய்த் தெரிந்தது. வீதியோரத்து சுமைதாங்கிக்கற்களில் ஆங்காங்கே ஏற்படுகின்ற வெடிப்புக்களைப் போல அவளது உள்ளத்திலும் பல ஓட்டைகள் விழுந்திருந்தன. 
அவள் கொண்டுவந்திருந்த இல்லறக் கனவுப் பூந்தொட்டியில் இப்போது பூக்கள் இல்லை. அவை வாடி கருகித் தொலைந்து வாசமற்றுப்போயின. பூக்களின் மீது தெளிக்கப்பட்டிருந்த நீர்த்துளிகள் எல்லாம் காய்ந்து வரண்டு போயிருந்தன. அந்தத் தொட்டியின் மீது வந்து அமர்ந்து ஏக்கத்தோடு வெறுமையைப்பார்க்கும் தும்பியைப்போல அவளது மகன் வீட்டில் உலாவித் திரிந்தான். 
சிலசமயங்களில் அவளுக்கு மகனின் முகத்தை பார்க்க சங்கடமாக இருக்கும். என் திருமண வாழ்வின் வரமாய்க்கிடைத்த உனக்கு எத்தகையதொரு வாழ்க்கையை நான் பரிசாய் கொடுத்திருக்கின்றேன்? என்று அவளது தாய் மனம் கேள்விகளைக்கேட்டு ஏங்கும். மகன் வளர்ந்து விட்டான். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்கின்ற நினைப்பு கொஞ்சம் கூட அற்றவராக சிவஞானத்தார் தினம் ஒரு கூத்தடிப்பார். 

அவன் சிறியவனாக இருந்தபோது அப்பாவின் குரல் கேட்டாலே பார்வதியின் சேலைத்தலைப்பினை பிடித்தபடி அவளுடைய கால்களுக்குப்பின்னால் பதுங்கி நின்று எட்டிப்பார்ப்பான். பல சமயங்களில் நித்திரையில் இருந்து திடுக்கிட்டு எழுந்து வீரிட்டுக் கத்துவான். அவனைத் தேற்றுவதற்குள் அவளுக்குப் போதும் போதும் என்றாகிவிடும். வளர வளர அவனுக்குள் இயல்பாகவே ஒரு பயந்த சுபாவமும் கூடவே ஒரு முரட்டுப்பிடிவாதமும் கூடி வளரத்தொடங்கியது. 

அவன் பாடசாலை செல்லும் பருவத்தில் ஒரு நாள் தோட்டத்தில் களை பிடுங்கிக்கொண்டு நின்ற வேலையாட்களுடன் பார்வதி கதைத்துக்கொண்டு நின்றதைப் பொறுக்கமுடியாத சிவஞானத்தார் 
என்னடி அவனுகளோட உனக்கு கத வேண்டிக்கிடக்கு? கால் முளைச்சிற்ருது.. பொம்பிழைக் கழுத… 
என்றவாறே வந்தவர் சுற்றியிருந்தவர்களையும் பாராமல் படார் என பார்வதியின் கன்னத்தில் அறையவே அவளுக்கு தன்மானம் விழித்துக்கொண்டது. 
என்ன? என்னத்துக்கு இப்ப அடிச்சனியள்? நான் என்ன பிழ செய்தனான்? ஆ ஊ எண்டா கைய நீட்டுற வேலைய இதோட விட்டிருங்கோ.. 
என்று அவள் கத்தவும் 
என்னடி வாய் நீளுது? உனக்கு அவளோ கொழுப்பும் திமிரும் வந்திற்றோ? 
என்றபடி எட்டி தன் ஒரு காலால் உதை உதைய பார்வதி தோட்டத்து மிளகாய்ப்பாத்தியின் வரப்புகளில் விழுந்து உருண்டதைப் பார்த்த மகன் 
அப்பா…விடுங்கோ. அப்பா விடுங்கோ அம்மா பாவம் அம்மா… அம்மா… அம்…மா…. என்று மூக்கு வடிய கத்தியபடி சிவஞானத்தாரின் கையைப்பிடித்து இழுத்தபடி அவரின் கால்களுக்குள் இழுபட்ட மகனைக்காண அவளுக்கு பொறுமை எல்லை மீறியது. “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பதைப்போல தன் உடலை சிலுப்பிக்கொண்டு சேற்றிலிருந்து எழுந்தவள் 
இதுக்கெல்லாம் இண்டைக்கொரு முடிவு கட்டுறன்… என்றவாறே மகனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு விறு விறுவென படலையைத் தாண்டி வேகமாக நடையைக்கட்டினாள். 

ஓ போறியோ போடி.. பாப்பம் எத்தின நாளைக்கு உன்ர வீட்டில இருப்பாய் எண்டு பாப்பம்.. கடைசில இங்கதான் வருவாய். பாக்கிறனே நானும்… 
போடி போ. 
என்று சிவ ஞானத்தார் இரக்கமற்றுக் கறாராக கத்திவிட்டு வீட்டிற்குள் புகுந்து விட்டார். 
படலையைத்தாண்டிய போது நடந்த விறு விறு நடையுடன் இடுப்பில் மகனையும் சுமந்தபடி பிறந்த வீட்டிற்கு வந்திருந்தாள் பார்வதி. கண்ணீர் வழிந்து கன்னங்கள் ஊடாக ஓடி மார்புச்சேலை நனைந்திருந்தது. தலை விண் விண் என்று இடிக்க கொவ்வைப்பழம்போல சிவந்து பொங்கிய கண்களுடன் தாயைப்பார்த்து 
இனி நான் அங்க போகேல்லம்மா எனக்கு எல்லாம் காணும். என்ர மகனுக்கு அப்பா அம்மா எல்லாமா நான் இருந்து வளக்கிறன். உங்களோடயே இருந்திறனேம்மா… எனப் பரிதாபமாக கெஞ்சினாள். 

ஆனால் விதி வேறு கதை எழுதியிருந்தது. 
இங்க பார் பார்வதி எந்த குடும்பத்தில சண்ட சச்சரவு இல்ல சொல்லு பாப்பம்? நீ வாய் காட்டாம அமைதியா போ.. பொம்பிள பிள்ள தானே… ஆம்பிளயள் எண்டா கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம். நீதான் அனுசரிச்சு போகோணும். 
உன்ர கொப்பர் என்ன பேசாத பேச்சா சொல்லு பாப்பம்… 
அதவிட நீ வீட்டில இங்க வந்திருந்தா ஊர் உலகம் என்ன சொல்லும்? வாழாவெட்டி எண்டு பழிக்காதா சொல்லு… 
இப்படி ஆயிரம் அறிவுரைகளை சொல்லி பெண் என்ற பெயரைச் சொல்லி அதற்கு ஓராயிரம் புனைவுகளை வகுத்து இந்த சமூகத்தின் ஓட்டைகளை சாதகமாக்கி அவளது விதி மீண்டும் அவளை புகுந்தவீட்டிற்கு அனுப்பிவைத்தது. 

சிவஞானத்தார் தலையைச் சிலுப்பி கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டார். 
இந்தச்சம்பவங்கள் எல்லாம் நடந்ததில் இருந்து பார்வதியின் மகன் தாயை விட்டுப்பிரிய மறுத்தான். பாடசாலைக்குப் போவதற்குக்கூடத் தயங்கினான். ஒருவாறு சமாளித்து அனுப்பினால் வயித்துக்குத்து, தலையிடி, ஒண்டுக்கு போகோணும், இரண்டுக்குப் போகோணும் என்று ஏதாவது ஒரு சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டு பாடசாலை முடியும் முன்பே வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுவான். 
ஒரு நாள் காலை பத்துமணி ஆகும்முன்பே வந்து நின்றான். 
என்னடா? என்றால் 
ஒண்டுமில்ல… என்று பதில் மட்டும் வந்தது. பின்பு தான் இவன் வகுப்பறையில் காற்சட்டையுடன் சிறுநீர் கழித்த விடயம் அயல்வீட்டுப் பையன் மூலம் பார்வதிக்குத் தெரிய வந்தது. கிணற்றடியில் போடப்பட்டிருந்த அவனுடைய காற்சட்டையினை தூக்கி முகர்ந்து பார்த்தாள். மூத்திர வாடையை மட்டுமே அவளால் உணரமுடிந்ததே தவிர அவனுக்கு ஏன் அப்படி நடந்தது என்பதற்கான உளவியல் உண்மைகளைப் புரிந்துகொள்ளும் அறிவுப்பக்குவம் அவளுக்கு இருக்கவில்லை. 

மாலை வேளைகளில் அவனுடைய வயதுப்பிள்ளைகள் எல்லோரும் கூடி விளையாடுகின்ற தருணங்களில் இவன் மட்டும் முற்றத்துப்பலா மரத்தடியில் ஒற்றைக்குரங்காக குந்திக்கொண்டு இருந்துவிடுவான். 
டேய் தம்பி.. நீ விளையாடப்போகேல்லயா? என பார்வதி கேட்க 
இல்லயம்மா எனக்கு போகப்பிடிக்கேல்ல.. என்பான் 
ஏன்பா? போய் விளையாடன். என்பாள் தாய் 
வேண்டாம் நான் போகேல்ல.. இங்க அப்பா உன்னோட சண்டை பிடிச்சாலும் பிடிப்பார்.. அடிச்சு போடுவார் நான் விளையாடப்போனா ஆர் உன்னப்பாக்கிறது? 
என்பான் மகன். 
அவள் தன்னையே நொந்து கொள்வாள். 

கீழைத்தேய காலாசாரங்களின் படி ஒரு பெண் திருமண வயதினை அடைகின்ற பொழுது அவள் விரும்பியோ விரும்பாமலோ சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களிற்குக் கட்டுப்பட்டு திருமணம் என்கின்ற சடங்கிற்குள் பிரவேசிக்கின்றாள். அவ்வாறு பிரவேசிப்பவர்களில் சிலரது வாழ்க்கை வசந்தமாகவும் இன்னும் சிலரது வாழ்க்கை இலையுதிர் காலமாகவும் பயணிக்கத் தொடங்குகின்றது. பார்வதியின் நிலையும் இதில் ஒன்றுதான். சுமை தாங்க சக்தியற்ற நிலையில் பிறந்த வீடு சென்றால் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று கதை பேசி அனுப்பிவிடுவார்கள். இதனால் சிவஞானத்தாரிற்கு உச்சத்தில் வெள்ளிதிசை ஆகியது. தனித்து ஒரு வேலை தேடி வாழ்க்ககையினை கொண்டு செல்வதற்கு நினைத்தாலும் அவளுடைய கல்வி அறிவு அதற்கு இடம்கொடுக்க வில்லை. இதனால் தன்னையும் விதியையும் நொந்தபடி காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தாள். 

மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றானோ இல்லையோ பூமி அது தன்பாட்டிற்கு சுழன்று கொண்டே இருக்கும். பூமியின் சுழற்சியில் கால ஓட்டத்தில் பல காயங்களும் வலிகளும் பழக்கப்படுத்தப்பட்டு வலிமை இழந்திருக்கும். காலம் கொண்டுள்ள காயங்களை ஆற்றுகின்ற வலிமை அபாரமானது. இதனால் தான் காலத்தால் வலிகளை மறக்கவைக்க முடியாவிட்டாலும் மறைத்துவைக்க முடியும் என்கின்ற உண்மையினை நாம் மனதார ஏற்கின்றோம். 
பார்வதிக்கும் காலம் சில மாற்றங்களைக் காட்டியிருந்தது. அடி, உதை, சுயமரியாதை இழத்தல், புறக்கணிப்பு போன்றவை தரும் வலிகளை மறைத்து வைக்கப் பழகியிருந்தாள். கணவன், மனைவி, மகன் என்கின்ற பிணைப்பு தொடரற்ற சங்கிலிகளைப்போல இணைப்புக்கள் அற்று வெவ்வேறு திசைகளை நோக்கியிருந்தது. அன்னியோன்னியம் என்கின்ற வார்த்தை அவர்களுக்குள் அடிபட்டுப்போயிருந்தது. சிவஞானத்தாரின் சத்தத்தைத் தவிர வேறு பேச்சுக்களையோ மனம் விட்டுச்சிரிக்கும் சிரிப்பையோ மருந்துக்கும் காணமுடியாமல் போயிருந்தது. 

அன்றும் அப்படித்தான் மகனுக்குப் பிடிக்குமென்று குத்தரிசிச்சோறும் உருளைக்கிழங்கை அவித்துப்பிரட்டி ஒரு கூட்டுக்கறியும் முருங்கை இலை வறையும் பக்குவமாய் செய்துமுடித்தபின்பு மகனிடம் வந்து 
உனக்குப்பிடிச்ச உருளைக்கிழங்குப்பிரட்டல்கறி வைச்சிருக்கிறன்.. சாப்பாடு போடட்டே... என்று அன்பை வார்த்தைகளில் குழைத்துக் கேட்க
எனக்கு வேண்டாம்.. பசிக்கேல்ல. 
என்று முகத்தில் அடித்தற்போல் சடாரெனப் பதில் சொல்லிவிட்டு அறையினுள் சென்று கதவுகளைச்சாத்திக் கொண்டான். நத்தை கூட்டிற்குள் தன்னுடைய உடலைச்சுருக்கிக் கொள்வதைப்போல அவனும் தன்னுடைய தொடர்புகளை எல்லாம் சுருக்கியபடி பெரும்பாலான நேரங்களை தன்னுடைய அறையினுள்ளேயே கழிக்கத்தொடங்கியிருந்தான். 
தந்தை மீது இருந்த வெறுப்பு தாயின் மீதும் கோபமாக வெளிப்படத் தொடங்கியது. 
இவ எதுக்குப்போய் இவர கழியாணம் கட்டினவா.. சா.. எதுக்கு என்ன பெத்தவா…நான் கேட்டனா பிறக்கப்போறன் எண்டு… 
விரக்தியில் புத்தி பேதலிக்க தனக்குள் பல கேள்விகளைக் கேட்டபடி அவன் படுக்கையில் விழவும் 
ஜயோ சத்தம் போடாதீங்க.. அவன் இருக்கிறான் காதில விளங்கப்போகுது… என்று பார்வதி சிவஞானத்தாரை கெஞ்ச 
கேட்டா என்ன இப்ப? கேக்கட்டும். அவன் என்ன பெரிய ஆளோ? ஆ? என்ன யாரும் அடக்க ஏலாது நான் ஆம்பிள.. போடி அங்கால. என்று சிவஞானத்தார் வைரவர் ஆடுவது அவனுடைய அறைவரை அதிர வைத்தது. 

பொறுமை எல்லைமீற அவன் ஏற்கனவே இருந்த மனோநிலையில் கோபம் தலைக்கேறியது. அவனையறியாமல் கைகள் நடுங்க கதவருகில் கிடந்த தாழிடும் பார் கட்டையினை எடுத்துக்கொண்டு இண்டையோட இந்த வீட்டில நிம்மதி வரும்… என்று கத்தியபடி பார்க்கட்டையினை ஓங்கிக்கொண்டு சிவஞானத்தாரை நோக்கி ஓடவும் பார்வதி 
ஜயோ ராசா விடு…. விடு…. பாவம் பழி தேடாத.. விட்டிரு… 
என்று கத்தியபடி ஓடி வரவும் நேரம் சரியாக இருந்தது. ஓங்கிய பார் கட்டையினை வீசி எறிந்துவிட்டு 
சா.. வீடா இது? தரித்திரம் பிடிச்ச வீடு… 
வெளியால போய் பாருங்க அப்பாஇ அம்மாஇ பிள்ளையள் எண்டு எவ்வளோ சந்தோசமா இருக்குதுகள் எண்டு… 
என்று இரைந்தபடி கதவைத்திறந்து கொண்டு வெளியேறி வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கியவன் பிரதான தார்வீதியை கடந்து ஒற்றையடிப்பாதையில் இறங்கத் தொடங்குகையில் சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் கர்ப்பவதியான தனது மனைவியை அசிங்கம் அசிங்கமாகத் திட்டி அடிப்பதற்குக் கையை ஓங்கிக்கொண்டு போக இவனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. அருகில் வேலியோரத்தில் கிடந்த வேலிக்கட்டையினைப் புடுங்கி 
அடேய்… உங்களுக்கெல்லாம் எதுக்குடா மனுசி பிள்ளையள்? கழியாணம் கட்டீற்றா நீ நினைச்ச பாட்டுக்கு என்ன வேணாலும் பண்ணலாமா ஆ? சாவுடா மவனே… 
என்றபடி தலையில் பலமாக அடிக்கவே அந்த நாற்பது வயதுக்காரன் தரையில் சுருண்டு விழுந்தான். 
அப்பொழுதும் அவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. 
பிள்ளயள பெத்து வளத்து உங்கட் கையில தாறது நாசம் பண்றதுக்கா ஆ? அடிக்கலாம் உதைக்கலாம் என்ன வேணாலும் பண்ணலாம் எண்டா அவங்களென்ன உணர்ச்சி இல்லாத மெசினா ஆ…? 
உன்ர பிள்ளயள பத்தியெண்டாலும் யோசிச்சியா? பாவம் அதுகள்.. 
என வெறி கொண்டவன் போல கத்தியபடி கீழே கிடந்தவனை மேலும் மேலும் அடித்தவன் பொத்தென தரையில் அமர்ந்து அழத்தொடங்கினான். 

சிறு பிராயம் முதலே அடக்கி வைத்திருந்த ஏக்கம், பயம், கோபம், ஆத்திரம், வெறுப்பு, விரக்தி, தனிமை எல்லாம் ஒன்றுசேர்ந்து ஏற்படுத்திய மன அழுத்தம் கடைசியில் வன்முறையாக மாறி இந்தக் கொலையில் முடிந்தது. 
அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் தண்டனைக் கைதியாகி கடைசியில் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டான். 

அறியாமை என்னும் நீண்ட தூக்கத்தில் இருந்த சிவஞானத்தார் இப்போதுதான் விழித்தவர்போல சுடலை ஞானம் பெற்று மகனை வெளியில் எடுக்க நாயாய் அலைந்தார். எஞ்சியிருந்த சொத்துக்களை எல்லாம் கரைத்து வக்கீலுக்கு பணம் கட்டி கோட்டுக்கும் வீட்டிற்குமாக அலைந்தும் பயனற்றுப்போனது. நாளும் பொழுதும் சிறைச்சாலை வாசலிற்கு நடையாய் நடந்து மகனின் முகத்தினை பார்த்துக் கதறிஅழக் காத்திருந்தார். அவனோ அவரை பார்க்கவோ பேசவோ மறுத்துவிட்டான். 
மறுபுறம் மகனின் நிலைக்குத் தன்னையே நொந்து கொண்ட பார்வதி மனதின் வலியும் பாரமும் தாங்கமுடியாமல் உயர் குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டவள் நெஞ்சு வலிக்குது….. என்று சொல்லிக்கொண்டு ஒருநாள் படுக்கைக்குப்போனவள் மறுநாள் கண்விழிக்கவேயில்லை. 
வாழ்வின் அனைத்து வலிகளையும் அனுபவித்து சுமந்த ஆன்மாவிற்கு மரணம் ஒரு விடுதலையே. பார்வதியின் ஆன்மாவும் இப்பூமியின் பந்த பாசங்கள் வேதனைகளில் இருந்து விடைபெற்று சுதந்திரப்பறவையாய் வான்நோக்கிப் பறந்திருந்தது. 

சிவஞானத்தாரையும் தனிமை பீடிக்கத்தொடங்கியிருந்தது. “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பது போல அவர் ஒவ்வொரு நாளும் சிறைச்சாலையின் பார்வையாளர் சந்திப்பு நேரத்தில் தன் மகனைக்காணத் தவம் கிடந்தும் அவன் பிடிவாதமாய் யாரையும் பார்க்கவோ பேசவோ மறுத்துவிட்டான். 

சட்டம் தன் கடமையை செவ்வனவே செய்துகொண்டிருந்தது. சூழ்நிலைக்கொலைக் கைதிகளும் திட்டமிட்ட கொலைக்கைதிகளும் சட்டத்தின் பார்வையில் கொலையாளி என்கின்ற வரையறையினுள் அடக்கப்பட்டு அவனது வாழ்க்கை தண்டனை மற்றும் திருத்துதல் என்கின்ற பெயரில் சிறைச்சாலையின் சுவர்களுக்குள் முடங்கிப்போனது. ஏற்கனவே ஏற்பட்ட மனக்காயங்களால் நத்தைக்கூடாக தன்வாழ்வைச் சுருக்கியவன் இப்போது அந்த நத்தைக்கூட்டின் ஓடுகளை மென்மேலும் வலிமைப்படுத்திக்கொண்டு வன்கூட்டின் ஓட்டிற்குள் ஒளிந்து அமைதிகாக்கும் மௌனியானான். 

சிறைக்காவலர்களின் பார்வையில் அவன் மௌனியாகப்பார்க்கப் பார்க்கப்பட்டானே தவிர அந்த மௌனத்தின்பின் ஒளிந்து பரந்து கிடக்கின்ற மௌனமொழியினையும்இ மௌன வெளியினையும் அங்கு நடக்கின்ற போராட்டங்களையும்இ பேயாட்டங்களையும் யாராலும் கண்டுகொள்ள முடியவில்லை. அவனுடைய மௌனம் முதிர்ச்சியடைந்து ஒரு நாளில் சூனியப்பெருவெளியினைச் சந்தித்திருந்தது. 

அது ஒரு நண்பகல் நேரம் படலையை இறுக்கிச் சாத்திவிட்டு வழமைபோல சிறைச்சாலைக்குப் போவதற்காக மிதிவண்டியை உருட்டத்தொடங்கிய சிவஞானத்தாரிற்கு அவசரத்தந்தி வரவே வியர்த்து விறுவிறுக்க வைத்தியசாலையினை நோக்கி ஓடினார். அங்கே கைகள் நடுங்கியபடி பத்திரத்தில் சிவஞானத்தார் என்று கையெழுத்திட்டவரின் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது. 

ஒன்று இரண்டு மூன்று என்று பல வைத்திய விடுதிகளைக்கடந்து பிண அறையினை நெருங்கியவரால் தாங்க முடியாமல் ஓ….. என்று கதறி அழுதார். 
அவருடைய அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை. 
மன அழுத்தத்தின் உச்ச நிலையிலே அவரது மகன் சிறையிலே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.. 
உதோ.. உதில போகுதே உந்த மனுசன்தான் அதுகளின்ர சாவுக்கு காரணம். படுபாவி… இப்ப எதுக்கு நீலிக்கண்ணீர் வடிச்சுக்கொண்டு திரியுது. பாவி மனுசன்… 
இவ்வாறு பலவிதாமக அவருடைய காதுகளில் விழும்படி ஊர் பேசிக்கொண்டது. அவரால் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை. தோழில் போட்டிருக்கும் துண்டை எடுத்து காதை மூடித்தலைப்பாகையை கட்டிக்கொண்டு ஒவ்வொரு நாளும் சிறைச்சாலையை நோக்கிப் புறப்பட்டுவிடுவார். மகன் அங்கு இல்லை என்றாலும் இருப்பதாய் அவருக்கு ஒரு பிரம்மை. இன்றும் அப்படித்தான் சிறைச்சாலையை நோக்கி வந்து பேருந்தில் மோதப்பார்த்து வசை வாங்கி கடைசியில் இந்தத்தேவாலயத்தில் தேய்ந்துபோய் உட்காந்திருக்கின்றார். 
நீண்ட பெருமூச்சினை உள்ளிளுத்து வெளியிட்டபடி புறங்கையினால் கண்ணீரைத் துடைத்தார். நேரம் நண்பகலைக் கடந்து மாலையை நெருங்கிக்கொண்டிருந்தது. நெற்றியை சுட்ட போக்கு வெய்யிலைப் பொருட்படுத்தாது கையை ஊன்றி மெல்ல எழுந்து சென்று மதிவண்டியை எடுத்துத்தள்ளிக் கொண்டு நடக்கத் தொடங்கினார். 

மீண்டும் அதே ஏ32 பிரதான வீதியில் ஒரு பேருந்து நடத்துனர் வயதான ஒருவரைப்பார்த்து வாய்கிழிய ஏதோ கத்திக்கொண்டிருந்தார். 

முற்றும். 
அறிந்தவை யாவும் கற்பனைக்கலப்புடன்.

No comments: