நினைவுகள்
சாசுவதமானவை, அழிவற்றவை, நினைவாற்றல் மனித
மனத்தின் மனச்சாட்சி, நினைவுகள் நிழலாகத் தொடர்ந்துவரும்.
இவ்வாறு மனித நினைவுகள் குறித்து பல வியாக்கியானங்கள் இருக்கின்றன.
மனிதர்களை
நினைவுகள் பெரிதும் பாதித்தாலும், அதே மனிதர்கள்
இலக்கியப் படைப்பாளிகளாக இருக்கும் பட்சத்தில், எவ்வாறாயினும் எழுத்தில், கவிதையாக,
சிறுகதையாக, நாவலாக எழுதிவிடுவது இயல்பு. அவர்களின் நினைவுகள் மனதில் தொடர்ந்து அழுத்திக்கொண்டிருப்பின்,
அவர்கள் அதிலிருந்து மீட்சி பெறுவதற்காக நாடும் பாதை எழுத்துத்தான்.
தங்கள் அனுபவங்களை
ஒரு கதைசொல்லியாக படைப்புகளில் கூறத்தொடங்கிவிடுவார்கள். அவ்வாறு எழுதும்போது, மனச்சாட்சியும் குறுக்கிடும். பெரும்பாலான படைப்பாளிகளுக்கு வாழ்வின் தரிசனங்கள்தான்
அவர்கள் எழுதும் இலக்கியப்பிரதிகளாக இருக்கும்.
"Experian's without education, better than education without Experian's
" எனச்சொல்வார்கள்.
வாழ்வனுபவும் கல்வியும் இணைந்தால், அதன் விளைவு வேறுவகையில் இருக்கும்.
பாலச்சந்திரன்
சுள்ளிக்காடு, நான் முதல் தடவையாக படிக்கும்
எழுத்தாளர். இவர் மலையாள இலக்கியத்தில் கவிதைத்துறையில் பேரும் புகழும் பெற்றவர் என
அறிகின்றேன். மலையாள திரையுலகிலும் பரவலாக
அறியப்பட்டவர். பாடலாசிரியர், கதாசிரியர்.
அத்துடன் நடிகர். இவர் எழுதிய சிதம்பர நினைவுகள் கதைத் தொகுப்பினை கே. வி.
ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் முதல் தடவையாகப் படித்தபோது, சுஜாதா எழுதிய ஶ்ரீரங்கத்து
தேவதைகளும் - நான் எழுதிய நினைவுக்கோலங்களும்
அவ்வப்போது நான் படித்த மேலும் பலர் எழுதியிருக்கும்
நனவிடை தோய்தல் கதைப் பதிவுகளும்தான் உடனடியாக மனதிற்குள் சிறகடித்தன.
மலையாள மூலத்திலிருந்து
தமிழுக்கு இந்த கதைத் தொகுப்பினை வரவாக்கியிருக்கும் கே.வி. ஷைலஜா பற்றிய அறிமுகமும்
எனக்கு புதியது. எனது வாசிப்பு அனுபவத்தில் இந்த நூலின் மூல ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளரும்
எனக்கு புதிய வரவு.
அதற்கு வாசல்
திறந்திருக்கும் மெல்பன் வாசகர் வட்டத்திற்கும், இதன் ஒருங்கிணைப்பாளர் இலக்கிய சகோதரி திருமதி சாந்தி
சிவக்குமார் அவர்களுக்கும் முதற்கண் எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.
லைலா, கனகாம்பாள்,
அம்மா, விஜயலட்சுமி, சாரதா, சாஹினா, ஶ்ரீதேவி, ராதிகா, கமலதாஸ், சாந்தம்மா, மார்த்தா...
இவ்வாறு எத்தனை பெண்கள் இத்தொகுப்பின் கதைகளில் வருகிறார்கள்.
அவர்களை நாமும்
எமது வாழ்க்கைப்பாதையில் சந்தித்திருக்கக்கூடும். அவ்வாறு சந்திக்காதிருப்பின், அந்த
வாய்ப்புக்கிடைத்த பாலச்சந்திரனை நாம் பொறாமையுடனும் பார்க்கலாம். பரவசத்துடனும் பார்க்கலாம்,
சகிப்புத்தன்மையுடனும் பார்க்கலாம்.
மொத்தம்
21 கதைகளைக்கொண்டிருக்கும் இந்தத் தொகுப்பில் மூன்று கதைகள் மாத்திரம் நேரடியாக சொல்லப்பட்ட சில ஆளுமைகளுடனா சந்திப்பாக
வெளிவந்துள்ளன.
அந்த நபர்கள்,
தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,
கேரளாவில் சர்ச்சைகளை சந்தித்த எழுத்தாளர் கமலாதாஸ், சுவீடனில் அட்லாண்டிக் சமுத்திரக்கரையோரம் நடந்த சர்வதேசப்புத்தக கண்காட்சியில் மகாத்மா காந்தி
பற்றிய புத்தகங்களை தேடும் மார்த்த என்ற மூதாட்டி.
அனைத்துக்கதைகளும்
சுயசரிதைப்பாங்கில் அமைந்திருப்பதனாலும், பாலச்சந்திரனின் நேரடி அனுபவங்களை சொல்வதனாலும்
கதைகளின் போக்கில் இழையோடியிருக்கும் தொடர்ச்சியையும் அவதானிக்க முடிகிறது.
நக்சலைட்
தீவிரவாதப்போக்கினை நாடிச்சென்று, வீட்டை விட்டு வெளியேறி, நாடோடியாக பசி பட்டினியோடு அலைந்துழன்று, விரக்தியும், விரகதாபமும் கொண்டு,
மனிதநேயத்துடனும் கையலாகாத இயல்புகளுடனும் தேடலை நோக்கியும் இடையறாது ஓடி ஓடி ஓய்ந்துபோன
ஒருவனின் கதைகள்தான் சிதம்பர நினைவுகள்.
புனர்ஜென்மம்
பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டிருக்கும் மார்த்தா அம்மா, பாலச்சந்திரனை வீட்டுக்கு
அழைத்து உபசரிக்கிறாள். இந்த அம்மாவுக்கு மகாத்மா காந்தியிடத்தில் அதிகம் பிரியம்.
ஒரு சர்வதேச புத்தகச்சந்தையில் சுவீடிஷ் மொழியில் காந்தி பற்றிய புத்தகம் இல்லையே என்பது
அவளது கடுங்கோபம். எனினும் ஆசிய மொழிகளில் வந்திருப்பவற்றை வாங்கிக்கொண்டு வருகிறாள்.
தென்னாபிரிக்காவில் ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக இருந்தவள் மார்த்தா அம்மா. வீட்டுக்கு
வந்த பாலச்சந்திரனுக்கு தனது குடும்ப படங்கள் இருக்கும் அல்பங்களை காண்பிக்கிறாள்.
குடும்பத்தின் கதையையும் ஓரளவுசொல்கிறாள்.
அந்தக்குளிர்காலத்தில்,
அல்பங்களை காண்பிக்கும்போது கம்பளிக் கையுறைகளை கழற்றுகிறாள். அந்தக்கைகளில் விரல்கள்
இல்லை.
" போரில்
என் ஒவ்வொரு மகனும் கொல்லப்பட்டபோதெல்லாம் அவர்களின் நினைவாக ஒவ்வொரு விரலாய் எங்கள்
வழக்கப்படி நானே வெட்டிக்கொண்டேன். பத்துவிரலும் வெட்டப்பட்டு, சில கால் விரல்களையும்
இழந்த தாய்மார்கள் கூட எங்கள் இனத்தில் உண்டு" என்று அந்த மார்த்தா அம்மா சொல்லும்போது,
அதனைக்கேட்டுக்கொண்டிருக்கும் பாலச்சந்திரன்
மாத்திரமல்ல, அந்தக்கதையை வாசிக்கும் நாமும்
உறைந்துபோகின்றோம்.
எழுதுபவர்கள்
எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல. எழுத்தாளனாக வாழ்பவர்களே எழுத்தாளன். மகா கவி பாரதியும்
அவ்வாறுதான் கவிஞனாக வாழ்ந்து தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்திக்கொண்டவர். பாலச்சந்திரனும்
இவ்வாறு தன்னை முழுமையான படைப்பாளியாக இனம் காண்பித்துக்கொண்டவர் என்பதை அவரது நினைவுப்பதிவுகளிலிருந்து
பார்க்கமுடிகிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
பல இயல்புகள் படர்ந்திருக்கும். அவற்றின் விகிதாசாரத்தில் வேறுபாடுகள் இருக்கலாம்.
அந்த இயல்புகளை புறந்தள்ளிவிட முடியாத தடுமாற்றம்,
இரண்டகத்தன்மை, வக்கிரம், வாத்சல்யம், வாஞ்சை,
அவசரப்பட்ட முடிவுகள், அதன் விளைவுகளினால் தன்னைத்தானே நொந்துகொள்ளும் குற்றவுணர்ச்சி,
, சுயவிமர்சனம் செய்து சமநிலைக்கு வருதல் முதலான பல குணாதிசயங்கள் கொண்ட ஒரு மனிதனின்
வாக்கு மூலமாக இந்தக்கதைகள் அமைந்துள்ளன.
பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு
இருந்தமையால் தனது தந்தையின் பொறுமையை சோதித்து,
அவரது வெறுப்புக்கும் ஆளாகி அவருடன் தர்க்கித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறார்
கதையின் நாயகன். அவர் வேறு யாருமல்ல, படைப்பாளி பாலச்சந்திரனேதான்.
தங்கநேர்ந்த அறையில் இளம்பெண்ணின் சகவாசத்தால் ஏற்பட்ட சபலத்தில் அவள் இடுப்பில்
கைவைத்ததை எண்ணி வருந்துவதும், கையில் ஒரு சதமும் இல்லாமல், பசியோடு ஒரு வீட்டிற்குள் வந்தவேளையில் அவர்கள் பிச்சைக்காரன்
எனக்கொடுக்கும் உணவை உண்ணும்போது
அங்கு இவரை ஏற்கனவே தெரிந்திருந்த பெண்ணைப் பார்த்தபின்னும் பசியின் கொடுமையால்
சாப்பிடும் பாலச்சந்திரன். இப்படி
எத்தனை கோலங்களுடன் இந்த மனிதர் அலைந்துழல்கின்றார்.
அவரது மனைவி உட்பட பல பெண்கள் வரும் கதைகள். அதனால் அவர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார்.
வாழ்பனுபவங்களை கூட்டிக்குறைக்காமல்
யதார்த்தமாக சொல்வதன் மூலம் ஒரு வித்தியாசமான படைப்பாளி எமது மனக்கண்ணில் தோன்றுகிறார். பாலச்சந்திரனின் ஒளிவுமறைவற்ற வாழ்க்கை புத்தகமாக விரிகின்றது.
மலையாள மூலத்திலிருந்த பாலச்சந்திரனின் கதைகளை தமிழுக்கு வரவாக்கியிருக்கும்
கே. வி. ஷைலஜா உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர். பெரும்பாலும், மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் வாசகர்களுக்கு நெருடலாக
அமைந்துவிடுவதும் நிகழ்ந்திருக்கின்றன.
பெரும்பாலான
மொழிபெயர்ப்பாளர்கள் குறித்து இலக்கிய உலகில் கவனிப்பும்
குறைவு. கனடாவில் வதியும்
இலக்கியவாதி அ.முத்துலிங்கம், குமுதம் தீராநதியில்,
‘எண்ணாமல்
துணிக’
என்ற தலைப்பில் மொழிபெயர்ப்புப்பணிகள் தொடர்பாக
அருமையான கட்டுரையொன்று எழுதியிருக்கிறார்.
அதில் அவர்
இரண்டுபேரின் கருத்துக்களை பதிவுசெய்கிறார். ஒருவர் –
ஆங்கிலத்தில் நவீன தமிழ் இலக்கியங்களை
மொழிபெயர்த்து அனுபவம் பெற்றவர். அவரிடம்
மொழிபெயர்ப்புகள் வெற்றிபெற என்ன செய்யவேண்டும் ? என்று
கேட்கிறார்.
பதில்:- “ தமிழ்
வார்த்தை அடுக்கு, ஆங்கில வார்த்தை அடுக்குக்கு
எதிரானது. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதைத்
தவிர்த்து அர்த்தத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
ஆங்கில மரபுத்தொடரில் நல்ல பரிச்சயம் தேவை.
எங்கள் மொழிபெயர்ப்புகள் அங்கேதான் சறுக்குகின்றன.”
ஒரு பேராசிரியர்
முத்துலிங்கத்திற்கு அளித்த பதில் இவ்வாறு
அமைந்திருக்கிறது:- “ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது
பரிச்சயமானதாகவும் அதேசமயம் அந்நியமானதாகவும் இருக்கவேண்டும்.
உண்மையான மொழிபெயர்ப்பு என்பது கருத்தை
மட்டும் கடத்துவது அல்ல. ஒரு மொழியின்
அழகையும் கடத்துவதுதான். மொழிபெயர்ப்பில், இலக்கு
மொழி உயிர்த்துடிப்புடன் வரவேண்டும் என்றால்
மொழிபெயர்ப்பாளரிடம் ஆழ்ந்த ஆங்கிலப்புலமையும்,
கற்பனையும் இருந்தாலே சாத்தியமாகும்”
இது இவ்விதமிருக்க, ஷைலஜாவுக்கு
தாய்மொழி மலையாளமாக இருந்தபோதிலும் அந்தமொழியில் பேசத்தெரிந்தளவுக்கு
வாசிக்கத்தெரியாமல் சிரமப்பட்டவர். எனினும், ஒரு இலக்கியச்சந்திப்பில்,
பாலச்சந்திரனின் உரையைக்கேட்டு பரவசமடைந்து, அவர் கையெழுத்திட்டு கொடுத்திருந்த
"சிதம்பர ஸ்மரண" தொகுதியை இரண்டு மாதங்களுக்கு மேலாக அடைகாத்து வைத்திருந்துவிட்டு,
தனது சகோதரியின் ஏழே வயதான மகள் சுகானாவிடம், தனது தாய்மொழியான மலையாளத்தை
எழுத்துக்கூட்டிப்படித்து, இந்தத் தொகுப்பினை தமிழுக்கு வரவாக்கியிருக்கிறார்.
ஷைலஜாவின் தேடல், உழைப்பு
தமிழுக்கும் தமிழ் வாசகர்களுக்கும் கிடைத்துள்ள
வரப்பிரசாதம் என்பது மிகையான கூற்று அல்ல. ஷைலஜாவின் மொழிபெயர்ப்பு
ஆற்றொழுக்கிலான எளிய நடையைக்கொண்டிருப்பதனால் வாசகர்கள் இலகுவாக நெருங்க முடிந்திருக்கிறது.
இதனை அனுபவித்த சில வாசகர்களும்
முக்கியமான தமிழ் எழுத்தாளர்களும் ( பிரபஞ்சன் - மேலாண்மை பொன்னுச்சாமி, பாவண்ணன்,
கல்யாண்ஜி என்ற வண்ணதாசன் ) அவரை
இந்நூலில் பாராட்டியுள்ளனர்.
இந்தியா டுடே, கணையாழி,
தீம்தரிகிட இதழ்களும் ஷைலஜாவின் மொழிபெயர்ப்புக்கு வாழ்த்துக்கூறியுள்ளன.
தமிழ்நாடு வம்சி புக்ஸ் இதனை
வெளியிட்டுள்ளது.
(மெல்பனில் நடந்த வாசகர் வட்டத்தில்
சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)
---0---
letchumananm@gmail.com
No comments:
Post a Comment