ஆண்டவனே காட்சிகொடு ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


image1.JPG
           கடவுள் என்கனவில்வந்து கருணையுடன் எனைப்பார்த்தார்
           எதுவேண்டும் எனக்கேட்டு என்னையே பார்த்துநின்றார்
           அவர்முகத்தை நான்பார்த்தேன் அசைவின்றி நானிருந்தேன்
           ஆண்டவனே என்கையை அன்பாகப் பற்றிநின்றார் !

           ஆண்டவனின் வருகையினால் அனைத்தையும் மறந்துவிட்டேன்
           வேண்டுவது எதுவென்று விழிபிதுங்கி நானிருந்தேன்
           ஆண்டவனோ கேழுவென்று அன்பொழுகப் பேசிநின்றார்
           அவர்பேச்சைக் கேட்டபடி அதைரசித்து நானிருந்தேன் !

            தயங்காமல் நீகேழு தருகின்றேன் பலவற்றை
            தாமதிக்கக் காராணந்தான் எதுவெனவே தெரியவில்லை
            வரம்கேட்கும் வாய்ப்பிருந்தும் வாய்திறவா இருக்கின்றாய்
            சிரந்தொட்டுக் கேட்கின்றேன் சீக்கிரமாய் கேட்டுவிடு !

             எவருக்கும் கிடைக்காத தரிசனத்தைப் பெற்றுவிட்டேன்
            இதனைவிட வேறுகொடை எவருக்கும் கிடைக்காதே
             என்னாளும் உன்நினைப்பே என்னுளத்தில் இருப்பதனால்
             இப்போது உனைக்காணும் பாக்கியத்தைப் பெற்றுவிட்டேன் !


             உலகத்தில் பலபேர்கள் உனையில்லை என்கின்றார்
             உன்னையே வெறுத்தொதுக்கி உபதேசம் செய்கின்றார்
             தலைக்கனத்தால் தமையிழந்து தறிகெட்டு ஓடுகிறார்
             அவர்மனத்தை மாற்றிநின்று அவருக்குக் காட்சிகொடு 

             அறமதனை அகமேற்ற அவரெண்ண  மறுக்கின்றார் 
             அரக்ககுணம் அத்தனையும் அவரிருத்தி வைத்துள்ளார் 
             அன்புபாசம் என்பவற்றை அவர்விலைக்கு விற்கின்றார்
             அவர்மனத்தை மாற்றுதற்கு ஆண்டவனே காட்சிகொடு 



        
           
 








No comments: