மீண்டும் பங்களாதேஸ் பிரதமராக ஷேக் ஹசீனா தெரிவு
பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் போல்சோனாரா
ட்ரம்புக்கு புட்டின் அவசரக் கடிதம்!
சீனா, தாய்வானுக்கிடையே போர் பதற்றம்
மீண்டும் பங்களாதேஸ் பிரதமராக ஷேக் ஹசீனா தெரிவு
31/12/2018 பங்களாதேஸ் பிரதமராக மூன்றாவது முறையாக ஷேக் ஹசீனா தெரிவு செய்யப்பட்டுள்ளார்
பிரதமர் ஹசீனாவின் கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ள அதேவேளை எதிர்கட்சிகள் தேர்தல் முடிவை நிராகரித்துள்ளன
பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 298 ஆசனங்களில் 287 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
பிரதமர் ஹசீனாவின் காலத்தில் பங்களாதேஸ் பொருளாதார ரீதீயில் முன்னேற்றமடைந்துள்ளதாக பரவலான கருத்து காணப்படும் நிலையிலேயே அவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்
அவரது ஆட்சிக்காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என குற்றச்சாட்டும் காணப்படுகின்றது
இதேவேளை முக்கிய எதிர்கட்சியான பங்களாதேஸ் தேசிய கட்சி ஆறு தொகுதிகளில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள எதிர்கட்சி கூட்டணி நடுநிலையான நிர்வாகத்தின் கீழ் புதிய தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறைகள் இடம்பெற்ற அதேவேளை வாக்களிப்பு இடம்பெற்ற தினத்தன்று வன்முறைகள் காரணமாக 17 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் போல்சோனாரா
02/01/2019 பிரேஸில் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜேர் போல்சோனாரா நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புடன் பதவியேற்றுக் கொண்டார்.
பிரேஸில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதியும், சமூக தாராளவாத கட்சியின் தலைவருமான 63 வயதையுடைய ஜேர் போல்சோனாரா வெற்றி பெற்றிருந்தார்.
இந் நிலையில் நேற்யை தினம் பிரேஸிலின் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள பாராளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது புதிய ஜனாதிபதியான ஜேர் போல்சோனாரா பதவியேற்றுக்கொண்டதுடன், துணை அதிபராக ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் ஹேமில்டன் மவுராவும் பதவியேற்றுக் கொண்டார். நன்றி வீரகேசரி
ட்ரம்புக்கு புட்டின் அவசரக் கடிதம்!
01/01/2019 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் அமெரிக்காவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராகவிருப்பதாக புட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கான முக்கிய காரணி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிரிய அதிபர் பாஷர் அல் ஆசாதுக்கு புதின் எழுதியுள்ள கடிதத்தில், பயங்கரவாதத்தை எதிர்க்கவும், இறையாண்மையைக் கட்டிக்காக்கவும் சிரிய அரசுக்கும், மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் ரஷ்யா தொடர்ந்து செய்யும் என உறுதியளித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சீனா, தாய்வானுக்கிடையே போர் பதற்றம்
03/01/2019 தாய்வான் சீனாவின் ஒரு பகுதி, அதனை நாங்கள் சீனாவுடன் இணைப்போம் என சீன நாட்டு ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளமையினால் சீனாவுக்கும் தாய்வானுக்குமிடையே போர் பதற்றம் எழுந்துள்ளது.
சீன அதிபர் சி ஜின்பிங், தாய்வான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம். அதை சீனாவுடன் இணைப்பதுதான் எங்களது ஒரே குறிக்கோள். தைவானும், சீனாவும் ஒரே நாடுதான். ஆகவே தாய்வான் தனியாக இயங்குவதற்கு அனுமதிக்க முடியாது. அதை சீனாவோடு இணைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் போர் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய தாய்வான், எங்களது நாடு இறையாண்மை கொண்டது, யாரையும் கைப்பற்றி விட மாட்டோம் எனக் கூறியுள்ளது.
இந் நிலையிலேயே இரு நாடுகளுக்குமிடையில் தற்போது போர் பதற்றம் எழுந்துள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment