அமரர் எஸ் .பொ. - அங்கம் -03 - முருகபூபதி


புலம்பெயர்ந்து  வாழ்ந்தாலும்  வேர்  அங்கும்  வாழ்வு இங்குமாக  இலக்கியத்தாகம்  தணிக்க  முயன்றவர்
                                         பொன்னுத்துரை  நைஜீரியாவிலிருந்து  இலங்கை   திரும்பியதும் அடுத்து   என்ன  செய்வது...?  என  யோசித்தவாறு  தமிழ்நாட்டுக்கும் சென்று  திரும்பினார்கொழும்பிலிருந்து  மீண்டும்  தமது  இலக்கிய தாகம்  தணிக்க  நண்பர்களைத்தேடினார்.
அவரது  நீண்ட  கால  நண்பர்  வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான   ஆசிரியர்  பொன். ராஜகோபாலிடம் சென்று   முருகபூபதியைப்பற்றி  விசாரித்திருக்கிறார்.   ஏற்கனவே 1985 இல்   அவர்  வந்தபொழுது  எடுத்த  ஒளிப்படத்தின் பிரதியைக்கொடுப்பதற்காகவும்   மீண்டும்  கொழும்பில் இலக்கியவாதிகளை  சந்திப்பதற்கான  தொடர்பாடலை   உருவாக்கவும் அங்கு    சென்றவருக்கு    முருகபூபதி   கிடைக்கவில்லை.
அவுஸ்திரேலியா    முகவரிதான்    கிடைத்தது.
எஸ்.பொ.வின்    மூத்த  புதல்வன்  மருத்துவ  கலாநிதி  அநுர.  அவர் முன்னாள்   உதவி  அரசாங்க  அதிபர்  மோனகுருசாமியின்  புதல்வியை   மணம்  முடித்து  சிட்னியில்  குடியேறியிருந்தார். அவரிடம்  புறப்பட்டு  வந்த  எஸ்.பொ.  1989  ஜனவரி  மாதம் 19 ஆம் திகதி   மெல்பனிலிருக்கும்  முருகபூபதிக்கு  கடிதம்   எழுதுகிறார்.
"  நான்  என்  மகனுடன்  இங்கே  தங்கியிருக்கின்றேன்.  நைஜீரிய வாழ்க்கைக்கு  வாழி  பாடிவிட்டேன்.  முன்னர் போல அந்நியச்செலாவணி    கிடைக்காது    போனமைதான்   காரணம். சென்னையில்   புத்தக  பிரசுரம்  ஒன்று  தொடங்க  உத்தேசம்.  என் வசம்   பிரசுரிக்கப்படாத   என்  படைப்புகளாகவே   இருபத்தைந்து நூல்கள்   தேறும்.
ஆபிரிக்க  கண்டத்தைப்பற்றி  நிறைய  அறிந்துள்ளேன்.  பல  நூல்கள் எழுதலாம்.   அவுஸ்திரேலியாவைப்பற்றியும்  ஒரு  நூல்  எழுதுவதற்கு    ஆசை.    இங்குள்ள  எழுத்தாளர்  அமைப்புகளுடன் தொடர்புகொண்டு    என்    நோக்கிலே   அவுஸ்திரேலியாவை சுயம்புவாக    தரிசிக்க    முடியுமல்லவா...?    இவை    குறித்து உங்களாலே   ஏதாவது  பயனுள்ள  குறிப்புகள்  தரமுடியுமாயின்   மிக்க    உதவியாக   இருக்கும்.
இதனை   நீங்கள்  எஸ்.பொ.வுக்குச்செய்யும்  தனிப்பட்ட  உதவியாக மட்டும்கொள்ளாது  -   தமிழ்  எழுத்துப்பணிக்குச்செய்யும் பங்களிப்பாகவும்   கருதி    உதவ    முன்வருவீர்கள்  என்று நம்புகின்றேன். "
எஸ்.பொ.  உலகில்  எந்தப்பகுதிக்குச்சென்றாலும்  ஏர்ணஸ்ட் சேகுவேரா     சொன்னதுபோல்    ' எனது   காலடித்தடம்   பதியும்  இடம் எல்லாம்  எனக்குச்சொந்தமே ...'  என்ற  உணர்வோடு   வாழ்ந்திருப்பவர்.
அதன்   அர்த்தம்  நில  ஆக்கிரமிப்பு  அல்ல.  '  யாதும்  ஊரே   யாவரும் கேளீர் '   என்ற   உலகத்தத்துவம்தான்.  அவர்  எப்பொழுதும் தன்னைச்சுற்றி   எவரையாவது  வைத்துக்கொண்டிருக்கப்பழகியவர். இந்த   இயல்பை   நாம்  ஜெயகாந்தனிடமும்  காணலாம்.
அவ்வாறு   அவர்  தன்னைச்சுற்றியிருப்பவர்களிடம்   தெரிவிக்கும் இலக்கிய   - அரசியல் -  சமூகம் -  கல்வி  - ஆன்மீகம்  - இஸங்கள் தொடர்பாக    சொல்லும்   கருத்துக்களினால்  அவர்  மீது  சில மதிப்பீடுகளும்   உருவாவது    தவிர்க்க   முடியாதது.

கருத்துச்சொல்வது ,வேறு  காயப்படுத்துவது   வேறு! பல்வேறு சந்தர்ப்பங்களில்    அவருடன்    உரையாடுபவர்கள்   அவர்   மீதான மதிப்பீடுகளை   முன்வைக்கும்பொழுது  அவரது  மொழியிலேயே   பேச வேண்டிய    நிர்ப்பந்தங்களுக்கும்    ஆளாகியிருக்கிறார்கள்.
ஆனால்  - எவரது  மதிப்பீடுகளினாலும்  அவர்  தன்னை மாற்றிக்கொள்வது   அரிது.    அவ்வாறு    இருப்பதே    அவரது இயல்பானது.    அந்த    இயல்பே    அவரது    அடிப்படை    அழகு.    அவரது இயல்புகளை    மாற்ற    முடியாதவர்கள் -    அவருடன் பேசிப்பயனில்லை    என்று    ஒதுங்கினாலும்    அவரை    எவரும் புறக்கணிக்க முடியாதவாறு    அவரே    மீண்டும்    மீண்டும் நெருங்கிவருவார்.
முருகபூபதிக்கு   எழுதிய  அக்கடிதத்தில்  அவருடைய  பிறந்த  மண் குறித்த    ஏக்கம்   துலக்கமாகவும்    தெரிந்தது.    நைஜீரியாவில் சுதந்திரப்பறவையாக    வாழ்ந்தவருக்கு  அவுஸ்திரேலிய  வாழ்வு நிர்ப்பந்தமாகியிருக்கும்    தொனி    அக்கடிதத்தில்   இழையோடியிருந்தது.
அவர்    மீண்டும்  புத்துயிர்ப்புக்கொள்ள  இலக்கியத்தென்றல் வீசவேண்டும்.   அவுஸ்திரேலியாவின்  இயந்திர  கதி  வாழ்வு அவருக்கு   அந்நியமாகியிருப்பதை    உணர்த்தும்   வரிகளை   அதில் பதிவுசெய்திருந்தார்.    அவர்   அக்கடிதத்தில்   எழுதியிருந்தவாறு 1989 காலப்பகுதியில்   இங்கே  எழுத்தாளர்  அமைப்புகள்  எதுவும் இருக்கவில்லை.
முருகபூபதி   எழுதிய  இரண்டாவது  புதிய  சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் தான்  இருந்தது.
அதனை  அவருக்கு   அனுப்பியதும்   தாமதமின்றி   அதற்கு   விரிவான விமர்சனம்  எழுதி    அனுப்பினார்.    சிட்னியிலிருந்த  மலையக படைப்பாளி    மாத்தளை   சோமுவின்    தொலைபேசி  எண்கொடுத்ததும்   -  அவருடன்  தொடர்புகொண்டு  சிநேகம்  பூண்டார். அவர்  இவருக்கு   தினகரன்   முன்னாள்    பத்திரிகையாளர் சுந்தரதாஸை   அறிமுகப்படுத்தினார்.
பொன்னுத்துரை   எழுதி   அனுப்பிய  நூல்   விமர்சனம் கொழும்பிலிருந்து   வெளியாகும்  தினகரன்  வாரமஞ்சரியிலும் யாழ்ப்பாணத்தில்   வெளியான    திசை   இதழிலும்  பிரசுரமானது. சமாந்தரங்கள்   நூல்   வெளியீட்டு (25-06-1989)  விழாவுக்கு  பொன்னுத்துரை   அழைக்கப்பட்டார்.
எப்பொழுதும்   அங்கதச்சுவையுடன்   பேசும்  அவர்   அந்த   நிகழ்வில் இறுதிப்பேச்சாளர்.   மெல்பன்   வை. டபிள்யூ. சி. . மண்டபத்தில் திரண்டிருந்த   மக்கள்   நீண்ட  இடைவெளிக்குப்பின்னர்  யாழ்ப்பாண பிரதேச   மொழி  வழக்கில்  கேலியும்  கிண்டலும்  நிரம்பிய சுவாரஸ்யமான   அவரது   பேச்சைக்கேட்டு  சிரித்து   மகிழ்ந்தனர்.
1987  இல்  இலங்கை - இந்திய   ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டு  1989 களில்  நிலைமை  முற்றிலும்  வேறுவிதமாக  மாறியிருந்தது.
அந்த  ஒப்பந்தம்  அவசர   ஒப்பந்தம்   என்பதற்கு  ஒரு குட்டிக்கதையைச்சொன்ன  எஸ்.பொ. - அந்தச்சபையிலிருந்தவர்களை வயிறு   குலுங்க   சிரிக்கவைத்தார்.
அந்தக்கதை  இதுதான்:
ஆறுமுகநாவலர்  காலத்தில்  ஒரு  ஆசார  சீலர்.  காலை  வேளையில் மலம்  கழிக்கச்செல்லும்பொழுது  நாவலர்  சைவ  வினாவிடையில் சொல்லியிருப்பதுபோன்று   ஏதோ  ஒரு   திசை  நோக்கி  அமர்ந்தாராம். காரியம்  முடிந்ததும்  எடுத்துச்சென்ற  செம்பிலிருந்த  தண்ணீரில் சௌசம்   செய்ய  ( அடிக்கழுவுதல்)  எத்தனித்தபொழுது   ஒரு   காகம் பறந்து   வந்து  அந்தச்செம்பைத்தட்டிவிட்டதாம்.
மறுநாள்  காகத்திற்கு  அஞ்சி  தண்ணீர்  செம்பை  கையிலேயே வைத்துக்கொண்டு  காரியம்  முடிந்ததும்   சௌசம்   செய்ய எத்தனித்தபொழுதும்  அந்தக்காகம்   வந்து   அதனை   தட்டிவிட்டதாம்.
மூன்றாம்   நாள் -  அவர்  காலைக்கடன்  கழிக்கச்சென்று  அமர்ந்த  பொழுதும்  காகம்  வந்து  முன்னே  அமர்ந்ததாம்.
அந்த   ஆசார   சீலர்   தனது  மனதுக்குள்  காகத்தை   " இன்று   உனக்கு என்ன   செய்கின்றேன்  பார்..."  எனத்திட்டிக்கொண்டு -  மலசலம் கழிக்கும்   முன்னரே  சௌசம்    செய்துவிட்டு   பெருமிதத்துடன் எழுந்தாராம்.
இந்தக்குட்டிக்கதையை  கேட்டதும்  சபையினர்  குலுங்கிச்சிரித்தனர்.
சில  செக்கண்டுகளுக்குப்பின்னர்  எஸ்.பொ.  சொல்கிறார்:
                          " சபையோரே... அந்தச்செம்பும்  காகமும்  அந்தச்   சீலரும்   யார்... ராஜிவ்  காந்தியா...?  ஜே.ஆர்.  ஜயவர்த்தனாவா...?  எங்கள்  தேசத்து மக்களா...? யார்...? யார்...? என்பதை   நீங்கள்   வீட்டுக்குச்சென்று யோசித்து   முடிவு செய்யுங்கள். "
சபை  சிரிப்பொலியினால்  அதிர்ந்தது.  அதேசமயம்  எஸ்.பொ. அச்சந்தர்ப்பத்தில்   எமது  மக்களின்  நாடித்துடிப்பையும்  பார்த்துவிட்டார்.   இலங்கையில்  இதுபோன்ற  கிண்டல்  பேச்சுக்களை நளினமாக   உதிர்க்கும்  கலை  தெரிந்தவருக்கு - புலம்பெயர்  மக்களின் ரசனையின்    நாடியை  பிடித்துப்பார்ப்பது  சிரமமாக   இல்லை.
அந்த   விழாவிற்கு  தலைமை  ஏற்றவர்  பேராதனைப்பல்கலைக்கழக முன்னாள்  விரிவுரையாளரும்  எஸ்.பொ.வின்  நீண்ட  கால நண்பருமான   கலாநிதி   காசிநாதன். அந்த   நிகழ்வுக்கு  முதல்நாள் காசிநாதன்  அவர்களின்  இல்லத்தில்   எஸ்.பொ.வுக்கும் முருகபூபதிக்கும்   மதிய  விருந்து  ஏற்பாடாகியிருந்தது.
எஸ்.பொ.   அங்கே  வருகிறார்  என  அறிந்திருந்த  திரு. நவரத்தினம் இளங்கோ  நீண்ட  காலத்தின்   பின்னர்   அவரை  சந்திக்க  அங்கு வரும்பொழுது    எஸ்.பொ.வின்   சடங்கு - தீ  முதலான  நாவல்களையும்   எடுத்துவந்திருந்தார்.
எஸ்.பொ.விடம்  அச்சமயம்   அந்த  நாவல்களின்  பிரதிகள்  இல்லை. அவற்றைப்பார்த்ததும்   நீண்ட  இடைவெளிக்குப்பின்னர் காணாமல்போன    குழந்தைகளை    காணும்   பரவசம்   அவரது முகத்தில்    துளிர்த்தது.
காசிநாதனின்   துணைவியார்  நளினி,   கல்குடாத்  தொகுதியின் முன்னாள்  எம்.பி.யும்   சேர். ஜோன்  கொத்தலாவல பிரதமரானபொழுது  அவரது  அமைச்சரவையில்  உணவு அமைச்சராகவும்  பதவி  வகித்த  நல்லையாவின்  புதல்வியாவார். திருமதி   நல்லையா  கிழக்குப்பிராந்தியத்தின்  முன்னாள்  கல்வி அதிகாரியும்   புவியியலில்  தேர்ச்சிபெற்ற  ஆசிரியருமாவார்.
                     எஸ்.பொ. வின்  துணைவியாரும் எஸ்.பொ.வும்  மட்டக்களப்பி ல் ஆசிரியப்பணியாற்றியவர்கள்.
அன்று    திருமதி  நளினி  காசிநாதன்  எஸ்.பொ.வுக்கு இலங்கையிலிருந்து   கொண்டு    வந்திருந்த    மூக்குப்பேணியை காண்பித்தார்.   ஈழத்தில்  மறையும்  மரபுகள்  குறித்து  ஆழ்ந்த கவலையை   வெளியிட்டுவரும்   எஸ்.பொ. , பின்னாளில்  மெல்பனில் விமல்   அரவிந்தன்  வெளியிட  உத்தேசித்த  கலை - இலக்கிய மாசிகையில்   எழுதுவதற்கும்  சம்மதித்து அந்த  மாசிகைக்கு  மரபு  என்று பெயரை   சூட்டுமாறும்   பரிந்துரைத்தார்.
" சுழலும்  சக்கரத்தின்  சுழலாத  புள்ளியே   மரபு"  என்று   அதற்குரிய  தாரக  மந்திரத்தையும்   எஸ்.பொ.  முன்மொழிந்தார்.  1990  ஆம்   ஆண்டு செப்டெம்பர்    மாதம்  மரபு  முதல்  இதழ்  வெளியானது.   அதில் எஸ்.பொ.    நனவிடை   தோய்தல்    தொடரை   எழுதினார்.
சிட்னியில்   அவர்  அடிக்கடி  சந்திக்கும்  எழுத்தாளர்  மாத்தளை சோமு  அந்தத்தொடரின்  ஆரம்ப    அத்தியாயங்ளை     எஸ்.பொ. சொல்லச்சொல்ல    எழுதியிருக்கிறார்.    வடமாகாண   மக்களின் ஆத்மக்குரலாக   அந்தத்தொடர்  வெளியானதால்  அதற்கு  வாசகர் மத்தியில்    நல்ல    வரவேற்பும்   இருந்தது.
காசிநாதன்  இல்லத்தில்  அவர்  நீண்ட  இடைவெளிக்குப்பின்னர் தரிசித்த  தமிழ்மக்களின்   அடையாளச்சின்னமான   அந்த மூக்குப்பேணியும்  அந்தத் தொடரில்  இடம்பெற்றது.
மரபு   வெளியாகிக்கொண்டிருந்த   கால கட்டத்திலேயே   யாழ். பாஸ்கர் என்பவருக்கும்    ஒரு  இலக்கிய  இதழ்  நடத்தவேண்டும்  என்ற  ஆவல்   தோன்றியது.  டென்மார்க்கில்  வதியும்  தர்மகுலசிங்கத்தின் தொடர்பினால்   மெல்பனில்   வசித்த   யாழ். பாஸ்கர் பொன்னுத்துரைக்கு   அறிமுகமானார்.
எஸ்.பொ.வை  பிரதம   ஆசிரியராகக்கொண்டு   அக்கினிக்குஞ்சுவின் முதல்     இதழை  1991 பெப்ரவரியில்   யாழ். பாஸ்கர்   வெளியிட்டார்.
அதே    பெப்ரவரி   மாதம்    அவுஸ்திரேலிய    தமிழர்   ஒன்றியம் மெல்பனில்   நடத்திய    பாரதிவிழாவிற்கு  எஸ்.பொ. அழைக்கப்பட்டார்.   பாரதிவிழாவை  முன்னிட்டு   நடத்தப்பட்ட நாவன்மைப்போட்டியில்   முதல்  பரிசாக   தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
அதில்   வேடிக்கை  என்னவென்றால்,   அவர்  தமது  இலக்கிய வாழ்வில்   தொடர்ந்தும்  எதிர்வினையாற்றிய  இலங்கை   முற்போக்கு எழுத்தாளர்  சங்கத்தின்  சார்பாக  வழங்கிய   தங்கப்பதக்கத்தை எஸ்.பொ.தான்    போட்டியில்   வெற்றியீட்டிய வருக்கு     அன்று அணிவித்தார்.
இது குறித்த  செய்தி  இலங்கை  இதழ்களில்  வெளியானபொழுது   அது  எவ்வாறு  சாத்தியமானது  என்ற   வினா  முற்போக்கு  எழுத்தாளர்  தரப்பில்  எழுப்பப்பட்டது.
பின்னாளில்   எஸ்.பொ. தமது  துணைவியாருடன்  இலங்கை சென்று முற்போக்கு  எழுத்தாளர்  சங்கச்செயலாளர்  பிரேம்ஜி  மற்றும் எழுத்தாளர்கள்  ராஜஸ்ரீகாந்தன்,    டொமினிக்ஜீவா   உட்பட   பலருடன் உரையாடி    விருந்துண்டு  பழைய  இறுக்கத்தை   தளர்த்த  அவருக்கு கால்கோள்  இட்டது  மெல்பனில்  நடந்த  பாரதி  விழா.
மெல்பனில்  அவரைச்சுற்றி  உருவான  நண்பர்கள்  வட்டம்  அவரது கடந்த   கால  இலக்கியம்  பற்றியும்  அரசியல்  குறித்தும் தெரிந்துகொண்டது.   அத்துடன்  அவரது  அருமைப்புதல்வன்  மித்ர  விடுதலைப்புலிகள்  அமைப்பில்   சிறந்த   ஒளிப்படப்பிடிப்பாளர்.  அவர் கடலில்   நிகழ்ந்த    எதிர்பாரத  தாக்குதலில்  மறைந்தார்.  அவருக்கு  அர்ச்சுனா  என்றும்   பெயர்.
அதனால்   எஸ்.பொ.வும்  மாவீரர்  குடும்பத்திற்குள்  மெல்பன்  தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால்   உள்வாங்கப்பட்டார்.  அதன்  விளைவு 1992 ஆம் ஆண்டு  மாவீரர்  விழா  மெல்பனில்  நடந்தபொழுது எஸ்.பொ.  தான்  பிரதம   பேச்சாளர்.  அன்று  அவர்  தெரிவித்த  சில கருத்துக்களும்   மெல்பன்  எழுத்தாளர்கள்   மத்தியில்   சர்ச்சையை உருவாக்கியது.
எவர்   தம்மைச்சுற்றியிருந்தாலும்  அவர்கள்  மத்தியில்  தன்னை தனித்து  அடையாளம்  காண்பிக்கவும்  அவர்  தவறுவதில்லை. அதற்காக   வார்த்தைகளை  கொட்டுவார்.    ஆனால்,  அவற்றை   மீண்டும்  அள்ளி  எடுக்க மாட்டார்.  சொன்னது  சொன்னதுதான்!   என்ற  இந்த  வாதம்   ஜெயகாந்தனிடமும்  இருந்தது.  ஆனால், ' சரி போகட்டும்  சொன்னதற்காக  வருந்துகின்றேன்."  என்று  சொல்லிவிடும்  சாமர்த்தியமும் எஸ்.பொ.விடமிருந்தது.
மாவீரர்   குடும்பத்திற்குள்  உள்வாங்கப்பட்டு  (1992 இல்) மேடையேற்றப்பட்ட   எஸ்.பொ.  இருபத்திரண்டு  வருடங்களின் பின்னர்  (2014 இல்)   மாவீரர்  தினம்  நடைபெறும்  காலத்திலேயே மறைந்திருப்பது   தற்செயலானது.
சிட்னியில்  இலக்கியவாதிகள்  கோவிந்தராஜன்  கவிஞர்  பாஸ்கரன் -ஆசி. கந்தராஜா - சந்திரஹாசன்  - ஆகியோரின்  தொடர்புகளினால் அங்கே    இலக்கியப்பவர்  என்ற  அமைப்பையும்  உருவாக்கினார். இலக்கியப்பவர்   கனதியான   அமைப்பாக   விளங்கியது. அவுஸ்திரேலியாவின்  இயந்திர  கதி  வாழ்க்கையில்  மரபு,  அக்கினிக்குஞ்சு  ஆகிய  இலக்கிய  இதழ்களில்   தொடர்ந்து எழுதியவாறு    இலக்கியப்பவரின்  பணிகளிலும்  இயங்கி  தமது இலக்கிய  தாகத்தை  தணித்தார்.
அக்கினிக்குஞ்சுவிற்கு  பிரதம  ஆசிரியராகவும்  வெளியீட்டாளராகவும்   யாழ். பாஸ்கர்  இருந்தபோதிலும்  எஸ்.பொ.தான்  அதன்  ஆசிரியத்தலையங்கத்தையும் -  இந்த இதழில் அபிமன்யூ   - கொண்டோடி  சுப்பர்  முதலான  புனைபெயர்களிலும் தொடர்ந்து   எழுதினார்.  அக்கினிக்குஞ்சு  சென்னையில்  வதியும் எஸ்.பொ.வின்   இலக்கிய  சகா   இளம்பிறை  ரஹ்மானின்  கவனிப்புடன்   அச்சிடப்பட்டு  வந்துகொண்டிருந்தது.
காலப்போக்கில்  சிட்னியில்  வதியும்  மருத்துவக்கலாநிதி  கேதீஸ் ஆசிரியராக   வெளியிடும்  கலப்பை   மாத    இதழையும்   சென்னை மித்ர   பதிப்பகமே   அச்சிட்டு   வழங்கியது.
இலக்கிய   சிற்றிதழ்களுக்கு  வழக்கமாக  நேர்ந்து  விடும்  அற்பாயுள் மரணம்  மரபுவுக்கும்  அக்கினிக்குஞ்சுவுக்கும்   நேர்ந்தது. தற்பொழுது   அக்கினிக்குஞ்சு  இணைய  இதழாக  மெல்பனிலிருந்து வெளியாகின்றது.   அதன்   கௌரவ  ஆசிரியரும்  எஸ்.பொ. அவர்கள்தான்.
எஸ்.பொ. வின்  உள்ளக்கிடக்கையை   சரியாக  இனம்கண்டு  அவரது மூத்த   புதல்வன்   டொக்டர் அநுர,  முதலிட்டு   சென்னையில்  தொடங்கிய  மித்ர   பதிப்பகம்  பலதரப்பட்ட  இலக்கிய  அறுவடைகளை  தமிழ் உலகத்திற்கு   வழங்கியிருக்கிறது.
 எஸ்.பொ.   நைஜீரியாவிலிருந்து  புறப்படும் பொழுது  மனதில் தேக்கிவைத்திருந்த   கனவுகள்  மித்ர  பதிப்பகம்   ஊடாக நிறைவேறியது.   எஸ்.பொ.வின்  ஆரம்ப  கால  முதல்  பதிப்பு நூல்களும்  மறுபதிப்புக்குள்ளானதுடன்  அவுஸ்திரேலியா,  கனடா, மலேசியா,  சிங்கப்பூர்,  தமிழ்நாடு  உட்பட  ஐரோப்பிய  நாடுகளில் வதியும்   பலரதும்  படைப்புகளை  மித்ர  வெளியிட்டிருக்கிறது.
எஸ்.பொ.  மித்ர  பதிப்பகத்திற்காக  செலவிட்ட  நேரம்  அதிகம். அதனால்   அவர்  மாதக்கணக்கில்  தமிழ்நாட்டில்  சென்னை வாசியாகவே   இருந்தார்.  சென்னை  வாழ்க்கை  அவருக்கு  தமிழக அரசியல் வாதிகளினதும்   பத்திரிகையாளர்களினதும் பேராசிரியர்களினதும்   சினிமா  உலகத்தைச்சேர்ந்தவர்களினதும் ஓவியர்கள்  - ஒளிப்படப்பிடிப்பாளர்கள் -   கவிஞர்கள் -  படைப்பாளிகள் பலரதும்   நட்பினை    பெற்றுக்கொடுத்தது.
அவருக்கு  கனடா  இலக்கியத்தோட்டத்தின்  இயல்விருது அறிவிக்கப்பட்டு   அவர்   கனடாவுக்கு   புறப்படவிருந்த  வேளையில் பழ.நெடுமாறன்   உட்பட  தமிழக  தமிழ்த்தேசியவாதிகள்  அவருக்கு புகழாரம்   சூட்டி  வழியனுப்பிவைத்தார்கள்.
(தொடரும்)

---0---
-->





No comments: