ஐ.நா. பிரதிநிதிகள் மனித உரிமைகள் குறித்து ஆராய முல்லைத்தீவு விஜயம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வாக்குறுதிகளை மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் - பிரித்தானியா
முப்படைகளின் பிரதானிக்கு பிணை
ரவிகரனை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்
கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை
இனியொரு யுத்தம் வேண்டாம் கிளிநொச்சியில் போராட்டம்
1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
இரும்புக் கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு மீட்பு ; மன்னாரில் அதிர்ச்சி
இலங்கைக்கு அமெரிக்கா கடும் அழுத்தம்- நாய்சண்டையில் யாருக்கும் ஆதரவில்லை
மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி
வவுணதீவு பொலிஸார் கொலை சம்பவம் : மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
அதிகாரத்தை தக்கவைக்க மைத்திரி - மஹிந்த சூழ்ச்சி : 19 ஆவது திருத்தம் மீது குறை
வெள்ளத்தில் மூழ்கிய தொண்டைமானாறு
தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்
வவுணதீவு சம்பவத்தை கண்டித்து சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம்!!
ஐ.நா. பிரதிநிதிகள் மனித உரிமைகள் குறித்து ஆராய முல்லைத்தீவு விஜயம்
05/12/2018 இலங்கைக்கான விசேட பயணம் மேற்கொண்டுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு சிவில் சமூக அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியினை முல்லைத்தீவில் சந்தித்துள்ளார்கள். இந்த ஆட்சிமாற்றம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஜ.நா.பிரதிநிதிகளால் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ஈஸ்வரி ஜ.நா பிரதிநிதிகளிடம் இந்த அரசாங்கம் அதிகாரத்திற்காக சண்டை பிடிக்கின்றார்கள் இது தெற்கில் நடந்துகொண்டிருக்கும் நிலை எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் போனவர்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பது தெளிவாக தெரிகின்றது
காணாமல் போனவர்கள் பிரச்சனையில் சர்வதேசம் தலையிட்டு ஒரு தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன் மகிந்த அரசாங்கம் வந்தால் போராட்டங்களை முன்னின்று நடத்துபவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாலம் என்றும் என்று அச்சம் கொள்வதாகவும் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார்கள்.
அடுத்து தமிழர் மரபுரிமை பேரவையினருடனான சந்திப்பு முல்லைத்தீவு கோவில்குடியிருப்பு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களான வி.நவநீதன்,அருட்தந்தை லூயிஆம்ஸ்டோங்,உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு அவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் முல்லைத்தீவு மாவட்டத்தில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்று ஜ.நா பிரதிநிதிகள் கேட்டுள்ளாலர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயம் ஊடாக மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு அதனால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும்,போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனை தொடர்பிலும் அரசியல் கைதிகளின் பிரச்சனை தொடர்பிலும்,பௌத்த மயமாக்கல் தொடர்பிலும் ஜ.நா அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் அருட் தந்தை லூஜி ஆம்ஸ்ட்ரோங் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வாக்குறுதிகளை மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் - பிரித்தானியா
05/12/2018 இலங்கையில் தொடரும் அரசியல் சிக்கல் நிலை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை எதிர்வரும் 2019 மார்ச் மாதம் கூடுகின்ற போது இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து மேலும் அழுத்தம் பிரயோகிப்பட வேண்டும் என தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்றக்குழு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மார்க் பீல்டிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை இன்னமும் தொடர்ந்து வருகின்ற நிலையில், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழுவினர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்க் பீல்டுடன் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்து கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
மேற்படி சந்திப்பின் போது தற்போது நிலவி வரும் அரசியல் சிக்கல் நிலை தொடர்பில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இவ்விடயம் தொடர்பிலும் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது மேலும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சந்திப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மார்க் பீல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் அரசியலமைப்பின்படி செயற்பட வேண்டும் என்பதையே மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். அத்தோடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பில் தொடர்ச்சியாக அழுத்தம் வழங்குவோம் என்றார். நன்றி வீரகேசரி
முப்படைகளின் பிரதானிக்கு பிணை
05/12/2018 முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.
வெள்ளை வேனில் 5 மாணவர் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேக நபர் நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையிலேயே அவர் இன்று கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் ஆஜரானபோது நீதிவான் அவரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார். நன்றி வீரகேசரி
ரவிகரனை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்
05/12/2018 கனேடிய உயர் ஆணையாளரான டேவிட் மெக்னோ மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் ரவிகரனோடு கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேசுவரனும் கலந்திருந்தார்.
மேலும் இந்த சந்திப்பில், சமகால அரசியல் நிலவரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் நில அபகரிப்பு, மற்றும் பௌத்த மயமாக்கல், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், வன சீவராசிகள் திணைக்களத்தின் நந்திக்கடல் ஆக்கிரமிப்பு,
மாவட்டத்திலுள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள், கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள், மகாவலி (எல்) வலயம் தொடர்பன பிரச்சினைகள், விவசாய காணிகள் அபகரிப்பு செய்யப்படுவது தொடரப்பான பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை
05/12/2018 வவுணதீவில் வவுணதீவில் பொலிஸார் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ள போதிலும் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகளிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் பயன்படுத்தவேண்டியிருக்கும் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை முன்னாள் போராளிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் என பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
இனியொரு யுத்தம் வேண்டாம் கிளிநொச்சியில் போராட்டம்
04/12/2018 நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்க கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பித்து பொதுச் சந்தை வரை இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துக்கொண்டனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,
நாட்டில் இனி ஒரு யுத்தம் எமக்கு வேண்டாம். இதற்கு முன்னர் நடைபெற்ற யுத்தத்தில் பல உயிர்களையும் சொத்துக்களையும் இழந்துள்ளோம். அவ்வாறு இடம்பெற்ற யுத்தத்தில் நாம் எதையும் சாதிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது நாட்டில் உள்ள சமாதானமான சூழலை குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் தமது சுய அரசியல் இலாபத்திற்காக இவ்வாறு சிலரால் திட்டமிட்டு நாட்டில் சமாதானமற்ற சூழலை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அந்தவகையில்தான் மட்டக்களப்பில் பொலிஸார் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்புலத்தில் முன்னாள் போராளிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையில் நாமும் முன்னாள் போராளிகள்தான். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் சமாதானமற்ற சூழலை ஏற்படுத்த முயற்சிக்க மாட்டோம்.
புனர்வாழ்வு பெற்று வந்த எம்மில் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏனைய முன்னாள் பொராளிகளிற்கும் இவ்வாறு வேலை வாய்ப்புக்களை வழங்கும் பட்சத்தில் அவர்களும் தம்கான வாழ்வாதாரத்தினை முன்னெடுப்பார்கள்.
குறித்த சூழ்நிலையை பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் முன்னாள் போராளிகள் ஒரு சிலரிற்கு பணம் கொடுத்து இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது எனவும் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
04/12/2018 தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென கோரி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
1000 ரூபா சம்பள உயர்வு கோரி கடந்த பல மாதகாலமாக தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் 1000 ரூபா சம்பள உயர்வுக்கு இணக்கம் தெரிவிக்காத நிலையில் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென 2015ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையிலேயே இவர்கள் தொடர் போராட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கும் வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் இன்று மலையகத்தில் பல பகுதிகளில் தோட்ட தொழிற்சாலைக்கு முன்னால் கூடிய தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷமிட்டதுடன், டயர்களை கொளுத்தியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு வீதி வீதியாக இறங்கி போராடவேண்டிய உள்ளதாகவும், இதனை பேசித்தீர்க்க வேண்டிய தொழிற்சங்கங்கள் தங்களிடம் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு தங்களை போராடுவதற்கு வீதியில் இறக்குவதாகவும் அவ்வாறு போராட வேண்டுமென்றால் எதற்காக இவர்களுக்கு சந்தா பணம் செலுத்த வேண்டும் என்றும் மலையகத்திலிருந்து சென்று பாராளுமன்றம் சென்ற அமைச்சர்கள் உறுப்பினர்கள் இதுவரை தங்களுக்கு உரிய நடவடிக்கை பெற்று கொடுக்காது தங்களது பதவிகளை மாத்திரம் காப்பாற்றிக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்வதாவும் இவர்கள் குற்றம் சுமத்தினர்.
இரும்புக் கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு மீட்பு ; மன்னாரில் அதிர்ச்சி
06/12/2018 மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது 112 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது.
இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்றைய தினம் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று பகல் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுகக் கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த மக்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது
இதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இறுக்கலாம் என காணாமல் போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று கண்டு பிடிக்கப்பட்ட இரும்பு கம்பியால் கட்டப்பட்ட மனித எச்சம் என்னும் சந்தேகத்தை வழுப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடைய பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன.
இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 256 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 250 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இலங்கைக்கு அமெரிக்கா கடும் அழுத்தம்- நாய்சண்டையில் யாருக்கும் ஆதரவில்லை
06/12/2018 இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடியால் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கையின் அரசியல் தலைவர்களை தற்போதைய நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் சகா மற்றும் நட்பு நாடு என்ற அடிப்படையில் அரசியல் நெருக்கடிக்கு உடனடியான வெளிப்படையான ஜனநாயக வழிமுறையிலான தீர்வை காணுமாறு நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் மோதலில் யார் வெற்றிபெறவேண்டும் என்பது குறித்து நாங்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை (We have no dog in this fight) அரசியல் மோதலில் யார் பக்கமும் நாங்கள் நிற்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பு நடைமுறைகளை மதிக்கும், வெளிப்படையான, சட்டபூர்வமான அரசாங்கத்தை உருவாக்கும் முடிவையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான புதிய தூதுவராக பணியாற்றிய பின்னர் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ள டெப்பிலிட்ஸ் இலங்கையின் அரசியலமைப்பின் வரையறைக்குள், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இலங்கையின் அரசியல் தலைமைத்துவத்தையும் ஜனாதிபதி சிறிசேனவையும் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு பொறுப்புணர்வுடன் தீர்வை காணுமாறு கோரியுள்ளோம் இதன் மூலம் இலங்கையில் அரசமைப்பினால் ஆணைவழங்கப்பட்ட அரசாங்கம் ஆட்சி செய்கின்றது , ஜனநாயக ஸ்தாபனங்கள் மதிக்கப்படுகின்றன என்பது தெளிவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் கௌவரத்தை மீள ஏற்படுத்தவேண்டும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் இலங்கை முன்னோக்கி செல்வதற்கு இது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியான அரசியல் நிலவரம் காணப்பட்டால் அது இலங்கையின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய விளைவுகள் உருவாகியுள்ளன என தெரிவித்துள்ள தூதுவர் இலங்கையின் ஜனநாயக அரசியல் ஸ்தாபனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் குறி;ப்பிட்டுள்ளார்.
அரசியல் ஸ்திரமின்மை முதலீட்டாளர்களிற்கு ஆபத்தான செய்தியை தெரிவிக்கின்றது இதன் காரணமாகவும் அரசியல் ஸ்திரதன்மையை மீள ஏற்படுத்துவது முக்கியம் என அவர் தெரிவி;த்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி முடிவிற்கு வந்த பின்னர் பல விடயங்களிற்கு எவ்வாறு தீர்வை காணப்போகின்றீர்கள் என்பது மிகச்சவாலான விடயமாக அமையப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதில் வெற்றியடைந்தாலும் இலங்கை தனது சர்வதேச சகாக்களிற்கும் முதலீட்டாளர்களிற்கும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு சிறிது காலம் பிடிக்கும் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் நிலைமை பாரதூர கரிசனையை அளித்துள்ளதன் காரணமாக இலங்கையுடனான எம்சிசி முயற்சியை முன்னெடுக்கும் திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
சட்டத்தின் ஆட்சியை மதிக்கவேண்டும் மற்றும் நல்லாட்சி அவசியம் என்ற அடிப்படையில் நாங்கள் இதனை இடைநிறுத்தியுள்ளோம், இது குறி;த்த பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் தற்போதைய நெருக்கடிக்கு எவ்வாறான தீர்வு காணப்படுகின்றது என்பதை பார்ப்பதற்காக காத்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இலங்கையின் தற்போதைய நெருக்கடி சிறிய காலமே நீடிக்கும் தற்போதைய நிலையை மாற்றியமைக்கலாம் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவி;த்துள்ளார்.
சட்டபூர்வமான வெளிப்படையான ஜனநாயக ரீதியிலான நடைமுறை மூலம் உருவாகக்கூடிய எந்த அரசாங்கத்துடனும் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளது என தூதுவர்வர் குறிப்பிட்டுள்ளார்
சட்டபூர்வமான அரசாங்கத்துடனான நட்பே எங்கள் கரிசனைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
எங்கள் எதிர்பார்ப்புகள் குறித்து வெளிப்படையாக இருப்பதும் எங்கள் சகாவும் நட்பு நாடுமான இலங்கை குறித்த எங்கள் அபிலாசைகளை வெளிப்படுத்தவதும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகாது என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் நன்றி வீரகேசரி
மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி
08/12/2018 நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீல.சு.க. வின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியனவே இவ்வாறு புதிய கூட்டணியில் ஒன்றிணையவுள்ளன.
குறித்த புதிய கூட்டணியானது இடம்பெறப்போகும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றித்துச் செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
வவுணதீவு பொலிஸார் கொலை சம்பவம் : மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
08/12/2018 மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
"டொலர்களுக்கு சமாதானத்தினை அழிக்காதே", "வடகிழக்கின் அமைதியில் கை வைக்காதே", "சமாதானத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டத்தினை நடைமுறைப்படுத்து", "சமாதானத்தினை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றுகூடுங்கள்" போன்ற வாசகங்களை தாங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது பொலிஸாரின் படுகொலைக்கு எதிராக பல்வேறு கோசங்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களினால் எழுப்பப்பட்டது.
கொலையாளிகள் தங்களது தவறை உணர்ந்து சரணடைந்து இயல்பு நிலையினை ஏற்படுத்தமுன்வரவேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறா வண்ணம் உரிய தரப்பினர் செயற்படவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது நன்றி வீரகேசரி
அதிகாரத்தை தக்கவைக்க மைத்திரி - மஹிந்த சூழ்ச்சி : 19 ஆவது திருத்தம் மீது குறை
08/12/2018 "சட்ட விரோதமாக இடம்பெற்ற பிரதமர் நியமனத்தினைத் தக்கவைப்பதற்கான மைத்திரி – மஹிந்த தரப்பினரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளமையினால், முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவுள்ள 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் குறைகூற ஆரம்பித்துள்ளனர்" என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு 19ஆம் அரசியலமைப்புத் திருத்தமே காரணம் எனவும், அதன் உள்ளடக்கங்கள் தெளிவானதாக அமையவில்லை எனவும், எனவே 19ஆவது அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மைத்திரி – மஹிந்த தரப்பினர் பரவலாகக் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் வினவிய போதே அகில விராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அகில,
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் 2015ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் அதுவரை காலமும் நாட்டின் ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தில் மட்டுப்பாடுகளை ஏற்படுத்தியதுடன், பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் அமைந்திருந்தது.
அதற்கு அன்று ஆதரவளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ஆதரவு அணியினர் தற்போது 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மீது குற்றம் சுமத்துகின்றனர். நன்றி வீரகேசரி
வெள்ளத்தில் மூழ்கிய தொண்டைமானாறு
08/12/2018 அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியூடான போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மிக நீண்ட காலமாக புனரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் குறித்த வீதியை வெள்ளம் முழுமையாக மூடியதால் அவ்வீதியூடாக பயணம் செய்பவர்கள் மரண பயத்துடன் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவ்வீதியால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவி ஒருவர் வெள்ளத்திற்குள் மறைந்திருந்த குழியில் மாட்டி விபத்துக்குள்ளாகியிருந்தார்.
மேலும் வழி இலக்கம் 751,766,767 ஆகிய பயணிகள் பஸ்களும் ஆபத்தான நிலையில் அவ் வீதியூடான பயணத்தினை மேற்கொண்டு வருகின்றன.
தொண்டைமானாறு துருசு புனரமைப்பின் போது அமைக்கப்பட்ட மண் மேடு உரிய முறையில் அகற்றப்படாதமையினாலேயே அங்கு தேங்குகின்ற நீர் வழிந்தோடமுடியாத நிலை காணப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் வலி.கிழக்கு பிரதேச சபை துரித நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்
09/12/208 மனித உரிமை தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட வர்த்தக தொழில் பொதுதொழிலாளர் சங்கத்தினரால் தொழில் புரியும் இடங்களில் ஆண் பெண் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இடம்பெற்றது.
தொழில் புரியும் இடங்களில் ஊழியர்கள் மீதான வன்முறையை நிறுத்து எனும் தொணி பொருளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உரிமைகள், பெண்கள் மீதான வன்முறை, வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துதல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி குறித்த போராட்டம் இடம்பெற்றது. நன்றி வீரகேசரி
வவுணதீவு சம்பவத்தை கண்டித்து சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம்!!
09/12/2018 அண்மையில் இரு பொலிஸார் சுட்டு கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிதித்து சித்தாண்டியில் ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'யுத்தம் வேண்டாம் சமதானமே வேண்டும்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பட்ட பேரணி சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றில் இருந்து ஆரம்பமாகி சிதத்தாண்டி பொதுச் சந்தை வரை சென்று மீண்டும் சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.
ஆர்ப்பாட்டப் பேரணியில் சுமார் 500 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ.ஜெயசுந்தரவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment