" ஒரு பெண் குழந்தையைப் படிப்பித்தலே ஒரு நாடு செய்யக்கூடிய சிறந்த மூலதனம்"
" நம் மரபு பற்றி நமக்கே
ஒரு பெருமை இருக்க
வேண்டும் "
அருண். விஜயராணி நேர்காணல் - புரிதலும் பகிர்தலும்
( இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழின் ஆசிரியர் தி.
ஞானசேகரனுக்கு 1999 இல் அருண். விஜயராணி வழங்கிய நேர்காணல். புரிதலும் பகிர்தலும் தொகுப்பில்
வெளியானது. 16-03-1954 ஆம் திகதி இலங்கையில் உரும்பராயில் பிறந்த விஜயராணி செல்வத்துரை இலக்கியவாதியானதன் பின்னர், அருணகிரி அவர்களை மணந்து அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதிவந்தவர். அவுஸ்திரேலியத்
தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகிய அமைப்புகளின் தலைவராகவும்
பணியாற்றிய கலை, இலக்கிய சமூக தன்னார்வலர். கடந்த 13-12- 2015 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில்
மறைந்தார்.
எதிர்வரும் டிசம்பர்
13 ஆம் திகதி அருண். விஜயராணியின் மூன்றாவது
நினைவு தினம். அவரை நினைவு
கூர்ந்து மீண்டும் இந்த நேர்காணலும் பதிவாகிறது. )
கேள்வி: இலங்கையிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்து
தற்போது அவுஸ்திரேலியாவில் குடியேறியிருக்கிறீர்கள். இம்மூன்று நாடுகளிலும் தங்கள் வாழ்வு அனுபவங்கள் எழுத்தாளர் என்ற நிலைமையில் எவ்வாறு அமைந்துள்ளன ?
பதில்: " இலங்கை
விஜயராணியே நான் ரசிக்கும் எழுத்தாளர். கன்னிப் பெண்ணாக இருந்து படைத்த படைப்புகள் தைரியமானவை. போலித்தனம் இல்லாதவை. யாருக்கும் பயப்படாமல் எழுதிய எழுத்துக்கள். திரும்பிய பக்கம் எல்லாம் இலக்கியம் பேச மனிதர்கள் இருந்தார்கள். கருத்துச் சுதந்திரம் இருந்தது. (சில அரசாங்கக் கட்டுப்பாடுகளைத் தவிர) மாற்றுக் கருத்துக்கள் பலவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களும், அவற்றை முன்வைக்க மாறுபட்ட கருத்துடைய பல பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி என்று அங்கு
ஓர் இலக்கிய
உலகமே
இருந்தது. எனவே
நாம் சுழல
விரும்பாத உலகத்தை ஒதுக்கி விட்டு இலக்கிய உலகில் மூழ்கித்
திளைக்க அது
வசதியாக அமைந்தது.
என்
துணிச்சலான எழுத்துக்களைத்
தட்டிக் கொடுத்து வளர்த்தவர், என்றுமே என் நன்றிக்குரிய மறைந்து விட்ட வீரகேசரி வாரவெளியீடு, தினக்குரல் ஆசிரியர் அமரர்
ராஜகோபால் அவர்கள். அவருடன் என் எழுத்துக்களை ரசித்துக் களம்
அமைத்துக் கொடுத்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் மல்லிகை ஜீவா போன்ற
ஆசிரியர்களும் என்
எழுத்து தைரியமாக வெளிவர உதவி செய்தவர்கள். எனவே குடும்பச் சுமைகள் அற்ற
கன்னிப்
பருவத்தில்
கதை,
கட்டுரை,
நாடக
விமர்சனம்
எனப்
பலவற்றைப்
படைக்கக்
கூடியதாக
இருந்தது.
நேர்மையான விமர்சனங்களைச்
சந்தித்தபோது
மேலும்
மேலும்
எழுத
வேண்டும்
என்ற
ஆசை
ஏற்பட்டுக்
கொண்டிருந்தது.
இலண்டனில்
வசிக்கும்
பொழுது
நிலைமை ஒரு குடும்பத் தலைவியாக உருமாறியிருந்தது. கடமைகளின்
சுமையோடு இயந்திரமயமான அந்த நாட்டில் இயந்திரமாக நாமும் மாற வேண்டிய துர்ப்பாக்கியம். இலக்கியம் பேச யாராவது கிடைக்க மாட்டார்களா ? என நானும், கணவரும் ஏங்குவோம். 1983 களில் அங்கு இலக்கியம் என்பது இல்லை
என்பது போல, பணம்
சேர்ப்பது ஒன்றே
வாழ்வின் குறிக்கோள் என்பது போன்று எல்லோரும் பறப்பதுபோல் எனக்குப்பட்டது. நாடுவிட்டு இன்னொரு நாட்டுக்கு வந்துவிட்டமையால் வாழ்க்கையை
அமைத்துக்கொள்ள அவர்கள் அப்படிப் பறப்பதும் நியாயமாகக் கூறப்பட்டது. எனவே வாழ்க்கையின் உயிர்த் துடிப்பான சிலிர்ப்புக்களைத்
தரும் இலக்கியத்தை எந்த ரூபத்தில் காணவும் மனமில்லாத, நேரத்தை ஒதுக்க அக்கறைப் படாத ஒரு தன்மை அங்குள்ளவர் மத்தியில் பரவியிருந்தது. இருந்தும் சிறிது காலத்தின் பின் நவசோதி அவர்களின் முயற்சியினால் சிந்து என்றொரு சஞ்சிகை மூலம் லண்டனில் இலக்கிய வளம் சேர்க்க முனைந்தோம். ஆயின், சினிமாவைப் பற்றி எடுத்துரைக்கும் சஞ்சிகைகளையும் மலிவுப் பதிப்புகளையும் கொண்டு திரிந்த நம் நாட்டார், நம்
இலக்கியம் குறித்துக் காட்டிய அலட்சியம் நவசோதியின் மனதை
நோகவைத்தது.
இதில்
வியப்பென்னவென்றால்,
அலட்சியம் செய்தவர்களில்
பலர் லண்டன் தமிழ் பாடசாலையில் நம் சிறார்களுக்கு தமிழ் படிப்பித்தவர்கள். ஈழப் பெருமை
பேசுபவர்கள். நவசோதியின் மறைவுடன் சிந்துவும் வெளிவருவது நின்று விட்டது. நம்மவரின் போலித் தமிழ் பற்றும் நாட்டின் சௌகரியங்களையும்
சட்ட
திட்டங்களையும் தமக்குச்
சாதகமாக்கிக் கொள்ளும் தந்திரங்களும் மனதை
நோகவைக்க, சில
சிறுகதைகள் என் பேனாவில் மலர்ந்து இலங்கைப் பத்திரிகையில் பிரசுரமாகின. அவற்றில் அனைவராலும் பாராட்டப்பட்டது " அவசரம்
எனக்கொரு மனைவி வேண்டும்"
என்ற சிறுகதை. பல
மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் அதைக் குறுநாவல் ஆக்கும்படி என்னை
அன்புடன் பணித்துள்ளார்கள். இப்போது நிலைமை அங்கு முற்றிலும் மாறுபட்டுள்ளதை அண்மையில் லண்டன் சென்ற போது புரிந்து கொண்டேன்.
பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் பார்க்கப் பரவசமாக இருந்தது. நகைகள், சேலைகள், கார்,
வீடு என்ற வட்டத்தில் ஒரு பகுதியினர் இன்னமும் சுழன்றாலும் இன்னொரு சாரார் இலக்கிய உலகை நன்கு சமைத்த வண்ணம் இருக்கிறார்கள். இதற்கு சான்று பகர்கிறது திரு.பத்பநாப ஐயர் பதிப்பாசிரியராக இருந்து வெளிவந்திருக்கும் " இன்னுமொரு காலடி" என்ற
மலரும் அதன் பின்னர் தொடர்ந்துவந்த மலர்களும். 1989 ஆம்
ஆண்டு அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் குடியேறினேன். அந்த நேரம் கோயில்களோ, அன்றில் இலக்கிய மன்றங்களோ இல்லாதது மீண்டும் ஒரு ஏமாற்றத்தை தந்தது. எனினும் ஒரு மணித்தியாலத் தமிழ் வானொலி சேவையில் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. ஏற்கனவே இலங்கை வானொலிக்கு நிகழ்ச்சிகளைப் படைத்த காரணமாக, இங்கும் கதை, கட்டுரை, இலக்கியச் சுவை
என்பனவற்றைத் தயாரித்துக்
கொடுத்தேன். நான் வதியும் மெல்போர்ன் நகரில் இலக்கியத்தை விட உரிமைப் போராட்டமே முக்கிய இடத்தை வகிக்கின்றது.
மகாத்மா காந்தி எனது முன்னோடி. அவரது அகிம்சை வழியே
நான் மதிக்கும் வழி.
எனவே உயிர்க்
கொலைகளை எந்த விதத்திலும் என்னால் நியாயப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக, தனித்துவமாக நிற்கவேண்டிய ஒரு நிலை.
வெறும் அரசியல்
சங்கம் கொண்ட
நகரில் சில
இலக்கிய
நண்பர்களின் துணையுடன் "
அவுஸ்திரேலியத் தமிழர்
ஒன்றியம்" என்ற
அமைப்பை நிறுவி, இலக்கியம் பரப்பினோம். முத்தமிழ் விழா, ஏடு
தொடங்கல், மனனப்
பேச்சுப் போட்டிகள், நாடக - நடனப்பட்டறைகள், கலை
விழாக்கள், பாரதி
விழா, இலக்கியக் கண்காட்சிகள் என்பவற்றை நடைபெறச் செய்தோம். 'அவுஸ்திரேலிய முரசு' எனும்
சஞ்சிகையை வெளிக் கொணர்ந்தோம். அதன் ஆசிரியராக நான் பணிபுரிந்தேன்.
மக்கள் மத்தியில் தமிழ் மணம் கமழ ஆரம்பித்த பொழுது எங்கே தம் அரசியல் செல்வாக்கு மங்கி விடுமோ, நேர்மையான விமர்சனங்கள் வெளிவந்து தவறுகளைச் சுட்டிக்காட்டும் சஞ்சிகையாக இருப்பதனால் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடுமோ என்ற ஆதங்கத்தில் பலர் தம் எண்ணிக்கையின் பலத்தினால் மக்களைச் சென்றடையும் பல தொடர்பு சாதனங்களை தம் வசமாக்கி தம்
கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டார்கள். அத்துடன் நம் பக்கத்திலும் சில இலக்கிய நண்பர்கள் சோர்ந்து விட்டமையினால் பல
இலக்கியத் தொண்டுகளை ஆற்ற எண்ணியும் முடியாமல் போய்விட்டது.
முகஸ்துதி விமர்சனங்களும் தவறுகளை நியாயப் படுத்துவதும் சிறு வயதில் இருந்தே எனக்குப் பிடிக்காதன. சில நிகழ்ச்சிகளுக்கு நடுவர்களில் ஒருவராகப் பணிபுரிய என்னை
அழைத்துவிட்டு அமைப்பாளர்கள் நடுநிலைமையின்றி நடந்து கொள்ளும்போது என் மனச்சாட்சி படும் பாடு அந்த ஆண்டவன் மட்டுமே அறிவான். புகழுக்காக பேனா பிடிப்பவள் அல்ல நான்.
எனவே இவை பல நல்ல விஷயங்ளைச் சாதிப்பதுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றதே தவிர என்
எழுத்தைப் பாதிக்கவில்லை. தமிழ்
இலக்கியத்துக்கு என்னால்
இயன்றளவு பங்களிப்பை இங்கு செய்து கொண்டு இருக்கிறேன்.
எழுத்துச் சுதந்திரம் கொண்ட நாட்டில் வாழ்ந்தும் சுதந்திரமாக எழுத முடியாமல் இருப்பது எவ்வளவு துக்கம் என்பதை அந்த நிலையில் உள்ளவர்களால்
தான் புரிந்து கொள்ளமுடியும். எனினும் பெண்களுக்கான சில நல்ல
விடயங்களைச் செய்யும் எண்ணம் உண்டு. பிள்ளையார் அருளில் காலப்போக்கில் அது நிஜமாகலாம்.
கேள்வி: வழக்கமாக இலக்கியப் படைப்பாளிகள் தமது நூல்களை பெற்றோருக்கு
, சகோதரர்களுக்கு, நண்பர்களுக்கு, சக படைப்பாளிகளுக்கு அர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால், உங்களுடைய முதலாவது சிறுகதைத் தொகுதியான ' கன்னிகாதானங்களை’பிள்ளையாருக்குச் சமர்ப்பித்திருக்கிறீர்கள்!!!.
இது
குறித்து உங்கள்
விளக்கம் என்ன..?
பதில்: அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள். நான் அந்தக் கூற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவள், பிள்ளையார் பால்
நிறைந்த பக்தி
கொண்டவள். பாரதியார் கண்ணன் பாடலில் கண்ணனை நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய் என்று பாடிச் செல்வதுபோல் பிள்ளையார் என் வாழ்வின் எல்லாமாக இருப்பவர். என் வாழ்க்கையில் எந்த ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்தாலும் மனம் முதலில் நன்றி கூறிக்கொள்வது பிள்ளையாருக்கே. அதேபோல் துக்கம் ஏற்பட்டால், கோபம் கொள்வதும் அவரிடம்தான். சிறு வயது தொட்டு என் வாழ்க்கை கொழும்பில் கழிந்தாலும் விடுமுறையில் உரும்பராய் செல்லும்போது அங்குள்ள கற்பகப் பிள்ளையார் கோயிலில் மெய்சிலிர்த்துப் பல
மணி நேரம் நின்றதுண்டு.
என்
பெற்றோர்கள் அக்கோயில்
பால் மிகுந்த ஈடுபாடு கொண்டு எம்மையும் ஈடுபட வைத்தார்கள். கற்பகப்பிள்ளையார் கோயிலை மிகவும் சிறப்படையச் செய்ய வேண்டுமென மனதில் விதம் விதமாக ஆசைகள். ஆயினும் சூழ்நிலை என் வாழ்வை வெளிநாட்டில் கொண்டுவந்து முடித்திருக்கிறது. என்
வாழ்வின் எல்லாமாக
விளங்கும் கற்பகப் பிள்ளையாருக்கே என் முதல் சிறுகதைத் தொகுதி சமர்ப்பணமாகி அதன் லாபமும் கோயிலுக்கே சேரவேண்டுமென ஆசைப்பட்டேன். அத்துடன் பெற்றோர்களே உலகம் என வலம் வந்த விநாயகருக்கு என் தொகுதியினை சமர்ப்பித்தது, என்
பெற்றோர்களுக்கும் சேர்த்து
அர்ப்பணம் செய்த நிறைவினைத் தான் எனக்குத் தருகின்றது.
கேள்வி: பெண்
விடுதலை, பெண்
நிலை
வாதம், பெண்ணியம்
என்று பெண்களின் உரிமைப் பிரச்சனைக்கு பல உருவங்கள் வழங்கப்படுகின்றன. இது
குறித்து உங்களது
பார்வை என்ன..?
பதில்: பெண் விடுதலை, பெண் நிலைவாதம், பெண்ணியம் என்ற எல்லாமே
பெண்களுக்கு முன்னேற்றத்தையும் உரிமைகளையும் பெற்றுத் தர முனையும் விடயங்கள் தாம். சூழ்நிலைகள், சமூக அமைப்புக்கள், தேவையற்ற கட்டுப்பாடுகள், பொருளாதாரம் இப்படிப் பெண்ணை அடிமைகளாக
வைத்திருக்கப் பல காரணங்கள். தன் சுயமான அறிவில், சிந்தனைத் திறனில் இயங்கித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு தன்மை கொண்ட வளாகப் பெண்ணைப் பலப்படுத்தாமையே இதற்கு முக்கிய
காரணம். 'ஒரு பெண் குழந்தையைப் படிப்பித்தலே ஒரு நாடு
செய்யக்கூடிய சிறந்த
மூலதனம் என்கிறார் மரீஸ்
ஓரோக் என்பவர். (Maris
O'Rourke - Director Of Education For The
World Bank) அத்துடன் அது
அவளை மட்டுமல்ல அவளது கல்வியறிவு ஒரு சமூகத்தையே மாற்றியமைக்க உதவுகின்றது
என்கிறார்.
எத்தனை பேர் இது
பற்றிச் சிந்தித்துப் பெண்குழந்தைகளுக்குக் கல்வியறிவு புகட்ட
எண்ணுகிறோம் ? பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் சிறு வயதிலேயே
சமைக்கவும் தம்பிப் பாப்பாக்களைப்
பராமரிக்கவும் அல்லவா 60 வீதம் குழந்தைகள் பிரயோசனப்
படுத்தப்படுகிறார்கள் கூடுதலான ஆசிய நாடுகளில்.
ஒரு பெண்ணின்
நிலை குறித்துத் தான் ஒரு தேசத்தின்
பெருமை பேசப்படுகிறது. ஆயின், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பல பெண்
பிரதம மந்திரிகள் , பல பெண் உயர் அதிகாரிகள்
பதவிகளில் இருந்தபோதும் கூட மற்றைய
நாடுகளை விட பெண்ணின்
நிலை மிகவும் தாழ்ந்திருப்பதும் இங்குதான்
என அறியும் பொழுது
எவ்வளவு வேதனையும் வெட்கமும். நாட்டுக்கு
நாடு மகளிர் அமைப்புக்கள்
பல இருந்தும் கூட, பெண்கள்
பொறுப்பான பெரிய பதவிகளில்
இருந்த போதும்கூட, பெண்களுக்கான அடிப்படை
உரிமைகளை அல்லது அத்தியாவசியக் கல்வியை
அவர்கள் பெறும் சட்டங்களை
அமுலில் கொண்டு வர முயற்சிக்காதது வருத்தத்துக்குரியது.
கடுமையான
சில தண்டனைகள் கொண்ட சட்டங்கள்
இயற்றப்பட்டிருந்தால் பெண் கல்வியறிவு
அற்று வீட்டில் வைத்திருக்கும் நிலைமை மாறியிருக்கலாம். " ஐயோ
என்னை விட்டுட்டுப் போட்டிங்களே, பிள்ளைகளை என்ன செய்யப் போகிறேன் " இப்படியான ஒப்பாரிகளைத்தான் நம் நாட்டில் கேட்கக்
கூடியதாக இருக்கிறது. அதை விடுத்து
கணவனது நினைவுகளை அசைபோட்டு
அழும் பெண்ணை விரல் விட்டு
எண்ணிவிடலாம். காரணம் பொருளாதாரத்
தேவை முழுவதுக்கும் ஒரு பெண், ஆணைச் சார்ந்து
நிற்கக் கூடிய தன்மையை நம் சமூக
அமைப்புக்கள் வைத்திருந்தமை. அது மட்டுமல்ல, ஆணைப் படிப்பித்தால்
போதும் பெண்ணுக்கு உயர்படிப்பு
எதற்கு ...? என்ற குறுகிய மனப்பான்மைகள். கணவன்
எவ்வளவு கொடுமையானவனாக இருந்தாலும்
பணிந்து போகச் சொல்லும்
போதனைகள். நியாயமான விவாகரத்தில் தனித்து
வாழும் பெண்ணை இன்னமும்
கீழான பார்வை பார்க்கும் நம் சமூக அமைப்புக்கள்.
சீதனம் கொடுத்து ஒரு பெண்
ஒருவனுக்கு மனைவியாக வேண்டிய
துர்ப்பாக்கியம் இப்படிப்பல.
ஆயினும்,
இவற்றில் பல வெளிநாட்டில்
புலம் பெயர்ந்த நம்மவரிடையே முன்னேற்றம் கண்டுள்ளன
என்றாலும், நம் ஆசிய நாடுகளில் பெண் அடிமைத்தனம் 90 வீதம் அப்படியே
இருப்பது பரிதாபத்துக்குரியது. பெண்ணுக்குப் பெண்ணே
எதிரியாக சீதனம் தராத மருமகளை அகால மரணமடைய
வைக்கும் மாமிமார்கள், வாழாவெட்டியாக்கும் மாமிமார்கள், நம் இலங்கை , இந்திய நாடுகளில்
தானே ஏராளம்.
விபச்சார விடுதிகள்
நடத்துபவர்கள்கூட கூடுதலாகப் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க,
பெண் தாய்மையுற்றவுடன் சில மாதங்களில் Ultrasound
மூலம் என்ன குழந்தை ?
எனத்தெரிந்து பெண் குழந்தையானால் கருவிலே
சிதைத்துவிடும் கணவன்மார்கள் வெளிநாட்டில் கூட இருக்கிறார்கள் என்பது
கேவலத்துக்குரியது. லண்டனில் இரண்டாவது குழந்தைப்
பேற்றுக்காக றோஸ்கலர் உடுப்புக்களுடனும் 'வியாபினி' என்ற பெண் குழந்தையின்
பெயரை மனதில் கொண்டும் நான் செல்ல, எனக்கு
என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்பதை
வைத்தியர்கள் கடை சி வரை சொல்ல மறுத்து
விட்டார்கள்.
பெண் குழந்தை எனத் தெரிந்ததும் ஒரு இந்தியப்
பெண் அதனை அழிக்க
முயன்றதே இதற்குக் காரணம்.
ஆயின்,
எமது வேண்டுதலையும் மீறி, எமக்கு ஆண் குழந்தையும், ஆண் குழந்தை
வேண்டுமென்ற ஓர் இந்தியப்
பெண்மணிக்கு பெண் குழந்தையும் ஒரே நாளில் பிறந்தன.
அந்த இந்தியப் பெண்மணி
தனக்குப் பிறந்தது மூன்றாவதும் பெண்குழந்தையே
என அறிந்ததும் தாய்ப்பால் கூட கொடுக்காது
இரவு முழுவதும் அழுது கொண்டிருந்ததாகவும், தான் அவள்
அருகிலேயே இருந்து ஆறுதல்
சொன்னதாகவும் நேர்ஸ் கூறி, ஏன்
பெண் பிள்ளை என்றால்
இப்படி வெறுக்கிறீர்கள்..? என என்னைக் கேட்ட போது, பெண் விடுதலையின் முதல் எதிரி யார்..?
என்ற சந்தேகம் என் மனதில்.
பெண் குழந்தை என்றால்
பாதுகாக்க வேண்டும், சீதனம் கொடுக்க வேண்டும்,
கணவனின் வெறுப்புக்கு உள்ளாகி வாழா வெட்டியாகிவிட்டால், மீண்டும்
தாமே பராமரிக்க வேண்டும்
என்ற தவறான எண்ணங்களும்தான் இன்னமும்
பெண்ணை கீழ் நிலைக்குத் தள்ளுகின்றன. பெண்கள்
மனதில் கூட. இல்லையாயின்
மதத்தின் பேரால் கொடுமை செய்யப்படும்
பெண்களின் வாழ்வுக்காகப் போராடி,
பெண் உரிமைக் குரல் எழுப்பிய
தஸ்லிமா நஸ்ரின் என்பவளின் மரணம் முன்
மொழியப்பட்ட போது, பங்களாதேஷ் ஜனாதிபதியாகவும் எதிர்க்கட்சித் தலைவியாகவும் இரு பெண்கள் தானே பதவி வகித்தார்கள்.
அது மட்டும் அல்ல பெண்ணின் கன்னித்
தன்மையையும் புனிதத் தன்மையையும் உறுதிப்படுத்த இன்னமும்
சில இடங்களில் மதத்தின் பேரால் சடங்குகள்
நடந்து கொண்டிருக்கின்றன. அதற்குத்
தாய் ஸ்தானத்தில் இருந்து பெண்ணே
உடந்தையாகவும் இருக்கிறாள். பெண்ணே பெண்ணை
உயர்வாக எண்ணும் மாற்றம்
மனதில் மலர வேண்டும்.
தனக்குப்
பிறக்கப்போவது பெண் குழந்தை
எனத் தெரிந்து கணவன் கருச்சிதைவு செய்ய நினைத்தால் அதை எதிர்த்து நிற்கும்
தைரியம், அதை வெளிஉலகிற்கு கொண்டுவரும்
தைரியம் , வளர்க்கக் கூடிய தைரியம் இவை பெண் மனதில்
ஏற்பட வேண்டும். திருமணம் என்பது
ஓர் ஆணையோ பெண்ணையோ முழுமையடையச்
செய்யும் ஓர் அநுபவம். சந்ததி தழைக்க
நம்மவர்களால் ஏற்படுத்தப்பட்ட கட்டுக்கோப்பான உறவுமுறை. இளமையிலும்
முதுமையிலும் தனித்து நிற்காமல்
இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் சாதனம்
என்ற வகையில் புரிந்து கொள்ள
வேண்டுமே தவிர, அதுவே உலகமாக அதை விடுத்து
உலகில் ஒன்றுமேயில்லை என்பது
போல பெண் நினைக்கத் தலைப்படுவதும் அடிமைச்
சாசனம் எழுதிக் கொடுத்ததைப்
போல நடந்து கொள்வதும் தான் கூடிய அடிமைத்தனத்துக்கு வழிகோலுகின்றது.
எனவே கல்வியறிவும்,
தானே தன் காலில்
நிற்கக் கூடிய தைரியமுமே பெண் விடுதலையின்
ஆரம்பக்கட்டங்கள் என்று நான் கருதுகிறேன்.
கேள்வி: உங்களது
படைப்புகளின் ஊடாக பெண்களின்
விவகாரங்களை எவ்வாறு அணுகுகின்றீர்கள்..?
பதில்: ஒரு பெண்ணாக
இருப்பதினால் பெண்ணினது உணர்வுகளை அவர்களது செயல்களை
கூடுதலாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
சில பெண்கள் தாமே முன் வந்து தம் துயரை என்னுடன்
பகிர்ந்து கொள்வதன் மூலம் ஆறுதல் அடைகிறார்கள்.
பல பெண்களோடு பழகுவதன்
மூலம் அவர்களது பிரச்சினை தெரிகிறது.
தெளிவாகிறது. அப் பிரச்சினைகள் கதைகளாகவோ, அன்றில்
கட்டுரைகளாகவோ கற்பனை வடிவத்தில் வெளிவந்து பிரச்சினைகளை
மற்றவர்களுக்கு இனம் காட்டுகின்றது. நான் என் தொகுதியில்
குறிப்பிட்டது போல, என் ஒவ்வொரு கதைக்கும் பின்னால் ஒவ்வொரு
உண்மையான கதை உண்டு.
அவை பெண்ணைப் பற்றியதாக இருக்கும்
பட்சத்தில் சில சமயம் அவளது துயரை அப்படியே
முன் வைக்கின்றேன். சில சமயங்களில் என்னை அந்தப் பெண்ணின் ஸ்தானத்தில் நிலை நிறுத்தி நான் ஆகும் பட்சத்தில்
எப்படி அந்தப் பிரச்சினையைக் கையாண்டிருப்பேன் என்று
கோடு காட்டுகின்றேன்.
என் கதைகளில் உலவும்
'வித்யா' என்ற பெண் பாத்திரம்
நான் காண விரும்பும் புதுமைப்
பெண்ணின் விம்பம். 'விவகாரங்கள்'
என்ற உங்கள் பதத்தை எடுத்துக்
கொள்ளும்போது, பெண் செய்வது
எல்லாமே சரி எனத் தலையாட்டி விடுபவள்
அல்ல நான். அளவுக்கதிகமான
சுதந்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு
தலைகுனியும் படியான பல காரியங்களை நம் பெண்கள்
வெளி நாடுகளில் செய்வதையும், அதற்குப் பெண் விடுதலையைச் சாக்காகக்
கொண்டு நியாயப்படுத்துவதையும் பார்க்கும் பொழுது வேதனையாகவும், அவமானமாகவும்
இருக்கின்றது. இவைகளைக் கண்டித்து எழுதுவதற்கும்
தயங்குவதில்லை. ஆயின், ஒரு பெண்ணுக்குரிய அடிப்படை
வசதிகள் அமைத்துக் கொடுத்துள்ள வெளிநாட்டில் வாழ்ந்தும்
கூட ஓரிரண்டு பெண்கள் மெல்போர்னில் தற்கொலை செய்து
கொண்டுள்ளார்கள்.
காரணம்
குடும்பப் பிரச்சினை. கணவனது அன்பு வேறு பெண்பால் திரும்பிவிட்டமை. சிந்தித்துப்
பார்த்தால் எவ்வளவு அற்ப விடயங்கள்.
இப்படி ஆண்கள்தாம் தமது பலம் எனப் பெண்கள் நிரூபிப்பதுதான் பெண்ணின் நிலை இன்னமும் தாழ்ந்து
கொண்டிருப்பதுக்குக் காரணம். ஜேர்மன், கனடா,
சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நம் பெண்களின்
நிலை பற்றிக் கேட்கவே
வேண்டாம். நஞ்சருந்துதல், புகையிரத வண்டிக்குள் தலையைக்
கொடுத்தல், தூங்கிச் சாதல்.
ஆசிய நாடுகளில் இருந்து வரும் பல
பெண்களுக்கு வெளிநாட்டில், பெண்களுக்காக அமைந்துள்ள அடிப்படை
வசதிகள் புரிவதில்லை. எனவே மகளிருக்கான
அமைப்புக்கள் எழுதுவதோடு நேரடியாக
அவர்களிடையே செல்ல முடியுமாயின் அவர்களது
பிரச்சினையைக் கேட்டறிந்து அதற்கான தீர்வைக் காணலாம்.
இப்படியான
தற்கொலைகளைத் தடுக்கலாம். என்வரையில் எனக்குத்
தெரிந்த பெண்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டால் கூடிய
வரையில் தலையிட்டு அவற்றைத்
தீர்க்க முயல்கின்றேன். இந்த நேர்காணலைப் படித்துவிட்டு, வெளி நாட்டுப் பெண்கள்
தமது பிரச்சினையை என்னிடம் சொல்ல விரும்பினாலோ அல்லது
எழுத்து வடிவத்தில் தர விரும்பினாலோ,
என்னோடு தொடர்பு கொள்ளலாம்.
கேள்வி: வேறு எந்த வகையில் பெண்களுக்கான பிரச்சினைகளை அணுகலாம் என நினைக்கிறீர்கள?
பதில்: மகளிருக்கான
அமைப்புக்கள் வெறுமனே தாங்கள்
சந்தித்துக் கொள்வதினால் பெரிய நன்மைகள்
நடைபெற்றுவிட முடியாது. ஜேர்மனியில் இருந்து
அண்மையில் மெல்போர்ன் வந்த தேவா என்பவர் தாம்
பெண்களுக்கான அமைப்பை தம் நாட்டில் நடத்தியும்
ஏராளமான தற்கொலைகள் எனக் கவலைப்பட்டார். இதற்கான
முக்கிய காரணமே, அவை தெளிவாக
விளம்பரப்படுத்தப்படாமை. இரண்டாவது இவர்கள் நேரடியாகப் பிரச்சினைக்குரியவர்களிடம் செல்ல முடியாமை. அடுத்து Counselling என்ற அமைப்புகள் இங்கு கூடுதலாக உண்டு.
இந்த அமைப்பில் பலதரப்பட்ட பிரச்சனைகளைக்
கையாள வேண்டிய பக்குவத்தை அறிவுபூர்வமாகச் சொல்லித்தரப்
பயிற்றப்பட்ட உத்தியோகத்தர்கள் (
Counsellors ) இங்கு அங்கம் வகிப்பார்கள். இவ்வமைப்பு நம்நாட்டு
மக்களுக்கான தீர்வுகளை சொல்லித்
தருவது மிகவும் கஷ்டம் என நினைக்கிறேன். காரணம்
நம் வாழ்க்கை முறை முற்றிலும் அவர்களிடமிருந்து வேறுபட்டது.
எனவே நம் நாட்டுப்
பெண்கள் (இதயசுத்தி, மனித நேயம்,
இரகசியத்தை காப்பாற்றும் எண்ணம் கொண்டவர்கள் மட்டும்)
இப்படியான பயிற்சிகளைக் கைக்கொண்டு அப்படியான உத்தியோகத்தர்களாகப் பணியாற்றினால்
பல பெண்கள் உறவினர்களிடம் சொல்ல
முடியாத பல பிரச்சினைகளை
இவர்களிடம் கூறி ஆலோசனை பெற்று
தம் வாழ்வை இனிதே நடத்திச் செல்லலாம். இப்படிப்பட்ட உத்தியோகத்தர்களாகப் பயிற்றப்பட்ட
பெண்கள் மகளிருக்கான அமைப்புக்களில் அங்கம்
வகிப்பதும் நன்று.
பெண்களுக்கு மட்டுமல்லாது,
எல்லாத் தரப்பினருக்கும் இவ் அமைப்புக்கள் நன்மை
பயக்கும். நம் இலங்கை
நாட்டில் கூட இப்படியான
அமைப்புக்கள் அமைக்கப்படுவது வரவேற்பதற்குரியது. நன்மை பயக்கும்
என்றே நான் கருதுகின்றேன்.
கேள்வி: இன்று
உலகம் வேகமாகப் பல துறைகளிலும் மாறிக் கொண்டிருக்கிறது. மக்களின்
வாழ்க்கையில் பாரிய மாற்றங்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மரபு வாதியாக
வாழ விரும்பும் தாங்கள் இந்த
மாற்றங்களை எவ்வாறு உள்வாங்கிக்
கொள்கிறீர்கள்..?
பதில்: பாலையும்
நீரையும் பிரித்து உண்ணும்
அன்னப்பட்சி நம் வாழ்க்கையைக் கொண்டு
நடத்த ஒரு நல்ல வழிகாட்டி. எதிலுமே
எங்குமே நல்லவற்றை எடுத்துக்கொண்டு தீயவற்றைத்
தள்ளி விட்டோமேயானால் கவலையில்லை. அந்த விதத்தில் பார்க்கப்
போனால் நம் மரபில் கூட ஒரு சிலதான் தவிர்க்கப்படல் வேண்டும்
என்ற பதத்தினுள் அடைபடுகின்றன. அமைதியான காலை நேரத்துக் கடவுள் வணக்கம் மனதுக்கு
நிம்மதியைத் தர மறுக்குமா..?
அன்றில் முற்றத்து மாக்கோலம் நெஞ்சை
நிறைப்பதை இல்லையென்று சொல்லி விட முடியுமா..? அழகான மாக்கோலம் நெஞ்சை
நிறைப்பதோடு, அரிசிமா பூச்சி புழுக்களுக்கு
உணவாகவும் அமைகின்றது. இங்கு அழகும் ஈகையும் ஒன்றாகப் பின்னிப்
பிணைந்திருக்கின்றன. இப்படியாகக் காலை எழுந்தது
முதல் கண் அயரும்
வரை நாம் கைக்கொள்ள
வேண்டிய கடமைகளை, அன்றில் பண்டிகைகளை,
சமயத் திருவிழாக்களை, உறவினர் வீட்டு
விசேஷங்களை, சடங்குகளை, எவற்றையுமே
ஓர் உள்ளார்ந்த அர்த்தத்துடன்தான் நம் 'மரபு
' சொல்கிறது. அமைதியான காலை
நேரத்துச் சின்னச் சந்தோஷம்
பல சந்தோஷங்களை நம் மனதில்
ஏற்படுத்த வழி வகுக்கின்றது
எனச் சொல்லித்தரும் நம்மரபு
நமக்குத் தெரிவதில்லை.
ஆயின்,
" அமைதியின்மை உன் வாழ்க்கையினைப்
பாழாக்கிவிடும். தியானத்தில் சில மணி நேரம் இருந்து
மனதை ஒரு நிலைப் படுத்து. யோகப் பயிற்சிகள் உடம்புக்கு
நன்று. சொந்த வீடுகளில் வாய்விட்டுக்
கதறி அழுவதன் மூலம் மனநிலை பாதிக்கபடாமல்
தவிர்த்துக்கொள்." என்பது போன்ற நம் மரபு விடயங்களை
வெளிநாட்டவர் பயின்று அதன் உயர்வை
விஞ்ஞான பூர்வமாக எடுத்துரைக்கும் பொழுது,
அதனை அவர்களிடமிருந்து நம்மவர்கள் கேட்டுத்
தெரிந்து கொள்வதுதான் வியப்பாக
இருக்கின்றது.
முற்றத்து
மல்லிகையான நம் மரபில்
பல அரிய விடயங்கள்
இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சில வேண்டத் தகாதவற்றைக்
கண்டுவிட்டு எல்லாமே ஒதுக்கப்பட வேண்டியவை
என்ற தவறான கண்ணோட்டம் நன்மை பயக்காது.
திருமணத்திற்குப் பின் கூடி வாழ்வதைத்தான் நம் மரபு
வலியுறுத்துகின்றது. ஒருவனுக்கு ஒருத்தி
என்ற உயரிய சுகாதாரமான கட்டுக்கோப்பான உறவு முறையைச் சொல்லித் தருகின்றது. ஆயின்,
அவற்றைப் பத்தாம் பசலித்தனம்
எனக் கூறிக் கொண்டு பலருடன்
திரிந்து, சிலருடன் கூடி வாழ்ந்து திருமணத்தை அமைப்பதன் மூலம்
எத்தனை அனாதைக் குழந்தைகள்
பாசமற்ற நிலையில், வலது குறைந்த
நிலையில் எத்தனை பேர் கடுமையான
நோயுற்ற நிலையில்.
" உன் மனைவியை
நேசி எயிட்ஸ் வருமா யோசி" இப்படியான
வாசகங்கள் இந்தியச் சுவரொட்டிகளில். இப்படியான
மரபு மாற்றம் தேவைதானா..? கூட்டுக்
குடித்தனங்கள் பல நன்மைகளைச்
செய்தன. வேறுபட்ட கருத்துக்கள் கொண்ட மனித வட்டத்தினுள்
மனிதன் சுழன்றதால் மற்றவனது கருத்தை
மதிக்கக் கற்றுக் கொண்டான்.
சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொண்டான். பகிர்ந்து
உண்ணும் பண்பை வளர்த்துக் கொண்டான்.
குடும்பத்தில் எழும் பல பிரச்சினைகள்
அங்குள்ள முதியவர்கள், அநுபவம்
வாய்ந்தவர்களால் தீர்த்து வைக்கப்பட்டன. 'சத்திரம்'
என ஒதுக்கி தனித்து
வாழும்பட்சத்தில் பல பிளவுகள். 'நாம்'
என்ற தன்மை போய் 'நான்'
என்ற சுயநலம் அங்கு உருவாகி விட்டது.
உறவினர்
வீட்டு விசேஷங்கள் என்றால்
கூட அங்கு வேற்றுமையுற்றவர் மனம்மாறக்கூட ஒரு சந்தர்ப்பமாக. இப்படியாக
நம் மரபு பற்றிய விளக்கங்கள் பல. மரபில் உள்ளவை
நல்லதாக மாறும் பொழுது
மனது சந்தோஷமடைகின்றது. தீயதாகத் திரும்பும்
பொழுது வேதனையாக இருக்கிறது. ஆயின்,
எங்கு வாழ்ந்த போதும்
எனது வாழ்க்கை மரபை ஒட்டியதாகத்தான் செல்கின்றது
என்பது மனதுக்கு நிறைவினைத் தருகின்றது.
இலங்கையில் வாழ்ந்த
போதும் ஜெட்டா, லண்டன்,
அவுஸ்திரேலியா எனப் பறந்த போதும்
கலாசாரத்தில் மாற்றமில்லை. ஜெட்டா
எனும் நகரில் (சவூதி அரேபியா) என் கணவருடன் இருந்தபோது,
அங்குள்ள நம் பெண்கள்
வெளியில் சேலை அணிந்து
கொண்டோ பொட்டு வைத்துக்கொண்டோ திரியமாட்டார்கள் என அறிந்தபொழுது வியப்பாக இருந்தது. அங்கு
இருக்கும் வரை சேலை அணிந்து கொண்டும்
நெற்றி நிறையக் குங்குமப்பொட்டு வைத்துக் கொண்டும் என் கணவருடன்
வீதியிலும் பல இடங்களிலும்
வலம் வந்தேன்.
என் கணவர் பூட்டிய
அலுமாரிக்குள் வைத்துக் கும்பிட்ட
சாமிப்படங்கள் எல்லாம் வெளியே வந்து அருள் பாலிக்கும்
நிலைக்கு உள்ளாகின. பொங்கலோ சித்திரை
வருடப்பிறப்போ நாட்களில் என் வாசலை
லண்டனிலும் இங்கும் நிறைத்த
மாக்கோலம் அயல்வீட்டு வெள்ளைக்காரர்களை 'லவ்லி'
எனத்தான் சொல்ல வைத்தது. இவற்றை எல்லாம் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்,
மற்றவர்களைப் புண்படுத்தாத வகையில் இடைஞ்சலாக
இல்லாத வகையில் நம் மரபைக் கொண்டு செல்லும் தைரியம்
நம்மவர்களின் மனதில் ஏற்பட வேண்டும். நம் மரபு பற்றி நமக்கே
ஒரு பெருமை இருக்க
வேண்டும். அது என் மனதில்
நிறையவே இருக்கின்றது. அதனைப்
பின்பற்றி வாழ்வதால் வாழ்வு நிறைவாகவும் இருக்கின்றது. மாற்றங்களை
விரும்பாதவள் அல்ல நான்.
நியாயமான
மறு மணத்தையும் விதவா விவாகத்தையும் சந்தோஷமாக உள்வாங்கிக் கொள்கிறேன் - மரபின் பாரிய மாற்றமாக. ஆயின்,
என் வாழ்க்கையை 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற ரீதியில் அமைக்க வேண்டும் என்பதில் நிறைவு
கொள்கிறேன் மரபு வழியில்.
இந்த வழியில்தான் 'மரபு' என் வாழ்வில் இடம் பெறுகின்றது. எனினும் இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் புலம் பெயர்ந்து
வாழும் நானும் கணவரும் மரபை ஒட்டி வாழ்வது
வியப்புக்குரியது அல்ல. ஆயின், வெளிநாட்டில் பிறந்த எம் குழந்தைகள் மரபைப் பின்பற்றி அதன்படி
வாழ்ந்தால் அதுதான் பாராட்டுக்குரியது
என நினைக்கிறேன்.
(நன்றி:
புரிதலும் பகிர்தலும் - நூல் மார்கழி 1999)
----0----
No comments:
Post a Comment