எங்கள் ஊரில் அரிவரி வகுப்பு
படித்த 1954 ஆம் ஆண்டு காலத்தில் எங்கள் பெரியரீச்சர் அம்மா ( இவர்களை இப்படி அழைப்பதுதான்
எனது வழக்கம்) திருமதி மரியம்மா திருச்செல்வம் சொல்லித்தந்த முதல் கதை காகமும் தண்ணீர் குடமும்.
தாகத்தினால் தண்ணீர் தேடி
அலைந்து வரும் காகம், ஒரு வீட்டு முற்றத்தில்
காணும் தண்ணீர் குடத்தை எட்டிப்பார்க்கிறது. அதன் அடிமட்டத்தில்தான் சிறிதளவு தண்ணீர்.
சமயோசித புத்தியினால் அருகில் கிடக்கும் சிறு
சிறு கூழாங்கற்களை தனது அலகால் பொறுக்கி எடுத்து குடத்தினுள் போடுகிறது. தண்ணீர் மட்டம்
உயர்ந்ததும் அருந்தி, தாகம் தணித்து பறந்துசெல்கிறது.
இக்கதை காட்சியாக வரையப்பட்ட
பெரிய ஓவியத்தை எமக்கு முன்னால் காண்பித்து அந்தக்கதையை ரீச்சர் சொன்னார்கள். அதனைக்கேட்ட
நாமும் அவர் முன்னிலையில் அதே கதையைச் சொல்லவேண்டும்.
இவ்வாறு எமக்கு சிந்தனையாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்த்தார்கள் எங்கள் அரிவரி வகுப்பு
ஆசிரியை.
ஆறு தசாப்தங்களுக்குப்பின்னர்
அவுஸ்திரேலியாவில் எனது பேரக்குழந்தை ஆண்யா, இதே கதையை எனக்குச்சொன்னாள். அவளுக்கு தற்போது ஐந்துவயதாகிறது.
மெல்பனில் இயங்கும் பாரதி பள்ளிக்குச்சென்றுவரும் பேத்தி என்னிடம் கதைகேட்பாள். நான்
அவளிடம் கேட்பேன்.
அவள் சொன்ன கதையைத்தான்
நானும் முதலில் பாடசாலையில் கேட்டேன். அவளும் இன்று அதே கதையை கேட்கிறாள். சொல்கிறாள்.
வீட்டில் குழாய் நீரிலும், இலங்கை சென்றால்
போத்தலில் நிரம்பிய சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும்
(Mineral
Water) அருந்துகிறாள்.
நான் வாழும் நகரத்திலும்
குழாய் நீர் சுத்தமாக இருந்தாலும் சுட வைத்துத்தான் அருந்திவருகின்றேன். வெளிப்பயணங்களில்
வெளியே விற்கும் தண்ணீர்போத்தலும் வாங்கி பயன்படுத்துகின்றேன். கிழக்குத்தீமோருக்குச்சென்று
திரும்பிய இலக்கிய நண்பர் நடேசன், "அங்கு பல்துலக்குவதற்கும் போத்தலில் வரும்
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்தான் பாவனைக்குள்ளது"
என்றார்.
எனது பால்யகாலத்துக்கதையும்
புகலிட வாழ்வுக்கதையும் இப்படி இருக்கையில், எமது தாயகம் இலங்கை பற்றிய அதிலும் குறிப்பாக வடமாகாணம்
பற்றிய தண்ணீரின் கதையை கொழும்பு ஊடகம் ஒன்றிலிருந்து தெரிந்துகொண்டேன்.
" அடுத்த ஐம்பது
வருடங்களில் மக்கள் முழுமையாக வெளியேற வேண்டிய அபாயத்தை யாழ். குடாநாடு எதிர்நோக்கியுள்ளதாக வடமாகாண
ஆளுநர் அலுவலக இணைப்புச்செயலாளர் சுந்தரம் டிவகலாலா தெரிவித்துள்ளார். எனத்தொடங்கும்
இச்செய்தியில், மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
குடிக்கத்தண்ணீர் இன்றி யாழ். குடாநாடு வனாந்தரமாக
மாறிக்கொண்டிருக்கிறது. வெளியிலிருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாவனை அதிகரித்து வருகிறது. இங்குள்ள நீர்த்தேக்கங்கள்
புனரமைக்கப்பட்டு, மழை நீர் சேமிக்கப்படவேண்டும். நன்னீர் நிலைகள் பாதுகாக்கப்படவேண்டும்.
ஆனால், அவை நடைபெறுவதில்லை. யாழ். குடாநாட்டின்
குடிதண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கு முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்படவேண்டும். புத்தி ஜீவிகள் இதைப்பற்றி சிந்தித்து செயற்படாவிட்டால்,
இன்னும் ஐம்பது வருடங்களில் யாழ். குடாநாட்டை விட்டு மக்கள் முழுமையாக வெளியேற வேண்டிய
துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்"
இலங்கையில் யாழ். குடாநாட்டிலிருந்து
உதயன், வலம்புரி, யாழ். தினக்குரல், காலைக்கதிர், எதிரொலி முதலான பத்திரிகைகளும் தென்னிலங்கையிலிருந்து
வீரகேசரி, தினகரன், தினக்குரல், தமிழ் மிரர் முதலான பத்திரிகைகளும் மட்டக்களப்பிலிருந்து
அரங்கம் என்ற பத்திரிகையும் வெளியாகின்றன.
தமிழ் ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக
வந்திருக்க வேண்டிய யாழ். குடாநாட்டின் எதிர்காலத்தை எச்சரிக்கும் தகவல், நான் வாசித்த ஊடகத்தில் ஒரு மூலையில் ஒரு சில பந்திகளுடன்
ஒதுங்கியிருந்தது! அதற்கு வைக்கப்பட்டிருந்த தலைப்பும் அதிர்ச்சியூட்டியது. " யாழ். குடாநாட்டு மக்கள் முற்றாக வெளியேற
வேண்டிய அபாய நிலை - பாலைவனமாக மாறுகிறது."
அகில இலங்கை கம்பன் கழகம்
நல்லூர் துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நடத்திய ஶ்ரீராம நாம காணாமிர்தம் இசைவேள்வி இறுதிநாள்
நிகழ்வில் தலைமையுரையாற்றியிருக்கும் வடமாகாண ஆளுநர் அலுவலக இணைப்புச்செயலாளர் சுந்தரம்
டிவகலாலா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அங்கிருக்கும் தமிழ்த்தலைவர்கள்
தங்கள் கட்சிகளையும் அவற்றின் தலைமைத்துவத்தையும் (கலைக்கப்படவிருக்கும் வடமாகாண சபையை
முன்னிட்டு) புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்
இத்தருணத்தில் , நாளைய முதல்வர் யார் என்ற கனவில் மூழ்கியிருக்கும் இவ்வேளையில்,
சுந்தரம் டிவகலாலா அவர்களை விடுத்துவிட்டு, புத்திஜீவிகளுக்கு மாத்திரம் அறைகூவல் விடுத்திருப்பதையும் இச்செய்தியில் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதுபற்றி என்னிடம் அடிக்கடி
அரசியல் வம்பு பேசும் ஒரு பெரியவரிடம் சொன்னேன். " எல்லாம் ஊழ்வினை! ஒருகாலத்தில்
அடிநிலை மக்களுக்கு குடிக்கத்தண்ணீர் கொடுக்காத பாவம்தான்." என்றார். இவர் இப்படிச்சொல்கிறாரே
என்று எனது மனைவியிடம் சொன்னேன்.
அதற்கு அவள், " இதுதான்
சயனைற் பேச்சு" என்றாள். அவளும் அண்மையில்தான் தனது வடமராட்சிக்குச்சென்று திரும்பியிருந்தமையால்
என்னை விட வடமராட்சி விதைத்த சயனைற் பற்றி
அதிகம் தெரிந்திருக்கும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
வித்தான இளம்தலைமுறைகளுக்கு
சயனைற்றை அறிமுகப்படுத்திய, தமிழினத்தின் எதிர்காலம்
குறித்த தீர்க்கதரிசனம் கொண்டிருந்த தேசியத் தலைவருக்கும் வடபகுதியின் தண்ணீர் பிரச்சினையின்
பூதாகரம் தெரியாமல் இருந்ததா?
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்
யாழ்ப்பாணம் வந்திருந்த இஸ்ரேல் விஞ்ஞானிகள் அங்கு எதிர்காலத்தில் தண்ணீர் உவர்ப்பாக
மாறும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்களாம்.
1970 களில் வவுனியாவுக்குச்சென்றிருந்தபோது
வாரிக்குட்டியூர் கிணற்று நீரை அருந்தினேன். சில நாட்கள் சலகடுப்பு உபாதையால் அவதியுற்றேன்
அதன்பின்னர் அங்கு சென்றால், தண்ணீர் விடயத்தில்
எச்சரிக்கையாக இருந்தேன். கடந்த வருடம் இந்தப்பிரதேசத்திற்கு சென்றிருந்தபோது அங்குள்ள
கிராமம் ஒன்றிலிருந்து மக்கள் படிப்படியாக வெளியேறியிருப்பது தெரியவந்தது. சிலர் சிறுநீரக
நோயினால் பாதிப்புற்று இறந்துள்ளார்கள்.
1970 காலப்பகுதியில் புங்குடுதீவில் கண்ணகி அம்மன்கோயில்
கிணற்றில் ஊற்றெடுத்த நன்னீருக்காக அங்குசென்ற அடிநிலை மக்களை மேல்சாதிமான்கள் தடுத்தனர்.
அதனைக்கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மூத்த எழுத்தாளர் மு. தளையசிங்கத்தை
பொலிஸை ஏவிவிட்டு தாக்கினர் அந்தச் சாதிமான்கள். அவர் சில மாதங்களில் அந்தத்தாக்குதலின்
பாதிப்பினாலேயே உயிரிழந்தார். அவரது இறுதி நிகழ்வில், மல்லிகை ஜீவா பேசும்போது
" இது மரணம் அல்ல! படுகொலை!!" என்று தர்மாவேசத்துடன் சொன்னார்.
1981 இல் நயினா தீவுக்கு,
பிறந்து சிலமாதங்களேயான எனது மூத்த மகளுடன் சென்றபோது, கோயில் கிணற்றடிக்கு வந்தேன். அங்கு இரண்டு யுவதிகள் பேசிக்கொண்ட உரையாடல் இது:
ஒருத்தி: " உங்களிடத்திலிருந்து
ஏன் இவ்வளவு தூரம் வந்து கோயில் கிணற்றில் தண்ணீர் எடுக்கிறாய்? அங்குதான் கிணறு இருக்கிறதே!?
"
மற்றவள்: " அங்கே
கண்டகண்ட சாதியெல்லாம் தண்ணி அள்ள வருது. அதிலபோய் எப்படி எடுப்பது?" இதனைக்கேட்டுக்கொண்டிருந்த
எனக்கு கோபம் வந்தது.
" ஏன் தங்கச்சிமார்
இப்படி பேசுகிறீர்கள். தண்ணீர் எடுப்பதிலும் சாதி பார்க்கிறீர்களே? " என்றேன்.
அந்த இருவரும் ஏக குரலில்
" ஊருக்குப்புதுசோ" என்று முறைத்துப்பார்த்துச்சொல்லிவிட்டு அகன்றனர்.
என்னை அங்கு அழைத்துச்சென்ற
பருத்தித்துறை அன்ரி ஒருவரிடம் இந்தக்கொடுமையைச்சொன்னேன். அதற்கு அவர்கள் " நல்லவேளை
உன்னிடம் அந்தப்பெட்டைகள், உனது சாதி பற்றிக்கேட்கவில்லை"
என்றார்.
"கேட்டிருந்தலும்
சொல்லியிருப்பேன் - மனித சாதி! என்றேன்."
தாயைப்பழித்தாலும் தண்ணீரைப்பழிக்காதே
என்பார்கள் எமது முன்னோர்கள். அதுவும் தவறுதான். இரண்டும் இல்லையென்றால் நாமும் இல்லை.
இந்த பூவுலகும் இல்லை.
1983 இல் கலவரத்தையடுத்து
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி ஒழுங்கையில் தற்காலிகமாக
குடியிருப்பதற்கு ஒரு நான்கு அறை வீடு கிடைத்தது. வாடகை எவ்வளவு தெரியுமா மாதம் ஐம்பது
ரூபா. அது அச்சத்தினால் இடம்பெயர்ந்தமையால் கிட்டிய இரக்கத்தினால் அல்ல, அந்த வீட்டிலிருந்தவர்கள்
அங்கிருந்த கிணற்று நீரை அருந்த முடியாமல் வெளிக்கிட்டுவிட்டார்கள். வாயில் வைக்கமுடியாதது , ஆனால், கறிக்கு உதவும் உப்பு
அதில் செறிந்திருந்தது.
அதனால் கண்டிவீதியில்
எழுந்தருளியிருந்த பிள்ளையார் கோயில் கிணற்றை நாடினோம். அங்கு தண்ணீர் சுவையானது. பலரும்
வந்து அள்ளிச்செல்வர். அங்கிருந்த ஒரு மூதாட்டி சொன்னார், " இப்பத்தான் எல்லோரும்
இந்த கோயில் கிணற்றில் தண்ணீர் எடுக்கிறார்கள்.
முன்னர் அந்த அனுமதி மேல்சாதிக்குத்தான் இருந்ததாம். காலப்போக்கில் மேல் சாதியைச்சேர்ந்தவர்
ஒருவர் வந்து கிணற்றுக்கட்டில் ஏறிநின்று தண்ணீர் அள்ளி வார்ப்பாராம்.
" ஆச்சி, இங்குள்ள
மக்களின் முகத்தில் சாதியின் பெயர் எழுதி ஒட்டியிருந்ததா?" எனக்கேட்டேன்.
அந்த ஆச்சியும்
" நீ ஊருக்குப்புதுசு. அதுதான் அப்படிக்கேட்கிறாய்" என்றார்கள். பார்த்தவுடன்
தெரியுமாம் என்று விளக்கம் வேறும் சொன்னார்கள்.
இவர்களுக்கெல்லாம்
" இன்னும் 60 வருடங்களில் வடபகுதி தண்ணீர் முற்றாக உவர்ப்பாகிவிடும்:" என்று
இஸ்ரேல் விஞ்ஞானிகள் அன்றே சொன்னது காதில் ஏறவில்லையா? அல்லது அங்கிருந்து வெளியான
தமிழ் ஊடகங்கள் இந்த அதிர்ச்சியான செய்திக்கு முக்கியத்துவம் வழங்கி விழிப்புணர்வை
ஏற்படுத்தவில்லையா?
" உங்கள்
வீட்டு கிணற்று நீர் எப்படி ? " என்று வடமராட்சி பருத்தித்துறையிலிருந்து திரும்பியிருக்கும்
மனைவியிடம் கேட்டேன். " அங்கிருப்பவர்களுக்கு
வல்லிபுரக்கோயில் கிணற்றிலிருந்து குடிநீர் வருகிறது" என்றாள்.
அந்தக்கோயிலின் முன்னைய
நிலமையை அனுமானிக்கமுடியும் என்பதனால் அதன் பூர்வீகத்தை கேட்கவில்லை. தண்ணீரை வைத்துக்கேட்டால்
வீண் பிரச்சினை வரலாம்.
" ஒரு சொட்டுத்தண்ணீரைக்கூட
உருவாக்கத்தெரியாத நாம், தண்ணீரை வீணாக்குவதற்கும் தகுதியற்றவர்கள்" என்றும் பேசப்படுகிறது. தண்ணீர் அருந்தவும் வழியற்று கண்ணீர் விட்ட மக்கள் பற்றி சிறுகதைகள், கவிதைகள்,
நாவல்கள், நாடகங்கள், திரைப்படங்கள் வந்துள்ளன. கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் கோமல்
சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகம் வெளியானதும் 1981 இல்தான்.
இலங்கை எழுத்தாளர் கே.
டானியல் ( தண்ணீர்) தமிழக எழுத்தாளர்கள் அசோகமித்திரன் ( தண்ணீர்) கவிஞர் வைரமுத்து
( தண்ணீர் தேசம்) எஸ். குருமூர்த்தி (தண்ணீர் விட்டோ வளர்த்தோம்) ஆகியோர் உட்பட பலரும்
தண்ணீரை மையப்பாத்திரமாக வைத்து எழுதியிருக்கிறார்கள்.
பாரதியாரும் " தண்ணீர்
விட்டோ
வளர்த்தோம்
சர்வேசா
இப்பயிரை
கண்ணீரால்
காத்தோம்
கருகத்
திருவுளமோ?"
என்று பாடினார். இவற்றை விடுங்கள், இந்தக்கவிதையை கேட்டிருக்கிறீர்களா ? படித்திருக்கிறீர்களா?
எம்முன்னோர்களில் ஒருவர் பாதியில் எழுதிவைத்திருந்த கவிதையை மற்றும் ஒருவர் முடித்துவைத்த
கவிதை இது!
" தண்ணீர் விரவும் காவேரி
தார்வேந்தனுமே தகும்சோழன் பெண்ணாவாள் அம்பற்சிலம்பி பிறங்கு மலையோமேருவென்றே எண்ணார் ஒளவை உரைத்தமுறை ஏழு புவியில் எண்டிசையின் மண்ணாவதுதண்டலைவேலி வளம்சேர் சோழ மண்டலமே "
அம்பர் என்ற ஊருக்கு பாதயாத்திரையாக வந்திருக்கிறார் அவ்வையார். அவருக்கு
நடந்துவந்த களைப்பு. பசியும் வயிற்றை
கிள்ளுகிறது. ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தார். அங்கு சுவரில் ஒரு கவிதை
அரைகுறையாக எழுதப்பட்டிருந்தது.
"தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ தும்சோழ மண்டலமே"
நேரிசை வெண்பாவில் முன்பாதிதான் இந்தவரிகள் என்பதனால் அந்த வீட்டுக்காரியிடம்
இதனை யார் எழுதியது என்று கேட்டார் அவ்வையார். அவர் அன்று ஓய்வெடுத்த வீடு ஒரு
தாசியுடையது. தனக்கு பாடல் எழுதித்தருமாறு அந்தப்பக்கம் வந்திருக்கும் கம்பரிடம்
அவள் ஒருநாள் கேட்டிருக்கிறாள். அவர் பாட்டு எழுதிக்கொடுத்தால் தனது வாழ்வு வளம்பெறும்
என்று நம்பியிருக்கிறாள். பாட்டு எழுதித்தருவதற்கு கம்பர் ஆயிரம்
பொன்கேட்டாராம். அவளிடமிருந்தது ஐநூறு பொன்தான். கம்பர் அதற்குரிய பாட்டை
மாத்திரம் பாதியில் எழுதிவைத்துவிட்டுப்போய்விட்டார். அதனால் கையிருப்பில்
இருந்ததையும் இழந்து அவள் ஏழையாகிவிட்டாள்.
இந்தத் துயரத்தைக்கேட்ட அவ்வையார்
அவள்மீது இரக்கப்பட்டு, " பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாள்மலரும் செம்பொற் சிலம்பே சிலம்பு" என்று கடைசி வரிகளை எழுதினாராம். அதன்பின்னர் அவளது வாழ்வு வளம்பெற்றதாம்.
தனது பசிபோக்குவதற்கு அந்தத்தாசி கூழ்கொடுத்தாளாம். கம்பரோ
பொன்னுக்குப்பாடியிருக்கிறார். அதிலும் பாதிப்பாட்டுத்தான். ஆனால்,
கூழுக்குப்பாடிய அவ்வையார் முழுப்பாடலையும் எழுதிக்கொடுத்தாராம்.
"கடன் பட்டார்
நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" எனப்பாடியிருக்கும் கவிச்சக்கரவர்த்தி
கம்பன் அந்தத்தாசியிடம் கடன் கேளாமல், பாதிப்பாட்டு
பாடி பாதிப்பொற்காசு பெற்று அகன்றார்.
அவ்வையோ அந்தப்பேதைப்பெண்ணுக்காக
இரங்கி முழுப்பாடலும் பாடி கூழ்வாங்கி குடித்தகன்றார்.
சீதை, கண்ணகி பற்றியெல்லாம்
பாடியிருக்கும் ஆண் கவிஞர்களுக்கு கம்பன் விழாவும் சிலப்பதிகார விழாவும் எடுக்கும்
ஆண்கள் ஒருபுறமிருக்கட்டும். பெண்ணுக்காக இரங்கிய அவ்வையாருக்காக பெண்களாவது விழா எடுத்தல் வேண்டும் என்ற வேண்டுகோளையும்
விடுக்கின்றேன். அவ்வையார் நாடிழந்த பாரியின் மகள் மாருக்கும் அடைக்கலம் கொடுத்தவர்.
பொன்னுக்காக பாடிய கம்பனின்
விழாவில், தண்ணீருக்காக பேசியிருக்கிறார்
வடமாகாண ஆளுனர் அலுவலக இணைப்புச்செயலாளர்.
கோமல் சாமிநாதன் எழுதி
மேடையேற்றிய தண்ணீர் தண்ணீர் பற்றியும் அது இலங்கையிலும் மேடையேறி, தமிழ்நாட்டில் கே. பாலச்சந்தரின் இயக்கத்திலும்
திரைப்படமாகி நான் தற்போது வதியும் கங்காரு தேசத்தில் எஸ்.பி. எஸ். அரச தொலைக்காட்சியில் ஆங்கிலத்தில் Subtitles உடன் காண்பிக்கப்பட்ட
தகவல்களுடன் அடுத்த அங்கத்தில் மீண்டும் சந்திக்கின்றேன்.
(தொடரும்)
|
No comments:
Post a Comment