தந்தை செல்வா! இலங்கைத் தமிழ் இனத்தின் இணையற்ற தலைவர்! - பாடும்மீன் சட்டத்தரணி, சு.ஸ்ரீகந்தராசா -


இன்று (15.10.2018) தந்தை செல்வா அவர்களுக்கு மட்டுநகரில் திருவுருவச் சிலை அமைக்கப்படுகிறது.
இந்த வருடம் 2018, ார்ச் மாதம் 31 ஆம் திகதி தந்தை செல்வா அவர்களின் 120 ஆவது பிறந்த தினமும்
ஏப்ரல் 26 ஆம் திகதி, ாற்பத்தோராவது ஆண்டு நினைவு ினமும் ஆகும்.
அவர் மறைந்து நாற்பத்தியொரு ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அவர் விதைத்துச் சென்ற அரசியல் கருத்துக்கள் சாகா வரம்பெற்றவையாக இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் இன்றியமையாதவகையில் இன்னமும் செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் சகல உரிமைகளுடனும் முற்று முழுதான சுதந்திரத்துடனும் வாழ்வதற்கான பாதையினை வகுப்பதில் தனது வாழ்நாள் முழுவதையும் ர்ப்பணித்துச் செயற்பட்ட மாபெரும் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள். தமிழ் மக்களால் “தந்தை செல்வா” என்று பாசத்துடனும், மதிப்புடனும் போற்றப்படுகின்ற ஒரே தலைவர் அவரே. தொலை நோக்குப் பார்வையுடன் தூய்மையான அரசியல் தலைவராக விளங்கிய அவர் ஒரு தீர்க்கதரிசி ஆவார். தந்தை செல்வா அவர்களின் செயற்பாடுகள் சிங்கள அரசுத் தலைவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருந்தபோதும், மாற்றுக்கட்சித் தலைவர்களாலும் மதிப்போடு நடாத்தப்பட்ட மாண்புமிக்க பெருந்தகையாளராகவே அவர் விளங்கினார்.

இற்றைக்கு அறுபத்தியைந்து வருடங்களுக்கு முன்னர் இருந்து இறக்கும்வரை அவர் தூவிய அரசியல் கருத்துக்களே இன்னமும் இலங்கைத் தமிழ் இனத்தின் அரசியல் பாதையினச் செப்பனிடும் தாரக மந்திரங்களாக விளங்குகின்றன. அவர் ஆரம்பித்த தமிழ் அரசுக்கட்சியே இலங்கைத் தமிழ் மக்களிடம் அமோகமான செல்வாக்குச் செலுத்தும் அரசியல் கட்சியாக இலங்குகின்றது. இவற்றிலிருந்து தந்தை செல்வா அவர்களின் தன்னிகரற்ற தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் நன்கு துலங்குகின்றது.


வாழத்துடிக்கின்ற ஈழத்தமிழினத்திற்காக வாராது வந்துதித்த மாமனிதரான தந்தை செல்வா அவர்கள், யாழ்ப்பாணத்தைச் ொந்த இடமாகக்கொண்ட சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை அன்னம்மா கணபதிப்பிள்ளை தம்பதிகளின் முதலாவது குழந்தையாக, மலேசிய நாட்டில் ஈப்போ என்னும் நகரில் 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி அவதரித்தார்.  க்காலத்தில் மலேசியாவைவிட, இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கல்வி வசதிகள் மிகவும் சிறப்புற்றோங்கியிருந்தன. செல்வநாயகம் அவர்களது பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியினை ஊட்டவேண்டும் என்று விரும்பியதால் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டியதாயிற்று.
பெற்றோரின் விருப்பத்தினாலும், இலங்கைத் தமிழினம் செய்த மாதவத்தினாலும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் தனது நான்காவது வயதிலே தாயாருடனும், இரண்டு தம்பிகளுடனும், தங்கையுடனும் யாழ்ப்பாணத்தில் வந்திறங்கினார்.
யாழ்ப்பாணத்தில், தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் பாடசாலையில் (இப்போதைய யூனியன் கல்லூரி) தனது ஆரம்பக் கல்வியினைப் பெற்றுக்கொண்ட சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள், பின்னர் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியிலும், கொழும்பு சென். தோமஸ் கல்லூரியிலும் தனது கல்வியினைத் தொடர்ந்து, அதன் பெறுபேறாக 1917 ஆம் ஆண்டு ஆசிரியப் பணியில் சேர்ந்தார். அதேவேளை இலண்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறையில் வெளிவாரி மாணவனாகவும் தனது கல்வியினைத் தொடர்ந்து கொண்டிருந்த அவர் 1918 ஆம் ஆண்டு ஒரு விஞ்ஞானப் பட்டதாரியானார். தனது ஆசிரியப் பணியில் மாணவர்களதும், பெற்றோர்களதும் பெருமதிப்பினைப் பெற்றுச் சிறந்ததோர் ஆசிரியராகத் திகழ்ந்தார். அதே காலத்தில் இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பினையும் மேற்கொண்டு 1924 ஆம் ஆண்டு ஒரு சட்டத்தரணியானார்.
தனது திறமையினால் குடியியல் சட்டத்துறையில் மிகச்சிறந்த சட்டத்தரணியாக வளர்ந்து அவரது காலத்தில் புகழ்பூத்த சட்டவல்லுனர்களில் ஒருவராகப் பெயர்பெற்றார். இராணி வழக்கறிஞராகவும் (Queen’s Counsel) கௌரவம் பெற்றார்.  ிரு. சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்களிடம், சட்ட இளவல்களாகச் சேர்ந்து, பயிற்சி பெற்றவர்கள் பிற்காலத்தில் இலங்கையின் பிரதம நீதியரசர்களாகவும், பிரபலம் மிக்க சட்ட வல்லுனர்களாகவும் கொடிகட்டிப் பறந்தார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் அவரது சட்டப் புலமையும், வாதத் திறமையும் மட்டுமன்றி அவர் கடைப்பிடித்த ஒழுக்கமும், நேர்மையும் ஆகும்.
தந்தைசெல்வா அவர்களுக்கு, இளமைக்காலத்தில் அரசியலில் அவ்வளவு நாட்டம் இருந்ததில்லை. ஆனால், 1944 ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழு அமைக்கப்பட்டபோது, தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவேண்டிய தேவை எழுந்தபோதுதான் அவரது கவனம் அரசியலை நோக்கித்திரும்பியது.
அக்காலத்தில் குற்றவியல் சட்டத்தில் மிகப் புகழ்பெற்று விளங்கியவரும், அரசாங்க சபையில் பருத்தித்துறைத் தொகுதி உறுப்பினராக இருந்தவருமான ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் 29.08.1944 ஆம் திகதி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சி உருவானது.  அக்கட்சியின் ஆரம்பக்கூட்டத்தில் தந்தை செல்வா அவர்கள் கலந்துகொண்டார். அகில இலங்கத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களுடன், அக்கட்சியின் பிரதித்தலைவர் என்றவகையில் தந்தை செல்வா அவர்கள் சோல்பரி ஆணைக்குழுவின் ுன்னிலையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திச் சாட்சியமளிப்பதில் அரும்பங்காற்றினார். 
சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1947 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. அந்தத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. தந்தை செல்வாஅவர்கள் காங்கேசன்துறையில் போட்டி போட்டு வெற்றி பெற்றார். வடக்கிலும் கிழக்கிலும் இருந்து ஒன்பது உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். அந்த வெற்றியில் தந்தை செல்வா அவர்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது.  அந்தத் தேர்தல் இலங்கைத் தமிழ் மக்களிடயே அவருக்கு அரசியல் ரீதியான மிகப் பெரும் அங்கீகாரத்தினைப் பதிவுசெய்தது.
1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, ி.எஸ்.சேனானாயக்ா அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கியதேசியக் கட்சியின் முதலாவது அரசாங்கத்தில் சட்டவாக்க ஏற்பாடுகள் மூலம் இலங்கைத் தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளுக்குக் கால்கோள் இடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி, 18 ஆம் இலக்க இலங்கைக் குடியுரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமையினை மறுத்து, அவர்களை நாடற்றவராக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம் 1948 நொவெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது.

அந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ் காங்கிரஸ் கட்சி வாக்களித்திருந்தது. தந்தை செல்வா அவர்கள் பாராளுமன்றத்தில் அந்தச் சட்டத்தை மிகக்கடுமையாக எதிர்த்துப் பேசினார்.  “இன்று மலைநாட்டுத் தமிழர்களது கழுத்துக்கு கத்தி விழுந்துள்ளது. நாளை ஆட்சிமொழிபற்றி முடிவு செய்யும் நேரம் வரும்போது இலங்கைத் தமிழர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்” என்று அவர் எச்சரித்தார். ஆனால் கட்சித்தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் சட்டத்தினை எதிர்த்து எதுவுமே பேசாதிருந்த நிலையில் சில நாட்களில் அரசுடன் சேர்ந்து அமைச்சர் பதவியினையும் பெற்றுக்கொண்டார். இந்தவிடயம் தந்தை செல்வா அவர்களுக்கு மிகுந்த அதிருப்தியையும், வேதனையையும் கொடுத்தது. கட்சியில் அபிப்பிராய பேதங்கள் எழத் தொடங்கின. 

அடுத்த வருடம் 1949 ஆம் ஆண்டு, மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் நோக்குடன் அன்றைய பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா ாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்திற்கு ஒரு திருத்ததினை கொண்டுவந்தார்.  அவரது அமைச்சரவையில் பதவியில் இருந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள், அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

பிரசாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு சில மாதங்களுக்குப் பின்னர் 1949 இன் 3 ஆம் இலக்க இந்திய - பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு 1949 ஆகஸ்ட் 5 ஆம் திகதியில் இருந்து நடைமுறைப் படுத்தப்பட்டது.

மலையகத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுக் கொடுமைக்கும், ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக்கு எதிரான அரசினரின் செயற்பாடுகளுக்கும் ஆதரவான ஒரு போக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் நிலவுவதினால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத தந்தை செல்வா அவர்கள் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்கவும், இழந்த உரிமைகளை வென்றெடுக்கவும் தனி இயக்கம் காண்பதைத் தவிர வேறு வழியில்லை எனத் தீர்மானித்து காங்கிரசிலிருந்து வெளியேறினார்.

1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி, மருதானை அரசாங்க இலிகிதர் சேவைச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,
“இந்த நாட்டின் தமிழ்பேசும் தேசிய இனத்தின் சுய நிர்ணய அடிப்படையில் சுயாட்சி என்ற இலக்கை அடைவதறகு இடையறாது உழைக்க உறுதி பூண்ட தமிழ்த் பேசும் மக்களின் தேசிய நிறுவனமாக, தமிழரசுக்கட்சி இயங்கும்”        என்ற தீர்மனத்தைத் தந்தை செல்வா அவர்கள் முன்மொழிந்தார். கலந்துகொண்ட எல்லோரும் கருத்து வேறுபடின்றி ஆதரித்தார்கள். அதுவே தமிழரசுக் கட்சியின் தோற்றமாகும்.

தமிழரசுக் கட்சியினை மக்களிடையே அறிமுகப் படுத்தும் பணியில் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் எங்கும் தந்தை செல்வா பயணம் செய்தார். தமிழ்க் காங்கிரஸ் ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கள், அச்சுறுத்தல்கை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தெர்தலில் பங்கேற்ற தமிழரசுக்கட்சி திருகோணமலை, கோப்பாய் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திருமலை, ராஜவரோதயம் அவர்களும், கோப்பாய்க் கோமான் கு.வன்னியசிங்கம் அவர்களும், தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள். ஆனால் 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் இருந்து இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி இலங்கைத் தமிழர்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்ற அரசியல் கட்சியாக விளங்குகின்றது. தந்தை செல்வா அவர்கள் இலங்கைத் தமிழ் இனத்தினை வழிநடத்தும் தவிர்க்க முடியாத, தனித்துவம் மிக்க தலைவராக இருந்தார்.

1956 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவிக்கு வந்த எஸ்..டப்ளியூ. ஆர்.டீ. பண்டாரநாயக்கா, ஜூன் மாதம் 15 ஆம் திகதி சிங்களம் மட்டும் சட்டத்தைப் பாராளுமன்றத்திலே நிறைவேற்றினார். அந்தச் சட்டத்திற்கு எதிராக தந்தை செல்வா காலி முகத் திடலிலே சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொண்டார். அந்தச் சாத்வீகப் போராட்டத்திற்கு எதிராக அரசாங்கத்தால் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

1957 இல் சிங்கள ஸ்ரீ யை வாகனங்களில் பொறிக்கும் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்ப் பகுதிகள் எங்கும் தந்தை செல்வா அவர்களது தலைமையிலே போராட்டங்கள் இடம்பெற்றன. அந்தப் போராட்டத்தின்போது தந்தை செல்வா, தண்டனைபெற்று ஒரு வாரகாலம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
தந்தை செல்வாவுடன் ஓர் ஒப்பந்ததினை செய்ய பண்டாரநாயக்கா முன்வந்தார். 1957 ஜூலை 26 ஆம் திகதி நள்ளிரவில் பண்டா-செல்வா ஒப்பந்தம் கையொப்பமானது. ஆனால், அந்த ஒப்பந்ததினை தந்தை செல்வா அவர்களுக்குச் சொல்லாமலே, 1958 ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பண்டாரநாயக்கா தன்னிச்சையாக இரத்துச்செய்தார்.
1961இல் வடக்குக் கிழக்கு மாகாங்களில் நிர்வாகத்தினைச் சிங்களமயமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது அதற்கெதிரான சத்தியாக்கிரகப் போராட்டத்தினைத் தந்தை செல்வா தலைமையில் தமிழ் மக்கள் மேற்கொண்டனர். தமிழ்மக்கள் செறிந்து வாழும் ஐந்து மாவட்டங்களில் அரசு நிர்வாகம் செயலிழந்தது. ஆட்சியினரால் அவசரகால சட்டம் பிரகடனப் படுத்தப்பட்டது, 17.04.1961 இல் சத்தியாக்கிரகப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. தந்தை செல்வா கைதுசெய்யப்பட்டார். தந்தை அவர்களுடன் ஏனைய தலைவர்களும், தொண்டர்களுமாக 74 பேர் தடுப்புக்காவலில் 6 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டனர்.
1965 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியினை அமைத்த டட்லி சேனானாயக்காவுடன் தந்தை செல்வா மற்றுமொரு ஒப்பந்ததினை செய்தார். 1965 மார்ச் மாதம் 24 ஆம் திகதி இருவராலும் கையொப்பமிடப்பட்ட அந்த ஒப்பந்தமும் நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டது.

வ்வாறு, தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக, தமிழ் இனத்தின் விடிவுக்காகப் போராடுகின்ற அதேவேளை, இலங்கையில் சிங்கள இனமும் தமிழினமும் எவ்வித குத மனப்பான்மையும் இன்றிச் சமாதானமாக வாழவேண்டும், அதற்கு வழிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பதவிக்கு வந்த அரசுகளுடன் நாகரிகமான முறையில் சளைக்காமல் போராடினார். அரசுத் தலைவர்களுடன் மீண்டும் மீண்டும் ஒப்பந்தங்களைச் செய்ய இணங்கினார்.
இறுதியாக 1970 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள், 1972 ஆம் ஆண்டு இலங்கையைக் குடியரசசாக்கும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து, முன்னைய அரசியலமைப்பில் இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் குழி தோண்டிப் புதைத்தபோது, தந்தை செல்வா அவர்களினால் பொறுக்க முடியவில்லை. தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து, தமிழ்மக்களின் ஆதரவு தனது கட்சியின் கொள்கைக்கு ண்டு என்பதை ிரூபிக்குமுகமாக முடியுமானால் இடைத் தேர்தலை வைத்து என்னை வென்று காட்டுங்கள் என்று அரசுக்குச்  சவால்விட்டுப் பாராளுமன்றத்தை விட்டுவெளியேறினார்.

பதவியைத் துறந்த தந்தைசெல்வா அவர்கள் தள்ளாத வயதில், தளர்ச்சியடந்த தனது உடல் நிலையுடன் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலுள்ள எல்லாத் தொகுதிகளுக்கும், சென்று மக்களைச் சந்தித்தார். ஊரூராக அவர் பவனிவந்தபோது வீதிகளின் இருபக்கங்களிலும் கூடிநின்ற மக்கள் ஆனந்தக்கண்ணீர் சொரிந்து வரவேற்றார்கள், வாழ்த்துக்கூறினார்கள். தந்தையின் முகத்தைக் கண்டதும் தாங்கொணாத உணர்ச்சிப் பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் அழுத காட்சிகளை என்றும் மறக்கமுடியாது.
அரசு கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தது. இறுதியில் 1975 பெப்ரவரி 6 ஆம்திகதி நடைபெற்ற இடைத்தேர்தலில் தந்தை செல்வா 15 ஆயிரத்திற்கும் அதிகப்படியான வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுத் தமிழ்மக்களின் அங்கீகாரத்தினை முழு உலகுக்கும் தெரியப்படுத்தினார்.
1972 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் மிகவும் இக்கட்டான காலகட்டமாக வந்தபோது, 25 வருடங்களாகத் தன்னை அரசியல் எதிரியாக எண்ணிச் செயல்பட்டவரான தமிழ்காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களையும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களையும் தமிழ் மக்களின் நலன் கருதி ஒருங்கிணைத்து தமிழர் கூட்டணி என்னும் அமைப்பை தந்தை செல்வா உருவாக்கினார்.

1976 இல் இவ்வமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட்து.  தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டையில் ஒரு மாநாட்டை நடாத்தியது. அதில் "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" எனப்படும் வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றியது. அத் தீர்மானத்தின் மூலம் இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்யப்பட்டது.

அரசியல் ரீதியாக "தமிழர் தாயகம்" ன்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் தந்தை செல்வா அவர்களே. தமிழ் இனம் ஒரு தேசிய இனம் என்றும், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் அவர்களின் தாயகம் என்றும், சுயாட்சியுடன் வாழத் தகுதியுடைய தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களோடு சரிநிகர் சமமாக வாழவேண்டும் ன்றும் 1950 களிலேயே வலியுறுத்தியவர் தந்தை செல்வா அவர்கள்!
இலங்கை மக்களுக்கு இணைப்பு (சமஸ்டி) ஆட்சிமுறையே உகந்தது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் தந்தை செல்வா அவர்கள். அதன் காரணமாகவே எத்தனையோ இடர்கள் வந்தபோதும், எத்தனையோ தடவைகள் ஏமாற்றப்பட்ட போதும் இலங்கையில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுடன் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். அரசுகளின் நடவடிக்கைகளுக்காகத் தனது கொள்கையில் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. இறுதியில், எதுவுமே சரிப்பட்டு வராது, எந்த உரிமையும் கிடக்காது, இருப்பதும் இழந்து போகின்றது என்ற நிலைமை ஏற்பட்டபோதுதான் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்மொழிந்தார். அதனை வென்றெடுப்பதில் மிகக்கடுமையான இடர்களும், தடைகளும்  இருப்பதை அவர் உணர்ந்திருந்தமையால்தான், "இனிமேல் தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் " என்று ஏமாற்றத்தின் இறுதியில், வேதனையின் விளிம்பில் நின்று மொழிந்தார்.
தந்தை செல்வா அவர்கள் ஒரு சகாப்தம். இலங்கைத் தமிழ் இனத்திற்காகத் தன்னை முழுதாக அர்ப்பணித்து, தான் ஈட்டிய சொத்துக்கள் முழுவதையும் செலவிட்ட ன்னலமற்ற ஒரு தலைவர்.
தமிழரசுக்கட்சிக்காக அவர் நடாத்திய சுதந்திரன் பத்திரிகை நட்டத்தில் இயங்கியபோது அந்த நட்டத்தை ஈடுசெய்வதற்காக, மலைநாட்டிலிருந்த அழகிய பங்களாவுடன் கூடிய தேயிலைத் தோட்டத்தினையே விற்றவர், தந்தை செல்வா அவர்கள்.
தந்தை செல்வா அவர்களின் சமஸ்டிக் கொள்கையினை சிங்கள அரசுகள் அன்றே ஏற்றுச் செயற்படுத்தியிருந்தால் இதுவரை ஏற்பட்ட அழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். முழு நாடுமே சுபீட்சமடைந்திருக்கும். எல்லா இனங்களும் ஒற்றுமையாக நல்லெண்ணத்துடன் வாழமுடிந்திருக்கும். உலகத்திற்கே முன்னுதாரணமான நாடாக இலங்கை மிளிர்ந்திருக்கும்.
உலகத்தில் தமிழ் இனம் உள்ளவரை, தந்தை செல்வாவின் புகழ் வாழும்.


===============      ==================     =================No comments: