12/10/2018 சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி  துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டமைக்கான வீடியோ மற்றும் ஒலிநாடா ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக  துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி அதிகாரியொருவர் இந்த தகவலை மேற்குலக புலனாய்வாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார்.
துருக்கியில் உள்ள சவுதிஅரேபிய தூதரகத்தில் வன்முறைகள் இடம்பெற்றதாக ஆதாரங்கள் கிடைத்தள்ளன என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் தாக்கப்பட்டவேளை அவர் அதிலிருந்து தப்புவதற்காக போராடியுள்ளார் என குறிப்பிட்டுள்ள துருக்கி அதிகாரிகள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை காண்பிக்கும் ஆதாரங்களும் கிடைத்துள்ளன என குறிப்பிட்டுள்ளனர்
துருக்கி அதிகாரிகள் காண்பித்த ஆதாரங்களை பார்த்த வெளிநாட்டு புலனாய்வு  அமைப்பை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேவேளை பத்திரிகையாளர் கொல்லப்பட்டமைக்கான வீடியோ ஒலிநாடா ஆதாரங்கள் உள்ளன என துருக்கி அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
சவுதிஅரேபியாவிலிருந்து சென்ற குழுவொன்றே  பத்திரிகையாளரின் கொலைக்கு காரணம் என்பதற்கான தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் ஒலிநாடாவில் உள்ளன என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளரின் குரலை கேட்க முடிகின்றது,அராபிய மொழியில் பலர் உரையாடுவதையும் கேட்க முடிகின்றது எனஒலிநாடாவை செவிமடுத்த ஒருவர் வோசிங்டன் போஸ்டிற்கு தெரிவித்துள்ளார்.
அவர் சித்திரவதை செய்யப்படுவதையும் விசாரிக்கப்படுவதையும் அதன் பின்னர் படுகொலை செய்யப்படுவதையும் ஒலிநாடா மூலம் அறிய முடிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி