விஜயகலா பிணையில் விடுதலை
வவுனியாவை வந்தடைந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பல்கலை மாணவர்களின் நடைபவனி
இந்து சமுத்திரம் சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம்
துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனை ; உறுதிசெய்தது நீதிமன்றம்
அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறும்: மாணவர்கள் எச்சரிக்கை
அரசியல் கைதிகளுக்கான நடை பவனி ; பெரும்பான்மையின இளைஞர்களின் குழப்பத்தால் பரபரப்பு
"சிறுவர் துஷ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம்" : சமாதான நடைப்பயணம்
எந்த நாட்டுடன் யுத்தம் செய்ய 3 ஆயிரம் மில்லியன் ;அனந்தி
விஜயகலா பிணையில் விடுதலை
08/10/2018 கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வவுனியாவை வந்தடைந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பல்கலை மாணவர்களின் நடைபவனி
12/10/2018 அரசியல் கைதிகளின் விடுதலையை முன்நிறுத்தியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் கோரி பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பமான நடைபவனிக்கு வவுனியாவில் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பமான நடைபவணி நேற்று இரவு 3ஆவது நாட்களில் ஓமந்தையை வந்தடைந்தது.
4ஆவது நாளான இன்று காலை ஓமந்தையிலிருந்து வவுனியா தாண்டிக்குளத்தில் வைத்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டு வவுனியா நகருக்கு நடைபவனி அழைத்துச் செல்லப்பட்டு பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த பாடசாலை மாணவர்கள் நடைபவனியினருக்கு அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலையை முன்நிறுத்தியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் கோரிய நடைபவனி நேற்றைய தினம் மாங்குளம் வந்தடைந்தது.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட்டம் 9ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு நடைபவனியாக கிளிநொச்சி, மாங்குளம், ஊடாக நேற்று இரவு வவுனியா ஓமந்தையை வந்தடைந்து இன்று காலை வவுனியாவிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலையை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.
வடமாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், ம. தியாகராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், பொது அமைப்புக்கள், வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கம், உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அனுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கோசங்களை எழுப்பியவாறு ஆரம்பமான நடைபவனிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
இதையடுத்து வவுனியா நகரிலிருந்து காலை 10.45மணியளவில் அனுராதபுரத்தினை நோக்கி நடைபவனி புறப்பட்டது. நன்றி வீரகேசரி
இந்து சமுத்திரம் சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம்
11/10/2018 இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கிடையிலான சர்வதேச மாநாடு இன்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள பலம்வாய்ந்த நாடுகள் கடற்பிராந்திய அடிப்படையில் பிற நாடுகளை ஆக்கிரமிக்காதவாறு அனைத்து இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கிடையில் கலந்துரையாடல் மூலமான புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்வதே இம் மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
மேலும் "எமது எதிர்காலத்தை வரையறுத்தல்" எனும் தொனிப்பொருளில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளடங்கலாக பல்வேறு இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியுள்ள இந்த மாநாடானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இம் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அடிப்படை குறிப்புரை நிகழ்த்தப்பட்டதுடன், சமுத்திர விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விசேட தூதுவர் பீற்றர் தொம்சன் சிறப்புரையாற்றினார்.
அத்துடன் இந்திய பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் பிரதான பிரதி உதவிச் செயலாளர் எலிஸ் ஜீ.வெல்ஸ், சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் யி சியான்லியாங், தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான குழுவின் தவிசாளர் அனில் சூக்லால் ஆகிய பல முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனை ; உறுதிசெய்தது நீதிமன்றம்
11/10/2018 துமிந்த சில்வா உள்ளிட்ட 3 பிரதிவாதிகளின் மேன்முறையீடு நீதிமன்றத்தால் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்த அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் துமிந்த சில்வா மற்றும் நான்கு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த (2016-09-08 ) அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறும்: மாணவர்கள் எச்சரிக்கை
13/10/2018 எமது கோரிக்கைகளுக்கு வெறும் வாக்குறுதிகளை வழங்கி கடந்துபோக நினைத்தால் சிறுபான்மை தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறும் என வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
”தனிமனித உரிமைகளிலும் அவற்றின் முன்னேற்றங்களிலும் அக்கறைகொண்ட நாடுகளால்தான் தமது வளர்ச்சிப்பாதையில் பெரும் முன்னேற்றகரமாச் செயற்பட முடிகின்றன. அவ்வாறு முடியாத நாடுகளினாலும் அதன் அரசுகளினாலும் எந்தவிதமான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிபற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.
நீதிக்குப்புறம்பாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் கைதிகளின் சட்ட நடைமுறைக்கு முற்றிலும் முரணானது.
எனவே, இலங்கையின் எல்லாச் சிறைகளிலுமுள்ள அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலைசெய்து, அவர்களது இயல்புவாழ்க்கைக்கு வழிகோல வேண்டும்.
தமிழர்களைச் சிறுமைப்படுத்தி ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு பாரபட்சமில்லாத நீதிவிசாரணைகள் இடம்பெறவேண்டும்.
இலங்கை அரச படையினரால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசப் பொறிமுறைகளுக்கு அமைவாக, முறையாக இடம்பெறவேண்டும்.
இவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதனூடாக தமிழர்களதும், ஏனையவர்களதும் இயல்பு வாழ்க்கைக்கு வழியமைக்க வேண்டும். இவற்றை நடைமுறை சாத்தியமில்லாத கோரிக்கைகளாக நாம் உங்களிடம் முன்வைக்கவில்லை. மாணவர்களாகிய நாம் அறிவுபூர்வமாக எல்லோரதும் நன்மைபற்றியே சிந்தித்துச் செயலாற்ற விழைகின்றோம்.
மாறாக, இவற்றை வெறும் வாக்குறுதிகளை வழங்கி நீங்கள் கடந்துபோக நினைத்தால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஓய்ந்துபோகப்போவதில்லை. நாங்கள் சிந்திப்பதுபோலவே, எங்களைக் கடந்தும் எங்கள் அடையாளங்களையும், இறைமயையும் தேடி ஒரு இனமே எழுச்சிகொள்ளும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
அரசியல் கைதிகளுக்கான நடை பவனி ; பெரும்பான்மையின இளைஞர்களின் குழப்பத்தால் பரபரப்பு
13/10/2018 அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரம் பகுதியில் நடுவீதியில் நின்று தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை முன்பாக கூடியிருந்த போதே இந்தத் தர்க்கம் ஏற்பட்டது.
சிறைச்சாலை முன்பாக பெருமளவான சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் , பொலிஸார் நின்றிருந்த வேளை இரண்டு காரில் மது போதையில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் நடைபயணம் வந்த பல்கலைக்கழக மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
சிறையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. இங்கே உள்ளவர்கள் விடுதலைப்புலிகள் என கூறி தகாத வார்த்தைகளை கூறியதுடன், இனவாத கருத்துக்களையும் தெரிவித்து மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
அதன் போது அங்கிருந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை சமாளித்து அழைத்து சென்றனர்.
அந்த இளைஞர்கள் மாணவர்களை அச்சுறுத்திய போது, பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தமைக்கு அங்கிருந்த பலரும் விசனம் தெரிவித்தனர்.
அனுராதபுரம் சிறைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம்
13/10/2018 தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை கோரி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கால்நடை பவனியை மேற்கொண்ட மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி கடந்த ஒன்பதாம் திகதி கால்நடை பேரணியை ஆரம்பித்த யாழ்பல்கலைகழக மாணவர்கள் இன்று மதியம் அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைந்தனர்.
இவ்வாறு அனுராதபுரம் சிறைக்கு சென்ற மாணவர்களில் சிலருக்கு அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது
அதேவேளை ஏனைய மாணவர்கள் சிறைச்சாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
அரசியல் கைதிகளின் விவகாரத்தில் நல்லிணக்க அரசாங்கத்தின் போக்கை கண்டித்து அவர்கள் கோசங்களை எழுப்பிவருகின்றனர். நன்றி வீரகேசரி
"சிறுவர் துஷ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம்" : சமாதான நடைப்பயணம்
13/10/2018 கிளிநொச்சியில் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலம் ஒன்று இன்று இடம்பெற்றது.
சிறுவர் துஷ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற தொணிப்பொருளிலும், சிறுவர் பெண்களுக்கான, பரிபூரணமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்ற வகையிலும் சமாதான நடைப்பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஊர்வலமானது இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம் வரை ஊர்வலமாக சுமார் ஜயாயிரம் வரையான சிறுவர்கள் கலந்துகொண்ட சமாதான ஊர்வலம் இடம்பெற்றது.
நன்றி வீரகேசரி
எந்த நாட்டுடன் யுத்தம் செய்ய 3 ஆயிரம் மில்லியன் ;அனந்தி
13/10/2018 வடக்கு மாகண மகளிர் அமைச்சுக்கு இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்று வட.மாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்க இலங்கை அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் 3 ஆயிரம் மில்லியன் ரூபாயை பாதுகாப்பிற்கு ஏன் ஒதுக்கியுள்ளது? என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் பனங்கட்டுக்கொட்டு கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுய தொழில் அமைப்புக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
மன்னார் பிரதேச சமூக சேவை உத்தியோகஸ்தர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் அனந்தி சசிதரன் குறித்த நிகழ்வின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இறுதி யுத்ததில் ஒரு இனத்தையே அழிப்புக்கு உள்ளாக்கி விட்டு அதில் பாதிக்கப்பட்ட பெண்களை மீள் எழுச்சி அடையவிடாமல் தடுத்து அவர்களுக்குரிய எந்த உதவியையும் செய்யாமல் இப்போது பாதுகாப்புக்கென 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள்.
ஒன்பது வருட யுத்தம் முடிந்த பின்பு இந்த அரசாங்கம் எந்த நாட்டுடன் யுத்தம் நடத்துவதற்காக இந்த 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியிருக்கின்றது என்பது எங்களுடைய மக்கள் எழுப்புகின்ற கேள்வியாகதான் இருக்கின்றது.
மீள் எழுச்சியை மக்களுக்கு ஏற்படுத்தாது இராணுவத்திற்கும் படை பலத்தை அதிகரிப்பதற்கும் ஒதுக்கும் பொழுது நாடாளுமன்றத்தில் எங்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கின்றவர்கள் இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கப் போகின்றார்களா?
அல்லது, இதய சுத்தியுடன் எங்களுடைய மக்களை போரில் இருந்து மீண்டெழுகின்ற நிலைக்கு கொண்டு வர போகின்றார்களா? என்று மக்கள் தான் வினவ வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment