கங்காரு நாட்டுக்காகிதம் வரலாற்றில் இடம்பெறும் மேமாதம் நேற்றைய செய்தி நாளைய வரலாறு - முருகபூபதி


இலங்கையில் ஊடகத்துறையில் பணியாற்றியதனால், அங்குள்ள அரசியல் நிலவரங்களை அறிந்துகொண்டு செய்திகளை எழுதநேர்ந்தது. ரஸஞானி என்ற புனைபெயரில் இலக்கியப்புதினங்களையும் ரிஷ்யசிருங்கர் என்ற புனைபெயரில் கலை உலகம் பற்றிய செய்திகளையும் எழுதிக்கொண்டிருந்தாலும், அரசியல் தொடர்பான  சமூகச்செய்திகளை நிருபர்கள் தரும் விடயங்களிலிருந்து பெற்று எழுதும்போது அவற்றைத்தருபவர்களின் பெயர்களே செய்தியுடன் வெளிவரும்.
செய்தி அறிக்கைகள் சிலவற்றை எனது பெயரில் எழுதியிருக்கின்றேன். சில அரசியல் செய்திகள் விவகாரங்களாகியுமிருக்கின்றன.
இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களினால் நடத்தப்பட்ட ஆங்கில சிங்கள ஏடுகள் ஏதோ ஒருவகையில் இனவாதத்தை கக்கிக்கொண்டிருந்தன. சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்களின் பிரதான கடமை. சமூகம்,  நாட்டு நடப்புகளை ஊடகங்களின் ஊடாகத்தான் தெரிந்துகொண்டு பேசத்தொடங்கும்.
அதனால் உண்மைச்செய்திகளை வழங்கவேண்டியது ஊடக தர்மம்.  பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்க குணாம்சம் அவர்கள் தரப்பின் ஊடகங்களிலும் வெளிப்பட்டது. முக்கியமாக கேலிச்சித்திரங்கள் அந்த குணாம்சத்தை சித்திரித்தன.
யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலய முன்றலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் இலங்கையில் நீறுபூத்த நெருப்பாக இருந்த இனப்பிரச்சினையும் சூடுபிடிக்கத்தொடங்கியது. தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகி   சித்திரவதைகளை அனுபவிக்கத்தொடங்கியதும்,  விடுதலை இயக்கங்களும் உருவாகி தமிழ் இளைஞர்கள் இணைந்தனர்.

ஆயினும் அரசபடையினரின் தேடுதல் வேட்டையில் சிக்கியவர்கள் அப்பாவித்தமிழ் மக்களே. ஆனால், அரசின் தகவல் திணைக்களம் "பயங்கரவாதிகள் சிக்கினர்" என்ற செய்தியையே வெளியிட்டுவந்தது.
இயக்கங்கள் வைக்கும் கண்ணிவெடிகளில் சிக்கும் இராணுவத்தினர் கொல்லப்படும்போது, அதற்குப்பதிலடியாக தமிழ்மக்கள் மீதே அரச பயங்கரவாதம் ஏவப்பட்டது. இந்த சித்து விளையாட்டுக்கு மத்தியில் மக்களுக்கு உண்மைச்செய்திகளை வழங்கவேண்டிய தார்மீகப்பொறுப்பு ஊடகங்களுக்கு இருந்தது.
உதாரணமாக ஒரு தாக்குதல் சம்பவத்தில் அப்பாவிப்பொதுமக்கள் ஆயதப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டால், பொத்தாம் பொதுவாக தமிழ்ப்பயங்கரவாதிகள்தான் கொல்லப்பட்டனர் என்று அரச தகவல் திணைக்களமும், அரசு சார்பு ஊடகங்களும் செய்திகளை வெளியிடும்.
ஆனால், அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் யார்?, என்ன தொழில் செய்கிறார்கள்?, அவர்களின் வயது என்ன? பெயர் என்ன?, எத்தனைபிள்ளைகளின் தந்தை? முதலான சகல விபரங்களையும் துரிதமாகச்சேகரித்து, அந்தச்சம்பவத்தின் பின்னணியிலிருந்த உண்மைத்தன்மையையும் மக்களுக்கு தெரிவிக்கவேண்டிய புலனாய்வு ஊடகப்பணியையும் மேற்கொள்ளவேண்டியிருந்தது.
ஏற்கனவே 1971 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தொடங்கிய மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதக்கிளர்ச்சி, தென்னிலங்கை இளைஞர்களின் பொருளாதார ஏற்றதாழ்வு தொடர்பானது. அந்தக்கிளர்ச்சியின் பின்னணியில் " இஸங்களும்" இருந்தன. அந்த இளைஞர்கள் தாடி வளர்த்திருந்தனர். செங்கொடி ஏந்தினர். செஞ்சட்டை அணிந்தனர்.
ஆனால், வடக்கிலிருந்து துரையப்பா கொலையுடன் ஆரம்பமான இனவிடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களின் கனவு தமிழ் ஈழமாகவே உருவாகியது. அதனால் அவர்களினால் தொடங்கப்பட்ட இயக்கங்களின் பெயர்களிலெல்லாம் " ஈழம்" என்ற பதம் நிலைத்திருந்தது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் முதலில் இலங்கையில்  தொடங்கி, பூட்டான் திம்புவரையில் சென்று, மீண்டும் இலங்கையில் இந்தியத்தலையீட்டால் ஒப்பந்தங்கள் நடந்து, அங்கிருந்து, பதவிக்கு வந்த புதிய தலைவர்களினால் நீடித்து, நோர்வேயும் தலையிட்டு, சமாதான காலம் வந்து, அதுவும் குலைந்து, கோர யுத்தத்துடன் கடந்த 2009 மேமாதத்துடன் பல்லாயிரம் அப்பாவித்தமிழ் மக்களின் உயிரைக்குடித்துக்கொண்டு முடிவுக்கு வந்தது.
இந்த வருடம் மே மாதத்துடன் போர் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.  அதன்பின்னர் வருடாந்தம் ஜெனீவாவில்  போர்க்குற்றம் பற்றி ஆராயும் திருவிழாவின் கொடியேற்றம் நடந்துகொண்டிருக்கிறது. பல நாள் நடக்கும் இந்தத் திருவிழா "தீர்த்தோற்சவத்துடன்" இனிது நிறைவெய்தி, அங்கு செல்லும் ஈழத்து யாத்திரீகர்களும் இதரநாடுகளிலிருந்து வரும் யாத்ரீகர்களும் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்து அறிக்கைவிடுத்துவிட்டு தங்கள் வேலைகளை பார்க்கத்தொடங்குவார்கள்.
மீண்டும் ஜெனீவாவில் உற்சவம் தொடங்கும்பொழுது யாத்திரைக்கு ஆரம்பமாவார்கள்.
தாயகத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் வருடங்கள் கடந்தும் தங்கள் போராட்டத்தை  தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.
அவர்கள் கண்களில் சுரக்கும் கண்ணீரும் வற்றிப்போவதனால் ஆழ்ந்த பெருமூச்சுக்கள்தான் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும்.
"உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" என்ற கோசத்துடன் நடக்கும் மேதினத்தையும் இலங்கையின் இன்றைய நல்லாட்சி அரசு(?) புத்தர்பெருமானை முன்னிட்டு, மாற்றியிருக்கிறது.  தத்தம் தேசங்களுக்காக  கடுமையாக  உழைத்த உலகத்தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பிரகடனப்படுத்தப்பட்ட மே 1 ஆம் திகதியன்று நடக்கவேண்டிய மேதினத்தை  தேசத்திற்கான எந்த உழைப்பையும் வழங்காத காவிச்சந்நியாசிகளின் உத்தரவுக்கு அமைய மாற்றியிருக்கிறது நல்லாட்சி அரசு!
ஒவ்வொரு வருடமும் வரும் மேமாதம் இலங்கைக்கும் முக்கியமானதுதான். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், தொழிலாள விவசாய பாட்டாளி மக்களின் மேதினமும், வெசாக் பண்டிகையும் வரும் இந்த மே மாதம், ஈழப்போரில் விடுதலைக்காய் உயிர்நீத்தவர்களையும் தொழிலாளர் உரிமைக்காய் 18 ஆம் நூற்றாண்டில் சிக்காக்கோவில் போராடி உயிர்நீத்த தோழர்களையும் நினைவுகூரும் மாதமுமாகும்.
மேமாதத்தில் வரும் முழுநிலக்காலத்தில் (பௌர்ணமி) புத்தர்பெருமானின் பிறப்பு, மறைவு, அவர் பரிபூரண நிர்வாணம் எய்திய தினத்தை முன்னிட்டு இலங்கையில் வெசாக்தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு புத்தரும் உலகத்தொழிலாளர்களும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களும் நினைவுகூரப்படும் வரலாறு எழுதப்பட்ட மேமாதம், வரலாற்று ஆசிரியர்களையும்  ஊடகவியலாளர்களையும் கவனத்தில்கொள்ளவைத்திருக்கிறது.
தனக்கு அரசும்வேண்டாம், அதிகாரமும் வேண்டாம் என்று பதவியையும் அதிகாரத்தையும் துறந்து  அன்புமார்க்கமே வேண்டும் என்று கானகம்  சென்ற நிர்வாணம் எய்தியவர் புத்தர்பெருமான். ஆனால், எமது இலங்கையைப்பொறுத்தமட்டடில் அவரைப்பின்பற்றும் பௌத்த பிக்குகள்தான் அரசியல் அதிகாரம் பற்றி ஆட்சியாளர்களுக்கு பாலபாடம் கற்பித்துவருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர் இலங்கையில் செனட் சபை இருந்தது. அங்கிருந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகமான உறுப்பினர்கள் யூ. என்.பி. ஆதரவாளர்கள். அதனால் தனது அரசின் தீர்மானங்களை நிறைவேற்றமுடியாதுபோகும் என்பதைக்கருதி 1970 இல் பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசு புதிய சட்டம் இயற்றி அந்த செனட் சபையை இல்லாமல் செய்தது.
1977 இல் பதவிக்கு வந்த ஜே.ஆர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டு அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்திருந்தார்.
ஆனால், இன்று நிலைவேறுவிதமாக மாறியிருக்கிறது. விஹாரைகளிலிருந்து பிரித் ஓதவேண்டியவர்கள் அரசில் அதிகாரம் செலுத்துகிறார்கள். அவர்களின் ஆசிவேண்டி ஜனாதிபதி முதல் பிரதமர் மற்றும் அரசியல்தலைவர்கள் படையெடுக்கிறார்கள். வடக்கு தமிழ் முதல்வரும் சென்று வருகிறார்!
இனிவரும்காலத்தில் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி விஹாரைகளுக்குள்ளிருந்துதான் வரும் என்பதற்கு இந்த ஆண்டு மேமாதம் முன்னுதாரணமாகிறது.
இந்தப்பின்னணியில் மக்களுக்கு உண்மைகளை சொல்லவேண்டிய ஊடகவியலாளர்களின் பணி முக்கியத்துவம்பெறுகிறது.
நேற்றைய செய்திதான் நாளைய வரலாறு. அதனை சரியாக எழுதவேண்டியவர்கள் ஊடகவியலாளர்கள்.





-->





No comments: