சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 12 ஜோர்ஜ்புஷ் மீது சப்பாத்து வீசியவர் தேர்தலில் நிற்கிறார்!! பாதணி மகத்மியத்திற்குள்தான் எத்தனை கதைகள்!!! - முருகபூபதி



பல  வருடங்களுக்கு  முன்னர்  இலங்கையில்  வெளியான  சிரித்திரன்    இதழில்  ஒரு  நகைச்சுவைத்துணுக்கு  கேலிச்சித்திரத்துடன்   வெளியாகியிருந்தது.
ஒரு   இளம்  யுவதியைப் பார்த்து  ஒரு  இளைஞன் டார்லிங்  டாட்டா "  என்று  குறும்பு செய்வான்.
அதற்கு  அவள்,  தனது  காலைத்தூக்கி,   " காலிலிருக்கிறது  பாட்டா "   என்று  தனது  செருப்பைக்காட்டுவாள்.
டாட்டாவுக்கு  பதில்  பாட்டா!!!!
செருப்புக்குத்தான்  எத்தனை   பெயர்கள்?  செருப்பு,  பாதுகை,   பாதணிசிலிப்பர், தொங்ஸ்.   இந்தப்பதிவுக்கு    2008 ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது ஈராக் பத்திரிகையாளர் மண்டேசர் அல்ஸைதி வீசிய பாதணியும்   சென்னையில் 2015 ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது பிரபாகரன் என்ற ஈழ அகதி வீசிய பாதணியும்தான் அடிப்படையாக அமைந்தது.
இந்த "முன்னாள்கள்" மீதுதான் எவ்வளவு கோபம் இவர்களுக்கு. நெஞ்சில் கனன்றுகொண்டிருக்கும் நெருப்பு இவ்வாறுதான் பாதணியாக மாறி கொப்பளிக்குமோ?
சென்னையிலிருந்து    வெளியாகும்  "  ஹிந்து"   நாளிதழ்  குழுமத்தின்  ஆய்வு  அமைப்பான  "அரசியல்  மற்றும்  பொதுக் கொள்கைக்கான   ஹிந்து  மையம்"   என்ற   இயக்கத்தினால் இந்தியாவில்  உள்ள  இலங்கை   அகதிகளின்  எதிர்காலம்  குறித்து சென்னையில்  மியுசிக்  அக்காடெமியில்  கருத்தரங்கு   நடந்தது.
(இன்றும் பல்லாயிரம் இலங்கை அகதிகள் அங்கு எதிர்காலக்கனவுகளுடன் தவிக்கிறார்கள் என்பதும் சமகால அவலம்தான்)
அதில்  கலந்துகொண்ட  இந்தியாவின்  முன்னாள்  பாதுகாப்பு ஆலோசகர்    எம்.கே.நாராயணன்  உரையாற்றிவிட்டு வெளியே வரும்பொழுது  புதுக்கோட்டையைச் சேர்ந்த  பிரபாகரன்  என்பவர் தமது  செருப்பினால்  அவரை  அடித்துள்ளார்.   இந்தப்  பிரபாகரன் என்ற பெயர்தான்  இன்றும் பெரும்  சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருப்பதுடன்   என்றும்  வாழும்  பெயராகவும் மாறிவிட்டுள்ளது.
யானை    வாழ்ந்தாலும்  ஆயிரம்  பொன்.    இறந்தாலும்  ஆயிரம்  பொன்  என்பது போன்று   பிரபாகரன்  உயிரோடு  இருந்தபொழுதும் பேசப்பட்டார்  - இறந்த  பின்னும்  பேசப்படுகிறார்.
"அவர் இறந்துவிட்டார்" என்று பகிரங்கமாக பேசுவதும் பாவகரமான காரியம் என்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய முன்னணியின் மேதினக்கூட்டத்தில் குழப்பமும் தோன்றியது!
விஜயகாந்த்தும்   தமது  ஒரு  படத்திற்கு  கப்டன்  பிரபாகரன்  என்று பெயர்வைத்ததுடன்தனது  மகன்  ஒருவருக்கும் அந்தப்பெயரைச் சூட்டினார்.   ஒருகாலத்தில்  பிரபாகரன்  என்ற பெயருள்ள  தமிழ் இளைஞர்கள்    கொழும்பு  விமான  நிலையத்தின்  ஊடாக வெளிநாடு  செல்வதற்கும்  அஞ்சினார்கள்.
செருப்பு   என   அழைக்கப்படும்  பாதுகைக்கு  இராமாயண காவியத்திலிருந்தே  பெரும்  சிறப்பு  தொடருகிறது.   பாதணி  மக்களின்    பாதுகாப்புக்குரியது.   வருவாய்க்குரியது.   எத்தனையோ குடும்பங்களின்   வாழ்வை    வளம்படுத்தியிருக்கிறது.
ருஷ்யாவின்  முன்னாள்  அதிபர்  ஜோசப்  ஸ்டாலினின்  தந்தையும் ஒரு  செருப்புத்  தைக்கும்  தொழிலாளிதான்.
கற்காலத்திற்கு    பிற்பட்ட    மனிதன்  மிருகங்களை   வேட்டையாடி தனது   பசியை   போக்கிக்கொண்டதுடன்  மிருகங்களின்  தோலில் செருப்பும்   செய்து  அணிந்து  நகரீக  உலகிற்கு  வழிகாட்டினான்.
இராமாயண   பரதன்  தனது  அண்ணன்  இராமனின்  பாதுகையை பெற்றுச்சென்று  அரியணையில்  வைத்து  அரசாண்டான்.
இந்தியாவில்    ஆளுனராகவும்  இருந்த  மூதறிஞரும்  சுதந்திரா கட்சியின்    ஸ்தாபகருமான   ராஜாஜியிடம்  ஒரு  பஞ்சாயத்து  வழக்கு வந்தது.    அவர்  குற்றவாளியான  ஒரு   செருப்புத்தைக்கும் தொழிலாளியின்    கையில்  ஒரு  செருப்பைக்கொடுத்து  அதில் சத்தியம்   செய்து  தரும்படி  சொன்னதும்  அவன்  தயங்கி  குற்றத்தை ஒப்புக்கொண்டான். காரணம்   அவனுக்கிருந்த  தொழில்  பக்தி.
இலங்கை   இலக்கிய  நண்பர்  டொமினிக் ஜீவாவின்  பாதுகை   என்ற சிறுகதை   அந்நாளில்  இலக்கிய  வட்டாரத்தில்  அதிகம்  பேசப்பட்டது.
ஜீவா,     ராஜாஜி  வாழ்வில்  நடந்த  அச்சம்பவத்தை  தழுவித்தான் அக்கதையை    எழுதிவிட்டதாக  பலரும்  அவரை   விமர்சித்தார்கள். அவர்    கம்யூனிஸ்ட்  கட்சியிலிருந்தமையினால்  அக்காலத்து தமிழரசுக்கட்சியினர்  அவரை  பாதுகை   திருடியவர்  என்றும் விமர்சித்தனர்.
சில  இலக்கிய  விமர்சகர்கள்,    இலங்கையில்  பாதுகை   என்று சொல்லும்  வழக்கம்  இல்லை.   யதார்த்த  இலக்கியவாதி  எப்படி அந்தச்சொல்லை  பயன்படுத்தினார்...?  என்றும்  ஜீவாசாலையின் திருப்பம்  என்று  மற்றும்  ஒரு  சிறுகதை   எழுதியதும்  இலங்கையில்  வீதியையும்  தெருவையும்  சாலை   என்று அழைப்பதில்லை    என்றும்  விமர்சித்தனர்.
ஆனால்ஜீவா   அந்த  விமர்சனங்கள்  குறித்து  அலட்டிக்கொள்ளாமல் தனது   சிறுகதைத்தொகுதிகள்  இரண்டிற்கும்  பாதுகை,   சாலையின் திருப்பம்  என்றே    பெயரிட்டார்.   இரண்டு  நூல்களும்  தமிழ்    நாட்டில் வெளியானாலும்   இலங்கையிலும்  பரவலான  வாசிப்புக்கு  கிட்டியது. இரசிகமணி   கனகசெந்திநாதன்  எழுதிய  ஈழத்து  இலக்கிய  வளர்ச்சி நூலிலும்   பாதுகை   சிறுகதை  பற்றி  குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜீவாவின்  பாதுகை  சிறுகதையின்  நாயகன்  யாழ்ப்பாணம் கஸ்தூரியார்  வீதியில்  செருப்புத்தைக்கும்  முத்து  முகம்மது  என்ற தொழிலாளி.    ஜீவா   எனக்கு  அவரை   1975  ஆம்  ஆண்டு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.   செருப்பு தைக்கும் தெருவோரக்கடையொன்றில்   கண்டேன்.   அவர்தான்  பாதுகை நூலுக்கும்   முன்னுரை   எழுதியவர்.
தொழிலாள   விவசாய  பாட்டாளி  மக்களுக்காக  அன்று  எழுத்தை ஆயுதமாக்கிய  ஜெயகாந்தன்  முதல்  இலங்கையில்  பல முற்போக்காளர்களும்    அவ்வாறு  விளிம்பு  நிலை  மக்களையே  தமது    படைப்புகளில்  நாயகர்களாக்கினர்.
ஜெயகாந்தனும்   தமது  பால்யகாலத்தில்  ஒரு  கடையில் செருப்புத்திருடி   முழுநாள்பொழுதும்  அது தேயத்தேய  நடந்து திரிந்துவிட்டு,    ஒரு  பாலத்தின்  அருகில்  வந்ததும்  எடுத்து  நதியில் வீசிவிட்டுச்சென்றதாக  தனது  திரும்பிப்பார்க்கின்றேன்   தொடரில் எழுதியிருக்கிறார்.
எழுத்தாளனாகியதும்  ஆனந்த விகடனில்  புதுச்செருப்பு  கடிக்கும் என்ற   சிறுகதையும்  எழுதினார்.   அதனைத் திரைப்படமாக்கிய அன்பழகன்   தற்பொழுது    சிங்கப்பூரில்  வசிக்கிறார்ஆனால்படம் திரைக்கு   வரவேயில்லை.
அவுஸ்திரேலியாவுக்கு   1987  ஆம்   ஆண்டு  புறப்படும்  முன்னர் நண்பர்  கம்பவாரிதி  ஜெயராஜ்  அவர்கள்   யாழ்ப்பாணம்  நல்லூரில் அவர்   தங்கியிருந்த    இல்லத்தில்  எனக்கும்  ஜீவாவுக்கும்  கவிஞர் புதுவை  ரத்தினதுரைக்கும்  வழங்கிய  இராப்போசன  விருந்தின் பின்னர்,   அவருடைய  சுவாமி  அறையையும்  எனக்கு  காண்பித்தார். அங்கு   ஒரு  அதிசயத்தை   தரிசித்தேன்.
தன்  வாழ்நாள்  முழுவதும்  கம்பன்  புகழ்  பாடிய  தமிழ்நாடு கம்பனடிப்போடி  சா. கணேசன்  அவர்களின்   பழைய  தேய்ந்த   ஒரு சோடி  செருப்பை  அங்கு  பீடத்தில்  வைத்திருந்தார்.
தினமும்  அதற்கும்  பூசை   பிரார்த்தனை  செய்தவர்  கம்பவாரிதி.
இராமனின்  பாதுகை   அயோத்தியின்  அரண்மனை   அரியணையில்  அமர்ந்தது  போன்று  கம்பவாரிதியின்   சுவாமி  அறையில் கம்பனடிப்போடியின்  செருப்புகள்  கொழுவிருந்தன.
ஆனால்எமது  சமூகத்தில்  செருப்பு,   சப்பாத்துசிலிப்பர்களை வீட்டின்   வெளியே  வைப்பார்கள்.   குளியலறைக்கு  தனியாக  வேறு ஒரு  சோடி  வைத்திருப்பர்.தொழிற்சாலைகளில்    பணியாற்றுவோர்  பாதுகாப்பு  பாதணி  (Safety Boots  ) அணியவேண்டும்  என்பது  சட்டம். சத்திர  சிகிச்சை  அறைகளில்  பணியிலிருப்பவர்களுக்கென விசேடமான   பாதணிகள்  இருக்கின்றன.
இவ்வாறு  இடத்துக்கு  தக்கவாறு  பாதணிகளின்  வடிவமும்  அவற்றின்    பெயர்களும்  மாறும். குதியுயர்ந்த  பாதணி   அணிந்த  பெண்கள்  விபத்துக்களுக்கும் இலக்காகியுள்ளனர்.    மரணங்களும்  சம்பவித்துள்ளது.
பாதணிக்குரிய    மரியாதையும்   இடத்துக்கு  இடம்  மாறுகிறது. கோபம்   உச்சத்தில்  உயர்ந்தால்  அதன்  அர்த்தம்  மாறிவிடுகிறது.
"செருப்பாலே  அடிப்பேன்...." "செருப்பு  பிய்ஞ்சிடும்...." என்ற வார்த்தைப் பிரயோகங்கள்   எமது  சமூகத்தில்  மட்டுமல்ல  பிற  சமூகங்களிலும் இடம்பெறுகின்றன.
பல   உலகத்தலைவர்கள்  மீது  வெறுப்புக்கொண்டவர்கள் செருப்பை தூக்கி  எறிந்த  சம்பவங்கள்  நடந்துள்ளன.    இதுவிடயத்தில்  முன்னாள்  அமெரிக்க  அதிபர்  புஷ்ஷ_ம்  தப்பிக்கவில்லை.    இந்தியாவின்  முன்னாள்  பாதுகாப்பு  ஆலோசகர்  மீதும் மனிதனின்    பாதங்களை   பாதுகாக்கும்  பாதணி  பதம்  பார்த்துள்ளது. அவரை  தமது  பாதணியால்  அடித்த  பிரபாகரனுக்கு  இந்திய சட்டத்தில்   என்ன  தண்டனையோ    தெரியவில்லைஆனால்அந்தப்பாதணி   தொடர்ந்தும்  அவரிடமிருந்தால்  முன்னாள்  இந்திய பாதுகாப்பு   ஆலோசகரை   பதம்  பார்த்தது  என்ற  பெருமையுடன்  அதே    பிரபாகரனிடம்   இருந்து  அவரைப் பார்க்கவருபவர்களின்  கண் காட்சிக்குப்பொருளாகலாம்!
ஜோர்ஜ் புஷ் மீது பாதணி எறிந்த பத்திரிகையாளர் மண்டேசர் அல்ஸைதி  சிறைவைக்கப்பட்டு,  நன்னடத்தை காரணமாக விடுதலையாகி பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து, இடதுசாரிக்கட்சியுடன் இணைந்து இம்மாதம் ஈராக் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
முன்னர்     இலங்கைக்கு  வந்த  இந்தியப் பிரதமர்  ராஜீவ் காந்தியை      துவக்குச் சோங்கினால்  தாக்கிய  கடற்படை  ஊழியர்  ஊடகங்களால் பிரபலமாகிதேர்தலில்  நிற்கும்  அளவுக்கு  அந்நபரை முக்கியத்துவம்   பெறச்செய்தமைபோன்று  இந்தப்  பாதணி பிரபாகரனும்நராயணனை   பிடிக்காத  இயக்கங்களினால் முக்கியத்துவம்    பெறலாம்நாரயணனை   பாதணியால்  தாக்கியதில் என்ன   தவறு...? என்று  கேட்கும்  அளவுக்கு  செய்திகள் இணையங்களில்  வெளிவரத்தொடங்கின.
இனிமேல்   விவகாரத்துக்குரியவர்களை    செருப்படிகளிலிருந்து பாதுகாக்க வேண்டுமானால்   அவர்கள்  கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு    வருபவர்கள்  அனைவரும்  தமது  பாதணிகளை வெளியே  வைத்துவிட்டுத்தான்  வரநேரிடும்!   பாதுகாப்பு ஊழியர்களினால்    வாயிலில்  வைத்தே  செருப்புகளை   பொறுப்பெற்று டோக்கன்    கொடுக்கவேண்டிய  சூழ்நிலை  தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பல   வருடங்களுக்கு  முன்னர்  கொழும்பு  மத்திய மகாவித்தியாலய வீதியில்  ( முன்னாள்  பாபர்  வீதி)   அமைந்திருந்த  சத்திய  சாயிபாபா இல்லத்தில்   பிரார்த்தனைக்கு  வரும்  சாயிபக்தர்களின்  பாதணிகளை    கைகளில்  வாங்கிவாயிலிலிருந்த  ராக்கையில் அடுக்கிக்கொண்டிருந்த    எனது  இனிய  இலக்கிய  நண்பர்  ஒரு கூடைக்கொழுந்து  புகழ்   என். எஸ்.எம். ராமையாவைக்கண்டு திகைத்துவிட்ட  தகவலை   அவர்  பற்றி  முன்னர்  எழுதியிருந்த  ஒரு கட்டுரையிலும்    குறிப்பிட்டிருக்கின்றேன்.
எனக்கு   இந்தப்பாதணிகள்  மீதுதான்  எப்பொழுதும்  ஆழ்ந்த அனுதாபம்.   மக்களின்  பாதுகாப்பிற்கும்  சுகாதாரத்திற்கும் பயன்பட்டுவரும்    பாதணிகளை   நம்பி  வாழும்  குடும்பங்களும் இருக்கின்றன.
இந்தியாவிலும்   இலங்கையிலும்  கோயில்கள்புனிதஸ்தலங்களின் வெளி    முற்றங்களில்  ஏழை   முதியவர்கள்,   அங்கு  வரும் பக்தர்களின்   பாதணிகளை   பத்திரப்படுத்திக்  கொடுத்து  சில்லறை பெற்று   வயிற்றைக்கழுவுகிறார்கள்செருப்புத் திருடர்களுக்கும் பாதணிகளினால்  நன்மையுண்டு.   அத்தகைய  பாதணிகளை மனிதர்களை  தாக்குவதற்கு   அவமானப்படுத்தும் அடையாளமாக்குவதைத்தான்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை.
பாதணியால்   அடி வாங்கினால்அந்த  அவமானம்  அடி வாங்கியர் வாழ்க்கை   முழுவதும்  தொடரும்.   கையால்  காலால்  தடிகளினால் ஒருவர்    அடிவாங்கினால்  கிடைக்கப்பெறும்  செய்திக்கும்   செருப்பால்   அடிவாங்கியவர்  பெற்றுக்கொள்ளும்   வசைமொழிக்கும் பாரிய  வேறுபாடு  இருக்கிறது.
பாதணி   என்றவுடன்  1984  இல்  எனது  குடும்பத்தில்  நடந்த  சம்பவம்  நினைவுக்கு  வருகிறது.
அப்பொழுது    எனது  மூத்தமகள்  பாரதிக்கு  நான்கு   வயது.   வெளியே செல்லும்பொழுதெல்லாம்   அவள்  என்னுடன்  தொற்றிக்கொள்வாள். உறவினர்கள்நண்பர்கள்  வீடுகளுக்கு  செல்லும்பொழுது  வாசலில் நான்  எனது  பாதணிகளை  கழற்றிவிடுவதைப்பார்த்துஅவளும் குனிந்து   தனது  பாதணிகளை  கழற்றிவைத்துவிட்டுத்தான்  உள்ளே வருவாள். அவளுடைய  இந்தச்செயலை   கண்டுவிட்டு  அவளை   உச்சிமுகர்ந்து பாராட்டினார்கள்.
அதனால்   அந்தப் பழக்கம்  மிகவும்  நல்லதுபோலும்  என்று  பச்சிளம்    குழந்தையின்    மனதில்  பதிந்துவிட்டது.   பிறிதொரு  நாள் அவளை    எங்கள்  ஊர்  தியேட்டர்   ஒன்றிற்கு  படம்  பார்க்க அழைத்துச்சென்றேன்.
டிக்கட்  பெற்றுக்கொண்டு  திரையரங்கு  வாசலில்  டிக்கட் கிழிப்பவரிடம்    கொடுத்தசமயத்தில்  எனது  குழந்தை  தனது பாதணியை    வாசலில்  கழற்றிவிட்டு  உள்ளே  வந்திருக்கிறாள்.   நான் அதனைக் கவனிக்கவில்லை.
உடனே  வாசலில்  நின்ற  அந்த  நபர்  "  பபா  உங்கள்  செருப்பு " என்று   சிரித்தவாறு  குரல்  எழுப்பினார்.   பின்னால்  நின்றவர்களுக்கும் எனக்கும்  வந்த  சிரிப்பை  அடக்க  முடியவில்லை.
பின்னர்   அவளுக்கு  செருப்பை  எங்கே -   எப்பொழுது  -எந்தவேளையில்கழற்றவேண்டும்  என்று  பாடம்  நடத்தினேன். இன்று  அவள்  தனது  குழந்தைகளுக்கு  ( எனது  பேரக்குழந்தைகளுக்கு  அந்தப்பாடத்தை   நடத்திவிட்டாள்.)
நவநாகரீக  வனிதையர்  வெளியே  செல்லும்பொழுது  தாம்  அணியும் ஆடைகளின்   நிறத்துக்கு  ஏற்ற  பாதணிகளை  அணிவதை வழக்கமாகக் கொண்டவர்கள்.    அத்துடன்  புதிய  புதிய  மோஸ்தரில் ஆடைகளை   அணியும்பொழுதும்  அதற்குப் பொருத்தமான பாதணிகளையும்    தேடித்  தேடி   வாங்கிவிடுவார்கள்.   இந்தப்பழக்கம் வழக்கமாகிவிட்டால்  காலப்போக்கில்  அவர்களின்  வீடுகளில் பாதணிகளின்   எண்ணிக்கை   பெருகிவிடும்.   அவ்வாறு  தனது பாதணிகளின்    எண்ணிக்கையை   முன்பு பெருக்கியவர்தான் பிலிப்பைன்ஸின்   அதிபராக  இருந்த  அக்கியூனோ   என்ற  அம்மணி.
தமிழக   முதல்வர்  செல்வி  ஜெயலலிதா  ஜெயராம்  அவர்களிடம் சொத்துக் குவிந்தமை போன்று  அவருடை   பாதணிகளும் குவிந்திருந்தது   என்று   செய்திகள்  கசிந்தன.
புகலிடத்தில்   வீடுகள்  மாறும்பொழுது  வீடுகளிலிருக்கும் முதியவர்கள்    வேடிக்கையாக  சொல்லும்  ஒரு   விடயமும் இருக்கிறது.
" வீட்டுச்சாமான்களை   ஏற்றுவதற்கு  ஒரு  ட்ரக் போதும்.   ஆனால் தங்கள்    புத்திரிகளின்  விதம்  விதமான  பாதணிகளை   ஏற்றுவதற்கு இரண்டு  ட்ரக்  வேண்டும். "   இந்தச்சங்கடத்திற்காகவே  பல  புத்திரிகள்  தமது  பழைய  பாதணிகளை   சல்வேசன்  ஆர்மி முதலான  தொண்டு  நிறுவனங்களுக்கு  கொடுத்துவிடுவார்கள். அவற்றில்  சில  சோடிகள்  ஒரு  நிகழ்ச்சிக்கு  மாத்திரம் பாவிக்கப்பட்டதாகவும்    இருக்கும்!
இலங்கையில்  சுநாமி  கடற்கோள்  அநர்த்தம்  வந்தவேளையில்  நிவாரணப்பொருட்கள்    சேகரித்தபொழுதுபாவித்த  உடைகளுடன்   பெண்கள்  அணியும் ஏராளமான  பாதணிகளும்  வந்து  குவிந்தன.
எனது   பாட்டி  சொல்லித்தந்த  ஒரு  உருவகக்கதையில்  வரும்  ஒரு வீட்டில்   வளரும்  பசுவுக்கும்  நாய்க்கும்  இடையே  வாக்குவாதம் வரும்.    இறுதியில்  அங்கும்  பாதணி   வந்துவிடும்.
அந்தச்சின்ன  வயதில்,  "பசுவும்  நாயும்  பேசிக்கொள்ளுமா...?" என்று நான்   கேட்கவில்லை.   பாட்டியிடம்  கதை கேட்கும்  ஆவல்தான் இருந்தது.
பசு  வீட்டில்  கிடைக்கும்  வைக்கோல்புல்புண்ணாக்கு  உண்டு பாலைத்தருகிறது. நாயோ  வீட்டு  எஜமான்  தரும்  உணவை   உண்டு  வீட்டைக்காக்கிறது.
வீட்டுக்கு  இவ்வாறு  உதவும்  இரண்டு   மிருகங்களுக்கும்  இடையே யார்   உயர்ந்தவர்...?  என்ற  போட்டி  வாதமாக  உச்சம்பெறுகிறது.
தான்   கோயில்களில்  சிலையாக  வணங்கப்படுவதாகவும்  கோமாதா பூசை  தனக்கு  நடப்பதாகவும்  தான்  தரும்  பால்  அபிசேகத்திற்கும் பயன்பட்டு,  அதிலிருந்து  கிடைக்கும்  தயிர்  மோர்,   வெண்ணெய்,   நெய் பற்றியெல்லாம்    பெருமையடித்துக்கொள்கிறது   பசு.
என்னதான்  இருந்தாலும், நீ  இறந்துவிட்டால்   உனது தோலில்தானே    செருப்புத்தைத்து  பாதணி   அணிகிறார்கள்.   ஆனால்  அந்தப்பாதணியுடன்   கோயிலுக்குள்  செல்ல முடியாதுதானே...? என்று நாய்   பசுவை   ஏளனம்  செய்கிறது.
உடனே  பசு,   தான்  வாழ்ந்தாலும்  மக்களுக்கு  நன்மை.   இறந்தாலும் நன்மை   எனச்சொல்லிஏய்... நாயே... நீ  செத்தால்  யாருக்கும் எந்தப்பயனும்    இல்லை .   இந்த  மக்கள்  நன்றி  மறப்பவர்களையும்  நன்றி  கெட்ட  நாயே    என்றுதான்  அழைக்கிறார்கள். எனது தோலில் செருப்பாவது கிடைக்கும். உனது தோல் எதற்குமே உதவாதுஎனச்சொல்லும்.
இவ்வாறு   பசுவின்  நாயின்  வாதங்கள்  தொடரும்.
நன்றியுள்ள    நாயையும்  சில  சந்தர்ப்பங்களில்  மனிதர்களை திட்டுவதற்கும்  பயன்படுத்துவது போன்று  மக்களுக்கு  பல வழிகளிலும்    உதவிவரும்  பாதணிகளையும்   தமக்கு பிடிக்காதவர்களை    தாக்குவதற்கும்  பாவிக்கும்  மனிதர்கள்   இந்த உலகில்  வாழ்கிறார்கள்.  
இனிச்சொல்லுங்கள்....   பாதணிகள்    ஆழ்ந்த அனுதாபத்துக்குரியவைதானே. இந்தப்பாதணி மகத்மியம் இன்னும் முடியவில்லை. மேலும் இருக்கிறது. சொல்கிறேன்.
    பல  வருடங்களுக்கு  முன்னர்  சென்னையில்  திராவிடக்கழக பகுத்தறிவாளர்கள்  - விநாயகர்  சிலைக்கும்  செருப்பு  மாலை அணிவித்து   ஊர்வலம்  சென்று  கைதாகினார்கள்.    விநாயகர் என்னதான்  செய்வார்....? வழக்கம்போல் எல்லாத்திருக்கூத்துக்களையும்  அவர் பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்.
இக்காலத்தில்   தொழிற்சாலைகளில்  பாதணி   இன்றி பணியாற்றமுடியாது.    பாதணியில்லாமல்  இன்றும்  பல  பின்தங்கிய கிராமங்களில்   ஏழை  மாணவக்குழந்தைகள் பாடசாலைக்குச்செல்கின்றன.   பாதணி   குறித்து  சில  நெஞ்சை உருக்கும்    குறும்படங்களும்  வெளியாகி  விருதுகளும்  பரிசுகளும் பெற்றுள்ளன.
இலங்கையில்   வடபகுதியில்  போர்க்காலத்தில்  வெளியான  ஒரு குறும்படத்தில்  நீண்டநாளாக  பாதணிக்கு  ஆசைப்பட்ட  ஒரு குழுந்தைக்கு  தந்தை   பாதணி   வாங்கிவரும்பொழுதுஅந்தக்குழந்தை அடங்காத ஆவலில்   ஓடிவரும்பொழுது    நிலக்கண்ணிவெடியில் சிக்கி தனது  ஒரு  காலை  இழக்கிறாள்.
தமிழக   குறும்படம்  ஒன்று,   வசனமே   இல்லாமல் பாத்திரங்களையும்  காண்பிக்காமல்இரண்டு  சோடி  பாதணிகளை மாத்திரம்  காட்சிப்படுத்திமறக்கவே  முடியாத  செய்தியை வழங்கியிருந்தது.
கதை  இதுதான்.
ஒரு  தனியார்  கல்வி  நிலையம்.
வெளிவாசலில்  பல   பாதணிகள்.   அதில்  ஒரு  இளம்  மாணவியினதும்   ஒரு  இளம்  மாணவனதும்  பாதணிகள் தனித்தனியாக  இருக்கும்சில  நாட்களில்  அந்த  இரண்டு  சோடி பாதணிகளும்   அருகருகே   கிடக்கும்.   மற்றும்  ஒரு  நாள்  ஒன்றுக்கு மேல்   ஒன்றாக  நெருங்கிக்கிடக்கும்.
பிறிதொரு  நாள்   ஆணின்  பாதணி  மாத்திரம்  கிடக்கும். காட்சிக்கோணம்  மாறும். ஓரிடத்தில்   மாணவனின்  சைக்கிள்  வீதியோரத்தில்  கிடக்கும். அருகே  ஒரு  குண்டாந்தடியும்  இரத்தக்கறைகளும்  காணப்படும்.
மறுநாள்   அந்த  கல்வி  நிலைய  வாசலில்  ஆணின்  பாதணிகளும்  பெண்ணின் பாதணிகளும் இல்லை. வசனமே  இல்லாமல்  ஆழ்ந்த  செய்தியுடன்  குறும்படம்  முடியும்.
எனவே   பாதணிகள்  காவிய நயம்  மிக்கவை.   அதனையும் தமக்குப்பிடிக்காதவர்களை    தாக்குவதற்கு  பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில்    சாதிப்பது  என்ன...?
மாற்றுக்கருத்துக்கு  எதிர்வினையாற்றுவதுதான்  ஜனநாயக  மரபு. அந்த  ஜனநாயகம்  மீறப்படும்பொழுது  அராஜகம்தான்  தலைதூக்கும்இந்தியாவின்  முன்னாள்  பாதுகாப்பு  ஆலோசகருக்கு தனது   பாதணியால்  தாக்கிய  அந்த  பிரபாகரன்,    இலங்கையிலிருந்து சென்றவர்    என்று  செய்திகள்  தெரிவிக்கின்றன.
இலங்கை   அகதிகள்  தொடர்பான  கருத்தரங்கில்  அவர் முன்யோசனையுடன் பெயர்  பதிவுசெய்துகொண்டுதான்  அந்த மண்டபத்தில்    பிரவேசித்துள்ளார்.
" அதிதீவிரவாதம்    அடக்குமுறைக்குத்தான்  வழிகோலும் "  என்றார் மேதை  லெனின்.   இனி  சென்னையில்  தஞ்சமடைந்திருக்கும் இலங்கை    அகதிகள்  மீது  பாதுகாப்புத்துறையும்  புலானய்வுத்துறையும்   தனது  கழுகுப்பார்வையைதான்  தொடரும் என்பது  எதிர்பார்க்கப்படுவதுதான்.
ஏற்கனவே,    இலங்கையர்களினால்  தமிழ்நாட்டில்  படுகொலைகள் உட்பட    வேண்டத்தகாத  சம்பவங்கள்  நடந்துவிட்டன.
பாண்டிபஜாரிலிருந்து,    சூளைமேடு  தொடங்கி,   கோடம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர்   என்று  பல  வன்முறைகள்  இலங்கையர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது   தவிர  இலங்கையிலிருந்து  சென்ற  யாத்ரீகர்கள்  மீதும் வன்முறைகள்    தொடர்ந்தன.
ஏற்கனவே    இந்திய - இலங்கை   மீனவர்களுக்கு  இடையே ஆரோக்கியமான    உறவு  இல்லை.   சிறைப்பிடிப்பும் ---  விடுவிப்பும் என்று    மீனவர்  வாழ்வு  கண்ணீரில்  கரைகிறது. கடலை   நம்பி   பிறந்த அவர்களை  கண்ணீரில் மிதக்கவைத்துக்கொண்டிருக்கின்றன  இரண்டு  தேசங்களும்.
இந்தப்பின்னணியில்   செருப்பினால்  செய்தி சொல்ல  முனையும் தீவிரவாதகொழுந்துகளை  உசுப்பேத்தாமல்  நிதானமாக இயங்கத்தூண்டுவது  காலத்தின்  தேவை.
இந்த  21  ஆம்  நூற்றாண்டில்   உலகெங்கும்  பரவியிருக்கும் கொடியநோய்தான்    நினைவுமறதி. இந்த    நோய்க்கு  அமெரிக்க  முன்னாள்   அதிபர்  ரேகன்  முதல் நோபல்    விருது  பெற்ற  கப்ரியேல்  கார்ஸியா  மாக்வெஸ்   உட்பட புகழ்பெற்ற  பலரும்  சாதாரண  ஏழை   மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்கள்   ஏழை   பணக்காரன்,    படித்தவன் - பாமரன்    என்று பாகுபடுத்திவருவதில்லை.
இந்த    நினைவுமறதி நோயினால்  பாதிக்கப்பட்டவர்களை  வெளியே   தனித்து  அனுப்புவதற்கும்  உறவினர்கள் விரும்புவதில்லை.    அப்படி  இருந்தும்  அத்தகைய  நோயாளிகள் தமது   பழைய நினைவுகளில்  மூழ்கி   வெளியே   புறப்பட்டுச்சென்று திரும்பிவருவதற்கும்    வழிதெரியாமல்  அலைந்த  செய்திகளையும் அறிவோம்.
இந்த  நவீன  உலகில்  அதற்கு  மருந்துகள்  கண்டுபிடிக்கப்படும் அதேவேளையில்அத்தகைய  நோயாளர்களை   இலகுவாக தேடிக்கண்டுபிடிக்கவும்    அதற்கென  விசேடமாக  தயாரிக்கப்பட்ட பாதணிதான்    சமகாலத்தில்  உதவும்  என்றும்  மருத்துவ விஞ்ஞானிகள்    கண்டுபிடித்துள்ளனர்.
நினைவுமறதி   நோயினால்  பாதிக்கப்பட்டவருக்கு  குறிப்பிட்ட பாதணியான  சப்பாத்தை  அணிவித்துவிட்டால்உறவினர்கள் கவலையின்றி    இருக்க  முடியும்  என்று  சொல்லப்படுகிறது. அந்தப்பாதணியை    அணிந்திருப்பவர்  எங்கே  இருக்கிறார்  என்பதை செய்மதி  ஊடாக  உறவினர்கள்  தமது  கணினியிலும் கைத்தொலைபேசியிலும்   அறிந்துகொள்ளமுடியுமாம்.
பாருங்கள்...  இன்றைய  நவீன  உலகில்  விஞ்ஞானிகள்   மக்களின் நலன்  கருதி  என்னவெல்லாம்  கண்டுபிடிக்கிறார்கள். இந்தத்தகவலை  புகலிடத்தில்  பிறந்த  ஒரு  ஆரம்பப்  பாடசாலைக்கு செல்லும்   ஒரு   தமிழ்க்  குழந்தையிடம்  சொன்னபோது, "உங்களைப்போன்ற   தமிழ்  மக்கள்  அவ்வாறு  ஏதும்  புதிதாக கண்டுபிடித்துள்ளனரா...? " எனக்கேட்டது.
" ஆமாம்.... கண்டுபிடித்துள்ளார்கள். அதன் பெயர்  "சாதி "  என்றேன்.
" அது  எதற்கு உதவும்...?"  என்ற கேள்வியை  அந்தக்குழந்தை கேட்டபொழுது   என்னிடம்  பதில்  இல்லை!
letchumananm@gmail.com


-->











No comments: