இலங்கைச் செய்திகள்


ரயிலில் பெண்ணிடம் தகாதமுறையில் நடந்த ரயில்வே ஊழியருக்கு நடந்த கதி

பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இனவாதி கைது!

ரயிலில் முரண்பட்டமைக்கான காரணத்தை சட்டத்தரணி ஊடாக தெரிவித்த ரயில்வே ஊழியர்

அரபு நாட்டின் நிதியுதவியில் கொக்குப்படையான் கிராமத்தில் வீட்டுத்திட்டம் : கிராம மக்கள் விசனம்

நீதிபதி இளஞ்செழியன் உட்பட 3 மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்
ரயிலில் பெண்ணிடம் தகாதமுறையில் நடந்த ரயில்வே ஊழியருக்கு நடந்த கதி

10/05/2018 கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்படட ரயில்வே ஊழியரை பிணையில் செல்வதற்கு யாழ். நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில்  குடும்பப் பெண்ணிடம் ரயில்வே சீட்டை பரீட்சிக்கும் ஊழியர் தகாத முறையில் நடந்து கொண்டதுடன் ரயிலில் பயணித்த ஏனைய பயணிகளையும் தாக்க முயற்சித்தார். அத்துடன் அவர் இனத்துவேசமான வார்த்ததைகளையும் பிரயோகித்ததன் காரணமாக பொலிஸார் அவரை கைது செய்தனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட அவர் யாழ். நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தபபட்டதுடன் நீதிவான் குறித்த நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கினார்.   நன்றி வீரகேசரி 


பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இனவாதி கைது!
09/05/2018 கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்ததில் பெண் பிரயாணியொருவருடன் தகாத முறையில் நடந்துகொண்ட புகையிரத உத்தியோகத்தரை யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இச் சம்பவமானது நேற்று முன் தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு யாழ்.நோக்கிசென்ற புகையிரத்திலேயே நடைபெற்றுதுடன் சம்பவம் தொடர்பில் குறித்த ஊழியர் நேற்றுக்காலை பதினொரு மணியளவில் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். இதன் போது குறித்த புகையிரதத்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட புகையிரதத்தில் பணியாற்றுகின்ற சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர், குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.
இதனை அவதானித்த அங்கு நின்றவர்கள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்ட போது, அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்தார். மேலும் தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் போன்று தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதன் போது அங்கு சென்ற ஊடகவியாலாளர் ஒருவரையும் அவர் தாக்க முயற்சித்தார். இந்த சம்பவம் சாவகச்சேரி புகையிரத நிலையத்தை அண்மித்த போது நடந்து கொண்டிருந்தது.
இதன் போது நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிஸாராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான் தான் பெரியவன் என்று மிரட்டும் தொனியில் குறித்த ஊழியர் அனைவரையும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் புகையிரதம் யாழ்.பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும், குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.புகையிரத அதிபருக்கு குறித்த பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்துக்கான ஆதாரமாக காணொளியும் வழங்கப்பட்டது. இதனை அடுத்து இது தொடர்பில் தான் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றை செய்வதாக புகையிரதநிலைய அதிபர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புகையிரத்துக்குள் வைத்து குறித்த பெண்ணை இம்சைப்படுத்துவது மற்றும் குறித்த ஊழியர் தகாத வார்த்தைகள் பேசுவது போன்ற வீடியோ பதிவானது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த்துடன் அரசியல்வாதிகள் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலராலும் வ் வீடியோ பதிவு மற்றும் அது தொடர்பான தகவல்கள் றீ ருவிட் செய்யப்பட்டுமிருந்த்து.
இதனை தொடர்ந்து குறித்த புகையிரத ஊழியரினை கைது செய்த யாழ்.பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் முறைப்பாட்டை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதேவேளை இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 


ரயிலில் முரண்பட்டமைக்கான காரணத்தை சட்டத்தரணி ஊடாக தெரிவித்த ரயில்வே ஊழியர்
10/05/2018 புகையிரதத்தில்  மூன்றாம் வகுப்பு ஆசனத்துக்கு கட்டணம் செலுத்திவிட்டு இரண்டாம் வகுப்பு ஆசனத்தில் அமர்ந்திருந்ததாலேயே  பெண் பயணியிடம் ரயில்வே ஊழியர் முரண்பட்டாரே தவிர அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற விடயம் தவறானான ஒர் சோடிப்பு என புகையிரத ஊழியர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி றெமிடியஸ் மன்றில் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற புகையிரதத்தில் பயணித்த பிரிட்டன் வாழ் குடும்பபப் பெண்ணுடன் தகாத முறையில் நடந்துகொண்ட ரயில்வே ஊழியர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் மதியம் கைது செய்யப்பட்டார்.
அவர் விசாரணைகளின் பின்னர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் பிற்பகல் முற்படுத்தப்பட்டார். 
இதன்போது பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ரயில்வே ஊழியருக்கு எதிராக முதல் அறிக்கையை பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர்.
இதன்போதே சந்தேகநபரின் மேற்படி விடயத்தை மன்றுக்கு சுட்டிக்காட்டிய சட்டத்தரணி அவரைப் பிணையில் விடுவிக்க விண்ணப்பம் செய்தார். இதனை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.  நன்றி வீரகேசரி அரபு நாட்டின் நிதியுதவியில் கொக்குப்படையான் கிராமத்தில் வீட்டுத்திட்டம் : கிராம மக்கள் விசனம்
08/05/2018 அரபு நாட்டின் நிதி உதவியுடன் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள வேறு கிராம அலுவலகர் பிரிவில் வசித்து வரும் மக்களை மீள் குடியேற்றும் வகையில் கொக்குப்படையான் கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணியில் சுமர் 45 வீடுகளைக்கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கு கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை எல்லையிடப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றுள்ளளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.
முசலி பிரதேசச் செயலாளர் பிவுக்குட்பட்ட கொக்குப்படையான் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் விவசாய காணியில் அரபு நாட்டின் நிதி உதவியுடன் வேறு கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட மக்களை குடியேற்றம் செய்ய கடந்த சனிக்கிழமை வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றுள்ள நிலையில் குறித்த வீட்டுத்திட்டத்தை உடன் நிறுத்தி குறித்த காணியை கொக்குப்படையான் கிராம மக்களுக்கு பெற்றுத்தரக் கோரி கொக்குப்படையான் கிராம மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை முசலி பிரதேசச் செயலகத்திற்கு சென்று மகஜர் கையளித்துள்ளனர்.
குறித்த கிராம மக்கள் 1990 ஆம் ஆண்டு நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து சென்று மீண்டும் 10 வருடங்களில் பின் குறித்த கிராமத்தில் குடியேறியுள்ளனர்.
இதன் போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சிலரது காணி உரிமங்கள் தவறவிடப்பட்ட போதும்,பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் காணி ஆவணங்கள் வழங்கப்பட்டது. குறித்த காணியில் கொக்குப்படையான் கிராம மக்கள் விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கொக்குப்படையான்  கிராம மக்கள் குறித்த சம்பவத்தை கண்டித்தும், தமது காணியை தமக்கே பெற்றுத்தர கோரியும் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் அருட்தந்தை தவராஜா அடிகளார் தலைமையில் முசலி பிரதேசச் செயலகத்திற்கு சென்று முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமாரை சந்தித்து உரையாடி மகஜர் கையளித்தனர்.
இதன் போது கொக்குப்படையான்  கிராம மக்களுக்கு ஆதரவாக மன்னார் நகரசபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உப தலைவர்,உறுப்பினர்கள் சென்றிருந்ததோடு,முசலி பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்னர்.
மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் காணி அலுவலகர்களை அழைத்துக்கொண்டு, வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட காணிப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
தன்னிடம் எவ்வித அனுமதியும் இன்றி குறித்த காணியில் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதேசச் செயலாளர் உடனயடியாக குறித்த காணிகளில் வேளைத்திட்டங்களை நிறுத்த உத்தரவிட்டார்.
மேலும் காணிக்கூறிய ஆவணங்கள் உள்ளவர்களுக்கு காணியினை நீதியான முறையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி நீதிபதி இளஞ்செழியன் உட்பட 3 மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்
11/05/2018 மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச்சேவை  ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் 3 ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்றத்தில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும்  மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது.
இந்த இடமாற்றத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாகவும், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர் .
அதேவேளை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ள திருமதி .சிறிநிதி நந்தசேகரன் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாகவும், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக என்.எம்.எம். அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளனர். 
சட்டமா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதியான டெனிஸ் சாந்தன் சூசைதாசன் கல்முனை மற்றும் மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன் கடமையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரிNo comments: