அனைவருமே வாருங்கள் ! - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


image1.JPG         இலக்கியங்கள் பலகற்றும் இங்கிதங்கள் வளரவில்லை
         தலைக்கனத்தை விட்டுவிட நிலத்திலுள்ளார் விரும்பவில்லை
         கொடுத்துதவும் மனப்பாங்கை தொலைத்துவிட்டு நிற்பதையே
         நிலத்திலுள்ள பலரிடத்து நிலைத்துநிற்கக் காணுகிறோம் ! 

        அறம்செய்ய விரும்பென்று அவ்வைகூறிச் சென்றதனை 
        ஆருமே மனமதனில் அமர்த்தியதாய் தெரியவில்லை 
        அதிகசெல்வம் சேர்ப்பதிலே ஆசைகொண்டே அலைகின்றார்
        அல்லலுடன் இருப்பார்க்கு அவருதவின் அறம்மகிழும் ! 

        பொருள்தேவை என்பதனால் அருளதனை ஒதுக்குவதா
        மருளோடு வாழுவதால் வாழ்வுவளம் ஆகிடுமா 
        அருளான வழிசென்று பொருளதனைப் பயனாக்கின் 
        மருளகன்று வாழ்வினிலே அருள்வெள்ளம் பெருகிடுமே ! 

        பலகற்று உயர்நிலையில் இருக்கின்ற பலபேர்கள் 
        பல்லக்கில் பவனிவரும் பதவியுடை பலபேர்கள்
        பணந்தேடி பணந்தேடி பதராக மாறுகிறார் 
        பாங்காக அவர்வாழின் பண்பு தடுமாறிடுமா ! 


        பூமித்தாய் பலவற்றைப் பொறுமையுடன் தாங்குகிறாள் 
        சாமியெனச் சூரியனும் பூமிக்கு உதவுகிறான் 
        வான்மழையும் மண்ணினுக்கு வளங்கொடுத்தே நிற்கிறது
        மனம்மாறா மனிதரெலாம் மாறிவிட்டால் மகத்துவமே ! 

        பலகற்றோம் என்பதனால் பண்புநிலை மாறுவதா
        பக்குவத்தைத் தொலைத்துவிட்டு பதவிகளை நாடுவதா
        புவிமீது ஆற்றுதற்குப் பொறுப்பான பலவிருக்கு 
        அதையாற்றி அகநிறைவோம் அனைவருமே வாருங்கள் ! 
       


            No comments: