மெல்பனில் நடந்த தென்னாசிய கவிஞர்கள் ஒன்றுகூடல் ஈழத்து கவிஞர்கள் கருணாகரன் - நிலாந்தன் கவிதைகளும் இடம்பெற்ற நிகழ்வு ரஸஞானி


அவுஸ்திரேலியா குடியேற்ற பல்லின கலாசார நாடாகவும் திகழ்வதனால், பல விடயங்களில் இந்த கங்காரு தேசம் துரிதமாக அபிவிருத்தியடைந்து முன்னேற்றப்பாதையில் செல்வதாகவே அவதானிக்க முடிகிறது.
காலத்துக்குக்காலம் பொருளாதாரப் பிரச்சினைகள் வேலை இல்லாத் திண்டாட்டம்  தோன்றினாலும், இனங்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்துவதில் எந்தக்கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் முன்னுதாரணமாகவே திகழுகின்றது. அதனால்தான் இங்கு அனைத்து தென்னாசிய நாடுகளின் மொழிகளுக்காகவும் பாடசாலைகள் இயங்குகின்றன. அம்மக்களின் கலாசாரப்பணிகளுக்கு அரசின் அங்கீகாரமும் ஆதரவும் கிடைக்கின்றன.
பல்லினங்களினதும் கலாசாரப் பணிகளை ஊக்குவிப்பதற்காக பல்லின கலாசார ஆணையமும் இயங்குவதனால், அதன் ஊடாக  மானியங்களும் வழங்கப்பட்டு வருவதுடன் வருடாந்தம் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை நிகழ்த்தியவர்களை தெரிவுசெய்து, மாநில அரசுகள் விருதுகளும் வழங்கிவருகின்றன.
அவுஸ்திரேலியாவில்  வாழும் பலதேசங்களையும் சேர்ந்த இனத்தவர்களின் அமைப்புகள்,   அரசில் பதிவுசெய்யப்பட்டு இயங்குவதனால் அவற்றின் நிகழ்ச்சிகளுக்கு வருகைதரும் பல்லின கலாசார ஆணையர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற மேயர்களும் தொடர்ச்சியாக இன நல்லிணக்கம் பற்றியும் இனங்களின் மொழி, பண்பாடு, கல்வி, தொழில், கலாசாரம் குறித்து ஆக்கபூர்வமான நற்சிந்தனைகளை முன்வைத்துவருவதையும் அவதானிக்க முடிகிறது.


நான் வதியும் மெல்பனில் இருக்கும் இலங்கையர், இந்தியர், பாகிஸ்தானியர், பங்களா தேசத்தினர் பலர் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் SAPAC ( South Asian Public Affairs)  என்ற அமைப்பு வருடாந்தம் தென்னாசிய கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கும்  அரங்கை நடத்திவருகிறது.
அண்மையில் மெல்பனில் கிளன்வேவெலி சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகைதந்து உரையாற்றியவர் திரு. ஜூலியன் ஹில்.  இவர் அவுஸ்திரேலியா தொழிற்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்.
இந்நிகழ்ச்சியில் இலங்கையர், இந்தியாவில் சில மாநிலங்களைச்சேர்ந்தவர்கள், பாகிஸ்தானியர், பங்களா தேசத்தைச்சேர்ந்த கலைஞர்கள், கவிஞர்கள் பங்குபற்றியிருந்தனர்.
பங்களா தேசத்து நடன நர்த்தகிகளின் பாரம்பரிய நடனத்துடன் கவிதை வாசிக்கும் அரங்கம் ஆரம்பமானது.
இலங்கையைச்சேர்ந்த சிங்களக்கவிஞர் சமன் குலரத்தின இயற்கையும் குழந்தைகளும் என்ற தொனிப்பொருளில் வாசித்த கவிதையுடன் அதே கவிதையை பாடலாக ஒரு சிறுமி பாடும்காட்சி காணொளியாகவும் திரையில் காண்பிக்கப்பட்டது. இயற்கையுடன் குழந்தைகள் எவ்வாறு இரண்டறக்கலக்கிறார்கள் என்பதை அக்காணொளி துல்லியமாக விளக்கியிருந்தது. SAPAC அமைப்பின் நடப்பாண்டு தலைவரும் மெல்பனில் ' பஹன' என்ற மாத இதழை வெளியிட்டு வருவருமான திரு. பந்து திஸாநாயக்கா தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், உருது, ஹிந்தி, சிங்களம், ஆங்கிலம், தமிழ் கவிதைகளும் சமர்ப்பிக்கப்பட்டதுடன், கடந்த ஆண்டில் நடந்த கவிஞர்கள் ஒன்றுகூடலில் வாசிக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பும் நூலாக வெளியிடப்பட்டது.
பிறமொழிகளில் கவிதைகளை சமர்ப்பிக்கும்போது அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு திரையில் காணொளியாக காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தகுந்தது.
இலங்கை கவிஞர்கள் கருணாகரனின் ஊர் இழந்தவனின் குரல்  கவிதையை நடேசனும்,  நிலாந்தனின் கார்த்திகை முன்னிரவு கவிதையை தெய்வீகனும் வாசித்து சமர்ப்பித்தனர். இக்கவிஞர்களின் பின்னணி, எழுத்தாற்றல் பற்றியும் ஆங்கிலத்தில் விளக்கியிருந்தனர்.
கருணாகரனும் நிலாந்தனும் ஈழவிடுதலைப்போராட்டத்தில் தமது எழுத்தாயுதத்தை பயன்படுத்தியவர்கள். பாதிக்கப்பட்ட  மக்களுடன் வாழ்ந்து,  வலிகளை சுமந்தவர்கள். இன்றும் தாயகம்விட்டு அகலாமல் அங்கிருந்தவாறே இலக்கியமும்  அரசியல் பத்தி எழுத்துக்களும் படைத்துக்கொண்டிருப்பவர்கள். அத்துடன் சமகாலத்தில் கவனிப்புக்குரிய படைப்பாளிகள். தென்னாசிய கவிஞர்கள் அரங்கில் ஈழத்து கவிஞர்கள் இருவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது முன்னுதாரணமான விடயம்.
கருணாகரனின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கும் சோ.பத்மநாதனும் ஈழத்தில் ஆங்கிலப்புலமை மிக்க கவிஞரும் விமர்சகருமாவார்.
இந்நிகழ்ச்சியில் இவ்விரு கவிஞர்களின் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளை சமர்பித்தபோது, அவர்களைப்பற்றிய அறிமுகமும் கவிதைகளின் பின்னணியும்  தரப்பட்டமையால்,
கவிதையின் உள்ளடக்கத்துடன் பார்வையாளர்கள் எளிதாக நெருங்கவும் முடிந்தது.
நிலாந்தனின் கவிதை- " கார்த்திகை முன்னிரவு"

மழைக் குருவியின்

குளிர்ந்த பாரமற்ற குரல்
வீரர்களைப் புதைத்த காட்டில் 
சலித்தலைகிறது.



ஈமத்தாழியுட்     
கார்த்திகை நிலவு         
ஒளியூறிக்கிடக்கிறது.



வழிபாடில்லை
வணக்கப்பாடலும் இல்லை



நாயகர் இல்லை
பேருரை இல்லை



நனைந்த காற்றில்
உருகிக் கரையும்       
தீச்சுடர் வாசமும் இல்லை.  



பெயர்க்கப்பட்டது நடுகல் 
துயிலாதலைகிறது
பெருங்கனவு



இரும்பு வணிகர்
உலவும் காட்டில்         
பூத்திருக்கிறது 
கார்த்திகைப்பூ.


கருணாகரனின் கவிதை - "ஊர் இழந்தவனின் குரல்" 


மீண்டும் வந்திருக்கிறேன்
விடைபெற முடியாத் தருணமொன்றில் 
விட்டோடிப்போன தெருவொன்றிற்கு
பாதி மரமும் கிளைகளும் சிதைந்தழிந்த பிறகும்
ஈரம் மிதக்கும் சடைக்க கூழா நிழலுக்கு

என்ன இது
ஊரென்ற ஒரு சிறு உணர்வும் எழ விதியற்று
பேய்க்காடாகிக் கிடக்கிறதே நம் கிராமம்
கண் முன்னால்
வேலிகளைப் பற்றைகள் தின்னுகின்றன
புற்றெழுந்த வீடுகளும் 
நொருங்கிய மாடங்களுமாய் 
தீயலைந்த தெருவெங்கும்
காற்றின் அழுகுரலே கேட்கிறது

புதர்கள் மூடிவரும் ஒலி
பாம்புகள் அரையும் இரைச்சல்
தவித்துப் பறக்கும் ஒற்றைப்பறவை
விழியின் ஓட்டை வழி
நுழையும் காட்சிகளில்
என் பால்யம் இருளடைகிறது
நரம்புகளின் சூட்டையெல்லாம்
இந்தப் பூமி உறிஞ்சிக் குடிக்கிறது
எப்போதும் எங்கிருந்தோ ஒருபறவை” 
என் கண்களைக் கொத்திச் செல்லுமென்று அஞ்சுகிறேன்

இரக்கமில்லாத காலத்தின் கடவுளே
அன்புருக்கம் நுரைக்கும் இதயத்துடன் தினமும்
பலிகொள்ளப்படுகிறேன் எனது தெருவில்
காலமே!
ஒரு அலைக்கழிந்த  பிறவியாக 
இன்று, இந்தப் புள்ளியில் நின்றழுகிறேன் நான்

எங்கே என் முன்னோரின் கால்பட்டெழுந்த பாதைகள்
வம்ச வம்சமாய் நிலைபேறாய் நாம் வாழ்ந்த வீடுகள்
தென்கரை நீள்வெளியில் 
காலவெளியின்றி விளைந்த வயல் நிலங்கள்
எல்லாம் எங்கே எங்கே?

ஆயிரம் கோடி பாடல்களும் பேச்சும் கூத்தும்
மதுவும் வேட்டையும் மாபெரும் பொங்கலுமாய் 
நூறாயிரம் ஆண்டுகள் தொன்மம் கொண்டதெங்கள் வாழ்வு
இவ்வூரில் ஒரு அதிகாலைப் பொழுதிருந்து அழியத் தொடங்கிற்றே...
இதுபோன்ற பல்லின கவிதை வாசிப்பு அரங்குகளை தத்தமது தாயகங்களிலும் நடத்தவேண்டும் என்ற எண்ணக்கருவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அன்பர்களின் பொதுச்சிந்தனையாக அன்றைய தினம் மலர்ந்ததையும் அவதானிக்க முடிந்தது.
-->
---0---




No comments: