இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட ஆரம்பகால அறிஞர் பேராசிரியர் தஞ்சயராசசிங்கம் ( வாழ்ந்த காலம் 1933 - 1977) அவர்களின் எட்டு மொழியியல் கட்டுரைகளின் தொகுப்பே இவ்வாறு நூலுருப் பெற்றிருக்கிறது.
பேராசிரியர் தனஞ்சயராசசிங்கம் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து முதல் வகுப்பில் சித்தியடைந்ததோடு பேராசிரியர் தொ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் கீழ் “இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பிரகடனங்கள்” என்ற M.Litt ஆய்வுப் பட்டமும் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் யாழ்ப்பாணத் தமிழ் பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர்.
இந்த நூலின் பதிப்பாசிரியர் முருகேசு கெளரிகாந்தன் பேராதனைப் பல்கலைக்கழக முதுகலைமாணி (தமிழ்) உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளைச் செய்தவர்.
யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் என்ற தலைப்போடு ஒவ்வொரு கட்டுரைகளும் அதன்
இலக்கிய வழக்கு, முறைப் பெயர் வழக்கு, தொழில் பெயர் வழக்கு, ககரத்தின் மாற்றொலிகள், சொல்லும் பொருளும், போர்த்துக்கேய மொழியின் செல்வாக்கு, ஒல்லாந்த மொழிச் சொற்கள், தமிழில் எதிர்ச் சொற்கள் என்று எட்டு அத்தியாயங்களாக விரித்து நிற்கின்றது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஐந்து பத்து நிமிடத்துக்குள் வாசிக்கக் கூடிய கச்சிதம் கொண்டவை என்பதோடு நூலாசிரியர் குறிப்பிடுவதைப் போன்று இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவை.
பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கும் செந்தமிழ்ச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழில் வழங்கப்பட்டு வருகின்றன. மாலை மயங்கும் நேரத்தை
“பொழுது பட்ட நேரம்” என்று யாழ்ப்பாணத்தார் வழங்குவதை குறுந்தொகை வழி ஆதாரம் காட்டுகிறார். மேலும் “கிடக்கை” என்ற தொழிற்பெயர் (ஐங்குறு நூறு வழி ஆதாரம்) “ஒரே கிடையாய்க் கிடக்கிறான்” , “விடுதல்” (கார் விடுதல்) , இடங்காணுதல் (இடங்கண்ட இடத்தில் மடம் கட்டி), “வடிவு”!(அழகு), “மிடறு” (தொண்டை) உள்ளிட்ட புழங்கு தமிழ்ச் சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பாங்கைக் காட்டுகிறார். “நான்று கொண்டிருத்தல்”’அல்லது “நாண்டு கொண்டிருத்தல்” என்பதன் மூலமான “ஞான்று கொண்டிருத்தல்” (விடாப்பிடியாக ஒரு செயலைச் செய்ய முனைதல்) என்ற சொல்லாடலின் விளக்கமும் பகிரப்படுகிறது.
இந்த முதல் கட்டுரையை வைத்துக் கொண்டு ஒரு பயிற்சி போல இன்னும் பல சொற்களின் சங்கத் தமிழ் இலக்கிய நூல்களில் அவற்றின் பயன்பாடு பற்றிய தேடலைச் செய்ய மாணவர் முனையலாம்.
யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் உறவு முறைகள் கொய்யா, கொம்மா, கொப்பர், கொத்தான், கொக்கா, கொம்மான், கோச்சி என்று முறையே அப்பா, அம்மா, அத்தான், அக்கா, அம்மான் (மாமா), ஆச்சி (தாய்) என்று வழங்கப்படுவதை கன்னியாகுமரித் தமிழர் பேச்சு வழக்கோடு ஒப்பிட்டு நகரும் “முறைப் பெயர் வழக்கு” சார்ந்த கட்டுரையில் பெயர்க் கிழவிகள் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சுத் தமிழ் இயல்புகளுக்கு ஏற்றவாறு ஒலி மாற்றமடைவதை உதாரணங்களோடு விளக்குகிறார்.
யாழ்ப்பாணத் தமிழில் ஒலி மாறுதலுக்க்குட்பட்ட சொற்களை விரிவாக விளக்கிய வகையில் இந்தக் கட்டுரையைத் தனியே முறைப் பெயர்கள் என்ற எல்லை கடந்து நோக்கலாம். உதாரணம் அகப்பை - ஏப்பை ஆனது.
வினைச் சொற்களை முன்னுறுத்தி குடுக்கல் (கொடுக்கல்), துடக்கம் (தொடக்கம்), தாட்டல் (தாழ்த்தல்) போன்ற பல்வேறு உதாரண விளக்கங்களோடு நகரும் மூன்றாம் கட்டுரையான “தொழிற் பெயர் வழக்கு” மேலும் “வெளிக்கிடல்” என்ற சொல்லாடலுக்கு (ஆடையுடுத்தி வெளியே செல்லல்) போன்ற பொதுவான செயற்பாட்டில் விளங்கும் சொற்களையும் ஆராய்கின்றது.
ஈண்டு ககரம் கெட்டு யகரம் உடம்படுமெய்யாக வந்த சொற்களை மூலாதாரமாக வைத்து ஏழையள் (ஏழைகள்), பிள்ளையள் (பிள்ளைகள்) ஆகிய நடைமுறை உதாரணங்களுடன் ககரத்தின் மாற்றொலிகள் பற்றிய கட்டுரை வரையப்பட்டிருக்கிறது.
என்ன கலாதியாய் வந்திருக்கிறாய் என்று யாழ்ப்பாணத்தார் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். இங்கே கலாதி திரிபடைந்த சொல்லாக அதன் மூலச் சொல்லாக வடமொழியில் “கலகம்” என்பது சிறப்பு, கவர்ச்சி என அர்த்தம் கற்பிக்கப்படுகிறது எனவும் மேலும் இந்த “சொல்லும் பொருளும்” கட்டுரையில் திரிபடைந்து வழக்கில் உள்ள பரியாரி (பரிகாரி), பிராக்கு (பராக்கு) போன்ற உதாரணங்களுடன் எழுதப்பட்டிருக்கிறது. கடதாசி என்ற போர்த்துக்கேயச் சொல், “கூப்பன்” கடை ஆகிய காரணப் பெயர்களின் பின்னணி குறித்தும் பகிர்கிறார்.
ஈழத்துத் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் போர்த்துக் கீசச் சொற்கள், ஒல்லாந்த மொழிச் சொற்கள் தமிழில் கலந்த பாங்கைத் திசைச் சொற்களாகப் படித்த அந்த அனுபவத்தை மீள நினைப்பூட்டுகின்றன ஆறாம் ஏழாம் கட்டுரைகள். ஒரு காலத்தில் வழக்கில் இருந்து இன்று வழக்கொழிந்த போர்த்துக்கீசச் சொல் “சிஞ்ஞோர்” (என்ன பிடிக்கிறாய் சிஞ்ஞோரே) போன்ற சொற்களோடு விஸ்கோத்து, பாண், சப்பாத்தி, லேஞ்சி, துவாய், யன்னல், வாணீஸ் போன்ற நிறைய வழக்கில் உள்ள சொற்களையும் இனங்காட்டுகிறார்.
அவ்விதமே ஒல்லாந்து மொழிச் சொற்களில் லாச்சி, வக்கு, போச்சி போன்ற பல சொற்களையும் திரட்டித் தருகிறார். இதில் சுவாரஸ்யமான விடயமாக “சக்கடத்தார்” என்ற சொல் “Secretaris என்ற ஒல்லாந்து மொழியில் இருந்து பிறந்ததைக் காட்டுகிறார். உங்களில் எத்தனை பேருக்கு இதைப் படிக்கும் போது சக்கடத்தார் நகைச்சுவை நடிப்பு நினைவுக்கு வருகிறது?
மேலும் வேலைத் தளங்களில் பயன்படுத்தும் இன்ன பிற சொற்களின் மூலாதாரம் ஒல்லாந்து மொழியென்று ஆதாரங்களோடு விளக்குகிறார்.
இந்திய நண்பர்களோடு உறவாடும் போது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் பற்றிய பேச்சு அடிக்கடி எழுவதுண்டு. சிலரின் கதைகளில் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் சார்ந்த உரையாடல்களைச் சரிபார்த்துத் திருத்தவும் என்னை அணுகியிருக்கிறார்கள். அந்த வகையில் “யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ்” என்ற கையடக்கமான இந்த நூல் மிகச் சிறந்த அறிமுகமாக இருப்பதோடு எளிய தமிழில் அமைந்திருப்பதால் நெருடலின்றி வாசிக்கத் துணை புரிந்திருக்கிறது.
கானா பிரபா
28.03.2018
No comments:
Post a Comment