எம் மனது ஏங்கிறது ! - எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .


          நாயொன்று நாம் வளர்த்தோம் 
          நம்காலைச் சுற்றி வரும் 
          நோயென்று நாம் படுத்தால்
          நூறுமுறை நக்கி நிற்கும் 

          கதவருகே நாம் சென்றால் 
          காத்திருக்கும் திறக்கும் வரை
          திறந்த உடன் பாய்ந்தோடி
          திரும்பிநின்று எமைப் பார்க்கும் 

            கார் கதவு திறந்தவுடன்  
            கடுகதியாய் ஏறி நிற்கும்
            பார்க்க நாம் வேண்டுமென்று
            பரபரத்து எமை நோக்கும் 

           குழந்தை பக்கம் இருந்தாலும்
           குழைந்தபடி பார்த்து நிற்கும்
           குழந்தை அங்கே அழுதுவிடின்
           குனிந்து நின்று முகம்பார்க்கும் 

           அழுகை நீக்க தன்வாலை
           ஆட்டியாட்டி அது காட்டும்
           அப்போது பொக்கை வாயால்
            எங்குழந்தை சிரித்து நிற்கும்


           மனைவி மக்கள் யாவருமே
           வழி நெடுகக் கதைத்தாலும் 
           விழி பிதுங்கி நாயங்கே
           வியப்புடனே பார்த்து நிற்கும் 

           என் மகனின் விளையாட்டு
           எப்போதும் நாயுடன் தான் 
            நாய் நிற்கும் இடமெல்லாம்
            நாடிடுவான் என் மகனும் 

           அவன் என்ன செய்தாலும்
           அது ஒன்றும் செய்யாது
           அது என்ன செய்தாலும்
           அவன் மகிழ்ந்து அணைத்திடுவான் 

           தம்பிமகன் அன்று வந்தான்
           என்மகனும் இணைந்து கொண்டான் 
           இருவருமே நாயை வைத்து
           எத்தனையோ செய்து நின்றார் 

           கதவு எல்லாம் திறந்திருக்க
           கண்டபடி ஓடி நின்றார் 
           அவரோடி நிற்கு முன்னே
           நாயங்கே ஓடி நிற்கும் 

           வீட்டிக்கும் தெரு வினுக்கும் 
           விரவாக ஓடி நின்றார்
           வீட்டில் உள்ளார் சொல்லுவதை
            காதில் அவர் கேட்கவில்லை

            விரிச் சென்ற சப்தமுடன்
            கார் ஒன்று பிரேக்போட 
            வாலாட்டும் நாய் அங்கே
            வால் சிதறிக் கிடந்ததுவே 

            சந்தோசம் ஒரு நொடியில்
            எமை விட்டு ஓடியதே
            சகலதையும் மறந்து நாம்
            சந்தித்தோம் ஓர்  இழப்பை 

            வாலாட்டும் நாய் நினைக்க
            மனம் எல்லாம் துடிக்கிறது 
            ஏன் வளர்த்தோம் நாமென்று
            எம் மனது ஏங்கிறது ! 
   
          
           

           

           
           
       

No comments: