உலகச் செய்திகள்


கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பஸ் விபத்தில் பலி!!!

எமிரேட்ஸ் விமானங்கள் தரையிறக்க தடை விதித்த துனீசியா!!!

புகலிடக் கோரிக்கையை முன்வைத்து படகுகளில் பயணித்த 250 பேரை இத்தாலிய கரையோர காவல் பிரிவினர் மீட்டுள்ளனர்!!!

துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு உதவிய பல்கலைக்கழக ஊழியர்கள் 52 பேர் கைது

மும்பை தீ விபத்தில் 14 பேர் பலி!!!

அரசியலில் குதித்தார் ரஜினி!




கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பஸ் விபத்தில் பலி!!!
26/12/2017 பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆகோ நகரில் பஸ் விபத்துக்குள்ளானதில் கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஆகோ நகரைச் சேர்ந்த சிலர் மனோவோக் நகரிலுள்ள தேவாலயத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையில் கலந்து கொள்வதற்காக பஸ்ஸில் சென்றுள்ளனர்.

புறப்பட்டு சில மணிதுழியில் எதிரே வந்த மற்றொரு பஸ் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி













எமிரேட்ஸ் விமானங்கள் தரையிறக்க தடை விதித்த துனீசியா!!!
26/12/2017 எமிரேட்ஸ் விமானங்கள் தலைநகர் துனீசில் தரையிறக்கப்படுவதற்கு துனீசியா தடை விதித்துள்ளது.
துனீசிய பெண்கள் சிலருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே இந்த தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எமிரேட்ஸ் விமானச்சேவை நிறுவனத்தின் இச்செயற்பாடானது துனீசியாவின் ஆத்திரமூட்டலுக்கு உள்ளாகியுள்ள அதேவேளை இது இனவாத பாகுபாட்டு செயல் என உரிமைக் குழுக்களும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
எமிரேட்ஸ் நிறுவனம் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க விமானச் சேவைகளை இயக்கும்வரை இந்த தடையானது நடைமுறையில் இருக்கும் என துனீசிய போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து துனீசியாவுடன் கலந்துரையாடி வருவதாகவும் துனீசிய பெண்களை தாம் மதிப்பதாகவும் ஐக்கிய அரபு ராச்சியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி











புகலிடக் கோரிக்கையை முன்வைத்து படகுகளில் பயணித்த 250 பேரை இத்தாலிய கரையோர காவல் பிரிவினர் மீட்டுள்ளனர்!!!

27/12/2017 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்து மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த சுமார் 250 பேரை மீட்டுள்ளதாக இத்தாலிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சிறிய படகுகளில் பயணித்தவர்களையே நேற்றுமுன்தினமும், நேற்றும் மீட்டுள்ளனர்.
லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களைஇ இத்தாலிக்கு அனுப்பும் நடவடிக்கையை முதற்தடவையாக ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் ஆரம்பித்துள்ளது.  நன்றி வீரகேசரி












துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு உதவிய பல்கலைக்கழக ஊழியர்கள் 52 பேர் கைது

27/12/2017 துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழக ஊழியர்கள் 52 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இஸ்தான்புல்லிலுள்ள Fatih எனும் பல்கலைக்கழக ஊழியர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி பல்கலைக்கழக ஊழியர்கள் 171 பேரைக் கைதுசெய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதிலும், இதுவரையில் 52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
துருக்கிய ஜனாதிபதி தையிப் ஏர்டோகனை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கு, அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுருவான ஃபெத்துல்லா குலன் முற்பட்டதாக துருக்கிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது. இருப்பினும் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இதனையடுத்து துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர்கள், அரசாங்கத் தொழிலாளர்கள் உட்பட 50,000 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் 150,000 பேர் தங்களது வேலைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சிக்கவிழ்ப்புச் சம்பவம் தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு Fatih பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி










மும்பை தீ விபத்தில் 14 பேர் பலி!!!

29/12/2017 இந்தியா - மும்பையில் கமலா மில்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியானதோடு பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் லோயர் பேரல் பகுதியில் பிரபல கமலா மில்ஸ் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பத்திரிகை மற்றும் ஊடக அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஏராளமான கடைகள் அமைந்துள்ளன.
இந்த வளாகத்தில் உள்ள உணவு விடுதியில்  நள்ளிரவில் திடீரென  ஏற்பட்ட தீ கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதும் தீ வேகமாக பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின் கட்டிடத்தின் முழுப் பகுதிக்கும் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள் ஆவர். காயமடைந்த பலர் அருகில் இருந்த தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி









அரசியலில் குதித்தார் ரஜினி!

31/12/2017 வருவாரா, வர மாட்டாரா என ஏறக்குறைய இரண்டு தசாப்தத்துக்கு மேலாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்குவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தற்போது நடைபெற்று வரும் ஒரு நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு நாட்களாக தனது இரசிகர்களுடன் நடத்திவந்த ஆலோசனையின் பின் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
தனிக்கட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ரஜினிகாந்த், எதிர்வரும் சட்ட மன்றத் தேர்தலில், தமிழகத்தின் ஒட்டுமொத்த 234 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
தனக்குத் தொண்டர்கள் யாரும் தேவையில்லை என்றும் நாட்டைக் காக்கும் காவலர்கள் மட்டுமே வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஜினியின் இந்த அறிவிப்பை உலகெங்கும் உள்ள அவரது இரசிகப் பெருமக்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர். நன்றி வீரகேசரி







No comments: