இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன். பகுதி 3

-->



இணுவில் மண்ணில் முகிழ்த்த பாரிஜாதம் லயஞானகுபேரபூபதி தட்சணாமூர்த்தி



“தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்

 தோன்றலிற் தோன்றாமை நன்று”        - திருவள்ளுவர்



அளவிற்கு அதிகமான குறும்புத்தனமும் குழப்படியும் நிறைந்திருந்தாலும் தட்சணாமூர்த்தியின் மடியில் அவர் தந்தை தவிலைத் தூக்கி வைத்த மறுகணமே, ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியது போல

                “அந்திப் பறவை போலே ஆட்டமெல்லாம் அடங்கி

 அந்தக்கரணம் அவன் சிந்தையிலே ஒடுங்கி

 வந்த வினைகளெல்லாம் சிந்தத் தவம் புரியும்

 பரிசுத்த நிலை” 

கொண்ட ஒரு புது அவதாரம் எடுத்து, தன்னை மறந்த வாசிப்பினால் அந்தத் தவிலிசையிலேயே இரண்டறக் கலந்து, புதியதொரு தளத்திற் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுவார். “கலைவாணியே அவர் வடிவில் வந்து தவில் வாசிப்பது போல அப்படி ஒரு அழகு! அவர் முகத்திற் தோன்றும்; பிரகாசமும், ஆழ்ந்த அமைதியும், தவில் வாசிக்கும் அழகும் கச்சேரி கேட்ப்பவர்களை மெய் மயங்கவைக்கும் அவர் இணுவிலிற் செய்த ஒவ்வொரு கச்சேரியும் தவிற் கலையின் ஒவ்வொரு அற்புதம்!”;. என்று என் தந்தையார் கூறுவார். இந்த மாதிரி இசையுடன், இறையுடன் இரண்டறக் கலத்தல் என்பது மனம் பக்குவப்பட்ட அருளாளர்களுக்கும், ஞானிகளுக்குமே கிடைக்கக் கூடிய பெரும் பேறு. திரு. தட்சணாமூர்த்தி அவர்களுக்கு மிகச் சிறிய வயதிலிருந்தே இந்த நிலை கைகூடி வந்துள்ளது. திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் கச்சேரி செய்ய ஆரம்பித்ததும் திரு விஸ்வலிங்கம் அவர்கள் தான் கச்சேரிகள் செய்வதையும் நிறுத்தி விட்டுத் தன் மகன்மீது முழுக் கவனத்தையும் செலுத்த ஆரம்பித்து விட்டார்.



                “தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து

                 மன்னுயிர்க் கெல்லாம் இனிது”.           -  திருக்குறள்



பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமே அன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அகமகிழ்ச்சியைத் தருவதாகும்.



தட்சணாமூர்த்தியின் புகழ் ஒலி  ஈழத்தைத் தாண்டி இந்தியாவிலும் ஒலிக்க ஆரம்பித்தது. அது உண்மை தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளத் தமிழ் நாட்டிலுள்ள தவில் வித்துவான்கள் பலருக்கு ஆசையேற்பட்டது. ஈழம் வந்தார்கள் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் வாசிப்பைப்; பார்த்தார்கள், திரு தட்சணாமூர்த்தி அவர்களுடன் வாசித்தும் பார்த்தார்கள். புரிந்து கொண்டார்கள். இவர் ஒரு மனிதப்பிறவியே அல்ல என்பதை.



                      “ மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

           என்னோற்றான் கொல்லெனும் சொல்”.         – திருக்குறள்



“இவனைப் பிள்ளையாகப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ?” என்று பிறரால் ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும். என்ற வள்ளுவர் வாக்கிற்குத் தட்சணாமூர்த்தியும் உயிர் கொடுத்தார். தந்தை விஸ்வலிங்கத்திற்குச் சளைத்தவரா மகன்? சிங்கம் எட்டடி பாய்ந்தாற் குட்டி பதினாறு அடி பாயாதோ?;



இப்படிப்பட்ட தட்சணாமூர்த்தி மணிக்கணக்காக வாசித்துப் பயிற்சி பெற்றார் என்பதுவும், தந்தையார் அவரைத் தூங்க விடாது மணிக்கணக்காக வைத்துப் பயிற்சி அளித்தார் என்று சொல்வதுவும் எவ்வளவு அபத்தம்.



“கர்நாடக சங்கீதத்தின் உயிர்த் துடிப்பு நாகஸ்வரத்திலேயே தங்கியுள்ளது. ஈழத்தில் நாகசுரம், மேளம் இரண்டும் மகோன்னத நிலையை அடைந்துள்ளன. இந்தியாவில் இசைக்கு இருப்பிடம் தஞ்சாவூர். ஈழத்தில் இசைக்கு இருப்பிடம் இணுவையம்பதியாகும். தவில் மேதை  வி. தட்சணாமூர்த்திக்கு இணையாக இந்தியாவிலும் இப்போ ஒருவரும் இல்லை என்ற கோஷம் கிளம்பியுள்ளது. ஈழத்தில் கோவில்களில் திருவிழாப்பட்சம் என்றால் நாகசுரமேளக் கச்சேரிகளுக்கு அமோக வரவேற்பு. இற்றைக்குச் சில வருடங்களுக்கு முன்பு இருந்த சின்னமேளச்சதுர்க்கச்சேரிக்கு இப்போது மோகம் குன்றிவிட்டது”. என்று, “ஈழத்தில் இசைத்தமிழ் வளர்ச்சி” என்ற கட்டுரையிற் சங்கீதபூஷணம். பி. சந்திரசேகரம் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார். (நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு மலர்.)

“59 இல் நாதஸ்வர வித்துவான் யாழ்ப்பாணம் இராமமூர்த்தியுடன் மூன்று மாதங்களுக்கு நான் சிலோன் சென்றிருந்தேன் அங்கு தவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இரண்டு மூன்று மணி நேரத்திற்குத் தனித் தவில் வாசிக்க வைத்தார்கள். தொழிலில் முன்னேற அது எனக்கு ஒரு அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது”.  என்று வலயப்பிட்டி ஏ.ஆர். சுப்ரமணியம் அவர்கள் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியிற் கூறியதைத் திரு. த. சண்முகசுந்தரம் அவர்கள் தனது “யாழ்ப்பாணத்து இசைவேளாளர்” என்ற நூலிற் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நீண்ட நேரம் தனித் தவில் வாசிக்கும் முறையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவரும், நடைமுறைப்படுத்தியவரும் திரு தட்சணாமூர்த்தி அவர்களே.

இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு வந்து யாழ்ப்பாணத்திற் திரு. தட்சணாமூர்த்தி அவர்களுடன் இணைந்து கச்சேரி செய்த தவில், நாதஸ்வர வித்துவான்களில் இணுவிலிற் திரு விஸ்வலிங்கம் அவர்களின் வீட்டிற் பல மாதங்கள் தங்கியிருந்த திருவாளப்புத்தூர் பசுபதிப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேல், திருநகரி நடேசபிள்ளை, வேதாரண்யம் வேதமூர்த்தி, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், பந்தநல்லூர் தட்சணாமூர்த்தி, குளித்தலைப் பிச்சையப்பா, ஆலங்குடி வேணு, தர்மபுரம் கோவிந்தராசா, திருமெய்ஞானம் நடராசசுந்தரம், திருமுல்லைவாயில் முத்துவீருபிள்ளை, கோட்டூர் இராசரத்தினம்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம், வடபாதிமங்கலம் தட்சணாமூர்த்தி, இராசபாளையம் செல்லையா, அம்பல்; இராமச்சந்திரன், நல்லூர் சட்டநாதர் ஆலய நாதஸ்வர வித்துவான் திரு முருகையா அவர்களுடன் ஆறு மாதகாலம் தங்கியிருந்த நீடாமங்கலம் சண்முகவடிவேல், ஆகியோரைக் குறிப்பிடலாம். திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளை அவர்களும் இக்காலகட்டத்தில் அதாவது 1950 ஆம் ஆண்டிற்கு முன்னர் மூன்று மாதகாலம் யாழ்ப்பாணத்திற் தங்கியிருந்த போது  தட்சணாமூர்த்தியுடன் வாசித்து உள்ளார். ஆனால்; யாருடன் தங்கியிருந்தார் என்பது தெரியவில்லை.

தனது பதினைந்தாவது வயதிற்கு முன்னரே இணுவிலிற் தந்தையாருடன் வாழ்ந்தபோது, தட்சணாமூர்த்தி அவர்கள் மேற் கண்ட அனைவருடனும், தனது சகோதரர்கள் திரு உருத்திராபதி, திரு கோதண்டபாணி ஆகியோருடனும் வாசித்துத் தன் திறமையை நிலைநாட்டிவிட்டார். இவர்களுள் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் தவிலிசையால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அவரின் தவிலிசைக்குப் பரம ரசிகராகிவிட்ட நாதஸ்வரமேதை கோட்டூர் இராசரத்தினம்பிள்ளை அவர்கள் திரு விஸ்வலிங்கம் அவர்கள் வீட்டிற் திரு தட்சணாமூர்த்தியுடனேயே ஒருவருட காலம் தங்கியிருந்து திரு தட்சணாமூர்த்தி அவர்களுடன் கச்சேரிகள் செய்து வந்துள்ளார். இக்கச்சேரிகளிற் பெரும்பாலானவை இணுவில் மஞ்சத்தடி கந்தசுவாமி கோயில், இணுவிற் சிவகாமி அம்மன் கோயில், இணுவிற் கந்தசுவாமி கோயில், இணுவிற் காரைக்காற் சிவன் கோயில் இணுவிற் பரராசசேகரப்பிள்ளையார் கோயில் ஆகிய இடங்களில் நடைபெற்றவையாகும். இணுவிற் கந்தசாமி கோவில், இணுவிற் காரைக்காற் சிவன் கோயில் மகோற்சவ காலங்களில் நடைபெறும்; இலங்கை - இந்தியக் கலைஞர்களின் சங்கமிப்பில் உருவாகும், விசேட மேளக்கச்சேரியின் போது நடைபெறும் “வடக்குவீதிச்சமாவும்”இ ஆலய முன்றலில் (தென்கிழக்கில்) விசேட மேடை அமைத்து நடைபெறும் தவில், நாதஸ்வரக் கச்சேரியும், அந்தக் கச்சேரிகளில் நீண்ட நேரம் இடம் பெறும் தனித்தவிற் சமாவும் யாழ்ப்பாண இசை ரசிகர்களிடையே மிகப் பிரபல்யம். அன்று அதைப்பார்த்து ரசித்தவர்கள் யாரும் அவற்றை அவ்வளவு இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள்.

யாழ்ப்பாணத்திற் திரு தட்சணாமூர்த்தி அவர்கள்; தனது ஒன்று விட்ட சகோதரர் தவில் மேதை இணுவில்  என்.ஆர்.சின்னராசா அவர்களுடனேயே மிக அதிகமான கச்சேரிகளைச் செய்துள்ளார். அதனாற் திரு தட்சணாமூர்த்தியின் மேதைமைத் தன்மையைத் திரு.சின்னராசா அவர்கள்  புரிந்து கொண்டதோடு அவர் வாசிப்பு முறையையே பெருமுயற்சியோடு தானும் பின்பற்றி வந்துள்ளார். இணுவிற் கந்தசுவாமி கோயில், இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் மஞ்சத்தடி கந்தசுவாமி கோயில், இணுவிற் சிவகாமி அம்மன் கோயில், இணுவில் காரைக்காற் சிவன் கோயில், இணுவில் மருதனார்மடம் பல்லப்பவைரவர் கோயில், அனலைதீவு ஐயனார் கோயில், நெல்லியடி மூத்த நயினார் கோயில் ஆகிய இடங்களிலும் இன்னும் யாழ்ப்பாணத்திலுள்ள பல கோயில்களிலும் திரு தட்சணாமூர்த்தி அவர்களுடன் இணைந்து இணுவில் திரு.கே.ஆர். புண்ணியமூர்த்தி, அவர்களும், இணுவில் திரு.ஆர்.சின்னராசா அவர்களும் கச்சேரி செய்துள்ளனர். இணுவில் ஆலயங்களில் நடைபெறும் கச்சேரிகள் எல்லாமே நள்ளிரவு தாண்டிய பின்னரும் நடைபெறுபவையாகும்.

நாதஸ்வர வித்துவான் பல்லிசைக் கலைஞர் திரு வி உருத்திராபதி அவர்கள் (1911 – 1983) தட்சணாமூர்த்தியின் மூத்த சகோதரர் அவரிடம் நான் சங்கீதம் படித்துக்கொண்டு இருந்த வேளை   லயம் பற்றிய விளக்கங்;களைத் தரும்போதெல்லாம் அவர் திரு தட்சணாமூர்த்;தி அவர்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்காது அந்தப் பாடம் ஒருநாளும் நிறைவு பெற்றதில்லை. திரு. உருத்திராபதி அவர்கள் கூறுவார் “எனது தம்பி தட்சணாமூர்த்தி படுசுட்டி. மழை பெய்து ஓய்ந்தபின் வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருக்கும், அந்த மழை நீர் விழும் ஓசை, மணிக்கூட்டில் முள் அசையும் ஓசை, இப்படி அவன் காது கிரகிக்கும் ஓசைகளில் எல்லாம் அவனுக்கு லயத்தின் கணக்கே தெரியும். அந்த லயங்களுக்கு ஏற்ப அவன் தவில் வாசிக்கும் அழகு மிக மிக அற்புதம். கண்ணை மூடியபடி கேட்டால் மிக மென்மையாகக் கேட்கும் தவிலின் நாதம், அதை அவன் வாசிக்கும் அழகு மந்திர ஜாலம் போல மனதை மயக்கும். அவன் அங்கே படித்தான் இங்கே படித்தான், அவர் சொல்லிக் கொடுத்தார் இவர் சொல்லிக் கொடுத்தார்; என்று எல்லோரும் ஏதேதோ தம் இஷ்டத்திற்குக் கதைக்கிறார்கள். ஒரு நாள் எங்கள் வீட்டு அடுப்படியில் உலை கொதித்துக் கொண்டு இருந்தது. (மண்பானையில் சோறு வேகுதல்) அப்போது உலை மூடி ஆடுகின்ற சத்தமும் வந்தது. சிறிது நேரத்தில் தட்சணாமூர்த்தியின் தவிலில் உலை மூடி ஆடுகின்ற ஓசை அற்புதமாகக் கேட்கின்றது. இதை யார் அவனுக்குக் கற்றுக் கொடுத்தது? இந்த மாதிரி ஒரு அவதானத்தையும், வாசிப்பையும் யாராவது கற்றுக் கொடுக்க முடியுமா? இது கற்றுக் கொடுத்து வந்ததல்ல. அவன் பிறப்போடு கொண்டு வந்தது. அது இயற்கை.

அவன் உறங்கி நான் பார்த்தது இல்லை. கண்கள் மூடியபடி இருந்தாலும் என்னேரமும் வாய் அசைந்தபடியே இருக்கும். என்ன  சொல்லிக்கொண்டு உறங்கப் போவானோ தெரியாது. அவன் எப்போது உறங்குகின்றான். எப்போது விழித்திருக்கிறான் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். ஒரு விசித்திரப் பிறவி. ஒரு இடத்தில் அவனைக் கட்டிப்போடுவது என்பது முடியாத காரியம். எத்தனைக்கெத்தனை குழப்படி செய்தாலும் அதற்கு இணையான ஒரு சாந்தமும் அவனுள் குடியிருந்தது. தன்னை மறந்து அவன் தவில் வாசிக்கும் போது அந்தப் பூரண அமைதியை அவன் முகத்திற் தரிசிக்க முடியும். அவனைச் சுற்றியுள்ள இயற்கையின் வனப்பை ரசிப்பதிலும் கிரகிப்பதிலும் அவனுக்கு இணை யாரும் இல்லை. அதுதான் அவன் இயல்பு”. என்று ஒரு சிறு புன்னகை முகத்தில் மலரச் சொல்லி முடிப்பார். திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இறுதி வரை தன் தந்தையின் மீதும், மூத்த தமயனார் திரு உருத்திராபதி அவர்கள் மீதும் பயமும், மரியாதையும், பக்தியும் கலந்த அன்புள்ளவராகவே இருந்துள்ளார்.  

பல வருடங்கள் கழித்து எனக்குத் திருமணமாகிச் சிட்னி வந்து  குழந்தைகளும் பிறந்த பின்னர் தட்சணாமூர்த்தியின் மூத்த மைத்துணர் மிருதங்க வித்துவான் திரு.ஆ.சந்தானகிருஸ்ணன் அவர்களுடன் சங்கீதம் பற்றிய உரையாடல் ஒன்றின் போது தவில் நாதஸ்வரம் பற்றிய பேச்சு எழுந்தது. அந்தக் கணம் எதிர்பாராத விதமாகத் தட்சணாமூர்த்தி பற்றிய பேச்சும் எழுந்த போது திரு உருத்திராபதி அவர்கள் சொன்ன “ அவர் சொல்லிக் கொடுத்தார் இவர் சொல்லிக் கொடுத்தார்; என்று எல்லோரும் சொல்கிறார்கள் அதெல்லாம் சும்மா கதை அவர் பிறவி மேதை. அது தான் உண்மை”   என்ற அதே வார்த்தைகளை  மீண்டும் சந்தானகிருஷ்ணன் வாயிலாகக் கேட்ட போது என்னுள்ளே அமிழ்ந்து இருந்த ஒலி மீண்டும் ஒரு தடைவ என் காதில் அதிர்ந்தது போல ஓருணர்வு.

எத்தனை வருடங்கள் ஆனால் என்ன? எத்தனை யுகங்கள் ஆனால் என்ன? உண்மைகள் ஒரு போதும் சாவது இல்லை. அது யார் குரலில் ஒலித்தாலும் ஒரே மாதிரியே ஒலிக்கும்.

“திருமுல்லைவாயில் முத்துவீருபிள்ளை, கும்பகோணம் தங்கவேற்பிள்ளை, வடபாதிமங்கலம் தெட்சணாமூர்த்தி ஆகிய தவில் வித்வான்கள் என்னுடைய சகோதரர் வலங்கைமான் சண்முகசுந்தரத்துடன் மூளாயிலுள்ள எனது தந்தையார் ஆறுமுகம் வீட்டிற் தங்கியிருந்து ஆலயங்களிற் கச்சேரி செய்துள்ளனர். அப்போது 1945 ஆம் ஆண்டு, ஒரு நாள் பன்னிரண்டு வயதே நிரம்பியிருந்த சிறுவனாயிருந்த இணுவில் தட்சணாமூர்த்திக்கும், வயதில் மிகப் பெரியவரான வடபாதி மங்கலம் தட்சணாமூர்த்திக்கும் இடையில் நடைபெற்ற தவில் தனி ஆவர்த்தனம், போட்டியாகவே மாறிவிட்டது. இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற அந்த லயவின்னியாசத்திற் சிறுவனாகிய தட்சணாமூர்த்தி இறுதிவரை சளைக்காமல் வாசித்த வாசிப்பை, “ஆகா அற்புதம்!  இதைப் போல ஒரு தவில் வாசிப்பை, கச்சேரியை நாம் வாழ்க்கையில் என்றைக்கும் பார்த்ததில்லை”, என்று அன்றைய தினம் அங்கு குழுமியிருந்த வித்துவான்கள் அனைவரும் கூறினார்கள்” என்று மிருதங்கம் ஏ. சந்தானகிருஷ்ணன் அவர்கள் மெய்சிலிர்க்க அந்த நிகழ்வை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

“பதினாறு பதினேழு வருடங்களுக்கு முன்னர் ஈழத்திற் கொழும்பிலுள்ள கப்பிதாவத்த பிள்ளையார் ஆலயப் பிரதம குருக்களாகிய சண்முகரத்தினக் குருக்களின் சஷ்டியப்ப பூர்த்தி விழாவிற்குத் தவில் வாசிக்க அழைக்கப்பட்டு இருந்தேன். அங்கு சங்கீதவித்துவான் கலைமாமணி ரி.என்.சேஷகோபாலன் அவர்களும் வந்திருந்தார். என்னை அடையாளம் கண்டுகொண்டு நான்கு ஐந்து மணித்தியாலம் வரை உரையாடினார். உரையாடல் முழுவதுமே தட்சணாமூர்த்தியைப் பற்றியது. “மனிதர்களால் எட்டமுடியாத அவருடைய கற்பனைத் திறன், கரத்தின் வேகம், லயச்சிறப்பு, தவிலின் இனிமையான நாதம், மணித்தியாலக் கணக்காக, படித்தவர் - பாமரர் என்ற பேதமின்றி அனைவரையும் தன் தனித் தவில் வாசிப்பினாற் கட்டிப்போடும் மாயம். இவை அத்தனையையும் கலந்து எப்படி ஒரு தோற்கருவியினூடே இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்த முடிந்தது? எத்தனை தடவைகள் சிந்தித்தாலும் விடைகாண முடிவதில்லை”. என்று தன்னுடைய பிரமிப்பை என்னிடம் கூறினார். அந்தக் கணம் தட்சணாமூர்த்தியின் உறவினன் என்பதை விட இத்தகைய ஒரு தவிலிசை இமயத்துடன் ஒன்றாக மேடையில் அமர்ந்து நானும் தவில் வாசித்தேனே என்ற பெருமையே எனக்கு அதிகம் இருந்தது. அவருடன் வாசிக்கப் போகிறேன் என்றால் மூன்று நாளைக்கு முதலே யோசிக்க ஆரம்பித்து விடுவேன். காரணம் ஒரு தடைவ வாசித்தது போல இன்னொரு தடவை வாசிக்கவே மாட்டார். ஆகவே ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் இன்றைக்கு என்ன புதுமை செய்யப்போகின்றாரோ? என்று திகைப்பாக இருக்கும். 1970 ஆம் ஆண்டு இணுவில் மருதனார்மடம் பல்லப்பவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற கச்சேரிதான் ஈழத்தில் நடைபெற்ற திரு தட்சணாமூர்த்தி அவர்களின் இறுதிக் கச்சேரியாகும். அன்று அவருடன் நான் தவில் வாசித்தேன். திரு பி.எஸ் ஆறுமுகம் அவர்களும் எனது மைத்துணர் செ. கந்தசாமி அவர்களும் நாதஸ்வரம் வாசித்தார்கள்”. என்று திரு தட்சணாமூர்த்தியின் மருமகன் இணுவில் தவில் வித்துவான் திரு புண்ணியமூர்த்தி அவர்கள் தனது தாய் மாமனை நினைவு கூர்ந்தார்.

இயற்கையாகவே இறையருளாற் கவி புனையும் ஆற்றல் உள்ளவர்களை “வரகவி” என்று கூறுவார்கள். தமிழ் அகராதியும் அவ்வாறே குறிப்பிடுகின்றது. இத்தகைய வரகவிகளின் வரலாறுகள் பலவற்றை நாம் அறிந்திருக்கின்றோம். தட்சணாமூர்த்தியும் வரகவிகள் போலவே இயற்கையாகவே இறையருளாற் தவில் வாசிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார். திருஞானசம்பந்தருக்குத் தாளம் போடக் கற்றுக் கொடுத்தது யார்? அருணகிரி நாதருக்குச் சந்தக்கவி புனையச் சொல்லிக் கொடுத்தது யார்? மகாகவி காளிதாசருக்குக் காவியம் பாடப் பயிற்றுவித்தது யார்? கிருஷ்ணனுக்குப் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொடுத்தது யார்? அவர்களைப் போன்ற ஒரு அபூர்வ பிறவி தான் திரு தட்சணாமூர்த்தி அவர்கள்

அது தான் வள்ளுவர் சொல்லுகின்றார்

               

                                       “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

                  எழுமையும் ஏமாப்புடைத்து”.          – திருவள்ளுவர்



ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது. அற்புதமாகச் ஸ்ருதி சேரக்கப்பட்ட வீணையைத் தென்றல் வந்து தழுவினாலே அவ்வீணை உயிர் பெற்று விடும். அதுபோலத் தான் தட்சணர்மூர்த்திக்கும் அவர் பிறந்து வளர்ந்த ஊரின், குடும்பத்தின், முத்தமிழ் வளமும், தந்தையின் கலை வளமும், கருவிலே திருவாகிய உயிரிலே புகுந்து, உணர்வுகளை லயமாக மீட்டிவிட, அத்தோடு இறையருளும் கலந்து அவருட் பொங்கிப் பிரவாகமெடுக்க, அவருட் கிளர்ந்தெழுந்தது அற்புதத் தவில் நாதம். இது மனித முயற்சிகளுக்கு எட்டாதது. சாதாரண மனிதர்களாற் புரிந்து கொள்ள முடியாதது. 



தவில்மேதை  தட்சணாமூர்த்தியினுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவர் தன் தாய் தந்தையரிடம் எதையும் மறைத்ததில்லை. அவருடைய வாழ்க்கையில் எந்தவித ஒளிவு மறைவுகளுக்கும் இடமில்லை. பொய் என்கின்ற வார்த்தையே அவருடைய அகராதியில் இல்லை.  அன்பின் மறு உருவம். கள்ளம் கபடமற்ற வெள்ளையுள்ளமும், வெளிப்படையாகப் பேசும் குணமும், தான் நினைத்த விடயங்களை யாருக்கும் அஞ்சாது செய்யும் நெஞ்சுரமும் கொண்டவர். நிறையப்  பெண்களுக்கு அவர் மீது மயக்கமும் இருந்துள்ளது. அதையும் கூட யாரிடமும் மறைக்க வேண்டும் என்றோ அது பற்றிய பிறருடைய அபிப்பிராயங்கள் பற்றியோ அவர் என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது. தன்னுடன் தொழில் செய்யும் கலைஞர்களை மதிக்கும் தன்மையும், அவர்களை மிகவும் கௌரவமாக நடத்தும் தன்மையும் உடையவர். திரு தட்சணாமூர்த்திக்கும் அவர் தந்தைக்கும் உள்ள உறவு தசரதனுக்கும் - இராமருக்கும், கம்பருக்கும் - அம்பிகாபதிக்கும் உள்ளதைப் போன்றது. பணத்தையோ சொத்து சுகங்களையோ என்றைக்கும் அவர் விரும்பியவரல்லர். எதிலும் பற்றற்ற ஒரு துறவியினுடையது போன்றது அவருடைய உள்ளம். அவர் நேசித்தது அவரிடம் உள்ள கலையை மட்டுமே. அவருடைய இந்தப் பற்றற்ற தன்மையைப் பயன் படுத்தி அவர் புகழிற், பணத்திற் குளிர் காய்ந்தவர்களும், குளிர் காய்கிறவர்களும் உண்டு.

திரு தட்சணாமூர்த்தி அவர்கள் தனது பதினேழாவது வயது வரை தன் தந்தையாரோடும் குடும்பத்தாரோடும் இணுவிலிலேயே வாழ்ந்தவர். இந்தப் பதினேழாவது வயதிற்குள்ளாகவே அவர் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த அனைத்து நாதஸ்வர தவில் மேதைகளுடனும் கச்சேரி செய்துள்ளார். இந்தியாவிற்கும் சென்று வாசித்து உள்ளார். 1950 இல் அவருடைய தந்தை இறந்த பின்னரும் அவருடைய மூத்த தமயனார் உருத்திராபதி அவர்களே முழுக் குடும்பப் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டு ஒரு தந்தையின் இடத்தில் இருந்து நன் முறையில் தன் சகோதர, சகோதரிகளை நெறிப்படுதி வளர்த்தவராவார்.  இவ்வாறு இணுவிலில் இருந்தவரைத் திரு கணேசரத்தினம்  அவர்கள் அளவெட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். தனிப்பட்ட முறையில் திரு தட்சணாமூர்த்தி அவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லாத போதும் தனது மூத்த தமக்கையின் மனம் நோகக் கூடாது என்ற ஒரே காரணத்தினாலேயே அவர் அளவெட்டி செல்ல உடன்பட்டார்.

அளவெட்டி சென்று தனது மூத்த தமக்கை திருமதி இராஜேஸ்வரி கணேசரத்தினம் அவர்களோடு வாழ்ந்து வருகையிலே, திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்து இருந்தார். இருந்தும் அப்பெண்ணிற்கு வேறு ஒருவரைப் பேசி மணம் முடித்து வைத்தார்கள். இதை அறிந்த திரு தட்சணாமூர்த்தி அவர்கள் துணிகரமாகத் திருமணத்திற்குச் சென்று, அங்கே மணமக்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு மிகப் பெரிய  “குரங்குப்பொம்மை”  ஒன்றையும் பரிசளித்துவிட்டு வந்தாராம். அதன் பின் திரு. தட்சணாமூர்த்தி அவர்களுக்கு அளவெட்டி செல்லத்துரையின் மகள் மனோன்மணியை 1957 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமாகி முதற் பெண் குழந்தை 1958 ஆம் ஆண்டிற் பிறந்தது. பிறந்த பின்னரும் திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் இணுவிலிற்  தனது மூத்த சதோரர் திரு. உருத்திராபதி அவர்கள் வீட்டில் அவர்களுடனேயே மூன்று வருட காலம் வாழ்ந்துள்ளார். உருத்திராபதி அவர்களின் இல்லத்திற் அவர்களுடன் தங்கியிருந்தே கச்சேரிகளுக்குச் சென்று வந்துள்ளார். இக்காலத்தில் அளவெட்டியில் மிகப்பெரிய வீடொன்றினைக் கட்டும் பணியிலும் ஈடுபட்டார். அப்பணி நிறைவுற்றதும், மீண்டும்   அங்கு குடிபுகுந்து வாழ்ந்தபோது 1963 ஆம் ஆண்டு இரண்டாவது பெண்ணையும், 1964 ஆம் ஆண்டு இரட்டையர்களான ஆண்குழந்தைகளையும், 1966 ஆம் ஆண்டு தவில் வித்துவான் உதயசங்கரையும் 1969 ஆண்டு மீண்டும் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தனர். (இரட்டையர்களில் ஒருவரும் கடைசி மகனும் இவ் உலக வாழ்க்கையிலிருந்து விடைபெற்று விட்டனர்.)

அவர் இக்கால கட்டத்திற் தனது குடும்பத்தை மகிழ்வாக வைத்திருக்கவும், தொழிலைத் தான் விரும்பியபடி சுதந்திரமாகச் செய்யவும் ஆசைப்பட்டார். ஆனால் அவ்வாறு செய்யமுடியாதபடி அவருக்குப் பல தொல்லைகள் ஏற்பட்டன. அவரது வளர்ச்சியையும் புகழையும் கண்டு பொறாமை அடைந்தவர்கள் அவருக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தினர், அவருடைய மனதைப் புண்படுத்தும் வகையிற் கதைத்தும் செயற்பட்டும் வந்தனர்.

அதுவரை எத்தனையோ வித்துவான்கள் இந்தியாவில் வந்து தங்கும்படி கேட்டும், ஏன் தட்சணாமூர்த்தி அவர்களின் மனதைத் தன் நாதஸ்வர வாசிப்பினாற் கொள்ளை கொண்ட, அன்பினால் தனது உறவினனாகவே எண்ணவைத்த, “என் வாழ்வின் முன்னேற்றத்தில் முக்கிய பங்குகொண்ட என் மதிப்பிற்குரிய காருக்குறிச்சி” என்று சொல்லவைத்த நாதஸ்வரமேதையின் அழைப்பையே தட்டிக்கழித்தவர். கடைசி வரை ஒரு ஈழத்துக் கலைஞராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். ஏன் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு இந்தியா செல்ல முற்பட்டார்? அந்த அளவிற்கு அவருடைய மனதைப் புண்படுத்தும் அளவிற்குச் சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. ஆகவே 1970 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு இந்தியா தமிழ் நாட்டிற்குச் சென்றுவிட்டார். சென்றவர் அங்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து உள்ளார். அங்கும் அவருக்கு நின்மதி கிடைக்கவில்லை.                   

     

       “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்ததுவே”

                                                        - பாரதியார் -



தொடரும்------------

No comments: